விலத்தி யெங்கும் போகவில்லை ! மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ..... மெல்பேண் ... அவுஸ்திரேலியா


          நல்ல நாடு நாமிருந்தும்
                  உள்ள தெல்லாம் இங்கிருந்தும்
          எண்ண மெலாம் பிறந்தநிலம்
                  எழுந் தெழுந்து வருகிறதே
          துள்ளி யோடி விளையாடி
                    துணிவுடனே ஊரைச் சுற்றி
          நண்ப ரெலாம் சூழ்ந்திடவே
                  நாமங்கு மகிழ்ந் திருந்தோம் !


          கார் எமக்கு இருக்கவில்லை
                  கையில் போன் இருக்கவில்லை
          விதம் விதமாய் கணனியையும்
                  வீட்டில் நாம் காணவில்லை
          சண்டை  பல  இருந்தாலும்
                  உறவு  அங்கு  உதவியதே
          வீடெல்லாம் கல கலப்பு
                  மன  நிறைவைத்  தந்ததுவே  !


          மாடி  மனை  ஏதுமில்லை
                  வசதியுடன்  வீடும்  இல்லை
          சோறு கறி பஞ்சமில்லை
                  சொகுசான  வாழ்வும் இல்லை
          ஊர் முழுக்கக் கோயிலுண்டு
                  உவப்பான விழாவு முண்டு
          தேரோட்டம்  என்று விட்டால்
                    ஊர்முழுக்க நிற்கு மங்கே  !



            தோட்டத்து  காய் கறிகள்
                    சுவை மிகுந்த கனிவகைகள்
            நாட்டமுடன் உலாப் போக
                      நல்ல  பல கடற்கரைகள்
            அம்மாவின் கைச் சமையல்
                      அசுத்த மிலா நற்காற்று
            எண்ணி யெண்ணி பார்த்திடவே
                      இன்பம் ஊறி வருகிறதே  !
         

              வாழ்கின்ற ஊர் எமக்கு
                      வசந்தங் காட்டி நிற்கிறது
              வசதிநிறை பல விங்கே
                      வா வென்றே அழைக்கிறது
              போர் ஒன்று  வந்ததனால்
                      ஊர் துறந்து  வந்துவிட்டோம்
              வேர் விட்ட  இடநினைவு
                        விலத்தி யெங்கும் போகவில்லை !


No comments: