கவிஞர் அம்பி எழுதும் சொல்லாத கதைகள் அங்கம் – 20 தேநீர் ஆற்றவேண்டியவன் வரலாற்றாய்வாளனாகிய கதை ! அமெரிக்கப் பயணத்தில் எதிர்பாராத சந்திப்பு ! !


இலங்கைப் பாடசாலைகளை அரசு பொறுப்பேற்றதும் கல்வித்துறையில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. நாடாளாவிய ரீதியில் ஆசிரியர்களின்  இடமாற்றங்கள், பாட நூல்களை அரசே பதிப்பித்து வெளியிடல் முதலான மாற்றங்களும் முக்கியமானவை.
இந்த மாற்றங்கள் என்னையும் ஓரளவு பாதித்தது என்றுதான் சொல்லவேண்டும்.

தமிழ்மொழிப்பாட நூல் தயாரிப்பில் நானும் ஈடுபட நேர்ந்தது. அது ஓர் இடைக்கால மாற்றம். பாடநூல் தயாரிப்பு எடுத்த எடுப்பில் தொடங்கப்பட்டதனால், அதுவரையில் கணித – விஞ்ஞான பாட ஆசிரியராக பணியாற்றிய நான், தமிழ்மொழி பாட நூற்குழுவில் இணைக்கப்பட்டேன்.
ஆனால், அந்தத்  திடீர் மாற்றம் சில மாதங்களுக்குத்தான் நிலைத்தது. வடமாகாணத்தில் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் ஏறக்குறைய 18 ஆண்டுகள் பணியாற்றியிருந்த என்னை, கிழக்கு மாகாணத்தில் ஓட்டமாவடி முஸ்லிம்  பாடசாலைக்கு இடம்மாற்றினார்கள். ஆனால், அந்த மாற்றமும் நிலைக்கவில்லை.

ஆகாயத்தில் பட்டம் அங்கும் இங்கும் பறப்பதுபோன்று அலைக்கலைந்துகொண்டிருந்தேன்.
ஓட்டமாவடி முஸ்லிம் பாடசாலைக்கு இடமாற்றம் பெற்றுச்சென்றிருந்தபோது, எதிர்பாராதவகையில், மற்றும் ஒரு கல்லூரி அதிபர் தனது செல்வாக்கை பயன்படுத்தி, தனது கல்லூரிக்கு என்னை அழைத்துவிட்டார்.
அது நான் தமிழகம் சென்று,  தமிழக முதல்வர் அறிஞர் அண்ணா  முன்னின்று நடத்திய உலகத்தமிழராய்ச்சி மாநாட்டில், புகாரில் ஒரு நாள் கவிதைப் போட்டியில் தங்கப்பதக்கம் பரிசுபெற்ற காலப்பகுதியாகும்.
மட்டக்களப்பு அரசினர் கல்லூரிக்கு நான் செல்வதை விரும்பாத ஓட்டமாவடி முஸ்லிம் பாடசாலை சமூகம், தங்கள் அரசியல்வாதிகளின் செல்வாக்கை பிரயோகித்து, என்னை மட்டக்களப்பு அரசினர் கல்லூரிக்குச் செல்லவிடாது தடுத்தது.
இந்த தர்மசங்கடமான நிலையை நான் சமாளிக்க நேர்ந்தது.
இரண்டு மூன்று வாரங்களின் பின்னர், ஓட்டமாவடி முஸ்லிம் பாடசாலைக்கே வரநேர்ந்தது. இந்தவேளையில், நான் ஏற்கனவே விண்ணப்பித்திருந்த தமிழ்ப்பாட நூலாக்க பணிக்கான அழைப்பு வந்து சேர்ந்தது.
அதுதான், இலங்கை கல்வி அமைச்சின் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் கணித பாட நூல் எழுதும் வேலை. அதுவரையில் அங்கும் இங்கும் ஓடிக்களைத்திருந்த நான், மனநிம்மதியுடன் கொழும்பு வந்து சேர்ந்தேன்.
ஆசிரியப்பணியிலிருந்து விலகி, கணித பாடநூல் ஆசிரியரானேன்.
இந்த மாற்றம் 1968 ஆம் ஆண்டு நிகழ்ந்தது.

கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில், கணித பாட நூல் எழுதுவதுடன், கணிதபாட விதானத்தயாரிப்பிலும் ஈடுபடும் வாய்ப்பும் கிட்டியது.
இது புதிய அனுபவம். அத்துடன் பயன்மிக்கது. மாணவர்களுடன் நெருக்கமாக இருந்த நான், என்னைப்போன்ற கணித பாட நூல் ஆசிரியர்களுடன் நெருங்கிப்பழக சந்தர்ப்பங்கள் வாய்த்தது.
அத்துடன் வேறு சில முன்னேற்றங்களும் எனக்குக்  கிட்டியது. அந்தக்காலப்பகுதியில், மற்றும் ஒரு புதிய பணியும் என்னைத்தேடி வந்தது.
சனத்தொகை கல்வியை ஒருங்கிணைக்கும் திட்ட அதிகாரிகளில் ஒருவராக நியமனம் பெற்றேன். அதன்பெறுபேறாக 1974 ஆம் ஆண்டு, அமெரிக்கப்பயணம் ஒன்று எதிர்பாராமல் சாத்தியமானது.
நாவற்குழியிலிருந்து, யாழ்ப்பாணம், அங்கிருந்து தெல்லிப்பளை, அங்கிருந்து கிழக்கிலங்கை. அங்கும் மட்டக்களப்பு – ஓட்டமாவடி என்று அலைச்சல், அதன்பின்னர் கொழும்பு…. இங்கிருந்து அமெரிக்கா…!
இந்த எதிர்பாராத மாற்றங்களை நான் தேடிச்செல்லவில்லை.  அவை என்னைத்தேடித்தான் வந்தன. வருகின்றன.
ஒவ்வொருவரது வாழ்விலும் இந்த மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டுதானிருக்கின்றன. விதி எப்படி எல்லாமோ விளையாடிக்கொண்டுதானிருக்கும். அது விழுத்தும்…! உயர்த்தும்….! சறுக்கும்…! எழுந்து நிற்கச்செய்யும்….!
எனது இளம்பராயத்தில், வீட்டிலிருந்த ஏழ்மையினால்,   பாடசாலைக்குத் தேவைப்பட்ட கொப்பி, புத்தகங்கள் வாங்குவதற்கு பணம் இல்லாமல், எங்கள் ஊரில் ஒரு தேநீர்க்கடை வைத்திருந்த உறவினர் ஒருவரிடம் சென்று கடனாக பத்து ரூபா கேட்டேன்.
 “ எதற்கு..?  “  எனக்கேட்டார்.
 “ கொப்பி, புத்தகம் வாங்க  “ என்றேன்.
 “ என்ன கண்டறியாத கலியாணப்படிப்பு. அதை விட்டுவிட்டு இங்கே வந்து குடித்த தேநீர்க்குவளைகளைக்கழுவு. அந்த வேலைக்கு ஏதும் பார்த்துத்தருகின்றேன்  “ என்று எனது கல்விக்கே வேட்டு வைக்கப்பார்த்தார் அந்தத்  தனவான்.
அன்று நான் அவர் பேச்சைக்கேட்டிருந்தால் என்னவாகியிருப்பேன்….? !
எங்காவது  ஒரு தேநீர்க்  கடையில் தேநீர் ஊற்றிக்கொடுத்துக்கொண்டு அல்லது   சாப்பாட்டுக்கடைகளில் வேலைசெய்திருப்பேன். அந்தத் தொழிலும் கௌரவக்குறைவானது அல்ல. செய்யும் தொழிலே தெய்வம் என்று கருதுபவன் நான்.
ஆனால், குழந்தைத் தொழிலாளர்களை உற்பத்தி செய்யும் சமூகம், எவ்வாறு அந்த பிஞ்சுகளின் கல்விக்கண்ணை குத்திவருகிறது…? !  என்பதை உங்களுக்கு தெரிவிப்பதற்காகத்தான் அந்த கடந்த கால சம்பவத்தை இங்கே உங்களிடம்  நினைவுபடுத்திச் சொல்கின்றேன்.
ஒவ்வொரு நாடும் அரசுகளும் பெற்றோர்களும் செய்யவேண்டிய முக்கிய கடமை:  பிள்ளைகளை நன்கு படிக்கவைக்க வேண்டும்.
எனது அமெரிக்கப்பயணம் உறுதியாயிற்று.  அங்கே உள்ள கனக்ரிக்கற் பல்கலைக்கழகத்தில் 1974 செப்டெம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையில் எமக்கு பயிற்சி. உலகின் வேறு பாகங்களிலுமிருந்தும் பயிலுனர்கள் வந்திருந்தனர்.
அமெரிக்காவுக்கு நான் பயணிக்கும்போது,  எனது மனதிலிருந்தது அங்கிருக்கும் வெள்ளை மாளிகையல்ல. அதற்கு காலத்துக்கு காலம் ஒரு தலைவர் வருவார் போவார்.
ஆனால், அமெரிக்காவிலிருந்து எங்கள் தாய்மண்ணுக்கு சேவையாற்ற வந்தாரே மருத்துவர் கிறீன். அவரது பூதவுடல் அடக்கமாகிய இடம்தான் எனது மனதில் சஞ்சரித்தவாறு இருந்தது. இந்தப்பயணத்தில் எப்படியாவது அந்த கல்லறையை தரிசித்திடவேண்டும் என்று மனதிற்குள் தீர்மானித்திருந்தேன். அந்தத்  தமிழ்  மருத்துவ முன்னோடி பற்றி தமிழிலும் ஆங்கிலத்திலும்  நான் நூல்களும் எழுதியிருக்கின்ற செய்த உங்களுக்குத் தெரியும்தானே..!
நான்  அமெரிக்காவில்  கலந்துகொண்ட பயிலரங்கில் சந்தித்த ஒரு பேராசிரியரிடம்,  என்னைப்பெரிதும் கவர்ந்த மருத்துவர் கிறீன் பற்றிச்சொன்னதும், அவர் வெஸ்ட் என்டர் என்ற பத்திரிகையின் நிருபர் ஒருவருடன் உரையாடி என்னுடன் ஒரு நேர்காணலுக்கும் ஒழுங்குசெய்தார்.
அந்த பெண்நிருபரின் பெயர்: மிஸ் ஆன் குறோஃபர்ட். அவர் என்னைச்சந்தித்து பேட்டிகண்டபின்னர், ஒரு விரிவான கட்டுரையை வெஸ்ட் என்டரில் வெளியிட்டார்.
அதன் விளைவாக மற்றும் ஒரு எதிர்பாராத நிகழ்வு நடந்தது. அக்கட்டுரையை படித்திருக்கும் மருத்துவர் கிறீனின் பேரன் தோமஸ் கிறீன் என்பவர் என்னைச்சந்திக்க வந்தார்.
தன்னை அறிமுகப்படுத்தினார்.   “ வாருங்கள் அமர்ந்து பேசுவோம்.  “  என்றேன்.
 “ இல்லை… இல்லை… வாருங்கள்  எங்கள் வீட்டுக்கு. உங்களை அழைத்துச்செல்லத்தான் வந்துள்ளேன்.  எனது துணைவியாரும் உங்கள் வரவை எதிர்பார்த்து காத்திருக்கிறார்   “ என்றார்.
எனக்கோ இன்ப அதிர்ச்சி.  அவரது வீட்டுக்குச்சென்றோம். பலதும் பத்தும் பேசினோம். அவர் தமது வீட்டைச்சுற்றிக்காண்பித்தார். வீட்டில் ஒரு அறைக்கு அழைத்துச்சென்றார்.
அங்கு சென்று பார்த்தபோது, எனக்கு பேராச்சரியம் காத்திருந்தது. அந்த அறையில், 1800 ஆம் ஆண்டளவில்  மருத்துவர் கிறீன் அவர்கள்  யாழ்ப்பாணத்திலிருந்து எடுத்துச்சென்ற பல அரிய கலைப்பொருட்கள் காணப்பட்டன.
பனை ஓலையில் செய்யப்பட்ட கைவினைப்பொருட்களுடன், கிறீன் எழுதி அச்சிட்ட சில கைநூல்களும் சில கிறிஸ்தவ சமய பிரசுரங்களும் காணப்பட்டன.
ஒரு நூலில் அதனை ஆக்கியோன்:   “ டாக்டர் எஸ். எஃப். கிறீன் அல்லது பச்சையப்பன்  “ என்றிருந்தது. ஆங்கிலத்தில், By Dr S.F. Green Alias Pachchaiyappan என்றிருந்தது.
கிறீன் என்ற சொல்லின் தமிழ் வடிவம்தான் பச்சை. சென்னையில் இருக்கும் பச்சையப்பன் கல்லூரிக்கும் கிறீனின் பெயருக்குமுள்ள தொடர்புபற்றி நான் அதுவரையில் அறிந்திருக்கவில்லை.!
அதுபற்றி இன்றும் எண்ணி எண்ணிப் பார்க்கின்றேன். அதானல்தான்  இன்று இதனை எழுதமுடிகிறது. 
இலங்கை அரசாங்கம் அக்காலப்பகுதியில் பாடசாலைகளை சுவீகரித்து அரசியல் உரிமை இழந்தது ஒருபுறம், ஆசிரியப்பணி இடமாற்றங்கள் மறுபுறம், வடக்கிலிருந்து கிழக்கிற்கு அனுப்பப்பட்டு, கொழும்புக்கு திரும்பி வந்த மனஉளைச்சல் வேறு ஒரு புறத்தில்…. இறுதியாக பணிமாற்றத்துடன், வாழ்க்கைப்  பாதையும் மாறியது. அந்த மாற்றம் பல நன்மைகளில் முடிந்தது.
அந்த அமெரிக்கப் பயணத்தினால், நான் மிகவும் நேசித்த தமிழ் மருத்துவ  முன்னோடியின்  உறவினர்களை அமெரிக்காவில் சந்திக்கும் பாக்கியமும் பெற்றேன்.
மற்றும் ஒருநாள்,  அமரத்துவம் எய்திவிட்ட  டாக்டர் கிறீனின் பேரன் தோமஸ் கிறீனும் அவரது பாரியாரும் என்னை வூஸ்டர் கிராமத்தின்  மயானத்துக்கு அழைத்துச்சென்றனர். அங்கே கிறீனின் பூதவுடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தையும் காண்பித்தனர்.
அந்தக்கல்லறையின் முன்பாக நின்று மௌனமாக அஞ்சலி செலுத்தி, மலர்களை  வைத்து வணங்கினேன்.  அவர் நாடுகள் கடந்து வந்து எங்கள் தாயகத்தில் மருத்துவ சேவையாற்றியவர். எமது தாயகத்தின் சார்பில் அன்று அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மனமுருகி மௌன வணக்கம் செலுத்தினேன்.
இவ்வாறு ஒரு அரியசந்தர்ப்பத்தை எனக்கு ஏற்படுத்தித்தந்த அமரர் கிறீனின் சந்ததியினருக்கும், அவர்களை நான் சந்திப்பதற்குரிய ஏற்பாடுகளை செய்து தந்த பேராசிரியர் மெக் ஓடர் மற்றும் பத்திரிகையாளர் மிஸ் ஆன் குறோஃபர்ட் ஆகியோருக்கும் எனது வாழ்நாள் முழுவதும் நன்றி சொல்வதற்கு கடமைப்பட்டுள்ளேன்.
கிறீனின் பேரன் தோமஸ் கிறீனின் பாரியார் மார்கிரட் சொன்னார்:  “  எனது கணவர்,  எமது வீட்டின்  இந்த அறையை இவ்வளவு காலமும் வேறு பயன்பாட்டுக்குத் தராமல் தனது பாட்டனாரின் உடைமைகளையெல்லாம் பேணிப்பாதுகாப்பதற்காக ஓதுக்கியுள்ளாரே என்றுதான் இவ்வளவு காலமும் யோசித்தேன். உங்களைக்கண்டு பேசிய பின்னர்தான் இந்த அறையினதும் இங்கிருக்கும் உடைமைகளினதும் விலைமதிப்பற்ற பெறுமதியை உணருகின்றேன்.  அத்துடன் இலங்கையிலிருந்து வந்து இவற்றைப்பார்த்து, இவற்றின் பெறுமதியையும் எமக்கு உணரவைத்துவிட்டீர்கள் . உங்களை சந்தித்தது எனது வாழ்நாளில் மிகவும் உன்னதமான தருணம் “
அவரது கருத்தை நானும் ஆமோதித்து,  “ எனக்கும் இது மறக்கமுடியாத தருணம்தான்   “ என்றேன்.
மருத்துவர் கிறீன் அவர்கள்   எவ்வாறு அன்றைய காலத்தில்  தமிழை  எழுதினாரோ, அவ்வாறே எதுவித மாற்றமும் இன்றி உங்கள் முன்னிலையில் சமர்ப்பிக்கின்றேன்.
24 என்பதை, உ று என்றும், பிரசவகாலத்திலே ஒரு தாய் அனுபவிக்கும் மனஅழுத்தம் சார்ந்த தடுமாற்றத்தை பிரசவ பைத்தியம் என்றும் கூறும் கிறீன், இற்றைக்கு ஆயிரத்து நூற்றி எண்பது ஆண்டுகளுக்கு முன்னரே இவ்வாறு எழுதியிருப்பதைப் பார்த்து வியப்புறுகிறோம்.
இனி  டாக்டர் கிறீனின் தமிழைப்  பாருங்கள்:
உ று ம். அதிகாரம் – பிரசவ பைத்தியம்
இது பைத்தியம்  -  விசாதம் என இருவிதமாகும். பிரசவித்த அன்னிய நாட்களிலேதான், பெரும்பாலுந் தோன்றும். தன்பெலத்துக்குத் தகுந்த காலத்துக்கு அதனப்பட முலைகொடுத்து வருவதினாலே ஸ்திரியானவள் தஞ்சக்கெட்டுப்போம் வேளையிலும், இதைப்போன்ற ஓர்வியாதி உண்டுபடுவதும் உண்டு. சிரோத்தாப ஸ்திரிகளாய், சஞ்சலம் விசனம் முதலிய காரணங்களால் மனங்கலங்கியிருக்கும் ஸ்திரிகளிலேயே இவ்வியாதி அதிகமாய்த் தோன்றக்கூடியது. மாறாட்டமாகிய மனப்பிராந்தி தோன்றி நடக்கும் குடும்பங்களிலுள்ள ஸ்திரிகளிலே மிகுதியாய் இவ்வியாதி உண்டுபடுகிறதென்று கூச்ச பண்டிதர் சொல்லுகிறார்.

இப்பிரபல ஆசிரியரது கருத்தின்படி பிரசவ பைத்தியத்துக்குக் காரணம், சனன உறுப்புத்தொழில்களுடன் காணும் சிரோத்தாபமேயாம். சில ஸ்திரிகள் கர்ப்பிணியாயிருக்குங் காலத்திலே திடுக்கிட்டேங்கினவுடனே அது மனதில் உறைத்துறுத்தியிருக்கும். இதின் தாக்கம் பிரசவகாலம் வரைக்கும் அவர்களிலே இலைமறைகாய்போலிருந்து, பிரசவித்த பின்பு பிரசவபைத்தியுமாய் வெளிப்படும். ஆதலால் கர்ப்பிணியாயிருக்குங் காலத்திலே திடுக்கிட்டேங்கினாற் பத்திரமாய்ப் பார்த்துக்கொள்ளவும்.
இவ்வியாதி சடிதியிலே உண்டாவதுமுண்டு. ஆகிலும் பெரும்பாலும் வியாதிதோன்றச் சில நாளுக்குமுன் ஸ்திரியிலே மனஅழற்சியும், வெடுவெடுப்பும் விளங்கி, குரல் மாறிக் கீச்சுக்குரலாய், கண்ணிலே மிலாந்திகொண்டு, நித்திரையுங் குழப்பமாய்விடும். அல்லது குறாவலும் கோட்டரவுங் கொண்டு, நாடித்துடிப்புச் சற்று விரைவாகி, சீரண உறுப்புக்களின் இசைவு பிசகை விளக்குவனவாய் நா அடைபூத்து, கண் மஞ்சணிறமாகி, மலமுங் கட்டிக்கொள்ளும்.
  இவ்வாறுதான் டாக்டர் கிறீனின் தமிழ் எழுதப்பட்டிருந்தது.  அவர் பற்றி நான் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஏற்கனவே எழுதியிருக்கும் நூல்கள் கிடைத்தால் வாசித்துப்பாருங்கள்.
( தொடரும் )
  
டாக்டர் சாமுவேல் பிஷ் கிறீன் என்பவர் அமெரிக்க மருத்துவரும் கிருத்தவச் சமய ஊழியருமாவார். இலங்கையின் மானிப்பாய் என்ற ஊரில் மருத்துவச் சேவையும் மருத்துக் கல்வியும் வழங்கியவர். தமது பத்தாண்டுச் சேவை முடிந்த பின் அமெரிக்கா திரும்பி ஓய்வு பெற்ற கிறீன், ஐந்து ஆண்டுகள் கழித்து மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பி, தமிழில் மருத்துவம் கற்பித்தல், நூல்கள் எழுதுதல் ஆகிய பணிகளைத் தொடர்ந்தவர், தாம் இறந்தபின் தம் கல்லறையின் நினைவுக்கல்லில் தமிழருக்கான மருத்துவ ஊழியர் (Medical Evangelist to the Tamilsஎனப் பொறிக்குமாறு வேண்டிக் கொண்டார். 1884இல் டாக்டர் பிஷ் கிறீன் அவர்கள் இறந்தபோது அவ்வேண்டுகோள் நிறைவேற்றப் பட்டது.





No comments: