தமிழன்னை ! ( அந்தாதித் தொடை )

பாட்டுடைத் தலைவி பாங்குறு தமிழாள்


பாக்களில் இனிமை விரவி   

ஏட்டுடைப் புலவர் எழுத்தாணி மேவி

            எண்ணிலாச் செய்யுள் புனைந்து

நாட்டுடை வேந்தர் நயந்து போற்ற

            நாநில மெங்கும் வளர்ந்து

காட்டிடை வளரும் கனிச்சுவை யூறும்

            கன்னி யெம்தமி ழன்னை !

 

அன்னை பொதிகையில் அகத்திய நாவினில்

            அமர்ந்து நடனஞ் புரிந்தாள்

முன்னை மொழியென முத்தமி ழணியென

            வளர்ந்து மதுரையில் தவழ்ந்தாள்

பின்னை உலகினிற் பிறமொழிக் குயர்வெனப்

            பேர்பெற் றெங்கணும் திரிந்தாள்

பொன்னை நிகர்த்துப் பொன்றுந் தமிழாய்ப்

            பாயும் நதியெனத் தவழ்ந்தாள் !

 

தாள லயங்களுஞ் சந்தமலி சீர்களும்

            தோயும் மொழியாய்ப் பொலிந்தாள்

ஆழ இலக்கண இலக்கிய வளங்களும்

            ஓதக் கடலென விரிந்தாள்

நீள நூல்களும் நிறைந்த நயங்களும்

            நீண்ட பொருள்களு மணிந்தாள்

வேழ மருப்பிடை விளையும் முத்தென

            மொழிகள் தம்மிடை மிளிர்ந்தாள் !

 

மிளிரும் பெருமை மேன்மைப் பண்பாடு

             மாண்புற அவனியிற் சிறந்தாள்

ஒளிரும் நிலவாய் ஓடும் நதியாய்

            ஒயிலாய் அழகெலாம் நிறைந்தாள்

பொழியும் அமுதாய்ப் பாகாய்த் தேனாய்ப்

            பொன்னாய் மணியாய் ஒளிர்ந்தாள்

விழியில் விடமாய் மனத்திற் பகையாய்

            வீணர் வந்ததாற் சிதைந்தாள் !

 

சிதைத்தா ரன்னைத் தமிழின் மாண்பைத்

            தம்தம் மொழியைப் புகுத்தி

விதைத்தா ரின்னும் விதவித மொழிகளை

            வீணாய்த் தமிழைச் சுருக்கி

பதைத்தார் தமிழர் பாவிகள் செயலால்

            பைந்தமிழ் அழியுமோ வென்று

திகைத்தார் தங்கள் செந்தமிழ் இன்றும்

            தரணியில் வாழ்வது கண்டு !

 

கண்டும் கேட்டும் களித்தும் உயிர்த்தும்

            கனவினும் நிலைப்பது தமிழே

உண்டும் என்றும் உறவுடன் கலந்தும்

            உயிரோ டிணைவதும் அவளே

கொண்டும் கொடுத்தும் குலவும் வாழ்வில்

            கூடும் தமிழை நாட்டு

பண்டும் தோன்றிப் பரம்பரை யாகப்

            பாடுந் தமிழின் பாட்டு !

 

( சைவப்புலவர் கல்லோடைக் கரன் )

No comments: