உலகச் செய்திகள்

 தாய்வான் பற்றி சீனா அமெரிக்கா இணக்கம்

பிரேசில் ஜனாதிபதிக்கு எதிராக நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்

சமாதானத்திற்கான நோபல் பரிசு: கருத்து சுதந்திரத்தைப் பாதுகாக்க போராடிய 2 ஊடகவியலாளர்களுக்கு

சீனக் கடலில் அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் விபத்து

தொழுகையில் இருந்தோர் மீது தற்கொலை குண்டுத் தாக்குதல்

சீன எதிர்ப்புக்கு இடையே பிரான்ஸ் செனட்டர் குழு தாய்வான் பயணம்


தாய்வான் பற்றி சீனா அமெரிக்கா இணக்கம்

‘தாய்வான் ஒப்பந்தத்தை’ கடைப்பிடிப்பதற்கு சீன ஜனாதிபதி ஷி ஜின்பின் உடன் இணக்கம் எட்டப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.

‘ஒரு சீனா’ கொள்கையின் கீழ் தாய்வானை அன்றி சீனாவை அங்கீகரிக்கும் அமெரிக்காவின் நீண்டகால நிலைப்பாட்டை பைடன் இதன்போது குறிப்பிட்டுக் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த உடன்படிக்கையின்படி தாய்வானுடன் ‘வலுவான உத்தியோகபூர்வமற்ற’ உறவு ஒன்றை பேணுவதற்கு அமெரிக்காவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தாய்வானின் எதிர்காலம் அமைதியாக இருப்பதைத் தீர்மானிக்க உடன்பாட்டை ஏற்று நடப்பது முக்கியம் என்று பைடன் வலியுறுத்தினார்.

தாய்வான் மற்றும் சீனாவுக்கு இடையிலான பதற்றம் அதிகரித்திருக்கும் சூழலிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தாய்வான் வான் பாதுகாப்பு வலயத்திற்கு மேலால் சீன போர் விமானங்கள் கடந்த நான்கு நாட்களாக தொடர்ச்சியாக ஊடுருவி வருவதாக தாய்வான் குற்றம்சாட்டுகிறது.

‘தாய்வான் பற்றி ஷி (ஜின்பின்) உடன் நான் பேசினேன். தாய்வான் உடன்படிக்கையை கடைப்பிடிக்க நாம் இணங்கினோம்’ என்று பைடன் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு சீனா கொள்கையின்படி தாய்வான் சீனாவின் பிரிக்க முடியாத பகுதி என்றும் ஒருநாள் அந்தப் பகுதி சீனாவுடன் இணைக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் தாய்வான் தம்மை ஒரு இறைமை கொண்ட நாடாகக் கருதுகிறது.

இதற்கிடையே, சீனாவுடனான உறவு நாற்பது ஆண்டுகளில் இல்லாத அளவு மோசமடைந்திருப்பதாகத் தாய்வான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

தாய்வானை முழுமையாக ஆக்கிரமிக்கும் ஆற்றலை 2025 க்குள் சீனா பெற்றுவிடும் என்று தாய்வான் எச்சரித்தது.   நன்றி தினகரன் 
பிரேசில் ஜனாதிபதிக்கு எதிராக நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்

பிரேசில் ஜனாதிபதி ஜெயிர் பொல்சொனாரோவுக்கு எதிராக அந்நாட்டின் நகரங்கள் எங்கும் பெரும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. சரியாக இன்னும் ஓர் ஆண்டில் தேர்தல் இடம்பெறவிருக்கும் நிலையில் எதிர்க்கட்சிகள், வர்த்தகச் சங்கங்கள் இந்த ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்துள்ளன.

கருத்துக் கணிப்புகளிலும் பொல்சொனாரோ மக்கள் செல்வாக்கை பெரிதும் இழந்திருப்பது தெரியவந்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பை ஜனாதிபதி கையாளும் விதம் குறித்து பெரும்பாலான மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த நோய்த் தொற்றினால் பிரேசிலில் 600,000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் பிரேசிலின் 160க்கும் அதிகமான நகரங்கள் மற்றும் சிறு நகரங்களில் கடந்த சனிக்கிழமை இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. பொல்சொனாரோவை அகற்றும்படி கோரும் பதாகைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தி இருந்தனர்.

‘பட்டினி, வறுமை, ஊழல் என்று உலகில் பின்னோக்கிச் செல்லும் அனைத்தையும் இந்த ஜனாதிபதி பிரதிநிதித்துவப்படுத்துகிறார். ஜனநாயகத்தை பாதுகாக்கவே நாம் இங்கு வந்துள்ளோம்’ என்று ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவரான வெல்டோ ஒலிவேரியா ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை நடத்தும்படி கோரி பாராளுமன்றத்தில் 100க்கும் அதிகமான கோரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன.     நன்றி தினகரன் 

சமாதானத்திற்கான நோபல் பரிசு: கருத்து சுதந்திரத்தைப் பாதுகாக்க போராடிய 2 ஊடகவியலாளர்களுக்கு

சமாதானத்திற்கான நோபல் பரிசு, ஊடகவியலாளர்களான திமித்ரி மொரொட்டா (Dmitry Muratov), மரியா ரிசா (Maria Ressa) ஆகிய இருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அமைதி, ஜனநாயகத்துக்கான அடிப்படையாக கருத்து சுதந்திரம் இருப்பதை வலியுறுத்தியதாக இருவருக்கும் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

வருடாந்தம் மருத்துவம், பௌதிகவியல், இரசாயனவியல், இலக்கியம், சமாதானத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

அந்த வகையில், இந்த வருடத்திற்கான நோபல் பரிசுகள் கடந்த ஒக்டோபர் 04ஆம் திகதியிலிருந்து அறிவிக்கப்பட்டுவருகிறது. அதன்படி, இந்த வருடத்திற்கான மருத்துவம், பௌதிகவியல், இரசாயனவியல் பிரிவில் நோபல் பரிசு பெறுபவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவத்துக்கான நோபல் பரிசு இரண்டு பேருக்கும், இரசாயனவியலுக்கான நோபல் பரிசு இரண்டு பேருக்கும், பௌதிகவியலுக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.

நேற்று (07) இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. தன்சானியா நாட்டைச் சேர்ந்த அப்துல் ரசாக்குக்கு அவருடைய வாழ்வுக்குப் பிறகு (after lives) நாவலுக்காக வழங்கப்பட்டுள்ளது. சமரசமில்லாமல் காலணித்துவத்தின் விளைவுகள், வளைகுடா பகுதிகளின் அகதிகளின் தலைவிதிகள் போன்ற உணர்வுகளை உள்ளடக்கிய ஒன்றாகும்.

இன்று சமாதானத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டின் சமாதானத்திற்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்களான திமித்ரி மொரொட்டா, மரியா ரிசா ஆகிய இருவருக்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

அமைதி, ஜனநாயகத்துக்கான அடிப்படையாக கருத்து சுதந்திரம் இருப்பதை வலியுறுத்தியதாக இருவருக்கும் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட மரியா ரிசா தனது சொந்த நாடான பிலிப்பைன்ஸில் அதிகார துஷ்பிரயோகம், வன்முறை பயன்பாடு மற்றும் வளர்ந்து வரும் சர்வாதிகாரத்தை வெளிப்படுத்துவதற்கு கருத்து சுதந்திரத்தை பத்திரிகையின் மூலம் பயன்படுத்தியவர்.புலனாய்வு இதழியலுக்கான டிஜிட்டல் மீடியா நிறுவனம் மூலம் தொடர்ந்து அதிகார துஷ்பிரயோகத்தை எதிர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.    நன்றி தினகரன் 


சீனக் கடலில் அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் விபத்து

அமெரிக்காவுக்கு சொந்தமான அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று தெற்கு சீனக் கடல் பகுதியில் ‘’அறியப்படாத பொருள்’’ ஒன்றின் மீது மோதியதால் அமெரிக்கப் படையினர் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

யூ.எஸ்.எஸ் கனெக்டிகட் என்ற அந்தக் கப்பல் கடந்த சனிக்கிழமையன்று நீருக்கு அடியில் அந்தப் பொருள் மீது மோதியதாகத் தெரிவித்துள்ள அமெரிக்க அதிகாரிகள், இந்த மோதல் எதனால் நடந்தது என்பது குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று கூறியுள்ளனர்.

தாய்வானின் வான் பாதுகாப்பு வலயத்தில் சீனப் போர் விமானங்கள் நுழைந்ததாக அப்பிராந்தியத்தில் ஏற்கனவே பதற்றம் உண்டாகிய சூழலில் இது நிகழ்ந்துள்ளது. யூ.எஸ்.எஸ் கனெக்டிகட் நீர்மூழ்கி கப்பல் தற்போது அமெரிக்கப் பிராந்தியமான குவாமை நோக்கிப் பயணித்து வருகிறது என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தெற்கு சீனக் கடல் பகுதி சர்வதேச அளவில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் ஒன்றாக உள்ளது.

இக்கடல் பகுதியில் பெரும்பாலான பகுதி தமக்கே உரியது என்று சீனா கூறி வருகிறது.

ஆனால் அப்பிராந்தியத்தில் உள்ள பிலிப்பைன்ஸ். மலேசியா, தாய்வான் வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் சீனாவின் கூற்றை மறுத்து வருகின்றன. இந்த பிரச்சினையில் சீனாவை எதிர்க்கும் அமெரிக்கா பிற நாடுகளுக்கு ஆதரவளித்து வருகிறது.   நன்றி தினகரன் 


தொழுகையில் இருந்தோர் மீது தற்கொலை குண்டுத் தாக்குதல்

ஆப்கானில் பயங்கரம்; 50 பேர் பலியாகினர்

ஆப்கானிஸ்தானில் நேற்று பள்ளிவாசல் ஒன்றில் நடாத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆப்கானில் அமெரிக்க படைகள் வெளியேறிய பின், அந்நாட்டை தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். பின்னர் அவ்வப்போது, குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.

இந்நிலையில் குந்தூஸ் நகரில் உள்ள மசூதி ஒன்றில் நேற்று வெள்ளிக்கிழமை தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் மீது தற்கொலை குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் 50 பேர் பலியாகியுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலை எந்த பயங்கரவாத அமைப்பும் நேற்று மாலைவரை பொறுப்பேற்கவில்லை.   நன்றி தினகரன் 
சீன எதிர்ப்புக்கு இடையே பிரான்ஸ் செனட்டர் குழு தாய்வான் பயணம்

தாய்வான் வான் பகுதிக்குள் சீன போர் விமானங்கள் தொடர்ச்சியாக ஊடுருவிய சூழலில் பிரான்ஸ் செனட்டர்களின் குழு ஒன்று தாய்வானுக்கு ஐந்து நாள் விஜயமாக பயணித்துள்ளது. இந்தப் பயணம் பிரான்ஸின் உறவில் பாதிப்பை எற்படுத்தக் கூடும் என்று சீனா எச்சரித்துள்ளது.

செனட்டர் அலைன் ரிச்சர்ட் தலைமையிலான இந்தக் குழு தாய்வான் ஜனாதிபதி ட்சாய் இங்-வென், அந்நாட்டு பொருளாதார மற்றும் சுகாதார அதிகாரிகள் மற்றும் தலைநில விவகார சபை ஆகியோரை சந்திக்கிறது. பிரான்ஸ் முன்னாள் பாதுகாப்பு அமைச்சரான ரிச்சர்ட் 2015 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளிலும் தாய்வான் வந்துள்ளார்.

இந்தப் பயணம் சீனாவின் முக்கிய நலன்களை மாத்திரமன்றி சீன- பிரான்ஸ் உறவை குறைமதிப்புக்கு உட்படுத்துவதோடு பிரான்ஸின் புகழ் மற்றும் நலனையும் பாதிக்கும் என்று பிரான்ஸில் உள்ள சீன தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

தாய்வானை தனது சொந்த நிலம் என கருதும் சீனா, அதனுடனான எந்த ஒரு சர்வதேச ஒத்துழைப்பையும் எதிர்த்து வருகிறது.   நன்றி தினகரன் 
No comments: