மழைக்காற்று ( தொடர்கதை ) - அங்கம் 43 முருகபூபதி


ஜீவிகாவின் காதலன் ஜெயசீலன், கொழும்பிலிருந்து திடீரென வந்து – திரும்பிச்சென்றது வரையில் ஒவ்வாரு கணமும்  நடந்த நிகழ்ச்சிகளை அபிதா மனதில் அசைபோட்டவாறு கூரையின் முகட்டின் வெண்ணிற சீலிங்கை பார்த்துக்கொண்டிருந்தாள்.
பெயர் நன்றாகத்தான் இருக்கிறது.  அபிதா அறுசுவை! 
நிகும்பலையூருக்கு வந்த நாள் முதல் அடுத்தடுத்து இந்த வீட்டில் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் மாற்றங்களுக்குள் தனது வாழ்வும் சிக்குண்டு, திசைமாறிக்கொண்டிருக்கும் கோலத்தை நினைத்துப்பார்க்கிறாள்.
அன்றைய காலப்பொழுது புலருவதற்கு அறிகுறியாக எங்கிருந்தோ 
வரும் சேவலின் கூவல் அவளது செவிகளை வருடிச்செல்கிறது.
தரையில் படுத்திருக்கும் சேவலுக்கு , சூரியக்கதிரின் தாக்கத்தை உணரமுடிவதனால்தான், அது எழுந்து,  அந்தச் சூட்டின்  வலியை தணிப்பதற்காய் கூவுகிறது என்று சிறிய வயதில்  அருகில் படுத்திருந்த ஆச்சி சொன்னது அபிதாவுக்கு நினைவுக்கு வருகிறது.
தினமும் காலையில் துயில் எழும்போது வெளியேயிருந்து கேட்கும் சேவலின் கூவலுடன் ஆச்சியும் நினைவுக்கு வருவது வழக்கம். எங்கிருந்தாலும் சேவலின் இயல்பு ஒன்றுதானே.
அதனையும் எம்மையும் சூழும் இருட்டின் ஆயுள் சூரியன் உதிக்கும் வரையில்தானே..!?
கந்தல் சேலையையும்,  கற்பகம் ரீச்சர் முன்னர் அணிந்து நிறம்மங்கிப்போன சோர்ட்டியையும் அணிந்துகொண்டு, சமையல்கட்டில் வெந்துகொண்டிருந்த என்னை,  பளபளக்கும்  சாரியும் ரவிக்கையும் அணியச்செய்து, முகப்பூச்செல்லாம் பூசைவைத்து அழகுபார்த்து, பல கோணங்களில்  படம் பிடித்துக்காண்பித்து, முன்பின் தெரியாத ஒரு தொலைக்காட்சி நிறுவனத்திடம் அறிமுகப்படுத்தி, அபிதா அறுசுவை நிகழ்ச்சியில் தோன்றவைக்கப் போகிறார்களா… இந்த காதல்சோடி..?
இதெல்லாம் நடக்கும் காரியங்களா..?
அபிதா, தனது கைத்தொலைபேசியில் நேரத்தைப் பார்த்தாள். காலை ஐந்து மணிகடந்துகொண்டிருக்கிறது.
 படுக்கையருகில் சிறிய மேசையிலிருந்த மடிக்கணினியை எடுத்து, முதல் நாள் நடந்த சம்பவங்களை மெதுவாகத்தட்டி எழுதினால் என்ன… என்ற யோசனையுடன்   எழுந்தாள்.   சத்தம் வெளியே கேட்கலாம். வேண்டாம்…   ஜீவிகாவும் மஞ்சுளாவும் வேலைக்குச்சென்ற பின்னர் தட்டலாம்.  அதுவரையில் நாட்குறிப்பில் எழுதிவைக்கலாம் என்ற முடிவுடன், தலைமாட்டில் தலையணைக்கு கீழே இருந்த டயறியை எடுத்து எழுதத் தொடங்கினாள்.    அந்த  நாட்குறிப்பில் அவள் எழுதும் பக்கங்கள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன.
முதல்நாள் மதியம் ஜீவிகா, தனக்கு அணிவித்த சாரியில் படிந்த பெஃபியூம் வாசம் இன்னமும் உடலுடன் படிந்திருப்பதுபோன்ற உணர்வையும் அவளால்  கடந்து செல்லமுடியவில்லை.

முதல் நாள் இரவு நிலவு வெளிச்சத்தில், வெளிவிறாந்தாவிலிருந்து மஞ்சுளா, கேட்ட கேள்விகளுக்கு பதில் சொன்னதை இப்போது நினைத்தபோது அபிதாவுக்கு சிரிப்பும் வந்தது.
ஜீவிகா – ஜெயசீலன்   காதல்  விவகாரங்களை அறிவதில் அவளுக்கிருந்த ஆர்வத்திற்கு தொடர்ந்தும் தீணிபோடுவதற்கு விரும்பாத அபிதா,   “  ஏன்… மஞ்சு…. உங்களுக்கும் ஏதும் காதல் அனுபவம் இருக்கிறதா…?  “ எனக்கேட்டாள்.
 “ எனக்கா…? ஒரு பயல் நெருங்கமாட்டான். நான் நெருப்பு மாதிரி. பொசுக்கிப்போடுவன். முன்பே உங்களுக்குச்சொல்லியிருக்கிறன்தானே…?  “  என்றாள் மஞ்சுளா.
 “ ஓமோம்… ஞாபகம் இருக்கிறது. ஆனால், எதற்காக ஜீவிகாவின் காதல் பற்றி துருவித்துருவிக்கேட்கிறீங்க… அவுங்க இரண்டுபேரும் ஓரிடத்தில் வேலை செய்யிறாங்க. அந்த வேலையின் நிமித்தம் வெளியே போய் வாராங்க.  நெருக்கம் படிப்படியாக கூடியிருக்கும். காதலும்  மலர்ந்திருக்கும்.  அதுபோலத்தன்னும் உங்களுக்கு அனுபவம் கிட்டாமல் இருப்பதற்கு  என்ன காரணம் என்பதுதான் புரியவில்லை மஞ்சு  “
மஞ்சுளா அதற்கு ஏதும் சொல்லாமல், கையிலிருந்த கைத்தொலைபேசியில் முகநூல் பார்க்கத்தொடங்கிவிட்டாள்.
அவளது தப்பித்தலை அபிதாவால் புரிந்துகொள்ளமுடிந்தது.
அபிதா,  எழுந்துவந்து ஜீவிகாவின் அறையை எட்டிப்பார்த்தாள். அங்கிருந்து சன்னமாக குறட்டை ஒலிவந்துகொண்டிருந்தது. அந்த ஒலி வெளியே கேட்கும். ஆனால், அவள் கானும் கனவுகள் வெளியே தெரியவராது. மறுநாள் எழுந்து சொன்னால்தான் தெரியவரும். எல்லோருடைய உறக்கமும் விருந்து படைக்கும் கனவுகள் அனைத்தும் அப்படித்தானே…!
மீண்டும் விறாந்தாவுக்கு திரும்பிய அபிதா, மஞ்சுளாவுக்காக சூடாக்கிக்கொண்டு வந்த பாலை நீட்டினாள்.
 கைத்தொலைபேசியில் ஊன்றியிருந்த பார்வையை விலக்காமலே,  பால் கப்பை வாங்கிய மஞ்சுளா,  “ தேங்ஸ்  “ என்றாள்.
அவளது தாய் சிவகாமசுந்தரி அவளைத்தேடி இங்கே வரப்போகும்
செய்தியை எவ்வாறு அவிழ்ப்பது என்ற யோசனையில் மூழ்கியவாறு, மஞ்சுளாவின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள் அபிதா.
மஞ்சுளா, கடைக்கண்ணால் அபிதாவை பார்த்துக்கொண்டு,             “ என்ன …அப்படிப்பார்க்கிறீங்க .? ஏதும் சொல்ல வேண்டுமா…?  “
மஞ்சுளா தனது கைத்தொலைபேசியை அணைத்து வைத்துவிட்டு, பாலை அருந்தினாள்.
 “  உங்களிடம்  சொல்வதா… வேண்டாமா… என்று தயங்குகிறேன் மஞ்சு…நீங்கள் கோபப்படாமல் அமைதியாக இருந்து கேட்டால்  சொல்லலாம்.  அதுபற்றி ஜீவிகாவிடமும்  சொல்லிவிட்டேன்.  உங்கள் கையில்தான் அதற்கு முடிவு இருக்கிறது, அதனால், உங்களிடமே சொல்லிவிடுமாறுதான் ஜீவிகாவும் சொன்னாங்க.  நுவரேலியா  போயிருக்கும் சுபாவிடமும் பேசிவிட்டேன்.  இன்னமும்  யாழ்ப்பாணம்  போயிருக்கும் அந்த லண்டன்காரரிடமும் மங்களேஸ்வரி ரீச்சர் வீட்டிலிருக்கும் எங்கட கற்பம் ரீச்சரிடமும்தான் இதுவரையில் எதுவும் பேசவில்லை.  “
 “ அபிதா… என்ன பெரிய பீடிகையெல்லாம் போட்டு பேசுறீங்க…. அப்படி என்ன முக்கியமான விடயம்.  எனக்கு ஓரளவு புரியுது…. என்னுடைய அம்மாவைப்பற்றித்தானே…?  சொல்லுங்க… கேட்டுக் கேட்டு சலித்துவிட்டது. உங்களுக்கு பொழுது போகவில்லையென்றால் பேசுங்க…. கேட்டுக்கொண்டிருக்கிறேன்.  மொத்தத்தில் இந்த வீட்டில் நானும் ,  என்னைவிட்டு  ஓடிப்போன அவளும்தான் உங்கள் அனைவருக்கும்  மெல்லுவதற்கு கிடைத்த அவல்…!  அப்படித்தானே…? நன்றாக மென்றுகொண்டிருங்க…  “  அருந்திய பால் தம்ளரை  மஞ்சுளா அடித்து வைத்ததிலிருந்து அவளுக்கு கோபம் படிப்படியாக துளிர்விடுவதை  அபிதா புரிந்துகொண்டாள்.
இந்தக்கொரோனா அச்சுறுத்தல் முடிவுக்கு வந்ததும், கற்பகம் ரீச்சர் ஊரோடு மாற்றம் எடுத்துக்கொண்டு  போய்விடுவா.  சுபாஷினியும் அவளது ஊரில் தாயும் தம்பியும் பார்த்துவைத்திருக்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டு போய்விடுவாள். ஜீவிகாவின் பெரியப்பாவும் விமானம் ஓடத்தொடங்கியதும்  பேக்கைத்  தூக்கிக்கொண்டு லண்டன் சென்றுவிடுவார். ஜீவிகாவும் விரைவில் ஜெயசீலனுடன் கொழும்பில் குடித்தனம் நடத்தச்சென்றுவிடுவாள். அதன்பிறகு  எஞ்சியிருக்கப்போவது தானும் இந்த மஞ்சுளாவும்தானே…? எங்கள் இருவரதும் எதிர்காலம் எவ்வாறு அமையும்…? ஜெயசீலன் உறுதியளித்துச்சென்றுள்ள கனவாக மனதில் படிந்திருக்கும் அந்தத் தொலைக்காட்சி தொடர் நிகழ்ச்சி சாத்தியமானதா…? சரிவந்தால்  அதற்கு  நான் எங்கிருந்து செல்வேன்.  எனக்குரிய வாழ்விடம் எங்கே…..?  யாருடன் தங்கியிருப்பது…? கானல் நீரை நம்பி ஓடும் மான்குட்டி வாழ்க்கைதானா ?  இந்த மஞ்சுளாவுக்கு கைவசம் ஒரு வேலை இருக்கிறது.  பிழைத்துக்கொள்வாள்.  நான் என்ன செய்வேன்.…? சமையலையும் கூட்டிப்பெருக்கும் வேலையையும் தவிர,  வேறு எதுவும் தெரியாதே….?!   எல்லோரும் என்னை விட்டுச்சென்றபின்னர், எந்த வீட்டுக்குச்சென்று கழுவித் துடைக்கப்போகின்றேன்….?   
இறுதிப்போரில்  காணமல் போனவர்களின் உறவுகள் நடத்திவரும் தொடர் போராட்டம் ஆயிரம் நாட்களையும் கடந்து கொண்டிருக்கிறது.  நடக்கப்போகும் தேர்தலிலும் அதுபேசப்படுகிறது.  “ எவரும் காணாமல் போகவில்லை. சரணடைந்தவர்கள் அனைவருக்கும் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுவிட்டனர் “   என்று நாக்கூசாமல் பொய்யுரைக்கும் அரச தரப்பிடம் நீதியை எதிர்பார்க்கமுடியுமா…? அவர் மீண்டும் திரும்பிவரமாட்டார் என்பது மனதில் உறுதியானதன் பின்புதானே, அவரையும் , அந்தப்பாவிகளின் ஷெல்வீச்சில் பறிக்கப்பட்ட என் செல்வத்தையும் மனதில் நினைவுகளாக சுமந்துகொண்டு  தனிமரமாகி அலைந்துழன்று, போக்கிடமின்றி, பத்திரிகை விளம்பரம் பார்த்து,  எஞ்சியிருக்கும் காலத்தில் ஒரு வேளை உணவுக்காக இந்த நிகும்பலையூரில் வந்து கிடக்கின்றேன். வந்தவிடத்தில் கிடைத்த புதிய சொந்தங்களும் ஒவ்வொன்றாக விலகிச்சென்றுவிட்டால், அடுத்து எங்கே செல்வது….?
மனதில் தோன்றியவற்றை வெளியே கக்கிவிடாமல், மஞ்சுளாவின் வதனம்  கோபத்தினால்  செம்மையாகும்  கோலத்தையே பார்த்தவாறிருந்தாள் அபிதா.
 “  அபிதா… அப்படி என்னதான் பார்க்கிறீங்க…. என்னுடைய முகத்தில் ஏதும் எழுதியிருக்கிறதா…? சொல்லுங்க… சொல்ல வந்ததை சொல்லுங்க.  இப்போது எனது மனமும் மரத்துப்போய்விட்டது. யார் என்ன சொன்னாலும் என்னை பாதிக்காது… சொல்லுங்க…. நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும்….? எனக்கும் கண்ணைச் சுழற்றுது.  நாளைக்கும் வேலை.  “ என்று மஞ்சுளா சொன்னதும், அபிதா விம்மிக்கொண்டு உடைந்து அழுதாள்.
 மஞ்சுளா அந்த அழுகையை எதிர்பார்க்கவில்லை. விறாந்தாவின் அரைமதில் சுவரிலிருந்தவள் கையை ஊன்றி எழுந்து வந்து, அபிதாவின் நாடியை பிடித்து உயர்த்தினாள்.
அபிதா, தான் அணிந்திருந்த இரவு உடையின் கீழ்முனையினால் கண்களை துடைத்துக்கொண்டாள்.
“  மஞ்சு… நான்  மீண்டும்  தனித்துப்போய்விடுவேனோ என்ற பயம் வந்திட்டுது. “ 
 “ ஏன்…. என்ன சொல்றீங்க அபிதா….? எனக்கு ஒன்றும் புரியவில்லை. “ 
அபிதா மனதில் நினைத்திருந்தவற்றை விம்மி விம்மி சொல்லத்தொடங்கினாள்.
மஞ்சுளா, அவளது கேசத்தை வருடியவாறு,  “  முதலில் அழுவதை நிறுத்துங்க அபிதா… இப்போது என்ன நடந்துவிட்டது…?  ஏன் வீணாக கற்பனைகளை வளர்த்துக்கொள்ளுறீங்க.  எந்தப்பிரச்சினைக்கும் ஒரு தீர்வு இருக்கிறது என்று முன்னர் நீங்கதானே சொல்லியிருந்தீங்க…  உங்களுடைய கடந்த கால க்கதைகளை கேட்டிருக்கும் நாங்கள், உங்களை பெரிய தைரியசாலி, மனவுறுதிகொண்ட பொம்பிளை என்றெல்லாம்தான் பேசியிருக்கின்றோம்.  இப்போது  நீங்கள் பயப்படும்படியாக என்ன நடந்துவிட்டது. கற்பகம் ரீச்சர்,  சுபா, ஜீவிகா…. இவுங்க  எல்லாம் விட்டுப்போய்விட்டாலும் நான் இருக்கிறேன்தானே.. நானும் தனிமரம்தான். மறந்திடாதீங்க  அபிதா.   போகிறவர்கள் போகட்டும். நான் ஒரு வீடு வாடகைக்கு எடுப்பேன்.  நீங்கள் என்னுடன் இருக்கலாம்தானே…?  சும்மா மனசை அலட்டிக்கொண்டிருக்காமல், ஆகவேண்டியதைப்பாருங்க அபிதா.   அந்த ஜெயசீலன் சொல்லியிருக்கும் ரி.வி. செனல் புரோகிறாம் உங்களுக்கு நல்லதோர் எதிர்காலத்தை தரலாம்.  வேண்டுமென்றால், நானே உங்களுக்காக கொழும்புக்கு மாற்றல் வாங்கிக்கொண்டு வந்து, அங்கே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அங்கிருந்து அந்த நிகழ்ச்சிக்குப்போய்வந்து உழைக்கலாம்தானே… ?  வாழ நினைத்தால் வாழலாம்… வழியா இல்லை பூமியில் என்று நீங்கள்தானே பாட்டெல்லாம் பாடுவீங்க அபிதா… அப்படிப்பட்ட உங்களுக்கு இன்று என்ன நேர்ந்தது. ஜீவிகா ஏதும் சொன்னாளா…? அல்லது பகல் கனவு ஏதும் கண்டீங்களா…?   “ மஞ்சுளா மீண்டும் அரைச்சுவரில் ஏறி அமர்ந்தாள்.
அபிதா தலைகுனிந்தவாறு அமைதியாக இருந்தாள்.
 “ ஓகே…. மஞ்சு… அவ்வாறு நான் எனது எஞ்சிய காலத்தை உங்களோடு செலவிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்,  உங்கட அம்மாவையும் எம்மோடு சேர்த்துக்கொள்ளலாமா…   ? “ 
அபிதாவிடமிருந்து இப்படி ஒரு வேண்டுகோள் வருமென  மஞ்சுளா எதிர்பார்த்திருக்கவில்லை.
“  நினைத்தேன்…. நினைத்தேன்…. சோலியான் குடுமி சும்மா ஆடாது… அந்த மனுஷியை எதற்காக இதற்குள்ளே கொண்டுவாறீங்க… நீங்களும் அவவும் ஏதும் பிளேன் போட்டு வைத்துக்கொண்டுதான் இதெல்லாம் பேசுறீங்களா… அபிதா…. சொல்லுங்க…?  எனக்கு இரண்டில் ஒன்று தெரிந்தாகவேண்டும்.  நீங்கள்  அந்த மனுஷியுடன் தொடர்ந்தும் பேசிக்கொண்டுதான் இருக்கிறீங்களா…? கடைசியாக எப்போது பேசினீங்க… ? சொல்லுங்க…? எனக்கு மண்டையே விறைக்கும்போல இருக்கிறது. “  
 “ கொஞ்சம் பொறுங்க மஞ்சு. தண்ணீர் குடித்துவிட்டு வாரன்.  “   அபிதா எழுந்து சென்றாள்.
தண்ணீர் எடுத்துவரச்செல்லும் அந்தச்சில கணங்களில் அடுத்து என்ன பேசலாம் என்ற யோசனையைத்தான் அபிதா சுமந்து சென்றாள்.
ஜீவிகாவின் அறையிலிருந்து இப்பொழுதும்  குறட்டை ஒலி சன்னமாகக் கேட்டுக்கொண்டிருக்கிறது.
 ‘ கொடுத்து வைத்தவள்  ‘ அபிதா பெருமூச்சுடன் மனதிற்குள் சொல்லிக்கொண்டு, தனது கப்பிலும் மஞ்சுளாவின் கப்பிலும் தண்ணீர் எடுத்துவந்தாள்.
அந்த இடைப்பட்ட கணங்களில் மஞ்சுளா, மீண்டும் முகநூலில் மூழ்கிவிட்டாள்.
 “ மஞ்சு… தண்ணீர்…  “ 
 “ இதில் வைங்க.   “
அபிதா அரைச்சுவர் குந்தில் வைத்துவிட்டு, அருகிலிருந்த ஆசனத்தின் அமர்ந்தாள்.
 “  மஞ்சு… நான் சொல்லப்போவதை கொஞ்சம் காதுகொடுத்து கேளுங்க… அதற்குப்பிறகு ஒரு தீர்மானத்திற்கு வாங்க… சரியா…?   “
  “ சரி, சொல்லுங்க…ஆனால், புதிர்போடாமல் சொல்லவேணும் “
“   உங்கட அம்மா… யாரை நம்பிப்போனாங்களோ… அந்த ஆள் இப்போது இல்லை. செத்து கணகாலமாகிவிட்டது. அது உங்களுக்குத் தெரியுமா… ?  உங்கட அம்மா, ஒரு இன்டர்நேஷனல் ஸ்கூலில்தான் இப்போது ரீச்சராக வேலை செய்கிறாங்க என்பதாவது உங்களுக்குத் தெரியுமா…? சிங்கப்பூரில் இருக்கும் உங்கட அப்பாவும், கண்டியிலிருக்கும் உங்கள் அம்மாவும் கடந்த சில மாதங்களாக பேசிக்கொண்டிருக்கும் செய்தியாவது உங்களுக்குத் தெரியுமா…? இனியும் தனியே இருக்காதே… மஞ்சுவுடன் பேசி, சேர்ந்து இருக்கப்பார் என்று  உங்கட அப்பாதான் அவவுக்கு யோசனையும் சொல்லியிருக்கிறார்.  இதெல்லாம் எனக்கு எப்படித் தெரியும் என்று யோசிக்கிறீங்களா மஞ்சு.  நான் இப்போது எனது எதிர்காலம் பற்றி மாத்திரம் யோசிக்கவில்லை மஞ்சு. உங்ட எதிர்காலம் பற்றியும்தான்.  உங்கட அம்மாவிடத்தில் மட்டுமல்ல எம் எல்லோரினதும் வாழ்வில் விதி  புகுந்து விளையாடியிருக்கிறது. அந்த விதி எப்படிப்பட்டது என்பதை இப்போது எமக்கெல்லாம் புரியவைத்திருப்பது கண்ணுக்குத் தெரியாத ஒரு கிருமிதான்.  இந்தக்கிருமி இனி நல்லதும் செய்யும் கெட்டதும் செய்யும். பொறுத்திருந்து பாருங்க மஞ்சு.  இன்னும் ஒரு முக்கியமான ஒரு செய்தியையும் இந்தநேரத்தில் உங்களுக்குச்சொல்றன். கேட்டால் அதிர்ச்சியடைவீங்க…. உங்களுக்கு நினைவிருக்கிறதா..? எங்கட சுபாஷினியை ஒரு சிங்களப்பெடியன் முன்னர் விரும்பி , ஊரெல்லாம் அழைத்துக்கொண்டு  திரிந்து வயிற்றிலும் பிள்ளையை கொடுத்து அழிக்கவைத்துவிட்டு காணாமல் போனானே…!? அவன்  சுபா சொன்னதுபோல் அவுஸ்திரேலியாவுக்கு படகில் போகவில்லை. அவன் போனது இத்தாலிக்கு.  அந்தப்பாவியையும் இந்த கொரோனா விட்டு வைக்கவில்லை.  இப்படி பல செய்திகள் இருக்கிறது உங்களிடம் சொல்வதற்கு.  இந்த வீட்டில் நான் வெங்காயம் மிளகாய் மாத்திரம் நறுக்கிக்கொண்டு,  சோறு கறி ஆக்கிக்கொண்டு,  புரியாணியும் சப்பாத்தியும் மாத்திரம் செய்துகொண்டிருக்கவில்லை  மஞ்சு.  நான் இழந்த  எத்தனையோ விடயங்களை இந்த வீட்டிலிருக்கும் உங்கள் எல்லோரிடமும் தேடித் தேடிக்கண்டுபிடித்து,  என்னை நானே தேற்றிக்கொண்டிருக்கின்றேன். நான் அறுசுவை அபிதா இல்லை மஞ்சு..,  ஆறும் தெரிந்த அபிதா  “  என்று மூச்சைப்பிடித்தவாறு சொன்ன  அபிதா, தண்ணீரை அருந்திவிட்டு அந்த அரைச்சுவர் குந்தில் கப்பை பட்டென வைத்தாள்.
(தொடரும் )

  


No comments: