எழுத்தும் வாழ்க்கையும் – அங்கம் 62 வீரகேசரிக்கு 36 ஆண்டுகளுக்கு முன்னர் வந்த சோதனை ! “ நூல் விட்டுப்பார்த்த “ செல்வந்தரும் நுண்மையாக பதில் சொன்ன ஊடகவியலாளரும் !! டிஜிட்டல் யுகத்தில் இன்று பல தமிழ்ப் பத்திரிகைகள் !! முருகபூபதி


இந்தத் தொடரின் 60 ஆம் அங்கத்தில் விட்ட இடத்திலிருந்து மீண்டும் வருகின்றேன்.

திருகோணமலையில் ஜப்பான் நிறுவனத்துடன் இணைந்து தான் தொடங்கியிருந்த மிட்சூய் சீமெந்து ஆலையை ஒரு ஆயுதம் ஏந்திய தமிழ் இயக்கம் குண்டு வைத்து தகர்த்துவிட்ட செய்தியறிந்து கோபத்திலிருந்த வீரகேசரி நிறுவனத்தின் தலைவர் ஞானம், ஒருநாள் ஆசிரிய பீடத்துக்கு தொடர்புகொண்டு ஒரு  பத்திரிகையாளரை தனது வீட்டுக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

பிரதம ஆசிரியர் ஆ. சிவநேசச்செல்வனும் வாரவெளியீட்டுக்கு பொறுப்பான ஆசிரியர் பொன். ராஜகோபாலும் மந்திராலோசனை நடத்திய பின்னர்  அலுவலக ஊடகவியலாளர்  இ. தம்பையாவை தெரிவு செய்து அனுப்பினர்.

தம்பையா சட்டம் பயின்ற பின்னர்  அங்கே இணைந்தவர்.  இவருடன்


இணைந்தவர்கள் மேலும் இருவர். அவர்கள்:  ஶ்ரீகாந்தலிங்கம், மு. பாலச்சந்திரன்.  இவர்கள் மூவரும் எனது நல்ல நண்பர்கள். தம்பையா இடதுசாரி சிந்தனை கொண்டவர். மலையகத்தில் தலவாக்கலையைச் சேர்ந்தவர்.  அவரது அழைப்பில் நானும் நண்பர் சில்லையூர் செல்வராசனும் கமலினி செல்வராசனும் ஒரு தடவை அங்கு நடந்த பாரதி விழாவில் உரையாற்றச்சென்றிருக்கின்றோம்.

தம்பையா, கொழும்பில்  தேசிய கலை இலக்கியப்பேரவையில் சட்டத்தரணி சோ. தேவராஜா,  தணிகாசலம், மற்றும் தோழர் செந்திவேல் ஆகியோருடன் இணைந்து இயங்கிய காலம்.

இவர்கள் நடத்திய கூட்டங்களிலும் நான் உரையாற்றியிருக்கின்றேன். நான் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தேசிய சபையின் அங்கத்தவன். அத்துடன் கொழும்புக் கிளையின் செயலாளர்.  அரசியல் ரீதியாக தேசிய கலை இலக்கியப் பேரவைக்கும் எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திற்கும் இடையில் முரண்பாடுகள் இருந்தபோதிலும் தே. க. இ. பேரவையைச் சேர்ந்தவர்களுடன் எனக்கு நல்லுறவு ஆரோக்கியமாக நீடித்தது.

நண்பர் தம்பையா ,  செல்வந்தர் ஞானம் அவர்களின் இல்லத்திற்கு புறப்படும் முன்னர் என்னிடம் வந்து, திருகோணமலை சீமெந்து ஆலைமீதான  தாக்குதல்  சம்பவம் பற்றி மேலதிக தகவல்களை கேட்டுப்பெற்றார்.

வெள்ளவத்தை லில்லி அவனியூவில் அமைந்திருந்த ஞானம் அவர்களின் வீட்டிற்கு தம்பையா சென்றபோது,  அங்கு அவருக்கு அந்த செல்வந்தர் தேநீர் விருந்து வழங்கி உபசரித்துவிட்டே நேர்காணலுக்கு தயாரானார்.

அந்த உரையாடலுக்கு முன்னர், வீரகேசரி ஆசிரிய பீடத்தில் எத்தனைபேர் பணியாற்றுகிறார்கள்..? அங்கு  மலையகம்  ,  வடக்கு – கிழக்கு – மேற்கிலிருந்து எத்தனைபேர் பணியாற்றுகிறார்கள் என்பதையும் கேட்டு அறிந்தார்.

இதனைத்தான்  “ நூல்விட்டுப் பார்த்தல்  “ எனச்சொல்வது.


பிரித்தாளும் தந்திரத்தில் இதுவும் ஒரு வகை.  தம்பையா முற்போக்கான சிந்தனைகொண்டவர்.  அத்துடன் வர்க்கப்பார்வை அவரிடமிருந்தது.

வீரகேசரியின் முதலாளி என்ன நோக்கத்துடன் தன்னை அழைத்து நேர்காணல் தரப்போகிறார் என்பதை தொடக்கத்திலேயே புரிந்துகொண்டார்.  அதனால் நுண்மையாக அக்கேள்விகளுக்கு பதில் கொடுத்தார்.

ஞானம் அவர்கள், அந்த நேர்காணலில், தான் எதற்காக கிழக்கு மாகாணத்தில் சீமெந்து ஆலையை ஜப்பான் நிறுவனத்துடன் இணைந்து தொடங்கியதற்கான காரணத்தையும் விளக்கினார்.

வடக்குடன் ஒப்பிடும்போது கிழக்கு எந்தெந்த விடயங்களில்         ( கல்வி, பொருளாதாரம்,  வேலை வாய்ப்பு ) பின்தங்கியிருக்கிறது என்பதையும் விபரித்து,  கிழக்கின் இளைம் தலைமுறைக்கான வேலை வாய்ப்பினை வழங்கும் நோக்கத்துடன்தான்


திருகோணமலையில் அந்த சீமேந்து ஆலையை தாம் ஆரம்பித்ததாகவும், அதனை சகித்துக்கொள்ள இயலாத ஒரு வடபகுதி இயக்கம் குண்டு வைத்து தகர்த்துள்ளது . இதனால் யாருக்கு நட்டம்..?  எந்தப்பிரதேசத்தவர்  பாதிக்கப்ப்பட்டார்கள்…?  “ என்ற தொனியில் அந்த நேர்காணலை தம்பையாவுக்கு வழங்கி அனுப்பிவைத்தார்.

ஞானம் சொல்லச்சொல்ல, அனைத்தையும் தம்பையா எழுதிக்கொண்டு வந்து அந்த நேர்காணலை ராஜகோபாலிடம் காண்பித்தார்.

ராஜகோபாலிடமிருந்து செம்மைப்படுத்தலுக்காக என்னிடமும் அந்தப்பிரதி வந்தது.

அதன் தொனி பற்றி நண்பர் தம்பையாவிடம் பேசினேன். அப்போது அவர்,  ஞானம் தன்னையும் தனது ஊரையும் இனம் கண்டவாறு,  அலுவலகத்தின் உறைபொருளையும் அறிந்துகொண்டு  பேசிய தகவலைச்  சொன்னார்.

ஏற்கனவே எம்.ஜி.ஆர். நடித்த நினைத்ததை முடிப்பவன் திரைப்படத்திற்கு ஃபைனான்ஸியராகவிருந்தவர் ஞானம் என்பதையும்,  அதன் படப்பிடிப்பை பார்க்கச்சென்றவிடத்தில் எம். ஜி. ஆர். தன்னை கண்டுகொள்ளாதமையினால் அவரது  புகைப்படங்களை வீரகேசரியில் தவிர்க்குமாறு அழுத்தம் கொடுத்திருந்தார் என்பதையும்  இந்தத் தொடரில் எழுதியிருக்கின்றேன்.

அத்தகைய இயல்புள்ள  ஒரு தனவந்தர், கிழக்கில் தனது மூலதனத்திற்கு வடக்கிலிருந்து  இயங்கிய ஒரு ஆயுத  இயக்கத்திலிருந்து  தாக்குதல் வந்திருந்தால், அதனை எவ்வாறு பார்ப்பார் – அணுகுவார் என்பது புரிந்துகொள்ளத்தக்கது.


தம்பையா எழுதிய  குறிப்பிட்ட நேர்காணல் பிரதி,  வீரகேசரி வாரவெளியீட்டுப்பிரிவு அச்சுக்கோப்பாளர்களிடம் சென்றது.  அதன் அச்சுப்பிரதியை ( Proof copy ) ராஜகோபாலும் நானும் தம்பையாவும் பார்த்தோம்.

ராஜகோபால் ,  தம்பையா எழுதியிருந்த அந்த நேர்காணலை மேலும்  செம்மைப்படுத்தியிருந்தார்.  வீரகேசரி வடக்கிற்கும் சென்று கணிசமாக விற்பனையாகும் பத்திரிகை.  அதனால்  அந்த நேர்காணலில் பிரதேச வாதம் வந்துவிடாதிருக்கும்  வகையில் ராஜகோபால்  மேலும் செம்மைப்படுத்தியிருந்தார்.

பத்திரிகையின் பக்க வடிவமைப்பாளரிடம்  திருத்தப்பட்ட அந்த Proof copy  செல்லும் முன்னர், ஞானத்திடமிருந்து ராஜகோபாலுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

அதனை ராஜகோபால் எதிர்பார்க்கவில்லை.  குறிப்பிட்ட  Proof copy யை  வாசிக்குமாறு அந்த முதலாளி பணித்தார். 

ராஜகோபாலும் பொறுமையுடன் வாசித்தார். அதனால் ஞானம் திருப்தியடையவில்லை. வடபகுதிக்கும் வீரகேசரி செல்கிறது என்பதை ராஜகோபால் விளக்கினார்.

தான்தான் வீரகேசரியினதும் திருகோணமலை சீமெந்து ஆலையினதும் உரிமையாளன். பாதிப்பு தனது மூலதனத்திற்குத்தான் ஏற்பட்டுள்ளது. அதனை தனது ஊடகத்தில் தெளிவாகச்சொல்லவேண்டும் என்று ஞானம் மறுமுனையிலிருந்து வலியுறுத்தினார்.

பின்னர் ஞானம் எதிர்பார்த்தவாறே அந்த  நீண்ட நேர்காணல் வீரகேசரி வாரவெளியீட்டின் முதல் பக்கத்திலிருந்து உட்பக்கம் வரையில் தொடர்ந்தது.

அதிதீவிர வாதிகள் பின்விளைகள் பற்றிய சிந்தனை எதுவுமின்றி  அக்காலப்பகுதியில்  நடத்திய  தாக்குதல்கள் அநேகம்.  ஒவ்வொரு ஒலிக்கும் எதிரொலி இருக்கும்.

ஆயுதம் ஏந்திய தீவிரவாத தமிழ் இயக்கங்கள் ஒரு தாக்குதலை நடத்தினால், அதற்கு எதிர்வினையாக இலங்கையின் ஆயுதப்படைகள் மற்றும் ஒரு பெரிய தாக்குதலை நடத்தும்.  ஆயுதப்படை தாக்கினால், அதற்கு எதிர்வினையாக இயக்கங்கள் மற்றும் ஒரு தாக்குதலை நடத்தும்.

இடையில் சிக்குண்டு மடிந்தது அப்பாவித்தமிழ் மக்கள்தான். அத்தகைய சம்பவங்கள் பற்றிய செய்திகள்தான் வடக்கிலிருந்தும் கிழக்கிலிருந்தும் எமது பிரதேச நிருபர்களிடமிருந்து தினமும் வந்துகொண்டிருந்தன.

அரசின் தகவல் திணைக்களம் “   பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்     என்று செய்தி தரும்.  ஆனால், நாம் அவ்வாறு கொல்லப்பட்டவர்களின் பெயர் – வயது – தொழில் -  எத்தனை பிள்ளைகளின் தந்தை முதலான விபரங்களுடன் செய்திகளை எழுதினோம்.

செய்தியின் இறுதியில், இது இவ்விதமிருக்க தகவல் திணைக்களத்தின் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது என்று அங்கிருந்து கிடைத்த செய்தியை பதிவேற்றுவோம்.

 வாசிக்கும் மக்களுக்கு என்ன நடந்திருக்கிறது என்பது புரிந்துவிடும்.

எனக்கு பிரத்தியேகமாக ஒரு மேசையை தந்து அங்கிருந்து வடக்கு – கிழக்கு போர்க்கால செய்திகளை எழுதும் பணி தரப்பட்டது.

ஆசிரியர் சிவநேசச் செல்வன் எனக்குத்தந்த டயறியில் பலரதும் தொலைபேசி இலக்கங்களை எழுதி வைத்திருந்தேன். அதில் அரசியல் தலைவர்கள்,  அமைச்சர்கள், அரசாங்க அதிபர்கள், உதவி அரசாங்க அதிபர்கள், கல்லூரி அதிபர்கள், மற்றும் தனிப்பட்ட முறையில் எனக்குத் தெரிந்த எழுத்தாளர்கள் – குடும்பத்தலைவர்களின் தொலைபேசி இலக்கங்கள்  இடம்பெற்றன.

இதுபற்றிய விரிவான பதிவை எனது சொல்லத்தவறிய கதைகள் நூலில் காணலாம்.

ஒரு சம்பவத்தில் மணவறையிலிருந்த மணமகன் மணக்கோலத்திலேயே மடிந்தார்.  மற்றும் ஒரு சம்பவம் கிழக்கு அரியாலையில் நடந்தது.

அதில் இரண்டு நாட்களுக்கு முன்னர் மணம் முடித்த தம்பதியர் கால்மாறிப்போகும் சடங்கின்போது,  தாக்குதலுக்குள்ளானார்கள்.

மணமகன் வீதியோரத்தில் மணமகளின் கண்முன்னே மடிந்தார். இவ்வாறு நெஞ்சைப்பதறவைக்கும் செய்திகளையே தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தேன்.

இந்நிலையில் வடக்கிற்கான ரயில் பயணம் சீர்குலைந்தது. யாழ்தேவி, உத்தரதேவி மற்றும் இரவில் கொழும்பிலிருந்து புறப்படும் தபால் ரயில் என்பன  வவுனியாவுடன் தரித்தன.

வவுனியாவுக்கும் கொழும்புக்கும் இடையில்தான் போக்குவரத்து சேவைகள் நடந்தன. அதேசமயம் பிள்ளையார், கே. ஜி. தனியார் பஸ் சேவைகளும் தொடர்ந்தன.

வீரகேசரி வெளியூர் பதிப்பும் மித்திரனும் முதலில் அச்சானதும்   காங்கேசன் துறை நோக்கி கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் இரவு தபால் ரயிலில்தான் அனுப்பிவைக்கப்பட்டன.

வவுனியாவுடன் அந்தச் சேவை நிறுத்தப்பட்டதால், வீரகேசரி – மித்திரன் யாழ்ப்பாணத்திற்கு மறுநாள் காலையில் உரிய நேரத்தில் செல்லுத்தவறியது.

அதனையடுத்து வீரகேசரி நிருவாகம் யாழ்ப்பாணத்திலேயே வீரகேசரியை அச்சிடுவதற்கு தீர்மானித்தது. ஏற்கனவே,  திருகோணமலையில் சீமெந்து ஆலையை தொடக்கி வடபகுதி தீவிரவாதிகளின் தாக்குதலினால் இழந்திருந்த நிருவாகத்தலைவர் ஞானம் அவர்களுக்கு அந்தத் தீர்மானத்தில் ஆர்வம் இருக்கவில்லை.

எனினும் யாழ்ப்பாணத்திலேயே வீரகேசரியை அச்சிடும் தீர்மானத்தில் நிருவாக இயக்குநர் வென்ஸஸ் லாஸ் முனைப்பாக இருந்தார். இவர் மாத்திரமே வீரகேசரி அலுவலகத்திற்கு தினமும் காலையும் மாலையும் வந்து செல்பவர்.

தலைவர் ஞானம் மற்றும் இயக்குநர் சபை உறுப்பினர்கள் எப்போதாவது இயக்குநர் சபை கூட்டங்களுக்கு மாத்திரமே வந்து செல்பவர்கள்.

நிருவாக இயக்குநர் வென்ஸஸ் லாஸின் பணிப்புரைக்கு அமைய,  பொது முகாமையாளர் எஸ்.  பாலச்சந்திரன் தனது பிரத்தியேக அறையில் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்துவிட்டு என்னையும் அழைத்தார்.

அதில் பிரதம ஆசிரியர் சிவநேசச் செல்வன், வாரவெளியீடு ஆசிரியர் பொன் . ராஜகோபால், விளம்பர – விநியோக முகாமையாளர் து. சிவப்பிரகாசம் ஆகியோருடன் பாலச்சந்திரனின் செயலாளரான ஒரு பெண்ணும் கலந்துகொண்டோம்.

பாலச்சந்திரன் தீர்மானங்களைச் சொல்லச்சொல்ல அந்தச் செயலாளர் குறிப்பெடுத்துக்கொண்டார்.  வீரகேசரி யாழ். பதிப்பில் யார் யார் கடமையாற்றுவார்கள்  முதலான தகவல்களும்  உள்ளடங்கிய    அந்தத்தீர்மானங்கள் விரிவான அறிக்கையாக இயக்குநர் சபைக்குச் செல்லும் என்பதையும் அறிய முடிந்தது.

அடுத்த சில நாட்களில்  அரசியல் தலைவர்களின் படங்கள்,  புளக்குகளாக தயாராகி, யாழ்ப்பாணத்தில் வீரகேசரி அச்சிடுவதற்காக பெறப்பட்ட கட்டிடத்திற்கு சென்றன.  செய்தி ஆசிரியர் நடராஜா,  துணை ஆசிரியர் திருமதி அன்னலட்சுமி இராஜதுரை, அச்சுக்கோப்பாளர்கள் நித்தியானந்தன், கிறேஷியன், பக்க வடிவமைப்பாளர் கதிர்வேல் உட்பட மேலும் சிலர் யாழ்ப்பாணம் பயணமானார்கள்.

யாழ்ப்பாணத்திலிருந்த நிருபர்கள் காசி. நவரத்தினமும்  அரசரத்தினமும் யாழ். வீரகேசரியின் ஆசிரிய பீடத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.

யாழ்ப்பாணத்திற்கு தினமும் செய்திகளை  தலைமையகமான  கொழும்பு வீரகேசரியிலிருந்து தொலைபேசி ஊடாக வழங்கும் பொறுப்பு என்னிடம் தரப்பட்டது.

இவ்வளவு முன்னேற்பாடும் கொழும்பில் நடந்துகொண்டிருந்தபோது,  யாழ்ப்பாணத்தில்  சில மறைகரங்கள் வீரகேசரி அச்சிடும் பணி அங்கே நிரந்தரமாகிவிடலாகாது என்பதில் தீவிர கவனம் செலுத்திக்கொண்டிருந்தன.

ஆனால், அந்த மறைகரங்களிடம் அச்சுறுத்துவதற்கு கையில் ஆயுதங்கள் இல்லை..!  இருந்தது பேனைகள் மாத்திரம்தான்…!

வீரகேசரி அங்கே நிரந்தரமாகிவிட்டால்,  அதன் செல்வாக்கினால், தங்கள் ஊடகங்களின் விற்பனையில் வீழ்ச்சி வந்துவிடும் என்றும் அங்கே கருதப்பட்டது.

இனிமேல்,  கொழும்பிலிருந்து  வடபகுதிக்கான  வெளியூர் பதிப்பினை அவசர அவசரமாக அச்சிடவேண்டிய தேவையில்லை  என்று நிருவாகத்தின் மேலிடம் கனவு கண்டுகொண்டிருக்கையில்,  யாழ்ப்பாணத்திலிருந்து வீரகேசரி வெளிவருவதை எவ்வாறு தடுப்பது என்பதுபற்றி சிலர் கனவு கண்டு அதனை இறுதியில் நனவாக்கி வெற்றியும் கண்டனர்.

அச்சமயம் ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியில் முக்கிய பொறுப்பிலிருந்த இன்றைய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் வந்த ஒரு குழுவினர், அங்கே பத்திரிகை அச்சிட முடியாது என ஆயுத முனையில்  தடுத்தனர்.

ஊடக சுதந்திரம் பற்றி இன்றும் பேசுகிறார்கள்.   எழுதுகோல் பேனை வலிமையானது என்கின்றனர். 

ஆனால், துப்பாக்கி முனையில் ஒன்றுமே இல்லையென்றாகிவிட்டதை  எவ்வாறு எடுத்துக்கொள்வது!?

அன்றைய தினம்  காலை கொழும்பிலிருந்து ஒரு செய்தியை எழுதிவிட்டு, அதனை தொலைபேசி ஊடாக யாழ்ப்பாணத்துக்கு நீங்களே வாசியுங்கள் என்று ராஜகோபாலிடம் கொடுத்தேன். அவர் அதனை ஆசிரியரின் அறையிலிருந்து என்முன்னிலையில் வாசித்தார்.

மறுமுனையிலிருந்து அன்னலட்சுமி இராஜதுரை எழுதினார்.

அன்று மாலை,  வீரகேசரி அச்சிட தயாராகியிருந்தவேளையில் தடுக்கப்பட்டது.

அங்கிருந்த அனைவரும் ஆயுதமுனையில் வெளியேற்றப்பட்டனர்.   அங்கே சென்ற அனைவரும் இரண்டு நாட்களில் கொழும்பு திரும்பினர்.

அலுவலகத்திலிருந்த நிருபர் கனக . அரசரட்ணம், செய்தி ஆசிரியர் நடராஜாவைப்  பார்த்து,  “ போன மச்சான் திரும்பி வந்தார்  “ என்று பாடினார்.

  நடா “   என்று நாம் அழைக்கும் நடராஜா புன்சிரிப்புடன் மீண்டும் வந்து தனது ஆசனத்தில் அமர்ந்து  கடமையை தொடர்ந்தார்.

அன்னலட்சுமி இராஜதுரையும் தனது ஆசனத்திற்கு  வந்தார். யாழிலிருந்து திரும்பி வந்த அச்சுக்கோப்பாளர்கள் தமது கடமைக்குத் திரும்பினர்.

யாழ்ப்பாணத்தில் வீரகேசரி அச்சிடும் பணி அத்துடன் முடிவுக்கு வந்தது.  அதனால் நிருவாக இயக்குநர்கள் மத்தியில் வாதப்பிரதிவாதங்கள் எழுந்தன.

தலைவர் ஞானத்தின் எதிர்வினை எப்படி இருந்திருக்கும்…?  என்பதை அறியமுடியவில்லை.  ஆனால், அவர் கோபத்திலிருந்தார் என்பதை மாத்திரம் அறிந்தோம்.

இறுதியில்,  டக்ளஸ் குழுவினர் எடுத்துச்சென்ற அச்சு இயந்திரத்தையாவது மீட்கவேண்டும் என்று நிருவாகம் சொன்னது.

ஆசிரியர் சிவநேசச்செல்வனுக்கு ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் செயலாளர்  நாயகம் பத்மநாபாவை நன்கு தெரியும் என்பதால், பேச்சுவார்த்தை நடத்தி அவரது இயக்கத்தினர் டக்ளஸ் தலைமையில் எடுத்துச்சென்ற அச்சு இயந்திரத்தை மீளப்பெறுவதற்கு நடவடிக்கை எடுப்பதற்காக சென்னைக்கு அனுப்பியது.

பத்மநாபாவாலும் அந்த அச்சு இயந்திரத்தை மீட்டுத்தர இயலவில்லை.

அந்த அச்சு இயந்திரம் மீளக்கிடைக்கவேயில்லை.  அதனை புலிகள் இயக்கம் பின்னர் கையாகப்படுத்தி ஒரு பெரிய கனரக வாகனத்தில் எடுத்துச்சென்றபோது நடுவழியில் நின்றது. மழைக்கும் நனைந்து, வெய்யிலிலும் காய்ந்து அந்த அச்சு இயந்திரம் அனாதரவாக மடிந்தது.

ஆயுதம் ஏந்திய அதிதீவிரவாதங்கள் என்னவெல்லாம் செய்திருக்கின்றன என்பதற்கு இதுபோன்ற  பல சம்பவங்களை வரலாற்றின் ஏடுகளில் நாம் பார்க்கமுடியும்.

வெள்ளீய அச்சு எழுத்துக்களை கோர்த்து பக்கங்கள் வடிவமைக்கப்பட்டு  பத்திரிகைகள்  வெளிவந்த காலம் மலையேறிவிட்டது.  தற்போது  மற்றும் ஒரு யுகத்தில் நாம் வாழ்கின்றோம்.

இது டிஜிட்டல் யுகம். எவரும் சிறிய அறைக்குள்ளிருந்து ஒரு பத்திரிகையை வெளியிடமுடியும்.

இன்று வடக்கிலிருந்தும் தெற்கிலிருந்தும் கிழக்கிலிருந்தும் எத்தனை தமிழ்ப்பத்திரிகைகள் வருகின்றன…?

சொல்கிறேன் - எண்ணிக்கொள்ளுங்கள்:

வீரகேசரி, தினகரன், தினக்குரல், யாழ். தினக்குரல், தமிழ் மிரர்,   உதயன், காலைக்கதிர், வலம்புரி, ஈழநாடு,  செம்மண், தீம்புனல், தமிழன், தமிழருவி, சுபீட்சம், தேசம், தமிழ்முரசு….                        ( மேலும் இருக்கின்றன. )

இவை தவிர Tamil Press முதலான ஒன்லைன் ஊடகங்கள்.  உடனுக்குடன் செய்திகளை வெளியிடும் இணையத்தளங்கள் – வலைப்பூக்கள், அத்துடன் முகநூல்கள், டுவிட்டர்கள்.

எவரும் எவரையும் தடுக்கமுடியுமா..?

ஒன்பது தசாப்தங்களையும்  கடந்து வெளிவந்து கொண்டிருக்கும் வீரகேசரி இன்றும் புதுப்பொலிவுடன் பிரகாசிக்கிறது. 

அன்று யாழ்ப்பாணத்தில் வீரகேசரி அச்சிடுவதை ஆயுதமுனையில் நிறுத்தியவரும் இன்று அரசியலில் பிரகாசித்துக்கொண்டிருக்கிறார்.   அவர் பற்றிய செய்திகளையும் வீரகேசரி வெளியிட்டுக்கொண்டிருக்கிறது.

காலம் அனைத்தையும் பார்த்து ரசித்தவாறு கடந்துகொண்டிருக்கிறது

( தொடரும் )

 

 

 

 

 

 

 

 

 

 

No comments: