உலகச் செய்திகள்


கராச்சி பங்குச் சந்தை சூடு; 4 தீவிரவாதிகள் உள்ளிட்ட 7 பேர் பலி

ரஷ்ய உளவு விமானங்களை இடைமறித்த அமெ. விமானம்

தற்காப்புக் கலைஞர்களை எல்லைக்கு அனுப்பிய சீனா

இந்திய-சீன எல்லையில் அதிகரிக்கும் பதற்றம்!

ஜெர்மனியில் இருந்து 9,500 அமெரிக்க துருப்புகள் வாபஸ்

சீன எல்லைக்கு ஆயுதம் தாங்கிய, அதிவேக படகுகளை அனுப்பும் இந்திய இராணுவம்

141 கொரோனா தடுப்பு மருந்துகளுக்காக ஆய்வு

மியன்மார் சுரங்க விபத்தில் 113 பேர் பலி

அமெரிக்காவில் நாளாந்த வைரஸ் தொற்று சாதனை அளவுக்கு உச்சம்


கராச்சி பங்குச் சந்தை சூடு; 4 தீவிரவாதிகள் உள்ளிட்ட 7 பேர் பலி
கராச்சி பங்குச் சந்தை சூடு; 4 தீவிரவாதிகள் உள்ளிட்ட 7 பேர் பலி-Pakistan Karachi Stock Exchange Attack-7 Killed Including 4 Terrorists
பல்கிஸ்தான் விடுதலை இராணுவம் பொறுப்பேற்பு
பாகிஸ்தானின் கராச்சியிலுள்ள பங்குச் சந்தை கட்டடம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இறந்தவர்களில் ஒரு பொலிஸார், இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் தாக்குதலை நடத்திய நான்கு பேர் அடங்குவதாக, அந்நாட்டு மீட்பு சேவை தலைவர் பைசல் ஆதி அல் ஜசீரா செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.

கராச்சி பங்குச் சந்தை சூடு; 4 தீவிரவாதிகள் உள்ளிட்ட 7 பேர் பலி-Pakistan Karachi Stock Exchange Attack-7 Killed Including 4 Terrorists
இத்தாக்குதலில், குறைந்தது இரண்டு பொலிசார் உட்பட ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.
இத்தாக்குதலை பாகிஸ்தானிலுள்ள பல்கிஸ்தான் விடுதலை இராணுவம் (Balochistan Liberation Army-BLA) எனும் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
தாக்குதலில் ஈடுபட்ட அனைவரும் தற்கொலைதாரிகள் என அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
கராச்சி பங்குச் சந்தை சூடு; 4 தீவிரவாதிகள் உள்ளிட்ட 7 பேர் பலி-Pakistan Karachi Stock Exchange Attack-7 Killed Including 4 Terrorists
தாக்குதல்தாரிகளின் பைகளிலிருந்து கைத்துப்பாக்கிகள், கைக்குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கி தாங்கிய நபர்கள், கட்டடத்திற்குள் புகுந்து கைக்குண்டுகள் மற்றும் துப்பாக்கிகளால் கட்டடத்தைத் தாக்கியுள்ளனர். இக்கட்டடமானது, உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ளதுடன் பல தனியார் வங்கிகளின் தலைமை அலுவலகங்களும் இப்பகுதியில் கொண்டுள்ளது.
கராச்சி பங்குச் சந்தை சூடு; 4 தீவிரவாதிகள் உள்ளிட்ட 7 பேர் பலி-Pakistan Karachi Stock Exchange Attack-7 Killed Including 4 Terrorists
தாக்குதல்தாரிகளில் இருவர் கட்டடத்தின் நுழைவாயிலில் கொல்லப்பட்டுள்ளதுடன், அவர்களில் இருவர் காயமடைந்த நிலையில் உள்ளே சென்று பின்னர் அங்கேயே கொல்லப்பட்டுள்ளதாக, ஊடகவியலாளர்களிடம் பேசிய எடி தெரிவித்துள்ளார்.
கராச்சி பங்குச் சந்தை சூடு; 4 தீவிரவாதிகள் உள்ளிட்ட 7 பேர் பலி-Pakistan Karachi Stock Exchange Attack-7 Killed Including 4 Terrorists
பாகிஸ்தான் பங்குச் சந்தையின் பணிப்பாளர் ஆபித் ஹபீப், தாக்குதல் இடம்பெற்றபோது தனது அலுவலகத்தில் இருந்துள்ளதோடு, பிரதி இராணுவ அதிகாரிகள் கட்டடத்தை முழுமையாக கையகப்படுத்தும் வரை, அவர் அங்கு மேலும் 20 ஊழியர்களுடன் இருந்ததாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
காலை 10.00 மணிக்கு (05:00 GMT), ஒரு கார் கட்டடத்திற்கு அருகில் வந்தது. அதிலிருந்து இறங்கிய ஆயுததாரிகள் பலாத்காரமாக கட்டடத்திற்குள் நுழைந்து சராமரியாக துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கியதாக, அவர் தெரிவித்துள்ளார்.
கராச்சி பங்குச் சந்தை சூடு; 4 தீவிரவாதிகள் உள்ளிட்ட 7 பேர் பலி-Pakistan Karachi Stock Exchange Attack-7 Killed Including 4 Terrorists
"துப்பாக்கிச் சூடு நடந்தது ... திடீரென்று எல்லோரும் என்ன நடக்கிறது என்று ஜன்னல்களை நோக்கி விரைந்து கொண்டிருந்தார்கள். துப்பாக்கிச் சூடு மிக அருகிலேயே இடம்பெறுவதை அறிந்த அவர்கள் மிகவும் கவலையடைந்தார்கள், நாங்கள் கதவுகளை மூடிக் கொண்டோம்."
அந்நாட்டு ஊடகங்கள் இது தொடர்பான காட்சிகளை ஒளிபரப்பியுள்ளது. இடைவிடாத துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிப்புகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து, சட்ட அமுலாக்க பிரிவு குறித்த பகுதியை சோதனையிட்டு வருகின்றது.
தாக்குதல் நடந்த வேளையில் 1,000 இற்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் மற்றும் ஊழியர்கள் அந்த கட்டடத்தில் இருந்ததாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.   நன்றி தினகரன்   
ரஷ்ய உளவு விமானங்களை இடைமறித்த அமெ. விமானம்
அலஸ்காவுக்கு அருகில் நான்கு ரஷ்ய உளவு விமானங்களை அமெரிக்க போர் விமானங்கள் இடைமறித்ததாக அமெரிக்க இராணுவம் சனிக்கிழமை அறிவித்தது.
ரஷ்யாவின் டீயு–142 விமானங்கள் அலஸ்காவின் அலுட்டியன் தீவுச் சங்கிலியின் 65 கடல் மைல்களுக்குள் நெருங்கி வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் இந்த விமானங்கள் சர்வதேச வான் பகுதியில் இருந்ததாகவும் அமெரிக்கா அல்லது கனடா வான் பகுதிக்குள் நுழையவில்லை என்றும் வட அமெரிக்க வான் பாதுகாப்பு கட்டளையகம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
அலஸ்காவுக்கு அருகில் அமெரிக்க விமானங்கள் ரஷ்ய விமானங்களை இடைமறிப்பது இந்த மாதத்தில் இது நான்காவது முறையாகும்.
ரஷ்யாவுக்கு அருகால் பால்டிக் மற்றும் கறுங்கடலுக்கு மேலால் பறந்த அமெரிக்காவின் இரு பி–1 குண்டுவீசும் விமானங்களை ரஷ்யா இடைமறித்த புகைப்படங்களை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு கடந்த மே 29 ஆம் திகதி வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 


தற்காப்புக் கலைஞர்களை எல்லைக்கு அனுப்பிய சீனா
திபெத்திய பீடபூமியில் நிலைகொண்டிருக்கும் சீனா இராணுவத்திற்கு பயிற்சி அளிப்பதற்கு 20 தற்காப்புக் கலை பயிற்சியாளர்களை அனுப்பி இருப்பதாக சீனா அறிவித்துள்ளது.
இந்த முடிவு எடுக்கப்பட்டதற்கான உத்தியோகபூர்வ காரணம் எதுவும் வெளியிடப்படாதபோதும், இம்மாதம் இடம்பெற்ற சீன எல்லைக் காவல் படையினருடனான மோதலில் குறைந்தது 20 இந்திய துருப்புகள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
1996 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையின்படி, இந்தியா மற்றும் சீனத் துருப்புகள் எல்லையில் துப்பாக்கிகள் மற்றும் வெடி பொருட்களை வைத்திருப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த மோதல்களில் சீனா தமது தரப்பில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்த தகவலையும் வெளியிடவில்லை. இந்தியா தரப்பில் மேலும் 76 படையினர் காயமடைந்தனர்.
இந்நிலையில் இராணுவத்தின் புதிய தற்காப்புக் கலை பயிற்சியாளர்கள் பற்றிய செய்தி சீனாவின் உத்தியோகபூர்வ செய்திப் பத்திரிகையில் கடந்த ஜூன் 20 ஆம் திகதி வெளியாகியுள்ளது. கடந்த ஜூன் 15 ஆம் திகதி லடகோனின் கல்வான் நதிப் பள்ளத்தாக்கில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் இரு அணுசக்தி நாடுகளான சீனா மற்றும் இந்தியா பரஸ்பரம் குற்றம்சாட்டுகின்றன.
இதன்போது இரு படையினரும் கைகளாலேயே சண்டையிட்டிருப்பதோடு இவ்வாறான மோதல் ஒன்றில் உயிரிழப்பு நிகழ்வது கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகளில் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 

இந்திய-சீன எல்லையில் அதிகரிக்கும் பதற்றம்!
'The Belt and Road Initiative' திட்டம்
இராணுவ உயரதிகாரிகள் மட்டத்தில் மீண்டும் பேச்சு
இந்திய_சீன எல்லையில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் இரு நாடுகளின் இராணுவ உயரதிகாரிகள் மட்டத்திலான 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. முதல் இரு பேச்சுவார்த்தைகள் நடந்த மால்டோவில் இந்த 3ஆவது கட்ட பேச்சுவார்த்தை நடைபெறாமல் சுச்சூல் பகுதியில் நடைபெறுகிறது.
இரு நாடுகளும் எல்லையில் படைகளைக் குவித்து வருகின்றன. அங்கு போர்ப் பதற்றம் நிலவுகிறது. கிழக்கு லடாக்கில் பாங்காங் ஏரி, கால்வன் பள்ளத்தாக்கு, ஹாட் ஸ்பிரிங், தேப்சாங் உள்ளிட்ட இந்திய பகுதிகளில் சீன இராணுவம் ஊடுருவியுள்ளதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.
இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில் நேற்று 3ஆவது கட்டமாக இராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. நேற்றுக் காலை 10.30 மணிக்கு சுச்சூல் பகுதியில் தொடங்கிய பேச்சுவார்த்தையில் 14 கார்ப்ஸ் கமாண்டர் லெப்டினன்ற் ஜெனரல் ஹரீந்தர் சிங் மற்றும் தெற்கு ஜின்ஜியாங் இராணுவத்தின் தலைமை மேஜர் லியூ லின் ஆகியோர் தலைமை வகிக்கிறார்கள்.
ஏற்கெனவே மால்டோ பகுதியில் ஜூன் 6 மற்றும் 22 ஆகிய திகதிகளில் இரு முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் 3ஆவது கட்டப் பேச்சுவார்த்தை சுச்சூல் பகுதியில் முதல் முறையாக இப்போது நடைபெறுகிறது. எல்லையில் பதற்றத்தைத் தணிப்பது உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
சீனாவின் மாபெரும் திட்டமான தி பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ் (The Belt and Road Initiative) எனப்படும் திட்டத்தை தற்போது அந்த நாடு தீவிரமாக செயல்படுத்தத் தொடங்கி உள்ளதாக இந்தியா கண்டனம் தெரிவித்து வருகிறது. இந்தியா_ சீனா இடையே தற்போது எல்லையில் நிலவும் பிரச்சினைக்கு 'தி பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ்' திட்டம் மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்தை இந்தியா ஆரம்பத்தில் இருந்து எதிர்த்து வருகிறது. இந்தியாவின் எதிர்ப்பை சமாளிக்கலாம் என்று சீனா முதலில் கருதியது.
ஆனால் இந்தியாவின் இராஜாங்க ரீதியான பலம் காரணமாக 'தி பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ்' திட்டத்திற்கு நிறைய எதிர்ப்புகள் வந்தன. இதுதான் இந்தியா மீதான சீனாவின் கோபத்திற்கு காரணமெனத் தெரியவருகிறது.
உலகம் முழுக்க இருக்கும் நாடுகளை சீனாவுடன் இணைப்பதுதான் 'தி பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ்' (The Belt and Road Initiative) திட்டத்தின் நோக்கம் என்கிறது இந்தியா. 2013இல் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டது. மொத்தம் 160 நாடுகளில் இந்தத் திட்டம் அமுல்படுத்தப்பட உள்ளது. சீன ஜனாதிபதி ஜி ஜிங்பிங்கின் கனவு திட்டம் இதுவென்று இந்திய தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.   நன்றி தினகரன் 
ஜெர்மனியில் இருந்து 9,500 அமெரிக்க துருப்புகள் வாபஸ்
ஜெர்மனி முகாம்களில் இருந்து 9,500 அமெரிக்க துருப்புகளை வாபஸ் பெறும் திட்டம் ஒன்றுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்திருப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் தலைமையகமான பெண்டகன் குறிப்பிட்டுள்ளது.
இந்த நடவடிக்கை மூலம் ஜெர்மனியில் நிலைகொண்டிருக்கும் அமெரிக்க துருப்புகளின் எண்ணிக்கை 35,500 இல் இருந்து 25,000 ஆக குறையவுள்ளது.
நோட்டோ அமைப்புக்கு ஜெர்மனி போதுமான பங்களிப்புச் செய்வதில்லை என்று டிரம்ப் முன்னதாக குற்றம்சாட்டி இருந்தார். எனினும் இந்த படைகள் எப்போது வாபஸ் பெறப்படும் என்ற விபரம் மற்றும் திகதியை பெண்டகன் பேச்சாளர் குறிப்பிடவில்லை.
எனினும் சில வீரர்கள் போலந்திற்கு நகர்த்தப்படுவார்கள் என்று டிரம்ப் கடந்த வாரம் கூறியிருந்தார்.
நோட்டோ அமைப்புக்கு அமெரிக்கா அதிகப்படியாக பங்களிப்புச் செய்வதாகவும் ஏனைய உறுப்பு நாடுகள் மேலும் செலவிட வேண்டும் என்றும் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். இதில் அவர் ஜெர்மனியை குறிப்பிட்டு குற்றம்சாட்டுகிறார்.
இரண்டாவது உலகப் போருக்கு பின்னரான ஒரு மரபாகவே ஐரோப்பாவில் அதிகபட்சமான அமெரிக்கத் துருப்புகள் ஜெர்மனியில் நிலைகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் சீன எல்லைக்கு ஆயுதம் தாங்கிய, அதிவேக படகுகளை அனுப்பும் இந்திய இராணுவம்
லடாக் பிரதேசத்தில் பதற்றம் தீவிரம்
கடந்த மே மாத தொடக்கத்தில் இருந்து இந்திய மற்றும் சீன வீரர்கள் இடையேயான கடுமையான மோதலின் காரணமாக இரு நாட்டு எல்லையிலுள்ள கிழக்கு லடாக்கின் பாங்கோங் திசோ ஏரி பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில் அந்த பகுதிக்கு ஆயுதங்களுடன் 12 புதிய அதிவேக இடைமறிப்பு படகுகளை அனுப்ப இந்திய பாதுகாப்பு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
கிழக்கு லடாக்கில் 13,900 அடி உயரத்தில் பாங்காங் திசோ ஏரி அமைந்துள்ளது. இங்கு ஏரியில் ரோந்து செல்வதற்கு இந்திய இராணுவத்திடம் 17 கியூ.ஆர்.டி படகுகள் உள்ளன.
ஆனால் தற்போது உள்ள சூழலில் அதைவிட சக்தி வாய்ந்த ரோந்து படகுகள் தேவைப்படுகின்றன. ஏனெனில் சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம், 928 பி ரோந்து படகுகளை ரோந்துக்காக பயன்படுத்தி வருகிறது.
இந்நிலையில் சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் ஆயுதங்களுடன் அதிவேக இடைமறிப்பு படகுகளை அனுப்பும் திட்டத்தை இந்தியா மேற்கொண்டுள்ளது. ஆனால் உண்மையில் இதை பாங்கோங் திசோ ஏரிக்கு கொண்டு செல்வது மிகப் பெரிய சவாலானது என்று இந்திய இராணுவத்தினர் கூறுகிறார்கள். ஏனெனில் புதிய படகுகள் அல்லது வேகமான இடைமறிப்பு படகுகளை அதிக உயரத்திற்கு கொண்டு செல்வது மிகவும் கடினமாக இருக்கும். சி -17 குளோப்மாஸ்டர் -3 விமானம் மூலம் படகுகளை கொண்டு செல்ல வேண்டும், பின்னர் அங்கிருந்து ஏரியை அடைய முன்னேறலாம். இது நேரம் எடுக்கும் என்று இராணுவத்தினர் கூறினர்.
134 கி.மீ நீளமுள்ள பாங்காங் ஏரி, மூன்றில் இரண்டு பங்கு திபெத்திலிருந்து இந்தியா வரை விரிவடைவதால் சீனாவால் கட்டுப்படுத்தப்படுகிறது, இது பல ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே எல்லை பிரச்சினை உள்ள பகுதியாகும். இந்தப் பகுதியில் ஆக்கிரமிப்பு செயல்களையும், அத்துமீறல்களையும் சீனா செய்து வருவதாக இந்தியா குற்றம் சுமத்துகிறது.
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்திய இராணுவம் கியூ.ஆர்.டி படகுகளைப் பெறுவதற்கு முன்பு வரை, அது காலாவதியான மெதுவாக நகரும் படகுகளைத்தான் வைத்து இருந்தது. இந்தப் படகுகள், இந்திய இராணுவத்தினருக்கு ரோந்து செல்ல மிகவும் கடினமாக இருந்தன. இதன் பின்னரே இந்திய ராணுவத்திற்கு கியூ.ஆர்.டி படகுகள் அனுப்பி வைக்கப்பட்டன.
இதனிடையே இந்த ஆண்டு மே 5-ம்,6ம் திகதிகளில் சீன இராணுவத்தினர் அதன் வடக்குக் கரையில் மோதினர். அதன் பின்னர் சீன இராணுவத்தினர் ஃபிங்கர் -4 முதல் ஃபிங்கர் -8 வரையிலான 8 கி.மீ நீளத்தை சீன ஆக்கிரமித்து கொண்டதாக இந்தியா கூறுகிறது.   நன்றி தினகரன் 
141 கொரோனா தடுப்பு மருந்துகளுக்காக ஆய்வு
உலக நாடுகளில் கொரோனா வைரசுக்கு எதிராக 141 தடுப்பூசிகளைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருவதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனொம் கெப்ரியேசுஸ் கூறியுள்ளார்.
தடுப்பூசி ஆராய்ச்சியில் முன்னணியில் இருக்கும் சிலர் இன்னும் ஒரு சில மாதங்களில் அதில் வெற்றியடையக் கூடும். ஆனால் முழுமையான பாதுகாப்பிற்கு எந்த உத்தரவாதமும் இல்லை, என்றாலும் நாங்கள் நம்பிக்கையோடு இருக்கிறோம் என்றும் ‘தி வொஷிங்டன் போஸ்ட்’ நாளிதழுக்காக அவர் எழுதிய ஒரு கட்டுரையில் கூறியுள்ளார்.
இதற்கிடையே, உலக அளவில் கடந்த வாரத்தில் ஒவ்வொரு நாளும் 160,000 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக உலக சுகாதார அமைப்பின் புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று பரவலின் வேகம் அதிகரித்துள்ளதாக அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
கொவிட்-19 நோய்த் தொற்றை ஒரு உலகளாவிய வைரஸ் தொற்றாக உலக சுகாதார அமைப்பு கடந்த மார்ச் 11ஆம் திகதி அறிவித்தது. தற்போது உலகெங்கும் நோய்த் தொற்றுக்கு உள்ளானோர் எண்ணிக்கை 11 மில்லியனை நெருங்கியுள்ளது. அரை மில்லியனுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.   நன்றி தினகரன் 


மியன்மார் சுரங்க விபத்தில் 113 பேர் பலி
வடக்கு மியன்மாரில் பச்சை மாணிக்கக் கல் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற நிலச்சரிவை அடுத்து குறைந்தது 113 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
கச்சின் பிராந்தியத்தின் ஹ்பகண்ட் பகுதியில் இருக்கும் இந்தத் தளத்தில் காணாமல்போயுள்ள பலரையும் தேடி மீட்புப் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
கனமலையை அடுத்து ஏற்பட்ட சேற்று அலையில் அங்கு கற்களைச் சேகரித்துக் கொண்டிருந்தவர்கள் புதையுண்டனர் என்று தீயணைப்புச் சேவை குறிப்பிட்டுள்ளது.
கழிவுக் குவியல் சரிந்ததை அடுத்து மக்கள் கூச்சலிட்டுக் கொண்டு ஓடியதாக 38 வயதான சுரங்கத் தொழிலாளி மவுங் கயிங் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார். “ஒரு நிமிடத்திற்குள் அவர்கள் கீழே சென்று மாயமானார்கள். எனது மனது வெறுமையை உணர்ந்தது. சேற்றுக்குள் சிக்கிய மக்கள் உதவி கேட்டு கத்தியபோதும் ஒருவராலும் உதவ முடியவில்லை” என்றும் அவர் குறிப்பிட்டார்.
உலகின் மிகப்பெரிய பச்சை மாணிக்கக் கல் வளம் கொண்ட நாடாக மியன்மார் இருந்தபோதும் அந்த சுரங்கங்களில் அடிக்கடி விபத்துச் சம்பவங்கள் பதிவாகின்றன. இவ்வாறான சுரங்க விபத்துகளில் கடந்த ஆண்டில் மாத்திரம் நூறுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
மியன்மாரில் 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுரங்க விபத்தில் 116 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. சேற்று மண் சரிவினால் வெள்ள நீர் நிரம்பிய பள்ளத்தாக்கு ஒன்றில் மிட்புக் குழுவினர் தேடுதலில் ஈடுபடும் காட்சிகளைக் கொண்ட புகைப்படங்கள் பேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளன. சுரங்க தளத்தில் அப்புறப்படுத்தப்படும் மண் குவியல்கள் மற்றும் லொர்ரிகளைச் சூழ பச்சை மாணிக்கக் கற்களைத் தேடுவதற்காக நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்று சேர்கின்றனர்.
மியன்மாரின் பச்சை மாணிக்கக் கல் வர்த்தகம் ஆண்டுக்கு 30 பில்லியன் டொலர் பெறுமதியானது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.   நன்றி தினகரன் அமெரிக்காவில் நாளாந்த வைரஸ் தொற்று சாதனை அளவுக்கு உச்சம்அமெரிக்காவில் கடந்த வியாழக்கிழமை சுமார் 55,000 கொரோனா தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. உலகில் எந்த ஒரு நாட்டிலும் ஒருநாளில் பதிவான அதிகூடியவைரஸ் தொற்று சம்பவங்களாக உள்ளது.
இதன்படி அமெரிக்காவில் வியாழக்கிழமை பதிவான 54,879 வைரஸ் தொற்று சம்பவங்களானது, இதற்கு முன்னர் பிரேசிலில் ஜூன் 19 ஆம் திகதி பதிவான 54,771 சம்பவங்கள் என்ற சாதனை எண்ணிக்கையை விஞ்சுவதாக உள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் நாளொன்றுக்கு சுமார் 22,000 புதிய சம்பவங்கள் பதிவான நிலையில் தற்போது தொடர்ச்சியாக ஏழு நாட்களாக 40,000 க்கும் அதிகமான புதிய தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றனர்.
அமெரிக்காவின் 50 மாநிலங்களுள் 37 மாநிலங்களில் நோய்த் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ரோய்ட்டர் செய்தி நிறுவனத்தின் தரவுகள் குறிப்பிட்டுள்ளன.
வேறு எந்த மாநிலத்தை விடவும் புளோரிடாவில் கடந்த வெள்ளிக்கிழமை 10,000க்கும் அதிகமான நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகி உள்ளன.
அமெரிக்காவில் நாளொன்றில் பதிவாகும் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 100,000 ஐ எட்டக் கூடும் என்று அந்நாட்டு ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்க்கான தேசிய நிறுவனத்தின் தலைவர் அன்தோனி பவுச்சி இரண்டு தினங்களுக்கு முன் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 


No comments: