ATBC வானலையில் கவிஞர் ரிஷான் ஷெரீப்

'

                    செ. பாஸ்கரன்


அவுஸ்ரேலிய  தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்திநூடாக 08.07 .2010  அன்று  ஈழத்து இளம் கவிஞரான ரிஷான் ஷெரீப்   அவர்களுடன் நடை பெற்ற பேட்டியின் சுருக்கமான வடிவம் இங்கு தரப்படுகின்றது. பேட்டி கண்டவர் செ.பாஸ்கரன்

ஒரு இளம் கவிஞராக, பல தரமான கவிதைகளை தந்துகொண்டிருக்கும் ஒருவராக இருக்கும் நீங்கள் உங்களை பற்றி, உங்கள் எழுத்துக்களைப் பற்றி என்ன கூறுவீர்கள்?


நான் இலங்கையின், மாவனல்லையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவன். எனது முதலாவது கவிதைத் தொகுப்பான 'வீழ்தலின் நிழல்' கடந்த சனிக்கிழமை, இந்தியாவில் காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வெளியிடப்பட்டது. இன்னும் பிரான்ஸ், எக்ஸில் பதிப்பகம் மூலமாக எனது மொழிபெயர்ப்புக் கவிதைகள் தொகுப்பும், இந்தியா உயிர்மை பதிப்பகம் ஊடாக குறுநாவல் தொகுப்பொன்றும் அடுத்தடுத்து வெளிவரவிருக்கின்றன.


 இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், பிரான்ஸ் ஆகிய தேசங்களின் தமிழ் இதழ்களில் கவிதை, சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு என தொடர்ந்தும் எழுதிவருகிறேன்.

இதுவரை  உங்களுக்கு எழுத்து துறையில் பல பரிசுகள் கிடைத்திருக்கிறது அவை பற்றி என்ன கூறுவீர்கள்?

அகில உலக ரீதியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய 'கந்தர்வன் சிறுகதைப்போட்டி - 2008' இல் சிறப்புப் பரிசு.

அகில உலக ரீதியில் வலைப்பதிவர்களுக்கிடையே நடைபெற்ற 'உரையாடல் சிறுகதைப் போட்டி'யில் பரிசு - 2009
அகில உலக ரீதியில் வலைப்பதிவர்களுக்கிடையே நடைபெற்ற 'உரையாடல் கவிதைப் போட்டி'யில் பரிசு - 2010
கனடா உதயம் பத்திரிகை நடத்திய இலங்கை எழுத்தாளர்களுக்கான சிறுகதைப் போட்டியில் நான்காம் பரிசு - 2010

நீங்கள் கவிதை எழுத ஆரம்பித்தது பற்றி கேட்டால் என்ன கூறுவீர்கள்?

பாடசாலைக் காலத்தில் இருந்து எழுதத் தொடங்கினேன். அதற்கான வாய்ப்புக்களும் நேரமும் பாடசாலைக் காலத்திலேயே அதிகம் கிடைத்தன. பிறகு பல்கலைக்கழகத்திலிருக்கும் போது தான் இலங்கை பத்திரிகைகளுக்கு எழுத ஆரம்பித்தேன். அப்பொழுது எழுதியவை இலங்கை தினகரன், வீரகேசரி, தினக்குரல் போன்ற பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டன. அடுத்ததாக வேலைக்காக கத்தார் நாட்டுக்கு வந்த பின்னர் எழுதுவதற்கான அதிக நேரமும், வாய்ப்பும், மிக இலகுவான பாவனைக்கென இணையமும் கிடைத்தன. இணையம் எனது எழுத்து பரவலாக எல்லோர்க்கும் போய்ச் சேரும் வாய்ப்பைத் தந்தது. தொடர்ந்து எனது எழுத்துக்கள் நல்ல தரமான இணைய, மற்றும் அச்சு இதழ்களில் பிரசுரம் கண்டன. அவை எனக்கு நல்ல அறிமுகத்தைப் பெற்றுத் தந்தன.

ஒரு இடத்தில் செழித்து வளர்ந்த கொடியொன்றினைப் பிடுங்கி, வேறொரு இடத்தில், வேறொரு மண்ணில் நட்டுவிடுவது போலத்தான் தனியான வெளிநாட்டு வாழ்க்கை. அதுவரையில் இவ்வளவு தூரத்துக்கு, இவ்வளவு காலத்துக்கு எனது சொந்தங்களை, உறவுகளைப் பிரிந்தவனில்லை நான். எனவே இப் பாலைநிலத்தில் தனித்துப் போனபின்பு நாட்குறிப்புக்களில் கிறுக்கிக் கொண்டிருந்தவற்றை வேலை நேரம் தவிர்த்து எஞ்சிய நேரங்களில் ஒரு பொழுதுபோக்குப் போல, வலையேற்றத் தொடங்கினேன். கிளர்ந்தெழும் வீடு, சொந்தங்களின் ஞாபகங்களை அடக்கிவைக்க எழுத்து எனும் தோழனை அருகிலமர்த்திக் கொண்டேன். அத் தோழன் இப்பொழுது என்னை இழுத்துப் போய்க்கொண்டிருக்கின்றான்.

எப்பொழுதும் எனது எழுதும் மனநிலையைப் பொறுத்துத்தான் நான் எழுதிக்கொண்டிருக்கிறேன். சில நாட்களில் எதுவும் எழுதத் தோன்றாது. அவ்வாறான நாட்கள்தான் அதிகமாக இலங்கையில் எனதாக இருந்தன. அந்தக் காலங்களில் எழுதுவதை விடவும், வீடு முழுக்க நிறைந்திருந்த எனது சகோதரனின் புத்தகங்களையெல்லாம் வாசிப்பதில் மட்டுமே அதிக ஆர்வம் இருந்தது. அவ்வப்போது எழுதத் தோன்றுபவற்றை மட்டும் எழுதி வார, மற்றும் மாத இதழ்களுக்குக் கொடுத்துவிடுவேன். மிகப் பிடித்தமானதாக வாசிப்பும் அதற்கடுத்ததாக எழுத்துமென இலங்கையில் வசித்த காலத்தில் எனது பொழுதுபோக்கு இருந்ததெனச் சொல்லலாம்.

இலங்கையிலே பல சிறந்த கவிஞர்கள் இருக்கிறார்கள் இருந்தார்கள் எனது காலத்தில் மு .பொ , சு.வி, சேரன் , ஜெயபாலன்  போன்றவர்களை குறிப்பிடலாம்
உங்கள் கவிதை நண்பர்கள் பற்றி சொல்வதாக இருந்தால்?


கவிஞர் ஃபஹீமா ஜஹான்..ஈழத்துப் பெண் கவிஞர்களில் மிகவும் முக்கியமானதொரு படைப்பாளி.

இந் நேரத்தில் அவரை நான் மிகவும் நன்றியோடு நினைவு கூர்கிறேன். ஏனென்றால் கத்தார் நாட்டுக்குப் போன பிற்பாடு, எனக்கு வாசிக்க தரமான தமிழ் நூல்கள் எதுவுமே அங்கு கிடைக்கவில்லை. ஃபஹீமா ஜஹான் எனக்குத் தொடர்ந்தும் பல நல்ல நூல்களை அனுப்பி உதவினார்..அது மட்டுமல்லாது எனது எழுத்துக்களை மிகக் காத்திரமாக விமர்சித்தார். அந்தச் செதுக்கல்தான் இப்பொழுது எனக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்திருக்கிறதென நினைக்கிறேன்.

இலங்கைக் கவிஞர்கள் பற்றி அவர்கள் தரும் இலக்கியம் பற்றி உங்கள் கருத்து?

இப்பொழுதிருக்கும் இலங்கைக் கவிஞர்கள் பெரும் நம்பிக்கை அளிக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள். அவர்களது கவிதைகள் பிற தேசத்துக் கவிதைகளை விடவும் காத்திரமாகவும், வலியோடும், அந்த உணர்வுகளை வாசகர்களிடத்தில் பிரதிபலிக்கச் செய்யக் கூடியவையாகவும் அமைந்துள்ளன.

சிறந்த பல இலங்கை எழுத்தாளர்கள் தற்பொழுது புலம்பெயர்ந்து போயுள்ளார்கள். அவர்களது எழுத்துக்களில் தாய்மண்ணைப் பிரிந்த ஏக்கம் தோன்றிக்கொண்டே இருக்கிறது. அந்த எழுத்துக்களில் அவர்களது மண் மணக்கிறது. ஆகவே சிறந்த எழுத்தாளரெனத் தன்னை அடையாளம் கண்டபிற்பாடு அவர்கள் எந்த நாட்டிலிருந்து எழுதினாலும் அந்த எழுத்துக்கள், தாய்மண்ணின் மணத்தோடுதான் பிரதிபலிக்கும்.

அடுத்ததாக இலங்கையில் தற்பொழுது பூரணமான கருத்துச் சுதந்திரத்தை நான் காணவில்லை. ஒரு எழுத்தாளருக்கு, ஊடகவியலாளருக்கு கருத்துச் சுதந்திரம் மற்றும் எழுத்துச் சுதந்திரம் மிக மிக அவசியமானது. அது தற்போதைய இலங்கைச் சூழலில் அரிதாகவே எழுத்தாளர்களுக்குக் கிடைக்கிறது.

அத்தோடு முந்தைய தசாப்தங்களில் வெளிவந்ததைப் போல நல்ல இலக்கியத் தரமான சஞ்சிகைகள், பத்திரிகைகள் இலங்கையில் வெளிவருவது மிகக் குறைவாகவே உள்ளது. இதனால் என்ன நடக்குமென்றால், வளர்ந்து வரும் சந்ததியினருக்கு நவீன இலக்கியம் போய்ச் சேருவதில் சிக்கல் ஏற்படுகிறது. எழுதும் ஆர்வம் கொண்டவர்களுக்கு, அதை வெளிப்படுத்தப் போதுமான வாய்ப்புக்கள் அற்றுப் போகின்றன. இதனால் பல நல்ல எழுத்தாளர்களை, கவிஞர்களை இலங்கை எதிர்காலத்தில் இழக்கும் வாய்ப்பு அதிகம்.

நீங்கள் விரும்பும் சிறந்த படைப்புக்கள் பற்றி கேட்டால் என்ன கூறுவீர்கள்?

கவிஞர் ஃபஹீமா ஜஹானின் கவிதைகள் - இக் கவிதைகளே முதன்முதலாகக் கவிதைகள் குறித்த ஈர்ப்பை என்னுள் ஏற்படுத்தியது. நான் கவிதைகள் எழுத ஆதர்சமாகவும் ஒரு நம்பிக்கையைத் தந்தவையாகவும் இருந்த கவிதைகளை எழுதியவர் இவரெனச் சொல்லலாம். இவரது கவிதைகள் குறித்தான பிரமிப்பு இன்னும் என்னை விட்டும் நீங்கவில்லை.

எழுத்தாளர் அ.முத்துலிங்கம் - கத்தார் வந்த பிறகு இணையம் அறிமுகம் செய்துவைத்த எழுத்தாளர் இவர். இவரது சிறுகதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், விமர்சனங்கள் என எல்லா எழுத்துக்களுக்குமான ரசிகன் நான். மிகச் சுவாரஸ்யமான, எளிமையான, கவரக்கூடிய எழுத்துக்களுக்குச் சொந்தக்காரர். இப்பொழுதும் மனம் சோர்வாக உணரும் தருணங்களில் இவரது எழுத்துக்களைத்தான் எடுத்துவைத்து வாசிக்கிறேன். ஒவ்வொரு முறையும் ஏதோவொன்றைத் தேடவைத்துக் கொண்டே இருக்கின்றன அவை. இங்கு அறை முழுதும் என்னுடன் இருக்கும் தனிமை தரும் சோர்வை, மிகக் கொடியதாக நான் உணரும் தருணங்களில் இவரது எழுத்துக்களைத்தான் துணைக்கெடுத்துக் கொள்வேன். அற்புதமாக, காயங்களுக்கு மயிலிறகுத் தடவலையொத்த, இலாவகமான வரிகளில் கண்கள் அலுப்பின்றி மேய்ந்துகொண்டே இருக்கும். என் வாழ்வினைக் கோர்த்திருக்கும் சம்பவங்களோடு இவரது கதைகள் நிகழும் களம், அதன் கதாபாத்திரங்கள், அதன் சூழல்..இப்படி ஏதேனுமொன்றாவது ஒத்துப் போகும். அல்லது அவற்றுடன் பொருத்திப் பார்த்துக் கதை மானிடராக என்னை உணரும்படி செய்யும். இவரது 'அங்கே இப்ப என்ன நேரம்? ' தொகுப்பு பல தடவை என்னை மீண்டும் மீண்டும் வாசிக்கச் செய்கிறது. அது போலவே 'அக்கா', வம்சவிருத்தி', 'மகாராஜாவின் இரயில் வண்டி' ,' திகடசக்கரம்' மற்றும் இவரது சிறுகதைத் தொகுப்புக்கள். இவையெல்லாம் என்னில் எழுதும் ஆர்வத்தையும் நானாகக் கதை சொல்லிப் பார்க்கும் ஆர்வத்தையும் தூண்டின.

காலச்சுவடு வெளியிட்ட உங்கள் புத்தக வெளியீடு பற்றி கூறுங்களேன்

அண்மையில் வெளியான 'வீழ்தலின் நிழல்' எனது முதலாவது கவிதைத் தொகுப்பு. இது காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வெளிவந்தது. எனது தொகுப்போடு சேர்த்து மொத்தம் 8 ஈழத்து நூல்கள் வெளிவந்தன. இன்னும் பிரான்ஸ், எக்ஸில் பதிப்பகம் மூலமாக எனது மொழிபெயர்ப்புக் கவிதைகள் தொகுப்பும், இந்தியா உயிர்மை பதிப்பகம் ஊடாக குறுநாவல் தொகுப்பொன்றும் அடுத்தடுத்து வெளிவரவிருக்கின்றன.

தரமான இலக்கியம் பற்றி?
இலங்கையைப் பொறுத்தவரையில் கவிதை, சிறுகதை, விமர்சனங்கள், மொழிபெயர்ப்புகள், கட்டுரைகள் போன்ற இலக்கியவிடயங்களுக்கு மட்டுமேயான இதழ்கள் வெளிவருவது இக் காலகட்டத்தில் மிகக் குறைவு. 'யாத்ரா', 'கலைமுகம்' போன்ற ஒரு சில தரமான இதழ்களை மட்டும் விரல்விட்டு எண்ணிவிடலாம். முன்பு 'மூன்றாவது மனிதன்' என ஒரு இதழ் வந்தது. காத்திரமான இதழாக, பலரதும் வரவேற்பைப்பெற்ற இவ்விதழும் யுத்தச் சூழ்நிலை காரணமாக நின்று போயிற்று. இப்படியாக தரமான இலக்கிய இதழ்கள் இல்லாதது இலங்கையில் வளரும் சந்ததியைப் பொறுத்தவரையில் மிகப் பெரிய குறையாக அமைகிறது. எழுத்திலும் வாசிப்பிலும் ஆர்வம்கொண்ட இளைய சமுதாயம் வாசித்து, எழுதி தம் திறமையை வளர்த்துக் கொள்ள தரமான இதழ்கள் இல்லாதது இலங்கையைப் பொறுத்தவரையில் மிகப் பெரும் நஷ்டமாக அமைகிறது. அவர்களது வாசிப்பு இலங்கையில் இலகுவாகக் கிடைக்கும் மலிவான சினிமா இதழ்களோடு நின்றுவிடுகிறது.

ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரையில் உயிர்மை, காலச்சுவடு, யுகமாயினி, நவீன விருட்சம், வடக்குவாசல், உன்னதம், வார்த்தை, தீராநதி இன்னும் பல தரமான இலக்கிய அச்சு இதழ்கள் தொடர்ந்தும், காத்திரமான இலக்கியங்களோடு வெளிவந்துகொண்டே இருக்கின்றன. இணையத்தளத்திலும் கீற்று, வார்ப்பு, திண்ணை, உயிரோசை, புகலி, பதிவுகள் எனப் பல இலக்கிய இணைய இதழ்களாக வெளிவந்துகொண்டிருக்கின்றன. இவையனைத்தும் வளரும் எழுத்தாளர்களுக்கு அவர்களது வளர்ச்சியில் பெரும் சேவையாற்றிக் கொண்டிருக்கின்றன.

• ஒரு ஆரம்ப நிலை எழுத்தாளர் தன் திறமைகளை வளர்த்துக்கொள்ள என்னவெல்லாம் செய்ய வேண்டும்?


நான் மேலே குறிப்பிட்டது போல நிறைய வாசிக்கவேண்டும். நல்ல வாசிப்பு மட்டுமே மனிதனைப் பூரணப்படுத்தும். எழுத்தையும் கூட.

ஆஸ்திரேலிய வாசகர்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?

எழுதுவதற்கு முன்  நிறைய வாசிக்கவேண்டும். நல்ல வாசிப்பு மட்டுமே மனிதனைப் பூரணப்படுத்தும். நல்ல எழுத்தாளனாக வரவிரும்பினால் நிறைய வாசியுங்கள்.

5 comments:

kirrukan said...

[quote]ஆஸ்திரேலிய வாசகர்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?

எழுதுவதற்கு முன் நிறைய வாசிக்கவேண்டும். நல்ல வாசிப்பு மட்டுமே மனிதனைப் பூரணப்படுத்தும். நல்ல எழுத்தாளனாக வரவிரும்பினால் நிறைய வாசியுங்கள்[/quote]


நன்றிகள் சகோதரா

Anonymous said...

[quote]ஆஸ்திரேலிய வாசகர்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?

எழுதுவதற்கு முன் நிறைய வாசிக்கவேண்டும். நல்ல வாசிப்பு மட்டுமே மனிதனைப் பூரணப்படுத்தும். நல்ல எழுத்தாளனாக வரவிரும்பினால் நிறைய வாசியுங்கள்[/quote]

That is true. First we have to read alot

Ramesh

சீதாலட்சுமி said...

நல்ல வாசிப்பு மட்டுமே மனிதனைப் பூரணப்படுத்தும்
அர்த்தமுள்ள அறிவுரை
பேட்டி நன்றாக அமைந்துள்ளது
சீதாம்மா

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

அழகான, நெகிழ்வான நேர்முகம்.

Anonymous said...

ya well said....one have to read a lot to get a proper view of life..."Reading makes a man" is a famous quote too ...
shammi