மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ..... அவுஸ்திரேலியா
நிலையாக நில்லாமல் நீள்சுகத்தை நல்காத
அலைமகளே உன்னருளை அவர்நாடா ஓடுகிறார்
அவரகத்தை மாற்றிவிட அருள்சுரப்பாய் அலைமகளே
இவ்வுலக வாழ்வினுக்கு இன்பமே பொருளாகும்
இன்பமதை மனமிருத்தி பொருள்நாடல் முறையல்ல
பொருளெம்மை வந்தடைந்தால் போகமதை மனமகற்றி
அலைமகளின் அருள்கிடைக்க அனுதினமும் வேண்டிடுவோம்
தளர்வறியாச் செல்வமதை தந்தருள வேண்டுகிறோம்
நிலைதழும்பா வாழ்க்கையினை நீயருள வேண்டுமம்மா
விலையில்லாச் செல்வமென்று விளம்பிநிற்கும் மனமகல
அலைமகளே அருள்புரிவாய் அடிபணிந்து பரவுகிறோம்
அளவான பொருளமைய அலைமகளே அருளிடம்மா
அறம்செய்யும் அகமமைய அருள்புரிவாய் அலைமகளே
ஆசைவலை அறுவதற்கு அம்மாநீ உதவிடுவாய்
அனுதினமும் திருவடியைப் பரவுகிறோம் அனைவருமே
கொள்ளையிடும் குணமுடையார் குவலயம்விட் டகலவே ண்டும்
குணமுடையார் குவலயத்தில் குறைவிலா திருக்கவேண்டும்
வறுமையெனும் வார்த்தையது வரண்டழிந்து போகவேண்டும்
செல்வமதை தீதில்லா வழியினிலே பெறவேண்டும்
செல்வமதை நல்லதற்கு செலவிடவே எண்ணவேண்டும்
செல்வமது செல்லுமெனும் நிலையதனை மனமிருத்தி
செல்வமகள் திருவடியை சிக்கெனவே பிடித்திடுவோம்
வற்றாத செல்வமதை வழங்கினாலும் தாயே
வழங்குகின்ற மனமமைய வரமருள்வாய் நீயே
சுற்றமொடு சூழவுள்ளார் சுமையகல வேண்டும்
சுந்தரியே இலக்குமியே தொழுகின்றோம் அம்மா
நற்கருமம் செய்வதற்கே நற்செல்வம் தருவாய்
தற்பெருமை கொண்டோரை தலைபணிய வைப்பாய்
பொற்குவியல் கொடுத்தாலும் நற்குணத்தை அளிப்பாய்
புனிதமுடை நின்பாதம் தொழுகின் றோம் அம்மா
No comments:
Post a Comment