நவராத்திரி 2021 – 03 துர்கை


பாரத தேவி! பராசக்தி! எம்முயிரின்
ஆரமது! நாட்டின் அடிநாதம்! நீர்நினைத்தால்
நேரெதிரே காணலாம்! நெஞ்சுபறி போகலாம்
யாரெனினும் தாயவளே தான்!

படிப்படியாய் பாரதத்தைப் பாருக்கே குருவாகப்
பார்த்துயர்த்தி வைக்கவேண்டும் தாயே!, உன்
பரிவைநம்பி வாழுகிறோம் மாயே! பெரும்
கொடியவர்கள் உள்ளிருந்தே குடைவதெல்லாம் தாங்கவில்லை
கொன்றழிக்கச் சூலமெடு தாயே! பல
கோணல்களை நிமிர்த்தவேண்டும் நீயே!

அரக்கர்களின் கொட்டமிங்கே அறிஞர்களின் மெளனமங்கே
ஆன்றதேசம் நின்றுயர்வ தெங்கே? நம்
அந்தநாளின் ஞாபகங்கள் எங்கே? வினை
வரவுசெலவு பார்த்திருக்கும் வழக்கமான நேரமில்லை
வாளெடுத்துக் கதைமுடிக்க வாராய்! நல்
வழியினைநீ மீட்டெடுத்துத் தாராய்!

பாரதத்தின் அறம்விழுந்தால் பார்முழுதும் இருள்சூழும்
பாமரன்நான் உனக்குச்சொல்ல வேண்டுமா! நேரம்
பார்ப்பதெல்லாம் இன்னும்முறை யாகுமா? அடி!
மாரதர்கள் நாரதர்கள் மக்களோடு நடந்த நாடு
மலினப்பட்டுத் தேய்வதென்ன நியாயமோ! உன்
மனத்தில்தான் என்றுவிழும் தாயமோ!

நல்லவர்கள் வாழவேண்டும் அல்லவர்கள் வீழவேண்டும்
நல்லவரைப் பார்த்துமாற வேண்டும், பிறரை
நல்லவரின் ஏற்றமொன்றே தூண்டும், இது
மெல்லமெல்ல மாறுதற்கு மேடைக்கச் சேரியில்லை
மீளவொண்ணா உயிரன்றோ மின்னலே! உன்னை
மீறியேதும் நடந்திடுமோ துர்க்கையே!

கண்ணிமைப்பில் நீகொடுத்த கவிதையினால் கேட்கின்றேன்
கணப்பொழுதில் இந்நிலைமை மாற்றிடு, எம்
கண்ணெதிரில் அறவாழ்வை ஏற்றிடு! இந்த
மண்ணுக்காக உயிரையீந்த மாமனிதர் நினைவினிலே
மண்டியிட்டு மனமுருகிக் கேட்கிறேன்! நீ
மறுக்கமாட்டாய் என்றே எதிர் பார்க்கிறேன்!

இசைக்கவி ரமணன்
07.10.2021 / வியாழன் / 19.55


No comments: