சுரண்டல், அடக்குமுறைக்கு எதிராக போராடிய கம்யூனிஸ்ட் கார்த்திகேசன்




101 வது பிறந்த தின நினைவு
இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபக அங்கத்தவர்களில் ஒருவராக கார்த்திகேசன் விளங்குகிறார். பல்கலைக்கழகப் படிப்பு முடித்து, ஆங்கிலச் சிறப்புக் கலைமாணி பட்டம் பெற்றவர். அக்காலம் முதல் கட்சிப் பணியாற்றியவர்.
கட்சியின் உத்தியோகபூர்வ வாரப் பத்திரிகையான ‘போர்வார்ட்’ (Forward) ஸ்தாபக ஆசிரியர். தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறந்த பேச்சாளர் - எழுத்தாளர்.
கல்லூரி ஆசிரியராகவும் , அதிபராகவும் பல வருடங்கள் பணியாற்றியவர். இலங்கையின் தமிழ்ப் பகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சியை ஸ்தாபித்து வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கட்சியால் பணிக்கப்பட்டு 1946 இல் யாழ்ப்பாணம் வந்து கட்சியை அறிமுகப்படுத்தியவர்.
அன்று யாழ் விக்ரோறியா வீதியில் அமைந்த தனது வாடகை வீட்டையே கட்சி அலுவலகமாகப் பாவித்தவர்.
தோழர்கள் சு. வே. சீனிவாசகம், வீ. ஏ. கந்தசாமி, ஆர். பூபாலசிங்கம், எம். சி. சுப்பிரமணியம், இராமசாமி ஐயர் ஆகியோர் இவருடன் இணைந்து கட்சியை வடபகுதியில் ஸ்தாபித்துப் பணியாற்றினர்.
பிற்காலத்தில் புகழ் பெற்ற எழுத்தாளர்களான கே. டானியல், டொமினிக் ஜீவா, எஸ். பொன்னுத்துரை, நீர்வை பொன்னையன் ஆகியோர் இவரது ஆளுமைக்குட்பட்டார்கள்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவரும், இலக்கியவாதியுமான ப. ஜீவானந்தம் 1947 -ம் ஆண்டில் இந்தியாவில் தலைமறைவாகி யாழ்ப்பாணத்தில் இவரது இல்லத்திலேயே சிலகாலம் தங்கி வாழ்ந்தார்.
யாழ் மாநகரசபையின் உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பணியாற்றியவர். அக்காலத்தில் சட்டத்தரணி எம். எம். சுல்தான் என்பவரை மாநகரசபை முதல்வராக்கப் பெரும் முயற்சி செய்து வெற்றி கண்டவர் அமரர் கார்த்திகேசன்
அன்று ஏழை மக்கள், மாணவர்கள், இளைஞர்களின் ஆதர்ச மனிதனாக விளங்கியவர்.
1963 ம் ஆண்டு இறுதியில் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி பிளவடைந்த போது இவர் தோழர் நா. சண்முகதாசன் தலைமையில் சீனச்சார்பு நிலையெடுத்த கட்சியுடன் தம்மை இணைத்துக் கொண்டார்.

1966 ம் ஆண்டளவில் கட்சியின் ஆதரவுடன் ஆரம்பமாகிய தீண்டாமை ஒழிப்பு போராட்ட நடவடிக்கைகளுக்குத் தலைமை கொடுத்தவர்களில் இவரும் ஒருவர்.
இவருடன் வீ. ஏ. கந்தசாமி, கே. டானியல், எம். ஏ. சி. இக்பால், சு. மார்க், கே. ஏ. சுப்பிரமணியம், எஸ். ரி. என். நாகரத்தினம், முத்தையா ஆகியோர் போராட்டத்திற்குத் தலைமை வகித்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். சுரண்டல், அடக்குமுறை ஆகியவற்றிலிருந்து முழு மனித குலமும் விடுதலை பெற வேண்டும் என்ற உன்னத நோக்குடன் பொதுவுடைமை இலட்சியத்தைக் கடைப்பிடித்த அமரர் மு. கார்த்திகேசன் இலங்கையில் சிறுபான்மை இனமான தமிழர்கள் தமது நியாயமான உரிமைகளை இழந்திருப்பது குறித்தும் பெரிதும் கவனம் செலுத்தினார்.
இன ஒடுக்குமுறையும் ஒருவகை வர்க்கச் சுரண்டலே என்று நம்பிய அவர், கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராட்டம் நடத்தினார்.
1919ம் ஆண்டு யூன் மாதம் 25ம் திகதி மலாயாவின் தைப்பிங்கில் பிறந்த இவர், 1977ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10ம் திகதி யாழ்ப்பாணத்தில் மாரடைப்பால் மரணமானார்.
இவரது மகள் ராணி சின்னத்தம்பி, மகளின் கணவர் வி. சின்னத்தம்பி (பாரதிநேசன்) ஆகியோர் சீனாவில் 16 ஆண்டுகளுக்கு மேலாக பீக்கிங் வானொலி, அயல்மொழிப் பதிப்பகம் ஆகியவற்றில் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.  நன்றி தினகரன் 

No comments: