யாழ்ப்பாணத்தில் பல்வேறு நீர்வழங்கல் திட்டங்களை பிரதமர் ஆரம்பித்து வைத்தார்
உலகளாவிய நடன நிகழ்வில் பங்கேற்ற இராகலை உயர் தேசிய பாடசாலை மாணவி
பொலிஸார் மீது வாள்வெட்டு முயற்சி
மன்னாரில் 280 பில். அமெ.டொலர் பெறுமதியான கனிய வளங்கள்
நல்லூர் கோவில் நிர்வாகி இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியார் சிவபதமடைந்தார்
வட மாகாண புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா
குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் சடலம் தீயுடன் சங்கமம்!
யாழ்ப்பாணத்தில் பல்வேறு நீர்வழங்கல் திட்டங்களை பிரதமர் ஆரம்பித்து வைத்தார்
ஜனாதிபதியின் “சுபீட்சத்திற்கான நோக்கு” எண்ணக்கருவுக்கமைய நயினாதீவில் முழுமைப்படுத்தப்பட்டுள்ள கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம், தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் ஆரம்ப பணிகள்,கிளி நொச்சி – யாழ்ப்பாணம் நகர நீர் வழங்கல் திட்டம் என்பன பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால், மெய்நிகர் தொழில்நுட்பத்தின் ஊடாக, அலரிமாளிகையில் வைத்து நேற்று (புதன்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டன.
நயினாதீவு கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தினூடாக நயினாதீவு, அனலைதீவு மற்றும் எழுவைதீவு ஆகிய தீவுகளின் 6 கிராம சேவகர்கள் பிரிவுகளில் வசிக்கும் 5000 க்கும் அதிகமான பாவனையாளர்கள் சுத்தமான குடிநீரினை பெறவுள்ளனர்.
அத்துடன் தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் ஊடாக முதல் கட்டமாக சுமார் 300,000 மக்கள் குடிநீரை பெறும் நோக்கில், யாழ் நகர பிரதேசங்களில் 822 கி.மீ தூரத்திற்கு நீர்க்குழாய்கள் அமைக்கப்படவுள்ளன. இது யாழ். மாவட்டத்தின் சுமார் 184 கிராம சேவகர் பிரிவுகளை சேர்ந்த பொதுமக்கள் பயன் பெறவுள்ள ஓர் பாரிய நீர் வழங்கல் திட்டமாகும்.
இதேவேளை, தாளையடியில் நிர்மாணிக்கப்படும் கடல்நீர் சுத்திகரிப்பு நிலைய திட்டத்தின் நீட்சியாக ஒரு இலட்சம் மக்களைப் பயனாளர்களாக உள்ளடக்கும் வகையில், கிளிநொச்சி தொடக்கம் யாழ்ப்பாணம் வரை, 284 கிலோமீற்றர் தூரத்திற்கு நீர் குழாய்களை அமைக்கும் திட்டமாக கிளிநொச்சி – யாழ்ப்பாணம் நீர் விநியோக திட்டம் அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் காணொளியாக இணைந்திருந்தவேளை, வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மகேசன்,இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த ,யாழ் மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவர் அங்கஜன் இராமநாதன், நீர் வழங்கல் அதிகார சபையின் அதிகாரிகள் எனப் பலர் நேரடியாக கலந்துகொண்டனர். நன்றி தினகரன்
உலகளாவிய நடன நிகழ்வில் பங்கேற்ற இராகலை உயர் தேசிய பாடசாலை மாணவி
உலகளாவிய ரீதியில் ஒரே நேரத்தில் 850 நடனக் கலைஞர்கள் கலந்து கொண்ட மாபெரும் விரிவாக்க நிகழ்நிலை (Online) நடன நிகழ்ச்சி கின்னஸ் சாதனை பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
இந் நிகழ்வில் மலையக மண்ணில் இருந்து கலந்துக் கொண்டு கின்னஸ் சாதனைக்கான கௌரவிப்புச் சான்றிதழை பெற்றுக் கொண்டதன் மூலம் நுவரெலியா மாவட்ட இராகலை உயர் தேசிய பாடசாலையின் நடன ஆசிரியை தியாகமலர் ரவிந்திரராஜின் மாணவியும் இராகலை, டெல்மார் மேற் பிரிவைச் சேர்ந்த ஆறுமுகம் சௌந்தர்ராஜ் மற்றும் வேலு சசிகலா தேவியின் புதல்வியுமான நாட்டிய தாரகை செல்வி சௌந்தர்ராஜ் ஷக்தி, தாய்நாட்டுக்கும், பாடசாலைக்கும், பெருமை சேர்த்துள்ளார்.
இந்தியா தமிழ்நாடு மதுரை பிரபல நடனக் கலைஞர், கலைமாமணி ராமச்சந்திரன் முரளிதரன் ஏற்பாட்டில் தமிழ் மொழியின் பெருமை கூறும் வகையில் (தமிழ் அன்னை வர்ணம் என்ற பரதநாட்டிய நடன உருப்படியில் வடிவமைத்து) அண்மையில் நிகழ்நிலை தொழில்நுட்பம் ஊடாக அரங்கேற்றப்பட்ட நடன நிகழ்ச்சியில் இலங்கை சார்பில் தேசிய கல்வி நிறுவனத்தின் விரிவுரையாளர் மற்றும் செயல் திட்ட தலைவருமான திருமதி நிசாந்தராகினி திருக்குமரனின் ஒருங்கிணைப்பின் கீழ் 67 நடனக் கலைஞர்கள் பங்கேற்றனர்.
களுத்துறை சுழற்சி நிருபர் - நன்றி தினகரன்
பொலிஸார் மீது வாள்வெட்டு முயற்சி
கிளிநொச்சியில் ஒருவர் கைது; நான்கு பொலிஸாருக்கு காயம்
கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடமிருந்த இரண்டு வாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திங்கட்கிழமை இப் பகுதியில் வன்முறைச் சம்பவம் இடம்பெறுவதாக பொலிஸாரின் அவசர சேவை இலக்கம் 119 இற்கு பிரதேச மக்களால் தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த பிரதேசத்திற்கு விசாரணைக்காக சென்ற விசேட பொலிஸ் பிரிவினர் மீது வாள் வெட்டு வன்முறை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பிலேயே ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரிடம் வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்தில் 04 பொலிசார் காயமடைந்து இருவர் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன் அதில் ஒருவர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.மேலும் இருவர் சாதாரண காயங்களுடன் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். நன்றி தினகரன்
மன்னாரில் 280 பில். அமெ.டொலர் பெறுமதியான கனிய வளங்கள்
முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளில் கிடைத்த தகவல்
இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆய்வுகளில் மன்னார் வளைகுடாவில் மாத்திரம் 280 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான எரிவாயு மற்றும் கனிய எண்ணெய் வளங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை பெற்றோலிய வளங்கள் சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு) மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இலங்கையின் அரச மற்றும் அரச நிறுவனங்களுடன் சேர்த்து மொத்த கடனாக 47 பில்லியன் அமெரிக்க டொலர்கள் போன்றதொரு தொகையே உள்ள நிலையில் மன்னார் வளைகுடாவில் மாத்திரம் 280 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான வளங்களை வைத்துக்கொண்டு தடுமாறிக்கொண்டிருக்கிருக்கின்றோம் என தெரிவித்த அமைச்சர், இவ்வாறான தேசிய வளத்தை பயன்படுத்தும் வேலைத்திட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜே.வி.பி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியினரின் பூரண ஒத்துழைப்புகளை வழங்குமாறும் அவர் அழைப்புவிடுத்தார்.
ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன் - நன்றி தினகரன்
நல்லூர் கோவில் நிர்வாகி இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியார் சிவபதமடைந்தார்
நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரி குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியார் சிவபதமடைந்தார்.
1929ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் திகதி பிறந்த அவர், தனது 92ஆவது அகவையில் இன்று (09) இறைவனடி சேர்ந்தார்அவர் கடந்த 1964 டிசம்பர் 15 முதல் இன்று வரை நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்தார்.
யாழ்.விசேட நிருபர் - மயூரப்பிரியன் - நன்றி தினகரன்
வட மாகாண புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா
வட மாகாணத்தின் புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து அவர் இராஜினாமா செய்துள்ள நிலையில் அவருக்கு குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மனிதாபிமான அமைப்புக்களின் கூட்டமைப்பின் நிறைவேற்று பணிப்பாளராகவும் ஜீவன் தியாகராஜா கடமையாற்றியுள்ளார்.
இதுவரை காலமும் வட மாகாண ஆளுநராக திருமதி, பீ.எஸ்.எம். சார்ள்ஸ் கடமையாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர், பீ.பி. ஜயசுந்தரவின் கடிதம் வருமாறு...
குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் சடலம் தீயுடன் சங்கமம்!
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரி குகஸ்ரீ குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் இறுதிக்கிரிகைகள் நல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் அமைதியான முறையில் இடம்பெற்று.
அவரது பூதவுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
மாப்பாண முதலியார் கடந்த வாரம் நோய்வாய்ப்பட்டு கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (09) காலை இறைவனடி சேர்ந்தார்.
இந்நிலையில் இறுதி கிரியைகள் இன்று (10) ஞாயிற்றுக்கிழமை நல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் அமைதியான முறையில் இடம்பெற்றது.
இதில் அரசியல் பிரமுகர்கள், ஆலய தொண்டர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து பூதவுடல் காலை 11.00 மணியளவில் செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது
1964 டிசம்பர் 15 முதல் நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரியாக அவர் சேவையாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கத்து.
(யாழ்.விசேட நிருபர் - மயூரப்பிரியன்) -
No comments:
Post a Comment