அண்மையில் நான் மலேசியாவுக்குப் போயிருந்தபோது, மலேசியா முழுவதையும் சுற்றிப்பார்க்க முடியவில்லை, ஆனாலும் மலேசியத்தலைநகரின் முக்கியமான பலவற்றையும் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. இவற்றில் எனது மனதைக்கவர்ந்தது, என்னைப்பிரமிக்க வைத்தது பத்துமலை முருகன் கோயில்
நான் மட்டுமல்ல, மலேசியாவுக்குப்போன உங்களில் பலரும் இந்த அதிசயத்தைப் பார்த்துப் பிரமித்திருப்பீர்கள். ஆமாம்! BATU CAVES என்று பொதுவாக அழைக்கப்படும் இந்த ஆலயம் நிச்சயமாக ஓர் அதிசயம் தான். ஓர் உலக அதிசயமே தான்.
இந்த உலக அதிசயத்தைப் பார்க்கப் போவதற்கு முன் ”BATU CAVES” என்ற பெயரைக்கேட்டவுடன் – அதென்ன “BATU CAVES???” என்ற கேள்வி என்னுள் எழுந்தது. இதற்கான பதிலை அறிய முற்பட்ட போது கிடைத்த பதில்கள் என்னைக் குழப்பவே செய்தன.
பத்துமலை முருகன் கோயில் என்பதுதான் BATU CAVES முருகன் கோயில் ஆகிவிட்ட்து. தமிழர்கள் பத்துமலை என்று தான் சொல்லுகிறார்கள். மலாய்க்காருக்குப் பத்து என்ற உச்சரிப்பு வராதென்பதால் பத்து BATU ஆகிவிட்ட்து என்பது ஒரு விளக்கம். அதுசரி----! பத்து BATU ஆகிவிட்ட்து, மலை எப்படிக் குகை ஆகியது---? அதாவது CAVE என்றால் குகை அல்லவா? குகை எப்படி மலை ஆனது? எனற எனது கேள்விக்குச் சரியான பதில் கிடைக்கவில்லை என்றாலும், பதில் கூறியவரைக் குழம்ப வைத்த திருப்தியோடு பத்துமலைக் கோயிலுக்குப் போனபோது, அங்கு நான் பார்த்தது பத்துக் குகைகளைத்தான், பத்துமலைகளை அல்ல!
இப்போது இந்தப்பெயர் தந்த குழப்பம் என்னை மேலும் குழப்பவே, இதைப்பற்றிய சிந்தனையை ஒருபுறம் ஒதுக்கிவிட்டுத் திரும்பியபோது, என்னை ஏறிட்டு, அண்ணாந்து பார்க்கவைத்தது - என்னைப்பிரமிக்க வைத்தது - பிரமாண்டமான 142அடி உயரமான முருகன் சிலை.
15 இந்தியச் சிற்பிகளாலும் 30 மலேசியக் கலைஞர்களாலும் வடிவமைக்கப்பட்ட முருகன் சிலை, காலை இளம்வெய்யிலில் தங்கமாய்த் தகதகத்ததைப் பார்த்து அப்படியே பிரமித்துப் போய்விட்டேன்.
தாம் போகும் இடமெல்லாம் தமது மொழி, கலை, கலாச்சாரம் பண்பாடுகளைக் கொண்டு செல்பவர்கள், கொண்டுசென்று பேணிப்பாதுகாப்பவர்கள் தமிழர் அல்லவா?. 19ஆம் நூற்றாண்டில் மலேசியாவுக்குச் சென்ற தமிழர் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன? அதனால்தான் அதுவரை கருங்குகையாகக் கிடந்த மலையைக் குடைந்து குறிஞ்சிக்கடவுளுக்குக் கோயில் கட்டி இருக்கிறார்கள் இவர்கள். கோயிலாக மட்டும் அல்ல, எமது கலை கலாச்சாரம் பண்பாடுகளைப் பிரதிபலிக்கும், எமது வரலாறுகளைக்கூறும் கலைக்கூடம், பொய்யாமொழிப்புலவரின் 1330 குறள்களையும் இலகுவாக விளக்கும் ஓவியங்கள், சிலைகள், சிற்பங்களாலான வள்ளுவர் கோட்டம், தமிழ்க்கவி கம்பனின் இராமாயணம் பற்றி விளக்கும் இராமாயணக்குகை, இதன் வாயிலில் கம்பீரமாக உயர்ந்து நிற்கும் 60 அடி உயரமான ஆஞ்சநேயர் சிலை என்று – உலகம் முழுவதிலும் இருந்து மலேசியா செல்லும் சுற்றுலாப்பயணிகளையும் கவர்ந்திழுக்கும் மையமாக உலகப் பிரசித்தி பெற்றிருக்கிறது பத்துமலை முருகன் கோயில்.
மலேசியா ஓர் இஸ்லாமிய நாடாக இருந்தபோதும், இங்கு இந்துமதத்தைப் பின்பற்றும் சுதந்திரம் கொடுக்கப்பட்டிருப்பதும் எம்மைப் பிரமிக்க வைக்கிறது. பழனிக்கு அடுத்தபடியாகத் தைப்பூசத்திருவிழா இங்குதான் பிரமாதமாகக் கொண்டாடப்படுகிறது என்ற சிறப்பும் பத்துமலை முருகன் கோயிலுக்குண்டு. அத்துடன் இங்கு தமிழிலும் பூசை/அர்ச்சனை செய்யப்படுகிறது என்று கேள்விப்பட்டபோது மனதுக்கு இதமாக இருந்தது.
142அடி உயமான, பிரமாண்டமான முருகன் சிலையை அண்ணாந்து பார்த்து விட்டு, அந்தப் பிரமிப்புடன் பார்வையைப் பக்கத்தில் திருப்பினேன். அங்கே வழமைபோல் எங்களை வரவேற்கிறார் வழிப்பிள்ளையார். பிள்ளையாரின் இடப்புறத்தில் அன்னை மீனாட்சியின் ஆலயம். வலப்புறத்தில் சிவன் கோயில், இவற்றைத் தாண்டினால் வரிசையாக, ஆறுமுகனின் ஆறுபடை வீடுகள்.
ஒரே கோயிலில் பல தெய்வங்களை ஒன்றிணைத்து வழிபடுவதும், ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் – சார்ந்தவர்கள் குடும்பமாக இருக்கும் தெய்வங்களை வணங்குவதும் குடும்ப ஒற்றுமையை எடுத்துக்காட்டுவதற்கும், எமது கலாச்சாரத்தைத் தெளிவுபடுத்தவும் உதவுகிறதல்லவா? வளமான வாழ்வுக்கு வழிவகுப்பதுதானே இந்துமதத்தின் நோக்கம்.
அப்படியே மலையடிவாரத்தில் பார்த்த பிரமிப்புக்களோடு, அங்கிருந்து 272 படிகளை மிகுந்த அவதானத்தோடு, அடிமேல் அடிவைத்து மலைமேல் ஏறுகிறோம்(மழை பெய்திருந்ததால் படிகள் ஈரமாக இருந்தன). வழியில் வானரங்களின் தொல்லைகள் சுவாரஸ்யமாக இருந்தாலும், இவை எமது உடமைகளைப் பறித்துவிடலாம் என்ற பயத்தினால் அவற்றைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டே மேலே போனால், அங்கே மேலும் பல பிரமிப்புகள் காத்திருந்தன. பறந்து திரியும் புறாக்களுக்கு மத்தியில் சேவற்கொடியோனின் சின்னமாக அங்கும் இங்குமாகக் கொத்தித்திரியும் சேவல் ஒன்று ”கொக்கரக்கோ” என்று கூவவும் செய்தது.
படி ஏறிய களைப்புடன் இவற்றைப்பார்த்து இரசித்தபடி, அப்படியே அதே இடத்தில் நின்றபடி சுற்றிலும் என் பார்வையை ஓடவிட்டேன். அந்தப் பாரிய குகைக்கு நடுவில் முருகன் கோயில், சுற்றிவரப் பல சிறு சிறு குகைகள். இவற்றில் என்னதான் இருக்கின்றன என்ற எண்ணத்துடன் இவற்றுக்கு அருகில் சென்றபோது புராணகாலத்துக்குச் சென்றுவிட்டோமோ என்ற எண்ணம் தான் ஏற்பட்டது. ஆமாம்! புராணக்கதைகள் கூறும் சிற்பங்களுடன் கூடிய குகைகள் – இயற்கையுடன் செயற்கையும் இணைந்த அந்தக்காட்சிகள் என்னைப் புராண காலத்துக்கு அழைத்துச் சென்றதில் வியப்பேதும் இல்லைத்தான். இவற்றில் என்னை மிகவும் கவர்ந்தது மாங்கனி கிடைக்கவில்லை என்பதற்காகப் பெற்றோருடன் கோபித்துக்கொண்டு முருகன் பழனிமலை செல்வதும் அவ்வையார் அவரைச் சமாதானப் படுத்துவதுமான அந்தக் காட்சிகள் தான். இந்தக்காட்சிகள் எல்லாம் என் மனத்திரையில் இடம்பிடித்துப் படம்பிடித்துக் கொண்டிருந்த அதேநேரம், அந்த மலைக்குகைக்குள் எங்கிருந்தோ சூரியஒளி வருகின்றது என்ற உணர்வு உந்த, மேலே நிமிர்ந்து பார்க்கிறேன். அங்கே மேலே, மலை உச்சியில் பெரியதொரு துவாரம் – இதனூடாகச் சூரியபகவான் இருண்ட குகைக்கு ஒளியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறான். மலைமுகப்பில் அமைந்த இந்தப்பெரிய துவாரம் இயற்கையாக அமைந்ததா? இல்லைச் செயற்கையாக அமைக்கப்பட்டதா? தெரியவில்லை. இயற்கையோ, செயற்கையோ – இதுவும் ஓர் அதிசயம் தான்.
மொத்தத்தில் பத்துமலை முருகன் கோயில் ஓர் அதிசயம் தான்.
2 comments:
தங்களின் பகிர்வுக்கு மிக்க நன்றி. எங்கள் ஊர் முருகன் திருத்தலத்தை பெருமையுடன் பதிவுச் செய்தமைக்கு மிக்க நன்றி.
அன்புடன்,
கே.எஸ்.செண்பகவள்ளி
தங்களின் பகிர்வுக்கு மிக்க நன்றி. எங்கள் ஊர் முருகன் திருத்தலத்தை பெருமையுடன் பதிவுச் செய்தமைக்கு மிக்க நன்றி.
அன்புடன்,
கே.எஸ்.செண்பகவள்ளி
Post a Comment