நவராத்திரி - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்

.

  விழாக்காலங்கள் மனித மனத்திற்கு இன்பம் ஊட்டும் நாட்களாக கழியும்.  உழைத்து களைத்த மனதிற்கு உற்சாகம் ஊட்டுவது விழாக்கள். அதனால் தான் போலும் இயற்கையுடன் வளர்ந்த இந்து மதத்தில் விழாக்களுக்கு குறைவே இல்லை.  இந்தியா  பூராவும் விமரிசையாக கொண்டாடப்படுவது நவராத்திரி விழா. ஆனால் எந்த ஒரு விழாவின் பின்னணியிலும் மனித மனதை பண்பட  வைக்கும் தத்துவம் இல்லாது போகாது.

 நவராத்திரி இது மனிதன் வாழ்வாங்கு வாழ தேவையான அறிவு ,செல்வம், ,வீரத்தை போற்றி அதற்கான தெய்வங்களை வணங்குவது. செல்வத்தின் தெய்வமாம் லட்சுமியை வணங்கினால் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை பலரிடம் உண்டு. லட்சுமி படங்களிலே தேவியின் கைகளில் இருந்து தங்க காசு கொட்டுவதாக வரையப்பட்டிருக்கும் உலக அரங்கில் நாணயத்தின் மதிப்பு தங்கத்திற்கு  இணையாக மதிக்கப்படுகிறது. இந்த தங்கத்தின் மூலம் எதையும் வாங்க முடியும் ஆனால் தங்கத்தை அதிகமாக வைத்திருப்பதால் ஒரு நாடு செல்வந்த நாடாக முடியுமா? நாட்டின் செல்வம் என்பது மக்களின் வாழ்க்கை தரம், அதை நிர்ணயிப்பது நாட்டின் உற்பத்தி, உற்பத்தியை சந்தைப் படுத்துவதால் பெறப்படும் செல்வம்.

 விவசாயம் மனித வாழ்வின் உயிர்நாடி. நீர் இல்லாது வரட்சி நீண்டால் விவசாயம் பாதிக்கப்படும். மழை நீரை தேக்கி வைப்பது தகுந்த முறையில் நீர்ப்பாசனம் இவை நாட்டின் செல்வம் அல்லவா. பாய்ந்தோடும்  ஆறு நாட்டிடை வளம்படுத்தும். இயற்கை அளித்த செல்வம் அல்வா இது. தமிழ்நாடு காவேரி மூலம் பாசனம் பெற்று நெல் விளையும் பூமியாக செல்வச் செழிப்புடன் காணப்பட்ட பிரதேசமாக விளங்கியது. கர்நாடக காரன்  அணையை கட்டி காவேரியை தடுத்தான்.  நாளாந்தம் அணையை திறந்து தமிழ் நாட்டிற்கு நீரை  தா என கெஞ்ச வேண்டிய நிலை.  இவற்றை அறியும் போது நாட்டின் செல்வம், இயற்கை வளம்,  என்பதை உணர முடியும்.  நீர்வளம்,நிலவளம், மற்றும் ஆலைகளே  நாட்டின் செல்வம்.  இது மக்களின் வாழ்க்கை தரத்தை நிர்ணயிப்பவை.  இதை உணர்ந்து தானோ என்னவோ எம் வர்கள் அஷ்ட லட்சுமிகளிலே  அன்னலட்சுமிக்கு முதல் இடம் கொடுத்துள்ளார்கள். அன்னம் உணவு.  உணவு கிடைக்காத எவரும் ஏழைதான்.

 


இவற்றை உணர்த்தும் வகையான அலங்கார பொருளாக நாம் காட்சிக்கு வைக்கும் நிறைகுடம் இதையே எமக்கு உணர்த்துகிறது. நீர் நிறைந்த குடம்  நீரின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. குடத்தின் கீழே நாம் நெல் மணியை அல்லவா போட்டு வைக்கிறோம். செல்வத்தை,சிறப்பை, மங்களத்தை தருபவை. நிறைந்த  நீரும் தானியமுமே  நிறைந்த நீரைப் பெற்று பூமாதேவி சிலிர்த்து, செழித்து, காயும்,கனியும்,தானிய முமாக எம்மை வாழ வைக்கிறாள். அந்த மாதாவை போற்றுவது எமது மரபு. பூமியை தொட்டு வணங்குவது கீளைதேயம் அத்தனையிலும் காணப்படுவது அவளே செல்வத்தை

 கொளிக்கும் தாயாக எம்மை வாழ வைப்பவள். அவளே சௌபாக்கியங்களையும் , தரும் லட்சுமி ஆவாள். இதுவே நவராத்திரியில் வரும் லட்சுமி ஸ்துதி ஆகும்

                                   கல்வி, அறிவு, ,கலைகளின் தாயாக விளங்குபவள் சரஸ்வதி அல்லது கலைமகள். கல்வி, அறிவு எனும் போது எமது மனதில் தோன்றுவது நூல்கள், கல்லூரிகள் அவற்றால் வழங்கப்படும்  கௌரவங்கள்  ஆகியவையே. பண்டைய சமுதாயத்திலே இவ்வாறான கல்லுரிகள் இருக்கவில்லை , அறிஞரகளே மக்களை வழிநடத்தி அறிவுரை வழங்கினார்கள்.  அறிஞர்கள் வாழ்வாங்கு வாழ்வது எவ்வேறென மக்களை வழி நடத்த நூல்களை வழங்கினர். சமூகமும் மன்னரும்  அவர்களை போற்றி மதித்தனர்.  அவ்வாறு வள்ளுவ பெருந்தகை நமக்கு அருளியதே "திருக்குறள்." ஆயகலைகள் அறுபத்து நான்கின்  நாயகி  சரஸ்வதி.  ஆயகலைகள் யாது,  சமையற் கலை முதற் குதிரையை  பழக்குவது,  குதிரை சவாரி, தச்சுவேலை, வாழ்வித்தை,நடனம், சங்கீதம்  என கற்றுக்கொண்டு செய்பவை அத்தனையும் இதில் அடங்கும்.  இவற்றை குறிப்பிட்ட துறையில் விற்பன்னராக இருந்த குருவிடம் போய் அவரிடமிருந்து ,அதாவது குருகுல வாசம் செய்து கற்றுக்கொண்டனர், அல்லது தந்தை வழியாக மகன்கள் கற்றனர்.  இன்றோ ஆயகலைகள் பல்கி பெருகிவிட்டது.  கணனி முதற்கொண்டு செயற்கை நுண்ணறிவு "ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்" என பல்கிப் பெருகி வருகிறது. சமுதாய வளர்ச்சிக்கு அத்தனையும் உறுதுணையாக உள்ளது.

 

நாட்டில் செல்வமும் அறிவும் இருந்தும் , தன்னை காக்கும் சக்தி அத்தியாவசியமானது ஒரு நாட்டிற்கு தன்னை காக்கும் திறன் இல்லாவிட்டால் மாற்றான் வந்து செல்வத்தை சூறையாடி செல்வான்.இந்தியா செல்ல செழிப்பு மிக்க நாடாக இருந்தது.நவீன ஆயுதம் இல்லாத போது மேற்கத்தியர் வந்து நாட்டை சுறையாடவிலையா. நாட்டை காக்கும் படை பலமும் , நவீன போர் முறைகளும் அறிந்திருத்தல் வேண்டும்.

                                     இந்த தற்காப்பு ஆயுத பலத்தையே  எம்மவர்  காளி ரூபத்தில் கண்டார்களா? . எமது பண்டைய மன்னர்கள் போருக்கு போகுமுன் கொற்றவை என்ற பெண் தெய்வத்தையே  வணங்கி போருக்கு போனார்கள் என்கிறது நமது பண்டைய சங்க இலக்கியங்கள். ஆரிய மத கலப்பு ஏற்பட்டபோது கொற்றவையே  காளி அல்லது துர்க்கையானாள். பத்ர காளி பல்வகையான ஆயுதங்கள் தாங்கி நிற்பாள். காலன் அவன் தான் எமன் அவளுக்கு கத்தியை  கொடுத்தான். வாயு தேவன் அம்பு வில்லை கொடுத்தான் இவ்வாறாக அவளது கைகள்ளே ஒரு பெரிய படையாக தோன்ற சிங்க வாகனத்தில் ஏறிச் சென்று மகிஷன் என்ற அரக்கனை கொன்று தீர்த்ததாக புராணம் கூறும். இதுவே  நவராத்திரி நிறைவு10 வதுதினம் விஜயதசமி என கொண்டாடப்படுகிறது.

                                      இந்திய பெருங் கண்டத்தின் வெவ்வேறு  மாநில மக்களும் வேறுபட்ட வகையான நவராத்திரி தினங்களை கொண்டாடுகிறார்கள். தமிழ் நாட்டவர் அழகிய கொலு பொம்மைகளை பல வருடங்களாக சேர்த்து வைத்திருப்பார்கள்.  நவராத்திரி விழா ஆரம்பம் ஆவதற்கு முதல்நாள் பொம்மைகளை எல்லாம் வெளியே எடுத்து சுத்தப்படுத்தப்படுத்தி படிகளை அமைத்து ,அதில் பொம்மைகளை அழகாக அடுக்கி,  மறுநாள் பூஜைகளைச் செய்து ககொலுவின் முன் நவதானியங்களை விளைச்சலின்  சின்னமாக விதைத்து வைப்பார்கள். கொலுவின் முன்னும் வீட்டு வாசலிலும்  தினம் தினம் அழகாக கோலங்கள் இடப்படும்.  நவராத்திரி விழா விசேஷமாக பெண்கள் கொண்டாட்டமாகவே கொள்ளப்படும். உறவினர் தோழியர் இந்த தினங்களில் அழைக்கப்படுவார்.  வந்தவர்கள் கொலுவின் முன்னால்  உட்கார்ந்து பாடல்கள் பாடி மகிழ்வார்கள்.  இந்த விழாவில் பட்சணங்களுக்கு குறைவே இல்லை. நவராத்திரி  விழா காலங்களில் சிறுவர் சிறுமியர் வெவ்வேறு  வகையான வேஷங்கள் தரித்து மகிழ்வார்கள்.  இவற்றில் றாதா கிருஷ்ணா ஆண்டாள் போன்ற வேதங்கள் மிக பிரபலமாகும்.இவ்வாறு அவர்கள் வேஷம் அணிந்து சுற்றித் திரிவது பார்ப்போரை மகிழ்வூட்டும்.  பெண்களோ  நாளுக்கொரு காஞ்சிபுரம்  சேலை அணிந்து அழைக்கப்பட்ட வீடுகளுக்கு சென்று பாடி மகிழ்வர். வெவ்வேறுபட்ட வீடுகளின் கொலு அலங்காரங்களுமே பேசப்படும் விஷயமாகஅமையும். பழமையான கொலு பொம்மைகளுடன் புதிய புதிய கருத்துக்களும் காட்சியாக அமைக்கப்படும்.   கிரிக்கெட் மைதானம்  களியாட்ட விழா,  பழமை ஆகிவிட்ட சமையல் கட்டு,திருமணவிழா , இவ்வாறாக அவரவர் கற்பனைக்கு ஏற்ப  பலபல அலங்காரங்கள் பழமையுடன் புதுமையும் கலந்த கற்பனை வடிவங்கள்அலங்கரிக்கும். சென்னையிலே 72 வீடுகளை கொண்ட ஒரு கொலனியியல்  கே.கே. நகரில் வாழ்ந்தேன். அங்கு வாழ்ந்த காலத்தில் இவ்வாறான நாட்களை அமோகமாக கொண்டாடி மகிழ்ந்தேன்.

                                   குஜராத்தியரோ  நவராத்திரி தினங்களில் Garba எனப்படும் சமூக நடனத்தை பெண்கள் கூடி பொது இடங்களில் ஆடி மகிழ்வார்கள்.  இது தவிர டண்டியா என்ற கோலாட்டம் ஆடி மகிழ்வார்கள். இதில்  பல இனத்தவரும் கலந்து கொள்வார்கள்.  இந்த டண்டியா  என்ற கோலாட்டத்தில் ஆண்களும் பெண்களும் கலந்து கொள்வார்கள். சம்பிரதாயமான தேசிய உடை கண்ணாடிகளும் சம்கிகளாலும்  அலங்கரிக்கப்பட்டிருக்கும். கவர்ச்சிகரமான இந்த உடையை  அணிந்து இளவயது நங்கையர்  இளைஞருடன் ஆடி கழிப்பார்.  நீங்கள் இதை ஆடாவிட்டாலும் அந்த இடம் சூழல், மயக்கம் ஊட்டுவதாக இருக்கும்.  இந்த நடனம் இன்று பல பெரிய நகரங்களிலும்  விமரிசையாக ஆடி கொண்டாடப்படுகிறது.

                                    வங்காளயரோ  காளியை தெய்வமாக வணங்குபவர், அதனால் வங்காளத்தில் துர்க்கா பூஜையே மிக பிரபலமான விழாவாகும். விஷேசமாக பந்தல் அமைத்து பத்து கரங்களுடன் கூடிய துர்க்கையை அமைப்பார்கள்.  துர்க்கை சிம்ம வாகனத்தில் ஏறி  பத்து கரங்களிலும் பல்லாயுத தாரியாக சிவந்த உடை அணிந்து மகிஷனை கொல்லும் காட்சி வெகு அழகாக அமைக்கப்பட்டிருக்கும்.  வருடாவருடம் கலைஞர்களால்  இந்த வடிவம் புதிதாக வடிக்கப்படும்.  சணல்புல்லாலும்,களிமண்ணாலும்  இந்த உருவம் அமைக்கப்படும்.  சுருண்ட கருங்கூந்தல் கூட சணல் நூலாலேயே  அமைக்கப்படும். பத்து  நாட்களுக்கும் துர்க்கை பிரதிஷ்டை ஆகி இருக்கும் பந்தலிலே இசை நடன நிகழ்ச்சிகள் நாடகங்கள் கவிதை  என பல வகை கலைகளும் அரங்கேறும்.வங்கமே விழாக்கோலம் பூண்டு காணப்படும்.

 இறுதி நாள் விஜயதசமி நிறைவேறியதும் அழகிய துர்காதேவி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுவாள்.  தேவியின் அழகு கோலம்  பார்க்க பரவசமூட்டும்.  ஆனால் அத்துணை தெய்வீக கோலம் கொண்ட அவள் கங்கை தீர்த்தத்திலே  சங்கமமாவாள்.  அவள் கங்கை நீரிலே அமிழ்ந்து போகும் போது மக்கள் உணர்ச்சி கொந்தளிப்புடன் பார்த்து நிற்பார். வாய் விட்டு அழுவோரும்  உண்டு.

இயற்கையில் இருந்து பெற்றது எதுவோ அது இயற்கையுடன் சங்கமம்மாவது நியதி.இதை நம்புபவர்கள் இந்துக்கள்.  இதுவே பிறப்பு இறப்பு அதன் இடைப்பட்ட வாழ்வுமாகும். 

 

                                     "இன்று இருப்பது நாளை மறையும்

                                    

                                     இன்று இல்லாதது நாளை தோன்றும்"

  

 வாழ்வு என்பது தோற்றம் மறைவு க்கு இடைப்பட்ட தே .இதையே இந்த துர்க்கையை நீரில் கரைக்கும் செயல் குறிக்கும்.,  துர்க்கை பிரதிஷ்டை ஆகி இருக்கும் காலம் அவள் தாய் வீட்டிற்கு வந்ததாகவும் ,நீருடன் சங்கமம் ஆகும் போது அவள் திரும்ப தனது நாயகனிடம் போவதாகவும் மக்கள் தம்மை தேற்றறிக்கொள்வர்.

 வீரத்தின் கோலமாய் பக்தி பரவசமூட்டி மக்கள் நெஞ்சிலே  நிறைந்த தேவி நீரில் அமிழ்ந்து போவது மகா வேதனையூட்டுவதாக இருக்கும். இதை தாங்கி கொள்ளவே இப்படி ஒரு கதை உருவாக்கப்பட்டது போலும்.

 

No comments: