சத்தித் தாயே வருவாய்! (அறுசீர் கழி நெடிலடி விருத்தம்)

  NN Photo 2_CROP.jpgத. நந்திவர்மன்

           திட்டந் தீட்டித் தீமை

                   செய்வோர் கூடிப் போனார்

          பட்டோந் துன்பம் அதனால்

                   பார்த்துக் கொண்டோ இருப்பாய்?

          இட்ட மான அன்பர்

                   இன்னல் தீர்க்க இரந்தோம்

          கொட்டம் அடக்கி ஆளக்

                   கோமே தகமே வருவாய்!                 1

 

          ஞால மீதில் தீயோர்

                   நடத்தும் ஆட்சி கண்டுஞ்

          சீலம் பலவுஞ் சிதைத்துச்

                   சிறுமை பெருக்கக் கண்டும்

          ஓலம் இட்டு அழுதோம்

                   ஓயா துன்னைத் தொழுதோம்

          நீல மயிலே வருவாய்

                   நினைவில் அமைதி தருவாய்!                   2

 

          கவளச் சோற்றுக் காகக்

                   கண்ணீர் சிந்தி உழைப்பார்

          அவலங் கண்டும் அதனை

                   அழிக்கா திருத்தல் அழகோ?

          கவலை தீர்க்க வேண்டும்

                   கரங்கள் தொழுவோம் யாண்டும்

          பவளக் கொடியே வருவாய்

                   பாரில் அமைதி தருவாய்!                 3

 

          திட்பங் கொண்ட தீயோர்,

                   திருடர் கூடிப் போனார்

          நட்புக் கொண்டோர் போலே

                   நடித்து நம்மைக் கெடுப்பார்

          நுட்பம் அறிந்து கொள்வாய்

                   நொடியில் அழித்துக் கொல்வாய்

          புட்ப ராக மணியே

                   புவியில் அமைதி தருவாய்!              4

 

          கோயில் சொத்தைக் கூடக்

                   கொள்ளை அடித்துக் கொள்வார்

          வாயில் வந்த வகையில்

                   வசைகள் பாடி வாழ்வார்

          தாயே இவரை அழிக்குந்

                   தருணம் இதுவே அன்றோ?

          மாயை தீர்த்து அருள்வாய்

                   மரக தமேநீ வருவாய்!                      5

 

          நாணிக் கொள்ள மாட்டார்

                   நாளுங் கொடுமை செய்வார்

          பேணிக் காப்பாய் எம்மைப்

                   பிழைக்கச் செய்வாய் தாயே

          காணிக் கையாய் தந்துன்

                   கழலே பணிந்தோம் நாளும்

          மாணிக் கமேநீ வருவாய்

                   மனதில் அமைதி தருவாய்!               6

 

 

 

          பதர்கள் போலே ஏய்ப்பார்

                   பரிவே இன்றிச் சாய்ப்பார்

          விதமாய்த் தீமை செய்வார்

                   விட்டே வைத்தல் அழகோ?

          பதறித் தொழுதோம் உன்னைப்

                   பாரில் நன்மை தருவாய்

          முதலும் முடிவும் ஆனாய்

                   முத்தே மணியே வருவாய்!               7

 

          சூதும் வாதுஞ் செய்வார்

                   சுற்றம் என்றும் பாரார்

          பேதம் பேசி வெறுப்பைப்

                   பேணிப் பேணி வளர்ப்பார்

          நீதர் நிலைத்து நிற்க

                   நீக்கா திருத்தல் அழகோ

          மாதே இருளைக் களைவாய்

                   வைர ஒளியே வருவாய்!                  8

 

          சண்டை போடுஞ் சழக்கர்

                   தரணி யெங்குந் தழைத்தார்

          தொண்டர் பட்டார் துயரந்

                   துடைக்கா திருத்தல் அழகோ?

          பண்டை நாளில் அசுரர்

                   பலத்தை அழித்தாய் அன்றோ?

          வண்டார் குழலித் தாயே

                   வைடூ ரியமே வருவாய்!                            9

 

கவிஞர் த. நந்திவர்மன்

சிட்னி

நவராத்திரி 2021

 No comments: