கடந்த 2011ஆம் ஆண்டு உலகக் கிண்ண ஆட்ட நிர்ணயம் தொடர்பில் விசாரணைகள்


உலகக் கிண்ண ஆட்ட நிர்ணயம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

இனியும் அமைதியாக இருக்கப் போவதில்லை

மஹிந்தானந்த முறைப்பாடு; வாக்குமூலம் பதிவு

மஹிந்தானந்த அளுத்கமவின் ஆட்டநிர்ணய குற்றச்சாட்டு

தமது கருத்தை எவரும் அரசியல்மயப்படுத்த வேண்டாமென மஹிந்தானந்த வேண்டுகோள்

அரவிந்த டி சில்வாவிடம் 5 1/2 மணி நேரம் வாக்குமூலம் பதிவு (UPDATE)

ஆட்ட நிர்ணயம்; உபுல் தரங்க 2 மணி நேரம் வாக்குமூலம்  

குமார் சங்கக்கார விளையாட்டு குற்ற விசாரணை பிரிவில் ஆஜர்            

வெளியேறினார் சங்கக்கார; நாளை மஹேலவுக்கு அழைப்பு  

ஊடகங்களில் வரமாட்டேன் என செய்தி; அதனால் சமூகமளித்தேன்  

கிரிக்கெட்டை உயிராக மதிப்பவன் நான் -மஹேல          



உலகக் கிண்ண ஆட்ட நிர்ணயம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்



இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் 2011ம் ஆண்டு நடைபெற்ற கிரிக்கெட் உலகக் கிண்ணத்தின் இறுதிப்போட்டியில், ஆட்டநிர்ணயம் செய்யப்பட்டதாக வெளியிடப்பட்ட கருத்து தொடர்பிலான விசாரணையை இலங்கை கிரிக்கெட் செயலாளர் ஆரம்பித்துள்ளார்.
2011ம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரின் போது, விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த மஹிந்தானந்த அளுத்கமகே, 2011ம் இறுதிப் போட்டியில் ஆட்டநிர்ணயம் செய்யப்பட்டதாக கருத்து வெளியிட்டிருந்தார்.
இதற்கான முறைப்பாடொன்றை எடுத்துக்கொண்ட விளையாட்டுத்துறை அமைச்சு, விசேட விசாரணை குழுவொன்றை நியமித்து, இதுதொடர்பில் மேலதிகமாக ஆராயுமாறு அறிவுறுத்தியுள்ளது.
குறித்த ஆட்டநிர்ணயம் தொடர்பில், மஹிந்தானந்த அலுத்கமகே சிரச ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியில், “2011ம் ஆண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்டநிர்ணயம் மேற்கொள்ளப்பட்டது. குறித்த சம்பவம் நடைபெறும் போது, நான் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தேன். எனினும், நாட்டில் பதற்ற நிலை ஏற்படும் என்பதற்காக குறித்த விடயத்தினை வெளிப்படுத்தவில்லை. 2011ம் ஆண்டு நாம் இந்திய அணிக்கு எதிரான அந்த போட்டியில் வெற்றிபெற்றிருக்கலாம். ஆனால், ஆட்டநிர்ணயம் செய்யப்பட்டது” என்றார். எவ்வாறாயினும் விளையாட்டுத்துறை அமைச்சர் வெளியிட்ட கருத்துக்கு எதிராக இலங்கை அணியின் முன்னாள் வீரர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன மற்றும் திலான் சமரவீர ஆகியோர் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.

குறித்த விடயம் உண்மையாக இருந்தால், ஆதாரத்தை வெளிப்படுத்த வேண்டும் எனவும், அதற்கான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் குமார் சங்கக்கார குறிப்பிட்டுள்ளார். தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் டலஸ் அலகப்பெரும குறித்த இந்த விசாரணை தொடர்பிலான வாராந்த அறிக்கையொன்றை தனக்கு சமர்ப்பிக்குமாறும் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி தினகரன் 









இனியும் அமைதியாக இருக்கப் போவதில்லை



2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணையை நடத்துமாறு இந்திய அரசையும் இந்திய கிரிக்கெட் சபையையும் அரவிந்த டி சில்வா வலியுறுத்தியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக தான் இனியும் அமைதியாக இருக்கபோவதில்லை என தெரிவித்துள்ள அவர் இது ஒரு கடுமையான குற்றச்சாட்டு என்றும் இந்த குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை முன்வைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சரின் இக் குற்றச்சாட்டுக்களை உறுதிப்படுத்த ஆதாரங்கள் இருந்திருந்தால் கடந்த 9 வருடங்களாக ஏன் அமைதியாக இருந்தார் என்று அரவிந்த டி சில்வா கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில், உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இடம்பெற்ற ஆட்டநிர்ணயத்தின் போது தாம் எந்த ஒரு வீரரையும் தொடர்புபடுத்தி குறிப்பிடவில்லை எனவும் கிரிக்கெட் துறையில் உள்ள அதிகாரிகளையே தாம் குறிப்பிட்டதாகவும் முன்னாள் விளையாட்டு துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே நேற்று தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கை அணியின் தெரிவுக்குழுவில் பல சிக்கல்கள் இருப்பதாகவும், 2011 உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு இலங்கை அணியில் செய்யப்பட்ட 4 மாற்றங்கள் குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.
இவ்வாறு முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்த கருத்திற்கு பதில் அளித்துள்ள அப்போதைய தெரிவுக்குழுவின் தலைவராக இருந்த அரவிந்த டி சில்வா, இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளதுடன், இக் குற்றச்சாட்டு குறித்த ஆதாரங்களை சர்வதேச கிரிக்கெட் சபையின் முன் முன்வைக்குமாறும் கோரியுள்ளார்.   நன்றி தினகரன் 










மஹிந்தானந்த முறைப்பாடு; வாக்குமூலம் பதிவு



- விசாரணைகள் இடம்பெறுகின்றது; ஊடகங்கள் அமைதி காக்கவும்
கடந்த 2011ஆம் ஆண்டு உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி தொடர்பாக தான் கூறிய கருத்து தொடர்பில், 06 பக்கங்களை கொண்ட முறைப்பாடொன்றை இன்றையதினம் (24) பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினருக்கு தான் வழங்கியுள்ளதாக, முன்னாள் விளையாட்டு அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
கடந்த 2011ஆம் ஆண்டு உலக கிண்ண போட்டியானது, பணத்திற்காக தாரைவார்க்கப்பட்டதாக முன்னாள் விளையாட்டு அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே கருத்தொன்றை வெளியிட்டிருந்தார்.
சர்ச்சைக்குரிய இக்கருத்து தொடர்பில், இன்று காலை 6.30 மணிக்கு நாவலப்பிட்டியிலுள்ள அவரது அலுவலகத்தில் வைத்து, மஹிந்தானந்த அலுத்கமகேயிடம், விளையாட்டுத் தொடர்பான குற்றங்களை விசாரணை செய்யும் விசேட பிரிவு அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை, விளையாட்டுத் தொடர்பான குற்றங்களை விசாரணை செய்யும் விசேட பிரிவு அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பொன்றில் கருத்து தெரிவித்த அவர், தனக்கு குறித்த போட்டி தொடர்பில் சந்தேகம் இருப்பதாகவும், இது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதால் ஊடகங்களை அமைதியாக இருக்குமாறும் தெரிவித்துள்ளார்.   நன்றி தினகரன் 








தமது கருத்தை எவரும் அரசியல்மயப்படுத்த வேண்டாமென மஹிந்தானந்த வேண்டுகோள்



2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித்தொடரின் இறுதி ஆட்டத்தில் ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றிருக்குமென்ற சந்தேகம் எனக்கு உள்ளது. இதற்கான 24 காரணங்களை பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவிடம் முன்வைத்துள்ளேன். எனது அறிவிப்பை எவரும் அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அனைவரிடமும் கேட்டுக்கொள்கின்றேன் என முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலக்கிண்ண இறுதிப்போட்டி தொடர்பில் அப்போது விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்த மஹிந்தானந்த அளுத்கமகே வெளியிட்ட கருத்தானது இலங்கை அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பில் மஹிந்தானந்த அளுத்கமகேவிடம் பொலிஸ் விசேட விசாரணைப்பிரிவினர் நேற்று வாக்குமூலம் பதிவுசெய்தனர். நாவலப்பிட்டியில் உள்ள அவரின் அலுவலகத்தில் வைத்தே சுமார் இரண்டு மணிநேரம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டது.
அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,
“2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ணபோட்டித்தொடரின் இறுதி ஆட்டத்தை கண்காணிப்பதற்காக நானும் சென்றிருந்தேன். எமது அணி தோல்வி அடைந்தமை தொடர்பில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அதன் பின்னர் பல தரப்பினரும் குறித்த போட்டி தொடர்பில் எனக்கு முறைப்பாடுகளை முன்வைத்தனர். இது தொடர்பில் சில தடவைகள் நான் கருத்து வெளியிட்டிருந்தாலும் இம்முறையே பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. நான் எந்தவொரு வீரரினதும் பெயரை குறிப்பிடவில்லை. ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றிருக்கலாம் என்பதற்கான கருத்துகளையும், ஆவணங்களையும் இன்று பொலிஸாரிடம் கையளித்தேன். 24 காரணங்கள் அடங்கிய 6 பக்க அறிக்கையை முன்வைத்துள்ளேன். விசாரணைகள் இடம்பெறுவதால் அவை எவ்வாறான விடயங்கள் எனக் கூறமுடியாது. நான் அரசியல் நோக்கிலோ அல்லது பிரசாரம் தேடுவதற்காகவோ இவ்வாறு கருத்து வெளியிடவில்லை. எனவே, விசாரணைகள் முடிவடையும்வரை விமர்சனங்களை நிறுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன். பேசுவதை நிறுத்துவோம். விசாரணை அறிக்கை வரும்வரை காத்திருப்போம்” -என்றார்.   (ஹற்றன் சுழற்சி நிருபர்)  நன்றி தினகரன் 









மஹிந்தானந்த அளுத்கமவின் ஆட்டநிர்ணய குற்றச்சாட்டு



2011 கிரிக்கெட் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்டநிர்ணயம் இடம்பெற்றதாக இலங்கையின் அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சரான மஹிந்தானந்த அளுத்கமகேவினால் வெளியிடப்பட்ட தகவலையடுத்து உள்ளூர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் மிகப் பெரிய பரபரப்பு ஏற்பட்டது. இந்த விடயம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் டலஸ் அளகப்பெரும, அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.
இதனையடுத்து, அமைச்சரின் பணிப்புரைக்கு அமைய விளையாட்டு குற்றங்களை தடுக்கும் பொலிஸ் விசேட விசாரணை பிரிவில் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் முறைப்பாடு செய்தார்.
இந்த முறைப்பாட்டுக்கு அமைய, பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவு மஹிந்தானந்த அளுத்கமகேவிடம் நாவலப்பிட்டியவிலுள்ள அவரது அலுவலகத்தில் வைத்து (24) காலை வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.
இந்த நிலையில், தன்னால் முன்வைக்கப்பட்ட தகவலுக்கான ஆதரங்களுடன் 6 பக்கங்களைக் கொண்ட முறைப்பாட்டை மஹிந்தானந்த அளுத்கமகே பொலிஸ் விசேட பிரிவிடம் கையளித்தார்.
இதன்படி, முன்னாள் அமைச்சரினால் வாக்குமூலத்துக்கு அமைய விளையாட்டில் இடம்பெறும் தவறுகள் (மோசடிகள்) தொடர்பாக பொலிஸ் விசேட பொலிஸ் விசாரணைப் பிரிவினால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படும். இந்த நிலையில், பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவு அதிகாரிகளினால் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் நாவலப்பிட்டியவில் உள்ள மஹிந்தானந்த மன்றத்தில் ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்திருந்த முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரான மஹிந்தானந்த அளுத்கமகே, 24 விடயங்களை உள்ளடக்கியதாக ஆறு பக்கங்களைக் கொண்ட முறைப்பாட்டை விசாரணைப் பிரிவிடம் சமர்ப்பித்ததாக தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ”2011 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இடம்பெற்ற ஆட்டநிர்ணயம் தொடர்பில் நான் ஆறு பக்கங்களைக் கொண்ட முறைப்பாட்டொன்றை பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினரிடம் கையளித்தேன். அதில் முறைப்பாட்டுடன் தொடர்புபட்ட 8 விடயங்கள் உள்ளடங்கியுள்ளன.
இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதால் அதுதொடர்பான அறிக்கைகளை தன்னால் ஊடகங்களுக்கு பகிரங்கப்படுத்த முடியாது” என அவர் தெரிவித்தார். மேலும், 2011 உலகக் கிண்ணத்தில் ஆட்டநிர்ணயம் இடம்பெற்றது தொடர்பில் நான் வெளியிட்டிருந்த கருத்தை அடுத்து பல அரசியல்வாதிகள், கிரிக்கெட் வீரர்கள் எனக்கு சேறு பூசும் வகையில் நிறைய விடயங்களை சொல்லியிருந்தனர்.
என்னிடம் உள்ள அனைத்து ஆதாரங்களையும். எனக்கு கிடைத்த தகவல்களையும் நான் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவிடம் கொடுத்துவிட்டேன்.
முன்னதாக, ஐ.சி.சியின் ஊழல் தடுப்புப் பிரிவின் பிரதானியான அலெக்ஸ் மாஷலினால் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த ஹரீன் பெர்னாண்டோவுக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அந்தக் கடிதம் எனக்கு இரண்டு வாரங்களுக்கு முன் கிடைத்தது. அதன்பிறகு தான் நான் 2011 உலகக் கிண்ண ஆட்டநிர்ணயம் தொடர்பில் வாய் திறந்தேன்.
உலகில் டெஸ்ட் விளையாடுகின்ற பன்னிரெண்டு நாடுகளில் ஆட்டநிர்ணயம் தொடர்பாக இலங்கை கிரிக்கெட் அணியின் பெயரும் இருப்பதால், அதுதொடர்பான விசேட விசாரணைகளை ஒத்துழைப்பு வழங்குவதற்கு நான் முன்வந்தேன். இந்த நாட்டின் விளையாட்டை நேசிக்கின்ற ஒரு பிரஜையாக இதுதொடர்பில் பேசுவதற்கு முன்வந்தேன். 2011 உலகக் கிண்ண இறுதிப் போட்டியைப் பார்வையிட முன்பை வான்கடே மைதானத்துக்கு ஒரு இரசிகனாக நானும் சென்றிருந்தேன். போட்டியைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது ஆட்டநிர்ணயம் இடம்பெற்றிருக்கலாமா என்ற சந்தேகம் எழுந்தது.
மறுநாள் இலங்கைக்கு வந்தபிறகு என்னை சந்திக்க நிறைய பேர் வருகை தந்திருந்தனர். குறிப்பாக, இறுதிப் போட்டியில் ஆட்டநிர்ணயம் இடம்பெற்றிருக்கலாம் எனவும் அதுதொடர்பில் விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சராக நான் 2011 ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி ஐ.சி.சிக்கு முறைப்பாடு செய்தேன். அதற்கான கடிதமும் என்னிடம் உள்ளது. தொடர்ந்து 2013 ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதி ஆட்டநிர்ணயம் தொடர்பில் விசாரணை செய்ய அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் அநுர ஜயசேகர தலைமையில் 8 பேர் கொண்ட ஒரு விசாரணைக் குழுவை நான் நியமித்தேன்.
உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்டநிர்ணயம் இடம்பெற்றிருக்கலாம் என 2014 மற்றும் 2017ஆம் ஆகிய ஆண்டுகளில் நான் வெளிப்படையாக சொல்லியிருந்தேன். அது இலங்கையில் உள்ள அனைத்து பத்திரிகைகளிலும், ஒருசில தொலைக்காட்சிகளில் செய்தியாக வெளியாகியிருந்தன.
எனவே அந்தக் காலப்பகுதியில் இருந்த விளையாட்டுத்துறை அமைச்சராக என்னால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருந்தேன். தற்போது என்னிடம் உள்ள ஆதாரங்களை பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவிடம் கொடுத்துவிட்டேன். அவர்கள் விரைவில் உரிய நபர்களை அழைத்து விசாரணை செய்வார்கள். தயவுசெய்து இந்த விடயத்தை அரசியலாக்க வேண்டாம்” என அவர் தெரிவித்தார்.   நன்றி தினகரன் 







அரவிந்த டி சில்வாவிடம் 5 1/2 மணி நேரம் வாக்குமூலம் பதிவு (UPDATE)



அரவிந்த டி சில்வாவிடம் வாக்குமூலம் பதிவு-Aravinda de Silva at Sports Crime Division
இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவின் முன்னாள் தலைவர் அரவிந்த டி சில்வா சுமார் ஐந்தரை மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர், விளையாட்டு அமைச்சின், விளையாட்டு தொடர்பான குற்றங்களை விசாரிக்கும் விசேட பிரிவிலிருந்து வெளியேறியுள்ளார்.
அப்போதைய தேர்வுக் குழுவின் தலைவராக இருந்த அரவிந்த டி சில்வா, 2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக இன்று பிற்பகல் 2.30 மணியளவில் அங்கு அழைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2011 இல் இடம்பெற்ற இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான உலகக் கிண்ண இறுதிப் போட்டி பணத்திற்காக விட்டுக் கொடுக்கப்பட்டதாக, முன்னாள் விளையாட்டு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே முன்வைத்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளுக்கு அமைய, வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் அங்கு முன்னிலையானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் கடந்த ஜூன் 24ஆம் திகதி நவலப்பிட்டியில் உள்ள மஹிந்தானந்த அளுத்கமகேவின் அலுவலகத்தில் வைத்து, குறித்த பொலிஸ் குழுவினால் வாக்குமூலம் பதிவு செய்திருந்தது.
அத்துடன் இது தொடர்பில் மஹிந்தானந்த அளுத்கமகே 6 பக்க முறைப்பாடொன்றையும் பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 






ஆட்ட நிர்ணயம்; உபுல் தரங்க 2 மணி நேரம் வாக்குமூலம்  



கிரிக்கெட் வீரர் உபுல் தரங்க இன்று (01) விளையாட்டு அமைச்சின், விளையாட்டு தொடர்பான குற்றங்களை விசாரிக்கும் விசேட பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.
கடந்த 2011ஆம் ஆண்டு உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக முன்னாள் விளையாட்டு அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே வெளியிட்ட கருத்து தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காகவே அவர் அங்கு அழைக்கப்பட்டிருந்தார்.  
இன்று காலை 10.00 மணிக்கு  குறித்த பிரிவில்  முன்னிலையான அவர், சுமார் 02 மணித்தியாலத்திற்கு மேலாக வாக்குமூலம் வழங்கி விட்டு, அங்கிருந்து சென்றுள்ளார்.  
இதேவேளை, இவ்விடயம் தொடர்பாக குறித்த காலப்பகுதியில் இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவின் தலைவராக இருந்தஅரவிந்த டி சில்வா நேற்றையதினம் (30)குறித்த பிரிவில் சுமார் 06 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.    நன்றி தினகரன் 




குமார் சங்கக்கார விளையாட்டு குற்ற விசாரணை பிரிவில் ஆஜர்            



2011ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இறுதியாட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஆட்டநிர்ணய சதி தொடர்பில் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார முன்னிலையாகியுள்ளார்.
வாக்குமூலம் வழங்குவதற்கு வருமாறு விளையாட்டு அமைச்சின் விளையாட்டு தவறுகள் தொடர்பான விசாரணை பிரிவு அவருக்கு அழைப்பாணை விடுத்திருந்தது.
2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண போட்டித் தொடரின் இறுதி போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக, முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பிலேயே அவர் இவ்வாறு வாக்குமூலம் வழங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளார்.
அவர் இன்று காலை 9.00 மணிக்கு அவரை ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.
2011 உலகக் கிண்ண ஆட்டத்தின் போது இலங்கை அணித்தலைவராக குமார் சங்கக்கார செயற்பட்டிருந்தார்.
இதேவேளை, இன்று காலை 10.15 மணியளவில் 2011ஆம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் முக்கிய சுழல் பந்துவீச்சாளராக விளையாடிய முத்தையா முரளிதரனை ஆஜராகுமாறும் விளையாட்டு தவறுகள் தொடர்பான விசாரணை பிரிவால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கிரிக்கெட் வீரர் உபுல் தரங்க நேற்று காலை 10.15 மணியளவில் விளையாட்டு தவறுகள் தொடர்பான விசாரணை பிரிவில் ஆஜரானதோடு, சுமார் 2 1/2 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியபின் அங்கிருந்து வெளியேறியிருந்தார்.
இவ்விடயம் தொடர்பில், குறித்த காலப்பகுதியில் இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவின் தலைவராக இருந்த அரவிந்த டி சில்வா நேற்றுமுன்தினம் (30) குறித்த பிரிவில் சுமார் 06 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 










வெளியேறினார் சங்கக்கார; நாளை மஹேலவுக்கு அழைப்பு              



வெளியேறினார் சங்கக்கார; நாளை மஹேலவுக்கு அழைப்பு-Sangakakara Left From Sports Ministry Special Investigation Unit
விளையாட்டு தொடர்பான குற்றங்களை விசாரணை செய்யும் பிரிவில் முன்னிலையான இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சங்கக்கார, சுமார் 9 மணி நேரத்திற்கும் அதிகமாக வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
2011ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதியாட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஆட்டநிர்ணய சதி தொடர்பில், அப்போதைய தலைவரான குமார் சங்கக்காரவை  வாக்குமூலம் வழங்குவதற்கு வருமாறு இன்று (02) முற்பகல் 9.00 மணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே முன்வைத்த குறித்த குற்றச்சாட்டு தொடர்பில், அப்போதைய கிரிக்கெட் தேர்வுக்குழுத் தலைவர் அரவிந்த டி சில்வா (ஜூன் 30) 6 மணி நேர வாக்குமூலமும், உபுல் தரங்க (ஜூலை 01) 2 1/2 மணி நேர வாக்குமூலமும் இவ்வாறு வழங்கியிருந்தனர்.
இதேவேளை, நாளையதினம் (03) இது தொடர்பில் வாக்குமூலம் வழங்க மஹேல ஜயவர்தனவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 












ஊடகங்களில் வரமாட்டேன் என செய்தி; அதனால் சமூகமளித்தேன்            



ஊடகங்களில் வரமாட்டேன் என செய்தி; அதனால் சமூகமளித்தேன்-Mahela Jayawardene Arrived and Return From Sports SIU Without Giving Statement
வாக்குமூலம் வழங்குவதற்காக, விளையாட்டு அமைச்சின் விசேட விசாரணை பொலிஸ் பிரிவிற்கு வந்த, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மஹேல ஜயவர்தன  வாக்குமூலம் வழங்காது அங்கிருந்து சென்றுள்ளார்.
இன்று (03) காலை 9.00 மணியளவில் அங்கு முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், அவரிடம் இன்று விசாரணைகள் இடம்பெறாது எனவும், மற்றொரு தினத்தில் அவரை அழைக்கவுள்ளதாகவும், விசேட விசாரணைப் பிரிவு அறிவித்துள்ளது.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில், கடந்த 2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற கிரிக்கெட் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில், ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றுள்ளதாக, முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து வாக்குமூலம் பதிவு செய்வதற்காக இன்று சமூகமளிக்குமாறு, மஹேல ஜயவர்தனவுக்கு நேற்று (02) அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பில் வாக்குமூலம் வழங்க, தனக்கு மற்றுமொரு தினம் வழங்குவதாக நேற்றிரவு (02) 11.30 மணிக்கு அறிவிக்கப்பட்டதாகவும், ஆயினும், தான் தனிப்பட்ட காரணங்களால் சமூகமளிக்கமாட்டேன் என அறிவித்திருந்ததாக, இன்று (03) காலை ஒரு சில ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்ததாக மஹேல ஜயவர்தன தெரிவித்தார்.
குறித்த பிரிவுக்கு இன்று (03) காலை சமூகமளித்திருந்த மஹேல இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், எனவே, இது தொடர்பில் ஏதேனுமொரு வகையில் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதால், தான் விசேட விசாரணைப் பிரிவுக்கும் அறிவித்து விட்டு இங்கு சமூகமளித்திருந்ததாகவும் தெரிவித்தார்.
கிரிக்கெட் விளையாட்டை அதிகம் நேசிப்பவன் எனும் வகையிலும், அதற்கு கௌரவமளிப்பவன் எனும் வகையிலும், குறித்த பிரிவுக்கு தேவையான தகவல்களை வழங்க வேண்டிய பொறுப்பு தனக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் தான் தெரிவிக்காத கருத்துகளை, தெரிவித்ததாக பிழையான விதத்தில் ஊடகங்களில் பிரசுரிக்க வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
நாம் கௌவரமாக நினைக்கும் இவ்விளையாட்டை அடுத்த தலைமுறைக்கு சரியான முறையில் விளையாடும் பொருட்டு கொண்டு செல்வது தனது பொறுப்பாகும் என்பதோடு, அதற்கான பின்புலத்தை ஏற்படுத்துவதுமாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.
அதற்கமைய, தற்போது விசாரணைகளை முன்னெடுத்து வரும் விசாரணையாளர்களுக்கு முடியுமான அளவு ஒத்துழைப்பை வழங்குவோம் எனவும், அவர்கள் சிறந்த சேவையை வழங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அமைச்சர் மஹிந்தானந்த முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் என்ன கூற விரும்புகிறீர்கள் என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மஹேல ஜயவர்தன, நாம் அதனை விசாரணைகளின் முடிவில் பார்க்கலாம் எனத் தெரிவித்து அங்கிருந்து சென்றார்.
முன்னாள் விளையாட்டு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கடந்த ஜூன் மாதம் எழுப்பிய ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டுகள் குறித்து வாக்குமூலம் பதிவு செய்ய வரவழைக்கப்பட்ட நான்காவது இலங்கை கிரிக்கெட் வீரர் மஹேல ஜயவர்தன ஆவார்.
குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் இதற்கு முன்னர், அப்போதைய (2011) கிரிக்கெட் தேர்வுக்குழுத் தலைவர் அரவிந்த டி சில்வா (ஜூன் 30) 6 மணி நேர வாக்குமூலமும், உபுல் தரங்க (ஜூலை 01) 2 1/2 மணி நேர வாக்குமூலமும், குமார் சங்கக்கார (02) 9 1/2 மணி நேர வாக்குமூலமும் வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.    நன்றி தினகரன் 









கிரிக்கெட்டை உயிராக மதிப்பவன் நான் -மஹேல          



தகவல்களை வழங்குவது எனது கடமை
கிரிக்கெட் விளையாட்டை நான் உயிராக நேசிப்பவன். அதற்கு கௌரவமளிப்பவன் எனும் வகையிலும், விசேட விசாரணை பிரிவுக்கு தேவையான தகவல்களை வழங்க வேண்டிய பொறுப்பு தனக்கு இருப்பதாக வாக்குமூலம் வழங்க வந்திருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார். விளையாட்டு அமைச்சின் விசேட விசாரணை பொலிஸ் பிரிவிற்கு வாக்குமூலம் வழங்குவதற்காக வந்த, மஹேல ஜயவர்தன வாக்குமூலம் வழங்காது அங்கிருந்து சென்றுள்ளார்.
நேற்று (03) காலை 9.00 மணியளவில் அங்கு முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், அவரிடம் நேற்று விசாரணைகள் இடம்பெறாது எனவும், மற்றொரு தினத்தில் அவரை அழைக்கவுள்ளதாகவும், விசேட விசாரணைப் பிரிவு அறிவித்துள்ளது.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில், கடந்த 2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற கிரிக்கெட் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில், ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றுள்ளதாக, முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து வாக்குமூலம் பதிவு செய்வதற்காக நேற்று சமுகமளிக்குமாறு, மஹேல ஜயவர்தனவுக்கு நேற்று முன்தினம் (02) அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பில் வாக்குமூலம் வழங்க, தனக்கு மற்றுமொரு தினம் வழங்குவதாக நேற்று முன்தினமிரவு (02) 11.30 மணிக்கு அறிவிக்கப்பட்டதாகவும், ஆயினும், தான் தனிப்பட்ட காரணங்களால் சமுகமளிக்கமாட்டேன் என அறிவித்திருந்ததாக, நேற்று (03) காலை ஒரு சில ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்ததாக மஹேல ஜயவர்தன தெரிவித்தார்.
குறித்த பிரிவுக்கு நேற்று காலை சமூகமளித்திருந்த மஹேல இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தான் தெரிவிக்காத கருத்துகளை, தெரிவித்ததாக ஊடகங்களில் பிழையான செய்திகளை பிரசுரிக்க வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்தார். நாம் கௌவரமாக நினைக்கும் இவ்விளையாட்டை அடுத்த தலைமுறைக்கு சரியான முறையில் விளையாடும் பொருட்டு கொண்டு செல்வது தனது பொறுப்பாகும் என்பதோடு, அதற்கான பின்புலத்தை ஏற்படுத்துவதுமாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.
அமைச்சர் மஹிந்தானந்த முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் என்ன கூற விரும்புகிறீர்கள் என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மஹேல ஜயவர்தன, நாம் அதனை விசாரணைகளின் முடிவில் பார்க்கலாம் எனத் தெரிவித்து அங்கிருந்து சென்றார்.
முன்னாள் விளையாட்டு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கடந்த ஜூன் மாதம் எழுப்பிய ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டுகள் குறித்து வாக்குமூலம் பதிவு செய்ய வரவழைக்கப்பட்ட நான்காவது இலங்கை கிரிக்கெட் வீரர் மஹேல ஜயவர்தன ஆவார்.
றிஸ்வான் சேகு முகைதீன்   நன்றி தினகரன் 








No comments: