பாரதி தரிசனம் – அங்கம் 05 யாழ்ப்பாணத்திலிருந்து மாஸ்கோ வரையில் ! பாரதியின் கவிதை வரிகளை தாரக மந்திரமாக ஏற்ற மல்லிகை !! முருகபூபதி


இலங்கை அரசியல் வரலாற்றில் 1971 ஆம் ஆண்டு முக்கிய கவனிப்பினை பெற்றிருக்கிறது.  தமிழ் இன விடுதலை நோக்கிய பயணத்தை  வடக்கில் ஆயுதம் ஏந்தித்  தொடங்கிய தமிழ் இளைஞர்களுக்கு முன்னோடியாக தென்னிலங்கையில் சிங்கள இளைஞர்கள் ஆயுதப்புரட்சிக்கு தயாரான காலப்பகுதிதான் அந்த 1971 ஆம் ஆண்டு.

பாரதி நினைவு நூற்றாண்டு நடக்கும் (2021 ) இக்காலப்பகுதியிலிருந்து பார்த்தால், சரியாக ஐம்பது வருடங்களுக்கு முன்னர் நடந்த கிளர்ச்சி அது.

இந்தக் கிளர்ச்சி சிங்கள இனத்திற்காகவோ சிங்கள மொழிக்காகவோ நடக்கவில்லை என்பது தெளிவு.  அனைத்து தொழிலாள – விவசாய – பாட்டாளி மக்களுக்காக தொடங்கப்பட்ட புரட்சி. ஆனால், இது தென்னிலங்கையில் கருக்கொண்டமையால்


வடக்கின்  தமிழ் இளைஞர்கள் மத்தியில் ஈர்க்கப்படவில்லை.

இந்தப்புரட்சி முறியடிக்கப்பட்ட பின்னர், அந்த இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் சிறைபிடிக்கப்பட்ட பின்னர், சுமார் ஐம்பதினாயிரம் இளம் சிங்கள கிளர்ச்சியாளர்களும் அப்பாவி பொது மக்களும் கொடிய அடக்கு முறையின் கீழ் கொல்லப்பட்டதன் பின்னர், புலிகள் இயக்கம் வெளியிட்ட ஒரு நூலில், தாம் குறிப்பிட்ட இந்த 1971 ஏப்ரில்  கிளர்ச்சியின் முடிவிலிருந்து பெற்ற படிப்பினைகளிலிருந்தே தமது விடுதலை இயக்கத்தை கட்டமைப்பதாக எழுதியிருந்தனர்.

குறிப்பிட்ட 1971 ஆம் ஆண்டு வழக்கம்போன்று அமைதியாகத்தான் தொடங்கியது.  அந்த ஆண்டு பிறந்ததும் தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த மல்லிகை தைப்பொங்கல் சிறப்பிதழை வெளியிட்டிருந்தது.

அதுவே நான் முதல் முதலில் பார்த்த மல்லிகை இதழ். அதனை, அதன் ஆசிரியர் டொமினிக்ஜீவாவின் கரத்திலிருந்தே பெற்றுக்கொண்டேன்.

அன்றைய நாளை மறக்க இயலாது. அவர் யாழ்ப்பாணத்திலிருந்து எங்கள் நீர்கொழும்பூருக்கு வந்திருக்கிறார் என்ற செய்தியை எனது நண்பரும் பின்னாளில் தினபதி – சிந்தாமணி பத்திரிகையாளராக பணியாற்றியவருமான தற்போது பாரிஸில் வதியும் நண்பர் செல்வரத்தினம் மூலம் அறிந்து, அவருடன் ஜீவாவை பார்க்கச்சென்றேன்.

ஜீவா எங்கள் ஊர் மூத்த எழுத்தாளர் நீர்கொழும்பூர் முத்துலிங்கம்


அவர்களின் வீட்டுக்கு வருகை தந்திருந்தார். ஜீவாவை அதற்கு முன்னர் 1963 ஆம் ஆண்டு எனது பாடசாலைப் பருவத்தில் யாழ். ஸ்ரான்லி கல்லூரியில்                           ( தற்போது கனகரத்தினம் மத்திய கல்லூரி ) எமது ஆண்கள் விடுதி  சார்பாக நடத்தப்பட்ட கூட்டத்தில்தான் முதல் முதலில்  கண்டேன்.

அப்போதும் அவர் வெள்ளை நிற நேஷனலும் வேட்டியும்தான் அணிந்திருந்தார்.  நெற்றி நரம்பு புடைக்க தர்மாவேசத்துடன் பேசினார். பாரதியையும் ஆபிரகாம் லிங்கனையும் சங்கானையில் நடந்த சாதிக்கலவரத்தையும் நினைவுபடுத்திப் பேசினார்.

அப்போது நான் 12 வயதுச்  சிறுவன்.  அவரது உரையையே மெய்மறந்து கேட்டுக்கொண்டிருந்தேன்.

சுமார்


எட்டு வருடங்களின் பின்னர் அவரை எதிர்பாராமல் சந்தித்தபோதும் அவரது தர்மாவேசக்குரலைக்கேட்டு அசந்துபோனேன்.

நீர்கொழும்பூர் முத்துலிங்கம் என்னை அவருக்கு அன்று அறிமுகப்படுத்தும்போது எனது தாத்தாவான  பாரதி இயல் ஆய்வாளர் ரகுநாதனையும் நினைவுபடுத்தி,  “ அவரது பேரன்தான் இவர்   “ என்றார்.

ஏற்கனவே ரகுநாதன் 1956 இல் இலங்கைக்கு பாரதி விழாக்களுக்கு வருகை தந்திருந்தவேளையில் சந்தித்து உரையாடியிருக்கும் ஜீவா, அன்றைய என்னுடனான முதல் சந்திப்பிலேயே  பரஸ்பரம் ஒருவரை ஒருவர் கவர்ந்து கொண்டோம்.

அன்று ஜீவா எனக்குத்தந்த மல்லிகை 1971 ஜனவரி இதழை அவருக்கு முன்னாலேயே  விரித்துப்பார்க்கின்றேன். 

 "ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி

யாதியினைய கலைகளில் உள்ளம்

ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர்

ஈன நிலைகண்டு துள்ளுவார்" 

என்ற பாரதியின் கவிதை வரிகளே அதன் தாரக மந்திரமாக முதல்


பக்கத்தில் இடம்பெற்றிருந்தது.  அந்த இதழ் யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் 60 ஆம் இலக்கத்தில் அமைந்திருந்த ஜோசப் சலூன் என்ற சிகையலங்கார கடையிலிருந்து வெளிவந்திருந்தது.

அடுத்த பக்கத்தில் தைப்பொங்கல் வாழ்த்து,  அனைவருக்கும் குறிப்பாக எழுத்தாளர்கள் – வாசகர்கள் – மல்லிகை ஆதரவாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த இனிய தைப்பொங்கல் வாழ்த்தில்  ஏனைய பத்திரிகை – இலக்கிய இதழ் ஆசிரியர்கள் போலன்றி,  மல்லிகையின் அச்சுக்கோப்பாளர் கா. சந்திரசேகரம் அவர்களின் பெயரையும் அச்சிட்டு, மல்லிகையை உருவாக்குபவர் என்றும் பதியப்பட்டிருந்தது.

மல்லிகை ஆசிரியர் ஜீவாவின் இயற்பெயர் டொமினிக் என்றும் தமிழ்நாட்டிலிருந்து தலைமறைவாக இலங்கை வந்த தோழர் ஜீவானந்தம் அவர்களினால் ஆகர்சிக்கப்பட்டு, தனது பெயரை டொமினிக்ஜீவா என்று மாற்றிக்கொண்டார் முதலான


 தகவல்களையும் அந்த முதல் சந்திப்பில் அறியமுடிந்தது.

அன்று தொடக்கம் மல்லிகை ஜீவா, தமிழக ஜீவா,  பாரதி பற்றியெல்லாம் தேடலில் ஈடுபட்டேன்.

குறிப்பிட்ட மல்லிகை 1971 ஜனவரி மாத இதழில் எழுதியிருந்த கே. கணேஷ், கவிஞர் இ. முருகையன், மு. கனகராசன், யாதவன், துரை மனோகரன், நெல்லை க. பேரன், மு. பொன்னம்பலம் , இரசிகமணி கனக செந்திநாதன், செந்தாரகை ( துளசிகாமணி ) ஆகியோர் பின்னாளில் எனது இனிய நண்பர்களானார்கள்.

அதற்கெல்லாம் வித்திட்டவர்தான் மல்லிகை ஜீவா. அந்த 1971 ஜனவரி முதல்,  அவர் மறைந்த 2021 ஜனவரி வரையில்  என்னுடன் நெருக்கமாக  உறவாடியவர்.  என்னை இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தியதும் அவர்தான்.

1972 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நாம் மல்லிகை நீர்கொழும்பு


பிரதேச சிறப்பிதழை வெளியிட்டோம்.  அதன் வெளியீட்டு அரங்கு எங்கள் ஊரில் எமது இல்லத்தில்தான் நடந்தது. அவ்விதழில்தான் எனது முதல் படைப்பு ( வளர்மதி நூலகம் பற்றிய அறிமுக கட்டுரை ) வெளியானது.

மல்லிகையால் எனக்கு இலங்கையிலும் தமிழகத்திலும் மட்டுமன்றி சோவியத் நாட்டிலும் இலக்கியவாதிகள் அறிமுகமானார்கள்.

மல்லிகை முதலாவது இதழ் 1966 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி வெளியானபோது  அதன் விலை 30 சதம்தான் என்பதை அறியும்போது ஆச்சரியம்தான்.

தொடக்கத்தில் யாழ்ப்பாணத்தில் கஸ்தூரியார் வீதியில்


அமைந்திருந்த ஜோசப் சலூன் என்ற சிகையலங்கார நிலையத்திலிருந்து வெளியாகி, பின்னர் மானிப்பாய் வீதிக்கும் கே.கே.எஸ். வீதிக்கும் இடையில் ( ராஜா தியேட்டருக்கு பின்புறமாகச் சென்ற )  சிறிய ஒழுங்கையிலிருந்த சிறு கட்டிடத்தில் அமைந்த  மல்லிகைக்கான பிரத்தியேக அலுவலகத்திலிருந்து வெளியானது.

பின்னர் ஜீவா கொழும்புக்கு இடம்பெயர்ந்தார்.  ஶ்ரீகதிரேசன் வீதியிலிருந்து வெளியான மல்லிகை,  2012 ஆம் ஆண்டுடன் தனது ஆயுளை நிறைவுசெய்துகொண்டது.

மல்லிகை இதழ்கள் பலவற்றில் பாரதி சம்பந்தமான ஏராளமான ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன.  

மல்லிகை ஜீவா அவர்களை பாரதியின் புதிய ஆத்திசூடியின் வெளிச்சத்திலும் அடையாளம் காணமுடியும்.


ஏறு போல் நட  - ஓய்தலொழி - குன்றென நிமிர்ந்து நில் - சிதையா நெஞ்சுகொள் - சுமையினுக்கு இளைத்திடேல் - தூற்றுதல் ஒழி - தோல்வியிற் கலங்கேல் - ரௌத்திரம் பழகு - வெடிப்புறப்பேசு - முதலான  குணாதிசயங்கள்  இருந்தன. இந்த அருங்குணங்கள் மல்லிகைஜீவாவிடமும்  நீடித்திருந்தவை என்பது பரகசியம்.

இலங்கையில் மல்லிகை இலக்கிய உலகில் மணம்பரப்பிய காலம் ஈழத்து இலக்கிய வளர்ச்சியின் பொற்காலம் எனலாம்.  குறிப்பாக பாரதிஇயல் ஆக்கங்களுக்கு மல்லிகை  முன்னுரிமை வழங்கியது.

1982 ஆம் ஆண்டு பாரதி நூற்றாண்டு காலத்தில் மல்லிகை,   சிறப்பிதழும் வெளியிட்டு,  பல பாரதியியல் ஆக்கங்களுக்கும், அந்த நூற்றாண்டு முதல் களம் வழங்கியது.  பேராசிரியர் கைலாசபதி மல்லிகையில் எழுதிய பாரதி தொடர்பான சில கட்டுரைகள் தமிழ்நாட்டில் செ. கணேசலிங்கனின் குமரன் இல்லம் வெளியிட்ட கைலாசபதியின் பாரதி ஆய்வுகள் நூலிலும் இடம்பெற்றுள்ளன.

மல்லிகை 1982 ஒக்டோபர் இதழில் கைலசபதியின்


முற்போக்காளரின் பாரதி ஆய்வுகள் என்ற விரிவான கட்டுரையும் வெளிவந்தது. அதே ஆண்டு டிசம்பர் மாதம் கைலாசபதி எதிர்பாராதவாறு  மறைந்தார்.

கைலாசபதியின் நெருங்கிய நண்பர் செ. கணேசலிங்கன்,  கைலாஸ் மறைந்து ஒரு மாத காலத்துள் குறிப்பிட்ட  பாரதி ஆய்வுகள் நூலை வெளியிட்டார்.  பேராசிரியர்கள் சித்திரலேகா மௌனகுருவும்  எம். ஏ. நுஃமானும் இந்நூலுக்கு விரிவான பதிப்புரை எழுதினார்கள்.  அடுத்தடுத்து சில பதிப்புகளை இந்நூல் கண்டுள்ளது.

1982 மல்லிகை  ஒக்டோபர் இதழில் கே. நீலகண்டன் எழுதியிருந்த சோவியத் மொழிகளில் பாரதி பாடல்கள் என்னும் கட்டுரை மிகவும் முக்கியமானது.

பாரதி நினைவு நூற்றாண்டில் அதனை நினைவுபடுத்தவேண்டியுள்ளது.

அக்கட்டுரை இவ்வாறு தொடங்கியிருந்தது:

 “ சென்ற 25 ஆண்டுகளில் பாரதியாரின் கவிதைகள் பலவும் ரஷ்ய


மொழியில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டிருக்கின்றன. இப்பொழுது பாரதியாரைப்பற்றி பாரதி நூற்றாண்டு விழாக் கமிட்டித்தலைவர் டாக்டர் விதாலி ஃபூர்னிக்காவும் டாக்டர் எல். பிசிசினாவும் எழுதிய நூல் ஒன்றை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

பாரதியாரின் சுதந்திரப்பள்ளு என்ற பாடலையும் பாரதியார் வாழ்க்கைக் குறிப்பையும் லித்ர கர்னாயா கஜதா என்ற சஞ்சிகை அண்மையில் பிரசுரித்தது. சுமார் 30 இலட்சம் பிரதிகள் விற்பனையாகும் இந்த சஞ்சிகை சோவியத் யூனியன் எழுத்தாளர் சங்கத்தினால்  பிரசுரிக்கப்படுகிறது.

இளம் சோவியத் கலைஞராகிய மிகயில் ஃபியொதரோவ் தீட்டிய பாரதியார் படம் ஒன்றை 5 இலட்சம் பிரதிகள்  விற்பனையாகும் மாஸ்க்வா  என்ற மாத சஞ்சிகை 1982 ஆகஸ்டு மாதத்தில் பிரசுரித்தது. பாரதியாரைப்பற்றிய ஒரு கட்டுரையையும் காலைப்பொழுது, சுதந்திரப்பயிர், மனதிலுறுதி வேண்டும், நல்லதோர் வீணை செய்தே ஆகிய பாடல்களின் மொழிபெயர்ப்புகளையும் மாஸ்க்வா சஞ்சிகை வெளியிட்டது. 

நீலகண்டனின் இக்கட்டுரை இறுதியில்  இவ்வாறு நிறைவுபெற்றிருந்தது:

“ சோவியத் யூனியனில் பல்வேறு குடியரசுகளின் மக்களுக்கும் பாரதியாரை அறிமுகப்படுத்த மாஸ்கோவில் அமைக்கப்பட்டுள்ள பாரதி நூற்றாண்டு கொண்டாட்டக்கமிட்டி அரும்பாடுபட்டுவருகிறது. இவை தவிர, பாரதியார் பற்றி பல சிறப்பு நிகழ்ச்சிகளை ஒலிபரப்ப மாஸ்கோ ரேடியோ திட்டமிட்டுள்ளது.   

இக்கட்டுரையில் குறிப்பிடப்படும் டாக்டர் விதாலி


ஃபூர்னிக்காவைப்பற்றி மல்லிகை ஜீவா, கே. கணேஷ் ஆகியோரும்,   பாரதி நூற்றாண்டு விழாவுக்காக இலங்கை வந்திருந்த பாரதி இயல் ஆய்வாளர் தொ.மு. சி. ரகுநாதனும் எனக்கு மேலதிக தகவல்களை சொல்லியிருந்தனர்.

ரகுநாதன் வரும்போது  எனக்காக       இரண்டு      பெறுமதியான    நூல்களை கொண்டுவந்து    தந்தார்.

ஒன்று      அவர்      எழுதிய     அவரது      நெருங்கிய     நண்பர்     புதுமைப்பித்தன்     வரலாறு       மற்றது,      மகாகவி      பாரதி     பற்றி    சோவியத்     அறிஞர்கள்     என்ற தொகுப்பு நூல்.

பாரதி    நூற்றாண்டை      முன்னிட்டு      சோவியத்     விஞ்ஞானிகள், கவிஞர்கள்,      எழுத்தாளர்கள்,      மொழிபெயர்ப்பாளர்கள்      இணைந்த     ஒரு குழு      நூற்றாண்டை    சோவியத்தில்   கொண்டாடுவதற்காக மாஸ்கோவில்        அமைக்கப்பட்டிருக்கும் செய்தியையும் அவர் சொன்னார்.       

அந்தக்குழுவில்    இணைந்திருந்த     சோவியத்    அறிஞர்கள்     செர்கி ஏ. பரூஜ்தீன்    -        பேராசிரியர்   -   இ.பி.    செலிஷேவ்   கலாநிதி      எம்.எஸ். ஆந்திரனோவ்   -       கலாநிதி     விளாதீமிர்   ஏ. மகரெங்கோ -      கலாநிதி    வித்தாலி     பெத்ரோவிச்      ஃபுர்னிக்கா   -     கலாநிதி    எல். புச்சிக்கினா  (பெண்) கலாநிதி   செம்யோன்      கெர்மனோவிச்      ருதின்    ( இவரது தமிழ்ப்புனைபெயர்    செம்பியன்)        கலாநிதி      அலெக்சாந்தர்     எம் துபியான்ஸ்கி   -   திருமதி     இரினா    என்.    ஸ்மிர்னோவா    ஆகியோரின் பெறுமதியான     கட்டுரைகள்   மகாகவி      பாரதி     பற்றி    சோவியத்     அறிஞர்கள்     என்ற   அந்தத்   தொகுப்பில்     இடம்பெற்றிருந்தன.

இதனைப்படித்தபின்னர்தான் எதிர்பாராதவிதமாக 1985 இல் எனக்கு மாஸ்கோவுக்கு செல்வதற்கான வாய்ப்பு கிடைத்தது.  அங்கு சென்று  முன்னேற்றப்பதிப்பகத்தில் பணியாற்றும் விதாலி ஃபூர்னிக்காவையும் சந்திக்கவிரும்பினேன்.

மல்லிகை ஜீவாவுடன் கடிதத் தொடர்பிலிருந்த அவருடைய முகவரியை யாழ்ப்பாணத்திற்கு கடிதம் எழுதிபெற்றுக்கொண்டு பயணம் மேற்கொண்டேன்.

அங்கு அவரை சந்தித்த கதையை ஏற்கனவே விரிவாக எனது நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள் நூலில் எழுதியிருக்கின்றேன்.

எமக்கு பாரதி போன்று வங்கத்திற்கு தாகூர் போன்று விதாலி ஃபூர்னிக்காவின் பூர்வீகமான உக்ரேய்னுக்கு ஒரு மகா கவிதான் தராஸ்  ஷெவ்சென்கோ.

இவருடன்  மற்றும் ஒரு உக்ரேய்ன் கவிஞர் இவான்     ஃபிராங்கோவின் கவிதைகளையும் தமிழுக்கு வரவாக்கியவர் நண்பர் கே. கணேஷ்.

மாஸ்கோவில் விதாலி ஃபூர்ணிக்காவை சந்தித்தபோது,  அவர் கணேஷின் தொடர்பினை பெற்றுத்தரச்சொன்னார். இலங்கை திரும்பியதும் கணேஷ் - விதாலி ஃபூர்ணிக்கா தொடர்புகளை எற்படுத்திக்கொடுத்தேன்.

கணேஷ்    தராஸ்     செவ்ஷென்கோவை     மீண்டும்     நினைக்கவும் கவிதைகளைத்     தொடர்ந்து      மொழி பெயர்க்கவும்      அந்த      மகாகவியின் 125 ஆவது      வருட    நினைவு    விழாவில்      கலந்து கொள்வதற்கு ருஷ்யாவுக்கு       பயணமாவதற்கும்     நான் ஃபூர்னீக்காவுடன்      ஏற்படுத்திக் கொடுத்த      தொடர்பும்    உறவும்தான்    காரணம்     என்று    அடிக்கடி நினைவுபடுத்தி   கணேஷ் எனக்கு   கடிதங்கள்      எழுதினார்.

அத்துடன்      சென்னை      நியூ    செஞ்சுரி   புக்   ஹவுஸ்  1993    இல் வெளியிட்ட    உக்ரேனிய     மகாகவி     தராஸ்     செவ்ஷென்கோ    கவிதைகள் ( மொழிபெயர்த்தவர்    கணேஷ்)     நூலின்     முன்னுரையிலும் இந்தத்தொடர்பாடல்     பற்றி    பதிவுசெய்துள்ளார்.

1986     இல்      ஒரு     சோவியத்    குழுவில்   அங்கம்      வகித்து    ஃபூர்னீக்கா குறுகிய      கால    விஜயம்     மேற்கொண்டு    கொழும்புக்கு    வருகை   தந்த   சமயம்,  மீண்டும் கணேஷை சந்தித்தார்    முன்னேற்பாடு    ஏதும்     இன்றி       கொழும்பில்  வலம்புரி கவிதா வட்டத்தின்  நிகழ்வில்    ஃபூர்னீக்காவுக்கு வரவேற்பு வழங்கினோம்.  

இத்தனைக்கும் பின்னால் மகாகவி பாரதிதான்  நிற்கிறார்.    ஒரு சங்கிலிப்பின்னலின் தொடர்புபோன்று  பாரதி நீக்கமற நிறைந்திருக்கின்றார்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் 1971 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியான மல்லிகை இதழ் ஊடாக பெற்ற பாரதி தொடர்பான தேடலுடன், பின்னாளில்  எத்தனை இலக்கிய ஆளுமைகளை பெறமுடிந்தது.

 “ இங்கிவரை  யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்.   என்றுதான் பாரதியின் வரிகளிலிருந்தே பாடத்தோன்றுகிறது.

அத்துடன்,  “ அறிவை வளர்த்திட  வேண்டும் – மக்கள் அத்தனை பேருக்கும் ஒன்றாய்  என்ற பாரதியின் வரிகளும் மனதில் வருகின்றன.

----0----

 

 

 

 

No comments: