“ அரசியல் என்றால் என்ன..? “ என்று ஒரு பாடசாலை மாணவனோ, அல்லது ஒரு இளம் தலைமுறை பிள்ளையோ கேட்டால், என்ன சொல்வீர்கள்..?
திருக்குறளிலிருந்தும் தத்துவார்த்த அறிஞர்களிடமிருந்தும், உலகை நீத்த அரசியல் தலைவர்களிடமிருந்தும் மேற்கோள்களை
காண்பித்து சொல்லிக்கொடுப்பீர்கள்.
ஆனால், இலங்கையில் அரசியல்
என்றால் என்ன..? என்று ஒரு மாணவனோ, அல்லது
ஒரு பிள்ளையே அல்லது எவரேனுமோ கேட்டால், எளிதான பதில் ஒன்று இருக்கிறது.
அதுதான்: “ பேசிக்கொண்டிருப்பது. “ இலங்கையில் இதுதான்
நீண்ட நெடுங்காலமாக நடந்துவருகிறது.
1983 கலவரத்தையடுத்து, இந்தியத்தலையீடு வந்தது. முதலில் இந்திரா காந்தி பேசினார். அவரையடுத்து அவரது
புதல்வன் ராஜீவ் காந்தி காலத்தில் இலங்கை – இந்திய ஒப்பந்தமும் வந்தது. அதன் ஊடாக 13 ஆவது திருத்தச்சட்டமும்
வந்தது.
எல்லாம் வந்தது. ஆனால்,
நடைமுறைப்படுத்தப்பட்டதா..?
வடக்கு – கிழக்கு இணைந்த
மாகாண சபையும் அற்பாயுளில் மரணமடைந்தது. அதற்கு
யார் யார் காரணம்..? என்பது மிகவும் தெளிவானது.
இந்திரா காந்திக்குப்பின்னர்
இந்தியாவில் எத்தனை பிரதமர்கள் வந்துவிட்டார்கள்..? எத்தனை வெளியுறவு அமைச்சர்கள்
– வெளியுறவுச் செயலாளர்கள் வந்துவிட்டார்கள்.
இவர்கள் எத்தனை முறை
இலங்கை வந்து திரும்பினார்கள்..? எத்தனை சுற்றுப்பேச்சு வார்த்தைகளை மாறி மாறி பதவிக்கு வந்த அரசுகளுடனும், தமிழர் தரப்பு அரசியல் கட்சிகளுடனும் – முக்கியமாக
தமிழ்த்தேசியக்கூட்டமைப்புடனும் நடத்தினார்கள் என்பதையும் பழைய பத்திரிகைகளின் பக்கங்களை
தேடி எடுத்துப்பார்த்தால் தெரியவரும்.
கடந்த நல்லிணக்க அரசுக்கு ( மைத்திரி – ரணில் காலம் ) முண்டுகொடுத்தவர்கள்தான் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர்.
ரணிலுடன் இணைந்து சம்பந்தரும் யாழ்ப்பாணத்தில் ஶ்ரீலங்கா
தேசியக்கொடியையும் உயரத் தூக்கிப்பிடித்தார்.
இது இவ்விதமிருக்க, காலத்துக்கு
காலம் இந்தியாவிலிருந்து பிரதமரோ, அல்லது வெளியுறவுத்துறை அமைச்சரோ, அல்லது வெளியுறவுத்துறை
செயலாளரோ இலங்கை வருவதும் வழக்கம்.
அண்மையில் வந்து திரும்பியிருக்கிறார் இந்திய வெளியுறவுத்துறை
செயலாளர் ஹர்ஷ வர்தன ஷ்ரிங்லா.
இவரும் வழக்கம்போன்று
அரச தரப்பினரையும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினரையும் சந்தித்துவிட்டு போயிருக்கிறார்.
இதேவேளை, ஐரோப்பிய ஒன்றிய
பிரதிநிதிகளும் வந்து இரண்டு தரப்புடனும் பேசிவிட்டு சென்றுள்ளனர்.
எனவே, இந்த பேச்சுவார்த்தைகள் காலம் காலமாகத்தான் தொடருகின்றது
என்பதையும் அவதானிக்கமுடிகிறது.
அதனால், அரசியல் என்பது
பேசுவது மாத்திரம்தான் என்ற முடிவுக்கு நாம் வரவேண்டியுள்ளது.
அடுத்த தேர்தல் வரையில்
அரசு இவ்வாறு வருவோர் போவோரிடம் பேசிப்பேசிய பேய்க்காட்டிக்கொண்டிருக்கும். தமிழர்
தரப்பு அரசியல் தலைவர்களும் பேசிப்பேசியே அடுத்த பொதுத் தேர்தல்வரையில் இழுத்துக்கொண்டிருப்பர்.
ஊடகங்களும் படங்களுடன்
பேச்சுவார்த்தையின் சாராம்சத்தை வெளியிட்டு, பக்கங்களை நிரப்பிக்கொண்டிருக்கும். வானொலி – தொலைக்காட்சி ஊடகங்களும் செய்திகளை ஒலி – ஒளிபரப்பிக்கொண்டிருக்கும்.
ஆனால், எதற்காக … எந்தப்பிரச்சினையை முன்னிட்டு பேசப்பட்டதோ,
அதற்கான தீர்வு கிடைத்திருக்காது.
காலம் நகர்ந்துகொண்டிருக்கும். அடிக்கடி வந்து திரும்பும் இந்தியத்தரப்பு பேச்சாளர்களும்
இங்கிருக்கும் தலதா மாளிகைக்கும் புனிதத் தலங்களுக்கும்
ஒரு விசிட் அடித்துவிட்டு, “ பேச்சுவார்த்தைகள்
சுமுகமாக முடிந்தது . இலங்கைக்கும் இலங்கை அரசுக்கும் இந்தியா தொடர்ந்தும் நண்பனாய் இருக்கும் என்றும்,
இலங்கை இனப்பிரச்சினைத்தீர்வில் இந்தியா உறுதியாக
இருக்கும் என்றும் நிருபர்களுக்கு சொல்லிவிட்டு விமானம் ஏறிவிடுவார்கள்.
இந்தக்காட்சியைத்தான் கடந்த பல
ஆண்டுகளாக நாம் பார்த்து வருகின்றோம்.
அண்மையில் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவை சந்தித்தபோது,
அவர் “ ஜனநாயக விதிகளுக்கு அமைய சகல பிரச்சினைகளுக்கும்
தீர்வு காணப்படும் “ என்றார்.
இவரது அண்ணன் மகிந்த
ராஜபக்ஷ முன்னர் “
அரசியல் தீர்வு திருத்தம் 13 இற்கும் அப்பால் சென்று
13 + தருவேன் என்றார்.
“ அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் அடிப்படையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவேண்டும்
என்பதே இந்தியாவின் நிலைப்பாடு. அதில் எந்த மாற்றமும் இல்லை “ என்று
இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ வர்தன ஷ்ரிங்லா சம்பந்தன்
தரப்புக்கு இம்முறை சொல்லிவிட்டு திரும்பிவிட்டார்.
இதனைத்தானே கடந்த பல வருடங்களாக இந்தியத்தரப்பு
சொல்லிவருகிறது.
இலங்கைத்தரப்பும் தொடர்ந்தும் ஜனநாயக விதிகளுக்கு அமையவே தீர்வுகள்
காணப்படும் என சொல்லிவருகிறது.
2010 இல்
மகிந்தவை தோற்கடிக்க சரத்பொன்சேக்காவை ஆதரித்தவர்கள் சம்பந்தன் தரப்பினர். பின்னர்
ரணில் – மைத்திரி நல்லிணக்க ( ? ) அரசுக்கும்
முண்டு கொடுத்தனர்.
மீண்டும் 1987 காலத்திற்குச்சென்றோமானால், அன்று இலங்கை – இந்திய
ஒப்பந்தத்தை எதிர்த்த அன்றைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவுடன் பேச்சுவார்த்தைக்குச்
சென்ற விடுதலைப்புலிகள் தரப்பு, 13 திருத்தத்தின் கீழ் அமைந்த
வடக்கு – கிழக்கு மாகாண சபையையும் இயங்கவிடாமல்
தடுத்தனர்.
அதனால், அவர்கள் பிரேமதாசவிடம் பெற்ற சான்றிதழும்
தீர்வும் “My Boys “ என்பது மாத்திரம்தான் ! அந்த My Boys 1993 ஆம் ஆண்டு மே மாதம் 01 ஆம் திகதி அவருக்கு ஒரு தீர்வை தீர்ப்பாகவே வழங்கினார்கள் !
இதில் நாம் கவனிக்கவேண்டிய ஒரு முக்கிய விடயம்
உள்ளது. தமிழ்த்தேசிய அரசியல் பேசியவர்கள்
அனைவரும் ஐக்கிய தேசியக்கட்சித் தலைவர்களிடம்தான் பேசியிருக்கின்றனர். அல்லது அவர்களுக்கு இணக்கமாக நடந்து அரசியல் செய்திருக்கின்றனர்.
இது எமக்குத் தெரிகிறது ! ராஜபக்ஷ வம்சத்திற்கு தெரியாதிருக்குமா..?
அதனால், பேசிக்கொண்டே இருக்கலாம் என்ற எண்ணத்தில் அந்தத்
தரப்பு தனது அரசியலை நடத்திக்கொண்டிருக்கிறது.
தமிழ் மக்கள் குறிப்பாக வடக்குத்தமிழர்கள்
தேர்தல் காலத்தில் எத்தனை கட்சிகள் வாக்கு கேட்டு வந்தாலும், தொடர்ந்தும் தமிழ்த்தேசியம் பேசும் தங்களைத்தான்
ஆதரிப்பார்கள் என்று நம்புகிறது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு.
இந்தியாவும், ஒரு தரப்பிடம் இந்திரா காந்தியையும் மற்றும் ஒரு
தரப்பிடம் அவரது மகன் ராஜீவ் காந்தியையும் பறிகொடுத்துவிட்டு, அயலுறவுக்கொள்கையில் இந்த பேச்சுவார்த்தை அரங்கை தொடர்ந்துகொண்டுதான்
இருக்கப்போகிறது.
அதனால்தான் அரசியல் என்பது பேசிக்கொண்டே
இருப்பதற்கான மற்றும் ஒரு சுருக்கமான பெயர் என்று தொடக்கத்திலேயே சொன்னோம்.
இனி மக்கள்தான் தீர்மானிக்கவேண்டும். மக்கள்தான் கேள்வி கேட்கவேண்டும்.
எப்போது…? தங்களிடம் இந்தத் தலைவர்கள் வாக்கு கேட்டு வரும்போது.
கேட்பார்களா..?
---0---
No comments:
Post a Comment