புதிதாய் ஒரு நோபல் பரிசு __________________________________________ருத்ரா


இந்த உலகையே
குலுக்கிக்கொண்டிருக்கிறது.
ஒலிம்பிக்ஸ் விளையாட்டை 
நிறுத்துகிறது.
கிரிக்கெட் மைதானங்களை
காலியாகவே வைத்திருக்கிறது.
கோவில்களுக்கு
வழிபாட்டுக்கூடங்களுக்கு
பூட்டு போடுகிறது.
விழாக்கள் இல்லை.
பண்டிகைக்கூட்டங்கள் இல்லை.
பிரம்மாண்ட தேர்களும் நகர இயலவில்லை.
இது பற்றி
கடவுளுக்கும் பிராது போயிற்று.
கடவுளுக்கும் கூட சனிதோஷம் பிடிக்கும்
என்று 
சனி பகவான்களை கும்பிடுகிறீர்கள்.
அப்புறம் என்ன?
என்று குறும்பாய் சிரிக்கிறார் கடவுள்.
ஆகாசத்திலிருந்து அசரீரி ஒலிக்கிறது.
"கடவுள்கள் நாங்கள் எல்லோரும்
ஊரடங்கில் இருக்கிறோம்.
இனி உங்கள் கடவுள் கொரோனா மட்டுமே"
பல்கலைக்கழக ஆராய்ச்சிக்கூடங்களையே
கிலியில் ஆழ்த்தி
குழப்பம் செய்து கொண்டிருக்கிறது.
ஆற்றல் மிகுந்த ஹைட்ரஜன் குண்டுகள் கூட
இதன் முன்னே வெறும்
பூச்செண்டுகள்.
எனவே இந்த ஆண்டு
இதற்கு மட்டுமே "நோபல் பரிசு"
என்று நோபல் கமிட்டி
ஒரு மனதாய் தேர்ந்தெடுத்துவிட்டது.
ஆம்
அதோ பாருங்கள்
புன்னகையுடன்
அதுவே தான்
"கொரோனா" தான்
அந்த பரிசுக்கு நன்றி தெரிவித்து 
இன்னும் அதிகமாய்
தெறிக்க விடுகிறது!


No comments: