மேமாதக் காற்றுச் சொன் சேதி                                                  

கவிதை xxxxx   செ. பாஸ்கரன்
காற்று வந்து மோதி கதவு தட்டி
துயரச்சேதி சொன்ன மாதம்
கண்ணகியாள் களிப்புடனே தேரேறி
தெருவெல்லாம் வீதியுலா வந்ததுபோய்
விளக்குவைக்க ஒரு பூசாரி இல்லாது
தனித்த அறையில் தாளிட்டுக் கிடந்திட்டாள்
கற்பூர புகைமாறி கந்தகத்தின் புகைவீச
கண்ணாயிருந்து காப்பாற்ற வேண்டியவள்
பார்ப்பாரும் இன்றி பரிதவித்துப் போய்விட்டாள்
வயப்புயர நீருயர்ந்து வாழ்திட்ட வன்னியினம்
வாழ்விடத்தை விட்டு வழிநெடுகப் போனதிந்த மாதம்
மூன்று தசாப்தங்கள் மூன்று தலைமுறைகள்
குருவிகணக்காய் மெல்ல மெல்ல கட்டிய கோட்டை
கலைந்ததென காற்றுவந்து சேதிசொன்ன மாதம்
விடுதலைக்காய் விழித்தெழுந்த இளசுகள்
வியக்கவைத்ததொருகாலம்
ஏற்ற இறக்கமற்ற தேசமொன்று எழுவதுவாய்
வெற்றிச சங்கெடுத்து ஊதிநின்ற காலம்
உலமெலாம் கை நீட்டும் உறுதிகொள்வோமென்று
களத்தில் பலியாகி மறைந்தவர்கள் எத்தனை பேர்
விடுதலைப் போரொன்றை பயங்கரவாதிகளின்
பாசறைதான் இதுவென்று
தேசமெலாம் சொல்லி முத்திரையை குத்தியது
ஏகாதி பத்தியங்கள் துப்புகின்ற எச்சிலுக்காய்
கையேந்தி நாம் நின்றோம்
பிராந்திய வல்லரசின் பிரித்தாழும் தந்திரத்தால்
பிரடி மயிர்பற்றி பிடுங்கிவிட்டோம் நம்முயிரை
வல்லரசும் வந்துவிடும் என்று வானத்தைப் பார்த்திருந்தோம்
நந்திக்கடல் நிலத்தை நனைத்தார்கள் குருதிகொட்டி
பிஞ்சுக் குழந்தைகளை பிணமாக்கிப் போட்டார்கள்
ஓடும் உறவுகளை முடமாக்கிப் போட்டார்கள்
ஒலித்த குரல் கேளாமல் குரல் வளையை நசித்தார்கள்
தேசத்தைத் திரட்டி எடுத்துவந்த தோழர்களே
என்ன விடை தந்தீர்கள்
எல்லாம் நடக்குமென்று நம்பிவந்த மானிடரை
எங்கே புதைவதற்கு விட்டீர்கள்
அழகான தேசமொன்று ஆழரவம் இல்லாது
அழிந்தொழிந்து போனதையோ
தமிழ்த் தலைவர்களே நில்லுங்கள்
தேர்தல் வந்தவுடன் வாக்குப்பெற வந்துவிட்டீர்
அவலக் குரல் ஒலித்த அப்போது எங்கிருந்தீர்
அப்பாவி மக்களெல்லாம் செத்து விழுகையிலே
ஒரு சொல்லெடுத்துப் பேச நாதியில்லை
மீண்டும் கதிரைக்காய் வந்துவிட்டீர்
பேசுங்கள் இனி உமக்கான காலம் நன்றாக பேசுங்கள்
உரிமைக்காய் உறங்காது இருந்திடுவோம் என்பீர்கள்
உரிமைக்காய் ஆயுதமும் தூக்கிடுவோம் என்பீர்கள்
பேசுங்கள் இனி உமக்கான காலம் நன்றாக பேசுங்கள்
உறவுகளாய் இருந்திட்ட ஒரு இனமே விழுந்ததங்கே
மே மாதக் காற்று ஒடுங்கி அடங்கியது
அதனுள்ளே ஒருதேசத்து மாந்தர் குரலும் அடங்கியது
எஞ்சிநிற்கும் பிஞ்சுகளை, சுயநலங்கள் ஏதுமின்றி
விடுதலைக்கு தோள் கொடுத்த பாலர்களை
வடுவோடு வாழ்வுதனை தேடுகின்ற கன்னியரை
நாம் அணைக்கும் நேரமிது
ஒப்பாரி இசைக்கும் நேரமல்ல
உயிர்வாழப் போராடும் காலமிது
உறவுகளைப் பாருங்கள்
ஊனமுற்ரோர் மறுவாழ்வு தாருங்கள்
ஓண்டிக் குடிசையிலே ஒண்டிநிற்கும
அவர் விதியை மாற்றிடுதல் பாருங்கள்.3 comments:

Ramesh said...

மே மாதக் காற்று ஒடுங்கி அடங்கியது
அதனுள்ளே ஒருதேசத்து மாந்தர் குரலும் அடங்கியது

நல்ல வரிகள் துன்பத்தின் சுமையை சொல்வதற்கு பொருத்தமான வரிகள் . கவிஞர் விட்டுச் சென்றுள்ள கேள்விகள் விடைகாணமுடியாத கேள்ளிகள் என்பது அவருக்கும் விளங்கும் என நினை;கின்றேன்

kirrukan said...

கவிதை நல்லாய்தான் இருக்கு அது என்ன பாலகர்கள்? you mean child solider? இளைஞர்கள் என்று சொல்லியிருந்தால் நல்லாக இருந்திருக்கும் .

karuppy said...

கவிஞரே
அருமையான கவிதை. எங்களை ஒருமுறை வன்னி மண்ணிற்கே அழைத்து சென்று விட்டீர்கள்.
எப்படி உங்களால் மட்டும் இப்படி சிந்திக்க முடிகிறது.
கறுப்பி