“ஆறு நாள் போர் (Six-day war) அல்லது 1967 அரபு-இசுரேல் மூன்றாம்
அரபு-இசுரேல் போர் எனப்படுவது. 1967 இல் சூன் 5 தொடக்கம் சூன் 10 வரை இசுரேலியரால் அரபு நாடுகளான எகிப்து, சிரியா, ஜோர்டான் ஆகிய நாடுகள் மீது நடத்தப்பட்ட அதிரடித் தாக்குதலைக் குறிக்கும். சூன் 5 இல் இசுரேலின் அதிரடி வான் தாக்குதலுடன் இந்தப் போர் ஆரம்பமானது. இதன் விளைவு இசுரேலின் வெற்றியாக அமைந்தது. இந்தப் போருக்குக் காரணம் இசுரேலின் போர் மூர்க்கம் அல்லது இசுரேலின் தற்பாதுகாப்பே என்று மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. “
சுயெஸ் கால்வாயில் இஸ்ரேல் தொடுத்த போரின் காரணத்தால், பிரயாணக் கப்பல்கள் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி பயணிக்க
முழு ஆபிரிக்க கண்டத்தை சுற்றி வளைத்தே
செல்ல வேண்டியிருந்தது. இதனால் கப்பல் பயண காலம்
இரட்டிப்பாய் அதிகரித்தது. கப்பல் பயணச் செலவும் அதற்கேற்ப அதிகரித்தது. இவற்றின் விளைவாக ஆகாய விமானப் பயணங்கள் அதிகரித்தன.
இந்தக் கால கட்டத்தில்தான் நான் எனது ஐந்து வருட இங்கிலாந்து வாழ்க்கையை முடித்து, தாயகம் திரும்ப உத்தேசித்தேன். என் குடும்பத்தவருக்கும் சிநேகிதருக்கும் நிறைய பரிசுப்பொருட்கள் வாங்கிக்கொண்டேன். இவற்றை நான் எப்படி விமானப் பயணத்தில் எடுத்துச் செல்லலாம் என்று கவலைப்பட்டேன். ஆகாய விமானப் பயணத்தில் குறிப்பிட்ட எடைக்கு அதிகமாக எடுத்துச் சென்றால், அவற்றுக்கு நிறைய பணம் கட்டவேண்டும்.
“ஆனால் கப்பல் பிரயாணத்தில் நீங்கள்
தாராளமாக சாமான்களை எடுத்துச் செல்லலாம். அதற்கு மேலதிக பணம் நீங்கள் கட்டத் தேவை இல்லை,” என்றார்கள், P & O Shipping
Lines
ஏஜெண்ட்ஸ், Thomas Cooks.
“ஒரு நாள் ஆகாய பிரயாணச்
செலவிலும் பார்க்க, தங்கள் உல்லாசப் பிரயாணக் கப்பல் பயணச்
செலவு, வெகு கூடியதாய் இருக்கும்
என்றபோதிலும், பயணிகள்
தாராளமாக சாமான்களை தம்முடன் எடுத்துச் செல்லலாம்,” என்ற
தகவலை எனக்கு அளித்தார்கள்.
“அதுமட்டுமல்ல,
உங்கள் வாழ்வில் என்றும் மறக்க முடியாத ஒரு மாத கால உல்லாசப் பிரயாணத்தை,
எங்கள் பாதுகாப்புடன், நீங்கள் அனுபவிக்கலாம்," என்ற மேலதிக விபரங்களையும் எனக்கு அளித்தனர்.
இந்த அரிய வாய்ப்பு மீண்டும் எனக்குக் கிட்டாது என்றுணர்ந்து, குதூகலத்துடன் என் முப்பத்தொருநாள் கடல் பிரயாணத்துக்கு ஒத்துக்கொண்டேன்.
ஆகவே எனது ஒரு மாதகால கப்பல் பிரயாணத்துக்கு ஏற்ப
உடைளையும், சப்பாத்து, மற்றும் மேல் அங்கியான கோட்டையும் ஒரு பேக்கில் வைத்துக்கொண்டு, மீதியை பெரிய பெட்டிகளில் பரிசுச் சாமான்களுடன் அடுக்கி ஏஜெண்டிடம் கொடுத்தேன்.
என் கடல் பிரயாணம் 1968 ஆம் ஆண்டில் நடந்தது. எனது
மாமியார் ஒரு சிறு மீன்பிடி தோணியில் சேது
சமுத்திரத்தில் பயணித்ததை ‘ சத்தியம் மீறியபோது’ என்ற எனது சிறுகதைத் தொகுப்பில் நீங்கள்
வாசித்திருப்பீர்கள். ஆனால், எனது
பிரயாணம் அப்படி ஒரு போர்க்கால கதை அல்ல.
இது சொகுசுக் கப்பலில் உல்லாசப் பயணிகளுடன் நான் ஊருக்குத் திரும்பின கதை.
நான் லண்டனில் தங்கியிருந்த வீட்டின் ஆங்கிலேய தம்பதியினரும், அவர்களின் மகனும் என்னை
சவுதாம்ப்டன் துறை முகத்துக்கு தமது காரில் கூட்டிச் சென்றனர்.
சௌதாம்ப்டன் துறைமுகம் இங்கிலாந்தின்
தெற்கில் உள்ளது.
துறைமுகத்தில் குடி வரவு,
சுங்க வரி, கடவுச் சீட்டு, மற்றும் வெளிப்பிராயண அனுமதிப் பத்திரம் போன்ற நெறிமுறைகளை நான் முடித்த
பின்னர், கொழும்புக்குச் செல்லும் கப்பலை தேடிப்போக
வேண்டியிருந்தது. அந்தப் பிரமாண்டமான துறைமுகத்தில் எப்படித் தேடிப்பிடிக்கப் போகிறேன் என்று நான் ஆதங்கப்பட,
Cathay
Pacific
கப்பல் நிறுவனமே தம் பயணிகள் சவுகரியத்துக்கு ஒரு வாகனம் ஏற்பாடு செய்திருக்கின்ற செய்தி
கிடைத்தது. அதில் நானும் என்னை வழியனுப்ப வந்த மூவரும் சந்தோசமாக
ஏறிக்கொண்டோம்.
கிட்டத்தட்ட ஒரு மைல் தூரத்துக்கு அப்பால் நான் பயணம் செல்ல வேண்டிய கப்பல் நங்கூரம் போட்டிருந்தது என்று அறிந்தேன். அந்த மிகப் பெரிய கப்பல் ஒரு பிரமாண்டமான பட்டத்து யானை அசைந்தாடுவது போன்று தோற்றம் அளித்தது.
இதுவே எனது முதல் கப்பல் பிரயாணம்.
எங்கு திரும்பினாலும் கப்பல்கள். வெவ்வேறு
நாடுகளுக்கு செல்லும் பயணிகளை கூட்டிச் செல்லும் துறைமுகம். பயணக் கப்பல்களைத் தவிர, வணிகக் கப்பல்கள் நிறைய இருந்தன.
இவை பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தன. இவற்றில்
குறிப்பிடவேண்டியவை நாட்டின்
வாழ்வாதாரத்துக்கு தேவையான எண்ணெய் இறக்குமதி செய்யும் கப்பல்கள்.
சிறு கப்பல்களுக்கும் மீன்பிடி கப்பல்களுக்கும்
வேறு வேறு துறைகள் இருந்தன.
ஒரு பேருந்து நிலையத்தில் வெவ்வேறு திக்கை நோக்கிச் செல்லும் வாகனங்களுக்கு, வெவ்வேறு
தரிப்பிடம் இருப்பது போன்று, கப்பல் துறைமுகத்திலும் ஒன்றுக்குப்
பின்னர் ஒன்றாக இடைவெளி விட்டு, அவை வெளியேறும்
நேரத்துக்கேற்ப கப்பல்கள்
நிறுத்தப்பட்டிருந்தன.
கப்பல் மாலுமிகள் தம் இஷ்டத்துக்கு
துறைமுகம் உள்ளே நுழையவோ வெளியேறவோ இயலாது.
அட்டவணைப்படி தக்க நேரம் கிட்டும்போது, சிறு Pilot கப்பல் ஒன்று
பெரிய கப்பல் ஒவ்வொன்றுக்கும் வழிகாட்ட வரும். அதுவரை கப்பல்கள் காத்திருக்க வேண்டும்.
குறிப்பிட்ட பேருந்து தரிப்பில்
நாங்கள் இறங்கினதும்,
வெள்ளை சீருடை அணிந்தவர்கள் நான் பயணிக்க வேண்டிய கப்பலுக்கு
எங்களை அழைத்துச் சென்றனர். கப்பல் வாசலில் வெள்ளை சீருடை அணிந்த பெண் ஒருவர் என்னை
வரவேற்று, என் பயணச்சீட்டைப் பரிசோதித்தார். எனக்கு
ஒதுக்கப்பட்டிருந்த அறை எங்கு உள்ளது என்ற விபரத்தை எனக்குத் தந்தார்.
கப்பல் கீழ் தளத்தில் ஒரு சிறிய அறை.
அதில் இரு படுக்கைகள் ஒன்றன் மேல் ஒன்று. எனக்கு கீழ் தட்டு சவுகரியமாயிருக்கும்
என்றேன். மேல் தட்டினைத் தெரிவுசெய்த எனக்கு
கூட்டாளியாக கொழும்புக்கு பயணிக்கும் ஒரு
சிங்கள அன்பர் தன்னை பொறியியலாளர் என்று அறிமுகப்படுத்தினார். அவரும் என்னைப்போன்று
படிப்பு முடிந்து பிறந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்றும் சொன்னார்.
எங்கள் அறையிலிருந்து வெளியே சமுத்திரத்தை பார்க்க முடியாது. அப்படிப் பார்க்க விரும்பினால் மேல் தளத்துக்கு ஏறி டெக்கில் நின்றுதான் பார்க்க வேண்டும்.
மேல் தளங்களில் உல்லாசப் பயணிகள்
பயணித்தனர். அவர்கள் பெருந்தொகை பணம் கொடுத்து இந்த உல்லாசப் பயணம் மேற்கொள்கிறார்கள். ஆகவே அவர்களுக்கு நிறைய வசதிகள் உள்ளன
என்பதில் ஆச்சரியம் இல்லை.
மேலை நாட்டு தனவந்தர்கள் பலர், கணவன் மனைவியோ, காதலரோ, தாம் உழைத்த பணத்தை தாராளமாகச் செலவு செய்யத் தயங்கார். தம் பிள்ளைகளுக்கு சீதனம் கொடுக்கும் பழக்க
வழக்கம் இல்லை அவர்களிடையே. ஆனாலும் பலர் உகந்த விடயங்களுக்கு தானம் அளிக்கப்
பெருந்தொகைப் பணம் கொடுத்துதவத் தயங்க மாட்டார்கள்.
சாப்பாட்டுக்கு எல்லோரும் மேல் தளத்து ரெஸ்டூரண்ட்டுக்குச் செல்லவேண்டும்.
எதுவேண்டுமானாலும் தாங்களே பரிமாறி உண்ணலாம். ஆனால், குடிவகைக்கு ஒவ்வொருத்தரும் அவற்றுக்கு உடனே பணம் செலுத்தவேண்டும். எனக்கு
குடிப் பழக்கம் இல்லாததால் அது என்னைப்
பாதிக்கவில்லை.
மேல் தளங்களில் ரெஸ்டூரண்ட்டை தவிர்த்து,
வாசிக சாலைகள், முடிவெட்டும் சலூன்கள்,
beauty
parlour, நீச்சல் தடாகம், இரவில் மேற்கத்திய நடனமாடும்
தளங்கள் என்று சொல்லுக்கடங்கா வசதிகள் இருந்தன.
இவற்றுடன் ஓய்விடம்,
சொகுசு இருப்பிடம், யாருடனும் அரட்டை அடிக்கவோ அல்லது கண்ணை மூடித் தியானிக்கவோ, அல்லது
சமுத்திரத்தில் சூரிய உதயம், அஸ்தமனம் அழகை ரசிக்கவோ, இப்படி
எல்லா வசதிகளும் இருந்தன அந்த மாபெருங் கப்பலில்.
அன்று சாயந்திரம் ஆறு மணியளவில் கப்பல் ஆடி, அசைந்து, ஆமை போன்று நகர்ந்தது.
டெக்கில் இருந்து, என்னை வழியனுப்ப வந்த என் சிநேகதிதர் மூவரிடமிருந்து கையசைத்து விடை பெற்றேன். வழிந்த கண்ணீரைத் துடைத்தேன். அவர்கள்
வீட்டில் நான் boarder ஆக
இருந்த போதும், தம் மகன் மாதிரி என்மேல் அன்பாயிருந்தனர். ‘விடை
கொடு இங்கிலாந்து நாடே, மறுதரம் உன்னை காண்பதெப்போ’ என்று சிந்தித்த வண்ணம் இருந்தேன்.
கப்பல் சிறு தூரம் செல்லும் வரை, துறைமுகத்தின் பரந்த, ஒழுங்கான அமைப்பை ரசித்தேன்,
வியந்தேன். நாங்கள் திருவிழா நாட்களில் ஒருத்தரை ஒருத்தர்
இடித்துக்கொண்டு மற்றவருக்கு எவ்வளவு இடைஞ்சலாய் நடந்திருப்போம். ஆனால், இந்தத் துறைமுகத்தில் அப்படி நான் முந்தி நீ முந்தி
என்றவாறு கப்பல்கள் நகர மாட்டா.
கொஞ்ச நேரம் கழித்து அத்லாந்திக் சமுத்திர
கரையோரமாக தெற்கு நோக்கி கப்பல் பயணித்தது. அப்போது சூரிய அஸ்தமன காட்சி செஞ்சிவப்பாய் தோன்றியது. சூரியனும்
கடலும் சங்கமிக்கும் கண்கொள்ளாக் காட்சியைப் பார்க்கப் பரவசமாய் இருந்தது.
அடுத்த சில நிமிடங்களில் இருள் சூழ, தூரத்துக் கரையில் சில வெளிச்சங்கள் மின்னின. சற்று நேரத்தில் அவையும்
மறைந்தன. ஒரே கும்மிருட்டு எங்கும். ஆகவே
மற்ற பயணிகளும் நானும் கீழ் தளத்துக்கு இறங்கினோம்.
என் அறையை அடைந்தேன். என் கூட்டாளி நல்ல
குறட்டைவிட்டு ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தான்.
நான் உடையை மாற்றி,
பல் துலக்கிப் படுத்தேன். ஆனாலும் உடனே தூங்க முடியவில்லை.
ஆரம்பத்தில் கப்பல் நகர்வு அவ்வளவாகத்
தெரியவில்லை. ஆனால், அன்று நடுராத்திரி
எனக்கு வாந்தி எடுக்கவேணும் போல் தோன்றியது. உடனே குளியலறைக்கு விரைந்து அன்று சாப்பிட்ட அனைத்தையும் கக்கினேன். வாயைத் திரும்பத்
திரும்பக் கழுவி கொஞ்சம் தண்ணீர் அருந்திவிட்டு மீண்டும் படுத்தேன்.
இப்போ இந்தக் கப்பலே எங்கள் உலகம். இத்தனை
பயணிகளும் இந்தக் கப்பல் அதிகாரிகளிடம் தமது உயிர் பாதுகாப்பை கொடுத்துள்ளார்கள். ஆனாலும் டைட்டானிக் கப்பலுக்கு நடந்த விபத்து
மாதிரி ஏற்படா வண்ணம், இன்றைய கப்பலோட்டிகளுக்கு
நவீன தொழில் நுட்ப சாதனங்கள் உதவி புரிந்தன. இரவில் கப்பல் எத்திசையில்
செல்லுகிறது என்று பயணிகளுக்கு தெரியாது. அதுவும் நன்மைக்கே. எம்மை அவரவர்
அறைக்குள்ளே இருக்கும்படி பணிப்பார்கள். டெக்கில்
ஒருத்தரையும் இரவில்
அனுமதிக்க மாட்டார்கள்.
மாலுமிகள் உஷாராய் இருப்பார்கள்.
கப்பலில் ஏதும் அசம்பாவிதம் நடந்தால்,
பயணிகள் எப்படி செயல் படவேண்டும் என்று திரும்பத் திரும்பச்
சொல்லித்தந்தார்கள்.
சில வேளைகளில் சூறாவளிக் காற்று வீசி, அலைகள் பரந்து, விரிந்து,
எழுந்து கப்பலை விழுங்கிடுமோ என்ற மாதிரி கடல் கொந்தளிக்கும். அந்த நேரங்களில் எங்களை அறைக்குள்ளே இருக்கும்படி
கட்டளை இடுவர் கப்பலோட்டிகள். சூறாவளியை முன்கூட்டி ஓரளவு
அறிந்து, பயணிகள்
பயப்படாமல் இருக்க இரவில்தான் கப்பலை
ஓட்டுவார்கள்.
கொந்தளிப்பு தணிந்த பிறகு, பகல் வேளைகளில் எங்களை டெக்குக்கு சென்று கடலை பார்க்க அனுமதிப்பார்கள்.
நாங்கள் ஓடிச்சென்று டெக்கில்
இருந்து கண்ணுக்கெட்டிய தூரம் சமுத்திரத்தைப் பார்ப்போம். ஒரு குருவியும் தென்
படமாட்டா. சில நேரம் ஒரு மீன் துள்ளி எழுந்து மின்னல் போல் தண்ணீருள்ளே
மறைந்திடும்.
நாம் இரவில் துயிலும் போதுதான் கடல் இரைச்சலும்,
கப்பலின் ஆட்டமும், கப்பல் உடைவது போன்ற கிரீச்சிடும் பெரும்
ஒலியும் கேட்கும். அவ்வொலிகள் எங்கள் நித்திரையை கெடுத்து பயத்தை உண்டு
பண்ணும். கடவுளை வேண்டி, ‘எம்மை
காப்பாற்று,’ என்றுதான் பிரார்த்திக்க முடியும்.
எப்படியெல்லாம் கதறினாலும் ஒரே ஒருத்தர்
தான் அதைக் கேட்கக் கூடும். அவர்தான் என் அறை கூட்டாளி. அவரோ கம்மென்று ஆழ்ந்த
தூக்கத்தில் இருப்பார்.
என் முப்பத்தொரு நாள் கடல் பயணத்தில் இரண்டு
இரவே சூறாவளிக் காற்றால் பயணிகள் அவஸ்தைப்பட்டனர் என்ற ஞாபகம் இன்றுவரை தொடருகிறது.
இப்படி முதன் முறை பயணிகளைப் பயமுறுத்திய
சூறாவளி சம்பவம் இரு சமுத்திரங்கள்
சங்கமிக்கும் இடத்தில் ஓரிரவு நடந்தது. அடுத்தநாள் பகல் வேளை, கேப்டன் தனவந்த பயணிகளுக்கும் என்னைப் போன்ற சாதாரண பயணிகளுக்கும் பெரியதோர்
விருந்துபசாரம் செய்தார். அன்று இலவசமாக குடித்து ஏதுவாகிலும் உணவருந்தலாம் அந்தச்
ரொக்கச் செலவை P and O Lines
என்ற நிறுவனமே ஏற்றுக்கொண்டது.
இதெல்லாம் எதிர் காலத்தில் தங்கள்
கப்பலில் பயணிக்க விரும்புவோருக்கு முற்கூட்டியே விளம்பரப்படுத்தும் சிறந்த
முயற்சி.
சிலர் ஓர் அளவுக்கு குடித்தார்கள். சிலர்
ஒசீயாத்தானே கிடைத்துள்ளது என்று மேலும் மேலும் மது அருந்த, மதுபானம் அளிக்கும் கடைகளே
அவர்களுக்கு நல்லுபதேசம் சொல்லி, ‘போதும்.
இதற்கு மேல் குடித்தால் உடம்புக்கு நல்லதல்ல,’ என்று
சொன்னார்கள்.
அதை அடுத்து நிறைய ஆட்டங்கள் நடந்தன. என் பொழுதைக்
கழிக்க,
நான் ஒரு படம் பார்க்கச் சென்றேன். நாள் பூராவும் இலவசமாகப் படம் பாக்கலாம். சிலர் படம் பார்க்கும்
அரங்கிலேயே தூங்கிடுவார்கள். அந்த இடத்தை
துப்புரவாக்க வருவோர் அவர்களை தயவாய்
எழுப்பி அவரவர் அறைக்குள்ளே சென்று படுக்கச் சொல்வார்கள்.
ஓர் இரவு சாப்பாட்டுக்குப் பிறகு, சில பெண்கள் cabaret dance
(அரை நிர்வாணத்துடன்) ஆட்டம் ஆடிக்கொண்டிருக்க, நான் வெளியே கப்பலின் மேல் தளத்து முகப்புக்குச்
சென்றேன். நாங்கள்
அநேகமாக இரவில் அங்கே செல்வதில்லை.
ஆனாலும் அன்றிரவு ஏற்கனவே சிலர் அங்கு
கூடியிருந்தனர். அந்தப் பென்னாம் பெரிய கடல்,
கண்ணுக்கெட்டிய தூரம் வரை பரந்து, விரிந்து வானத்தை
தொடுவதைப் பார்க்க ஆனந்தமாக இருந்தது.
அன்று பௌர்ணமி சந்திரன் எடுப்பாக பவனி
வந்துகொண்டிருந்தான். பௌர்ணமி இரவில் கடலலைகள் ஆர்ப்பரித்து, சந்திரனைத் தொட முயற்சிக்கும் என்றதொரு ஐதீகம் எம்மவருக்கு இருக்கிறது.
சிறிது
நேரத்துக்குப் பிறகு கப்பல் இரைச்சல் கேட்டு ஒரு மீன் கும்பம், ஒரு அடி அல்ல இரண்டடி நீளமுள்ள
மீன்கள், துள்ளிப் பறந்தன.
அவை மின்னல் வேகத்தில் பறந்து அலைகளில் மறைந்தன.
இவையே flying fish
என அழைக்கப்படுவன. இவை, நிலவைக்கண்ட ஆனந்தத்திலோ, தம் ஜோடியைத் தேடிக் கொஞ்சவோ,
அலைகள் மேல் கொஞ்ச தூரத்துக்கு கூட்டமாக பாய்வதை அன்றைய பவுர்ணமி இரவில் கண்டு களித்தோம்.
பவ்வியமான காற்று, மேகங்களில்லாத ஒளிமயமான முழு நிலவில், எல்லையில்லா பரமண்டலத்தில்
நானும் ஒரு துளி நட்சத்திரம் போல் ஆகிவிட்டேன் என்ற பரிமாணம். அந்தப்பரவசத்துடன் அன்று படுக்கை அறைக்குச் சென்றேன்.
கப்பல் ஆபிரிக்க கரையோரத் தெற்கே பயணித்து சில நாட்களுக்குப் பின்னர் கேப் டௌனை அடைந்தது.
இது ஆபிரிக்க கண்டத்து தெற்கு முனையில்
உள்ளது. இதன் விசேடம் என்னவென்றால் மூன்று
பெரிய சமுத்திரங்கள் சங்கமிக்கும் இடம். அதாவது அத்திலாந்திக் சமுத்திரம், அண்டார்டிக்
சமுத்திரம், இந்து
சமுத்திரம் ஆகியன.
கேப் டௌனில் கப்பல் நங்கூரம் இட்டதும், நாம் எல்லோரும் குதூகலத்துடன் கீழே இறங்கினோம். தரையில் கால் பதிந்ததும் சுவர்க்கம்
போன்றிருந்தது பயணிகளுக்கு.
நாங்கள் ஒரு நாள் முழுதும் அந்த நகரத்தைச் சுற்றிப்
பார்க்க முடியும் என்றார்கள் மாலுமிகள். எல்லோருக்கும் ஒரே குஷி.
அன்றைய சாயந்திரம் நாங்கள்
டர்பன் நகருக்கு சென்று, அந்த ஊரைச் சுற்றிப்பார்த்த பிறகு, மீண்டும் கப்பல் பிரயாணம் தொடரும் என்று அறிவித்தனர்.
ஆனால், இந்த
அழகான நகரைச் சுற்றிப் பார்க்க ஒருநாள் மட்டும் போதுமா என்று முணுமுணுத்ததார்கள்
சில பயணிகள் தம்மிடையே.
உல்லாசப் பிரயாண ஒருங்கமைப்பாளர்
பயணிகளுக்கு உல்லாச பஸ்கள் சேவை ஏற்படுத்தி எங்களை
சிறு கூட்டங்களாகப் பிரித்து, விரும்பிய இடங்களுக்கு அழைத்துச் சென்றனர்.
நாங்கள் கூட்டத்தோடு சேர்ந்து கேப்
டௌனிலிருந்து உள்ளூரில் இருந்த ஒரு ஜுலு காலனிக்கு சென்றோம். அங்கே அவர்கள் குடிசை
அமைப்பை பார்த்தபின்னர், மார்பு தெரியும் இரு கன்னிகையருடன்
ஒரு புகைப் படம் எடுத்தேன்.
உள்ளூரில் கோழிப் பண்ணை ஒன்றையும், ஆபிரிக்கர் பயிர் செய்யும் பழத்தோட்டங்களை பார்வையிட்டு நிறைய பழவகை
வாங்கினோம்.
நிறைய மாட்டுப் பண்ணைகள், பூங்காக்கள் பார்த்து ரசித்தோம்.
அந்த ஆதி குடியினரின் வசிப்பிடங்களை சுற்றிப்
பார்த்தோம். ஒரு கூடாரம் போன்ற சிறு
குடிசையில் ஒரு பெரிய குடும்பம் சந்தோசமாய் வாழ்கிறார்கள் என்று அறியத்
தந்தார்கள்.
கேப் டௌவுனை சுற்றிப் பார்த்தபின்னர், அன்றைய சாயந்திரம், எங்கள் உல்லாச பஸ்கள் டர்பன் நகர்
நோக்கி விரைந்தன. டர்பன் நகருக்கு வந்ததும், தமிழ் நாட்டுக்கே வந்துவிட்டோமோ
என்று எனக்குத் தோன்றியது.
அங்கே தமிழ் சினிமா கொட்டகைகளும்,
தமிழ் கடைகளும் தமிழ் உணவகங்களும் நிறைய
இருந்தன. மேலும், தமிழ் பேசும் நாயுடு சமூகத்தவர்கள் வந்து எங்களை உபசரித்தனர். அவர்களுடன் தமிழில்
பேச வாய்ப்பு கிட்டியதும் எனக்கு ஒரே பூரிப்பு. நான் ஊர்ச் சாப்பாடு உண்டு நிறைய காலம் ஆயிற்று. நான் ஆங்கில குடும்பத்தவரோடு இங்கிலாந்தில் வசித்ததால், அவர்கள் உணவையே உண்பேன். என்றாவது
ஒரு நாள் சிநேகிதருடன் வெளியே சென்றால்தான் சோறு கறி வாங்கி சாப்பிடுவேன்.
ஆகையால் அன்று எனது ஆசை
தீர சோறு கறியும், தோசை சம்பலும் நிறைய
சாப்பிட்டேன். அத்துடன் மூன்று வடையும் இட்லியும் வாங்கி என் பையில் வைத்தேன்
கப்பலில் சாப்பிட.
அன்று டார்பனில் சோறு கறி சாப்பிட்ட பிறகு, எனக்கு கப்பல் பயணம் எப்போது முடியும் என்று தோன்றியது.
அன்றிரவு கப்பல் பயணத்தை மீண்டும்
தொடர்ந்தோம்.
சில நாட்களுக்குப் பின்னர் பம்பாய்
துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தோம். அங்கே காலாற கடைகள் எங்கும் திரிந்தோம். வட இந்திய பரோட்டா குறுமா வாங்கிச் சாப்பிட்டேன். அங்குள்ள கடைகளில்
வேஷ்டி சால்வை செட் மூன்றும் சாரிகள் மூன்றும்
வாங்கினேன். ஊரைச் சுற்றிப் பார்த்துவிட்டு மீண்டும் கப்பல் பிரயாணத்தை தொடர்ந்தோம்.
அடுத்தது கொழும்பு துறைமுகம். எனது ஊர் திரும்பிவிட்டேன் என்று ஆனந்தமடைந்தேன்.
எனது முழுக் குடும்பமும் கப்பலுக்கு உள்ளே வந்தனர்.
பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமா? சிறிது
நேரம் அவர்களுடன் குசலம் விசாரித்த பிறகு,
வழிகாட்டி போல நான்
அவர்களை அந்த பென்னாம் பெரிய கப்பலின் சில பகுதிகளைக் காண்பித்தேன்.
அவர்கள் அவற்றைப் பார்வையிட்டு வியந்தனர்.
அந்த முப்பத்தியொரு நாட்களையும் எனது
வாழ்நாளில் மறக்கமுடியாது.
கப்பலோட்டிய தமிழர்கள் பற்றி வரலாற்றில்
படித்திருக்கின்றோம்.
நான் கப்பலில் ஒரு மாத காலம் பயணித்த
கதையை உங்களுக்குச் சொல்லியிருக்கின்றேன்.
----0----
.
No comments:
Post a Comment