மெல்பன் கேசி தமிழ் மன்றத்தின் வாராந்த காணோளி நிகழ்ச்சியில் ஊடகவியலாளர் எம். தேவகௌரி முருகபூபதி


நேற்று  ஜூலை 05 ஆம் திகதி ஞாயிறு மாலை மெல்பன் கேசி தமிழ்
மன்றத்தின் மூத்த பிரஜைகளின்   ஒருங்கிணைப்பில் நடந்த காணோளி சந்திப்பு கலந்துரையாடலில் இலங்கை ஊடகவியலாளரும் இலக்கியவாதியும் பெண்ணிய செயற்பாட்டாளருமான திருமதி தேவகௌரி கலந்துகொண்டு உரையாற்றினார்.
தேவகௌரி கிளிநொச்சியில் பிறந்து,  தனது ஆரம்பக்கல்வியை தொடர்ந்து,  யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் சிறப்புக்கலை மாணியாகி, சில வருடங்கள் கிளிநொச்சி கல்வி இலாகாவில் பணியாற்றிய பின்னர் முழுநேர பத்திரிகையாளரானவர்.
இவர் பல்கலைக்கழகத்தில் பயிலும்போது, ஈழத்தின் மூத்த தமிழ் இலக்கிய இதழ் என அறியப்படும் மல்லிகை தொடர்பாக ஆய்வுமேற்கொண்டு, எண்பதுகளில் மல்லிகை விமர்சனங்கள் என்ற ஆய்வேட்டை  சமர்ப்பித்தவர்.
பேராசிரியர்கள் கா. சிவத்தம்பி, சித்திரலேகா மௌனகுரு ஆகியோரின் மாணவியுமாவார்.
தனது பத்திரிகை உலக வாழ்க்கை,  மற்றும் ஊடகத்துறையில் சந்தித்த அனுபவங்கள் தொடர்பாகவும் இன்றைய காணோளி நிகழ்ச்சியில் கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.
 தேவகௌரி எழுதிய மல்லிகை விமர்சனங்கள் பற்றிய ஆய்வேட்டை எழுதுமாறு  ஆலோசனை தந்தவர்  தனது ஆசான் பேராசிரியர் சிவத்தம்பி எனவும், பின்னர் குறிப்பிட்ட ஆய்வேட்டை நூலுருவாக்குமாறு தூண்டியவர் மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா எனவும் நன்றியோடு குறிப்பிட்டார்.
முதலில் வீரகேசரியிலும் பின்னர் தினக்குரல் வார இதழிலும் பணியாற்றியிருக்கும் தேவகௌரி, அங்கு செய்திகள், மற்றும் கவிதை, சிறுகதை, கட்டுரை, நேர்காணல் முதலான ஆக்கங்கள் மீது  செவ்விதாக்கம் மேற்கொண்ட முறைமைகள் பற்றியும்,  விளக்கினார்.
பத்திரிகையிலிருந்து வெளியேறிய பின்னர்  சுவீடன் -  நோர்வே முதலான நாடுகள் இலங்கையில் இதழியல் கல்லூரிகளை நடத்த முன்வந்தபோது,  அவற்றில் இணைக்கப்பட்ட இளம்  பத்திரிகையாளர்களுக்கு பயிற்சி வழங்கும் பணியையும் மேற்கொண்டவர்.

       தாம் பத்திரிகைத்தொழிலுக்கு பணி நிமித்தம் நேர்காணலுக்கு சென்றபோது,   “ ஏன்… இந்தத்துறையை தேர்வு செய்தீர்கள்..? பல்கலைக்கழகத்தில் தமிழில் சிறப்பு கலைமாணி பட்டம் பெற்றுவிட்டு , ஆசிரியப்பணியை தேர்வு செய்திருக்கலாமே…?! “    என்றும் கேட்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
பெண்கள் ஊடகத்துறையில் பணியாற்றுவது என்பது சவால்கள் நிரம்பியது.  பொது வெளியில் ஒலிவாங்கியை வைத்துக்கொண்டு  ஒரு பெண் பேசுவதைப்போன்றது.  எனினும் இந்தத் துறையினை தேர்வுசெய்தேன் என்றும் குறிப்பிட்டார்.
இலங்கையில் பாடசாலைகளிலும் கல்லூரிகளிலும் ஆரம்பத்தில் ஊடகத்துறை சார்ந்த இதழியல் கல்வித்திட்டங்கள் இருக்கவில்லை. அதனால், பின்னாளில் ஊடக ஒழுக்கம் – ஊடக நியதி பற்றிய பயிற்சிகளை  இந்தத்துறையில் ஆர்வத்துடன் வரவிரும்பியவர்களுக்கு வழங்குவதற்கு மேற்குலகம் முன்வந்தது எனவும், அதனால் தனக்கும் ஒரு ஊடகக் கல்லூரியில் விரிவுரை வழங்குவதற்கு வாய்ப்பு ஏற்பட்டதாகவும் தேவகௌரி தெரிவித்தார்.
சமகாலத்தில் இலங்கை பாடசாலைகளில் மேல்வகுப்புகளில் இதழியல் கல்வியும் போதிக்கப்படுவதாகவும்,  அதற்கான பாட நூலாக்கக் குழுவிலும் தாம் இணைந்திருந்ததாவும் சொன்னார்.
தேவகௌரி,  பெண்ணிய செயற்பாட்டாளராகவும் இயங்கியவாறு சமூகம், கல்வி, மற்றும் அரசியல் ரீதியான நேர்காணல்களை கட்டமரான்  என்னும் வலைத்தளத்தில் பதிவுசெய்து வரும் தகவலையும்  தெரிவித்தார்.
குறிப்பிட்ட கட்டமரான் வலைப்பதிவு மும்மொழியிலும் வெளியாகிறது.
பெண்ணியம் என்பது தனித்த ஒரு விவகாரமோ, அல்லது சமூகப்பிரச்சினையோ அல்ல என்றும், அது வாழ்க்கை முறையென்றும்,  ஆண்களை முதன்மைப்படுத்திய சமூகப்பின்னணியில் வாழநேரிட்டமையாலும்,  ஆண்களில்தான் பெண்கள் தங்கியிருக்கவேண்டும் என்ற எழுதாத சட்டங்களை சமூகம் பெண்களிடம் திணித்தமையாலும் , பெண்ணியம் – பெண் விடுதலை என்பன பேசுபொருளாகிவிட்டன என்றும் தேவகௌரி குறிப்பிட்டார்.
கடந்த 2004 ஆம் ஆண்டு,  அவுஸ்திரேலியாவில் கன்பரா மாநிலத்தில் நடைபெற்ற நான்காவது தமிழ் எழுத்தாளர் விழாவில் தாம் கலந்துகொண்டதையும் சிட்னி, மெல்பனில் நடந்த இலக்கிய சந்திப்புகளில் பங்கு பற்றியதையும் தேவகௌரி நினைவுகூர்ந்தார்.
கேசி. தமிழ்மன்றத்தின் மூத்த பிரஜைகள் அமைப்பின் சார்பில் வாராந்தம் நடத்தப்படும் தமிழ் வானொலி நிகழ்ச்சியை எழுத்தாளர் ஆவூரான் சந்திரன்  இக்காணொளி ஊடாக ஒலிபரப்பி, கலந்துகொண்ட மூத்த பிரஜைகளான நேயர்கள் விரும்பிய பாடல்களையும் ஒலிபரப்பினார்.
இன்றைய நிகழ்ச்சியில் கொழும்பிலிருந்து கலந்துகொண்ட ஊடகவியலாளர்  தேவகௌரிக்கும்,   ஆவூரான் சந்திரனுக்கும்  தொழில் நுட்ப உதவிகளில் பக்கத்துணையாக இருந்த செல்வன் ஆரூரான் மதியழகனுக்கும்   கேசி தமிழ்மன்றத்தின் மூத்த பிரஜைகள் தமது நன்றியை தெரிவித்தனர்.
---0---







No comments: