'தேர்தல் கால அதிர்வெடிகள்’ -பேராசிரியர் ஸ்ரீ.பிரசாந்தன்-
தவிக்காலத்தில் மக்களுக்கு நல்லதைச் செய்யாமல், அதனால் அவர்களது ஞாபகத்திலிருந்து கரைந்து போனவர்கள், மீளவும் ஒரு தேர்தல் வந்தால்... பாவம்! என்ன செய்வார்கள் 

தம்மை குறுகிய காலத்தில் பிரபலமாக்கி, எல்லாரையும் திரும்பிப் பார்க்கச் செய்வதற்கு அதிர்ச்சியூட்டும் செய்திகளை வெளியிடுவதைத் தவிர, அவர்களுக்கு என்ன வழியிருக்கிறது? 
அவை செய்திகளாகவே இருக்க வேண்டுமென்பதில்லை… அவற்றில் உண்மை இருக்க வேண்டுமெனும் அவசியம் கூட இல்லை.
பொய்யாய்… புளுகாய்… சோடிப்பாய்... எதுவாயினும் என்ன, அவர்களது இப்போதைய தேவை, மக்களைத் திரும்பிப் பார்க்கச் செய்தல்தான்.
மக்களின் ஞாபகத் திரையில் மீளவும் தம்மை ஸ்தாபிதம் செய்தால் அதுவொன்றே அவர்களுக்குப் போதுமானது. 
அப்படி நினைவுக்குக் கொண்டு வருவதால், தன்னைப் பற்றிய எதிர்ப்புணர்ச்சிதான் பெருகும் என எவரும் எண்ணுவதேயில்லை. பழசெல்லாம் மறந்து, எதையாவது எதிர்பார்க்கும் வாக்காளப் பலவீனத்தை, அந்த அவர்கள் நன்கறிவார்கள். 
கவனிப்புகளுக்குப் பின்நிற்காத கரங்கள் அவர்களுக்கு...
பிறகென்ன... அவர்களின் தேவை, வாய் வெடிகள் மட்டுமே. 
அந்த வெடிச் சத்தங்களைக் கேட்டு, வாக்காள முகங்கள் தங்களைத் திரும்பிப் பார்த்தால்... அவர்களுக்கு அதுபோதும்.அப்படித்தான் ஆயிற்று, தென்னிலங்கையில் முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சரின் பேட்டி.
இலங்கைக் கிறிகெட் அணி, 2011இல் உலகக் கோப்பையை வெல்லாது விட்டதற்குக் காரணம், ஆட்ட நிர்ணய சதி - சூதாட்டம் என்றொரு வெடி கொளுத்திப் போட்டார் அவர்.
இந்த நாட்டில் இனத் துவேசம் இல்லை, மனிதாபிமானம் இருக்கிறது என்பதை நம்பச் செய்யும் நல்ல சில வீரர்கள் விளையாடிய முன்னாள் அணி அது. 
அப்போது விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தவர் தானேதான் என்பதையும் மறந்து, அதற்கான பொறுப்புக் கூறல் தனதென்பதையும் மறந்து… பத்தாண்டு கடந்து அவர் வைத்த வெடிக்குக் காரணம்... எப்படியேனும்  செய்திகளில் தன் பெயர் அடிபட வேண்டும் என்பதாகத்தான் இருக்க முடியும்.
என்ன நியாயம் என்பதே புரியவில்லை? தான் பொறுப்பாகவிருந்த துறையில், அநியாயம் (?) நடந்திருக்கிறது என்கிறார். அவர் சொன்னதன்படி அங்ஙனம் நடந்திருந்தால் அதற்கு அப்போது ஒரு சின்ன விசாரணையைக்கூட கோராத அவருக்கு, பத்தாண்டுகள் கழியும் நிலையில், திடீரென, பொதுவெளியில்  எங்கிருந்தோ ஒரு ஞானம் வந்து தொலைக்கிறது.  
உடனேயே, மகேல ஜயவர்த்தன, குமார் சங்ககார போன்ற வீரர்கள், 'இப்படிச் சொல்வதற்கு என்ன ஆதாரம்? அதனையும் வெளியிடுங்கள்' என்று வலைத் தளங்களில் கேட்டார்கள். 
சூதாட்டம் நடந்தது என்பதை, ஊடகங்களில், பொதுமக்கள் முன்பாகச் சொல்லத் தெரிந்தவருக்கு, ஆதாரங்களை அந்த மக்கள் முன் பகிரங்கமாக்கத் தெரியவில்லை, தெரியவில்லை என்பதற்கு முன் அவருக்கு அது அவசியமாகவில்லை அல்லது துணிவில்லை. 
அவர் எதை எதிர்பார்த்தாரோ அது எதிர்பார்த்ததுபோல நடந்தது. எல்லா ஊடகங்களிலும் அவர் தலைப்புச் செய்தியானார். பத்திரிகைகளின் முன்பக்கங்களில் சிரித்தபடி உலா வந்தார். அவர் நோக்கம் பாதி நிறைவேறியது.
மீதி நிறைவேற முன், பாவம்... கிழக்கில் வெடித்த வெடியின் அதிர்வில் தலைப்புச் செய்திகள் இவரை மறந்து விட்டன.
அங்கு, புலிகளைப் பின்பு காட்டிக் கொடுத்த முன்னாள் அம்'மான்', தான் தமிழ் வாக்குகளைப் பெறுவதற்காகச் சொன்ன செய்தியில், அவரை அறியாமலேயே, வெடியின் திரி பற்றிவிட்டது. தான் கிட்டத்தட்ட மூவாயிரம் இராணுவத்தினரை ஒரே இரவில் கொன்றதாக – அவர் ஆற்றிய வீரப்பிரதாபம், மொழிபெயர்க்கப்பட்டு சிங்கள ஊடகங்களை வந்து சேரும் என அவர் எண்ணியிருக்கவில்லை.
எப்படியோ, அவரும் செய்தியின் நாயகராகி விட்டார். அவரின் வெடியில், பாவம் விளையாட்டு அமைச்சரின் வெடி அடங்கிப் போய்விட்டது.
தெற்கிலும் கிழக்கிலும் வெடி கேட்டால் வடக்கிலும் தம் பங்கிற்கு யாரேனும் வெடி கொளுத்திப் போட வேண்டாமா?
வெடிச் சத்தங்கள் கேட்டுக் கேட்டுப் பழகிய பிரதேசம் அல்லவா? அங்கே வெடியில்லாமல் இருப்பது நல்லதல்ல, என்று நினைந்து, திரியில் தீ பற்ற வைத்தது இம்முறை ஒரு மகளிர் கூட்டம். அதற்குத் தலைமை தாங்கினார், தழிழரசுக் கட்சியின் மகளிர் அணியின் யாழ்க் கிளையின் செயலாளர்.'பெண் தலைமைக் குடும்பங்களுக்கு வழங்கவென, கனடாவிலிருந்து வந்த 212 மில்லியன் ரூபா நிதி எங்கே? சுருட்டியது யார்?' என்பது அவ்வணியினர் தொடுத்த கேள்விகள். அக்கேள்விகள் யாரை நோக்கி? தங்கள் கட்சியை நோக்கியேதான்.
முன்னைய வெடிகளைக் கொளுத்தியவர்கள் இம்முறைத் தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள். தமக்கு 'இலவச' விளம்பரம் கிடைக்க அவர்கள் அப்படிச் செய்தார்கள் என்று சமாதானம் சொல்ல ஒரு வாய்ப்பிருக்கிறது.
ஆனால், இந்த நிதி மோசடி வெடி வைத்த மகளிர்களோ, இம்முறை வேட்பாளர்கள் அல்லர். அவர்கள் தம் கட்சி வேட்பாளர்களுக்கு எதிராகவே தாமே வெடி வைத்திருக்கிறார்கள்.
இம்முறை வேட்பாளராக நிற்கும் வாய்ப்புத் தமக்குக் கிடைக்குமென அவர்கள் நினைந்து ஏமாந்தார்களா?, அல்லது ஏதேனும் தனிப் பகையா? என்று தெரியவில்லை. அல்லது, தமிழரசுக் கட்சி சார்ந்த ஒரு சிலர் உண்மையில் நிதியை ஏப்பம் இட்டார்களா? என்றும் எமக்குத் தெரியாது.
ஆனால், என் அக்கறை எல்லாம் சொல்லப்படும் செய்திக்குப் பின்னாலுள்ள உண்மை பற்றியதே.ஒரு ஊடக சந்திப்பில் எந்தவித, ஆவணத்தையோ, ஆதாரத்தையோ சமர்ப்பிக்காமல்… பார்க்கும் மக்களை ஏதோ, 'பால்குடிகள்' என்னும் நினைப்பில் அந்தப் பெண்மணிகள் கொளுத்திய வெடி, ஒருசில ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பற்றி எரிந்தது. அவர்கள் கட்சி வேட்பாளர்கள் சிலரையே அது குறி வைத்தது.
ஏன் இத்தனை காலமும் இந்தப் பெண்மணிகள் இதை வெளிப்படுத்தவில்லை? தேர்தல் நேரத்தில் சொல்வதன் நோக்கம் என்ன? தமது கட்சியையே பலவீனப்படுத்தும் அவர்களின் ஊடக சந்திப்பின் பின்னால் இருப்பவர்கள் யார்? – எனக் கேள்விகள் விரிகின்றன. என் கவனம், இந்தக் கட்சி அரசியல் சார்ந்தது அல்ல. 
அவர்களது குற்றச்சாட்டுக்கு வலுச் சேர்க்கும் ஏதேனும் கணக்கு வழக்கு ஆதாரம் வெளிப்படுத்தப்படும் என இச்செய்தி வந்த நாள் முதலாக, நானும் அனைத்து ஊடகங்களையும் துருவினேன். ஊகூம்... ஒன்றையும் காணோம்.
வந்த செய்தியோ வேறு, 'இவ்வாறு சொன்னவர்கள் தமிழரசுக் கட்சியிலிருந்து வெளியேற்றப் பட்டார்கள்' என்பதுதான் அச்செய்தி. அதற்குக் கட்சித் தலைமை சொல்லியுள்ள காரணம், 'இம்முறைப்பாட்டைச் சொன்னவர்கள் இதுவரை தம் கருத்தை நியாயப்படுத்தும் எந்தவொரு ஆவணத்தையோ, ஆதாரத்தையோ தரவில்லை' என்பதாய் இருக்கிறது.
இதே நேரத்தில் தலைமைக்குத் தெரியாமல், கூட்டங் கூட்டி தம் கட்சியையே வசை பாடும் தொண்டர் இருக்கின்றமை,  நிதியைச் சரியாக முகாமை செய்யத் தெரியாமை, கணக்குகளைப் பேணாமை, குற்றச்சாட்டு வந்த அடுத்தநாளே 'பாருங்கள் இது கட்சியின் கணக்கு' எனத் துணிந்து கணக்காய்வு அறிக்கையைச் சமர்ப்பிக்காமை முதலியனவாகத் தமிழரசுக் கட்சிமீது வருத்தங் கொள்ளத்தக்க காரணங்கள் பல இருப்பதையும் கவனிக்காமல் விட முடியாது.
எனினும் இம்முறை என்னிடம் பெருக்கெடுக்கும் வருத்தமெல்லாம், இந்த ஊடக தருமம் குறித்ததுதான்.இந்தப் பிரசைகள் தம் பிரபலத்துக்காக, கொளுத்தும் வெடிகளை, பிரசுரிக்கும் அல்லது வெளிப்படுத்தும் ஊடகங்கள், அதைச் செய்வதற்கு முன்பாக, அதன் உண்மையை ஆராயவேண்டுமென நினைப்பதில்லையா? 
இவ்விடயத்தில், ஒருபுறம் மகளிர் சிலர் நிதி மோசடி நடந்துள்ளது என்கின்றனர். மறுபுறம் தலைவரோ நடக்கவில்லை என்கிறார்.
இந்த இரண்டுமே உண்மையாக இருக்க முடியாதல்லவா? உண்மைக்கு எம்மைப் போல் மாறுவேடமிடத் தெரியாது. எனவே, நிதி மோசடி நடந்தது அல்லது நடக்கவில்லை என்ற இரண்டில் ஒன்றுதானே உண்மையாக இருக்க முடியும்? அதை வெளிக்கொணர்வது யார் வேலை? ஊடகங்களின் திருப்பணி அல்லவா? அது.குற்றஞ் சாட்டியவர்களை அணுகி, 'இவ்வாறு சொல்கிறீர்களே, அதற்கு என்ன ஆதாரம்? அவற்றையும் சேர்த்து வெளிப்படுத்துங்கள்' என, ஏன் ஊடகங்கள் கேட்கவில்லை? அவ்வாறு கேட்பது அவர்களது கடமையல்லவா? 
சொல்பவர்கள், எவரைப் பற்றியும், எதைப் பற்றியும் எவ்வாறும் பேசுவார்கள். 
ஆனால், பிரசுரிப்பவர்களுக்கென்று ஒரு தர்மம் இல்லையா? 'இன்றைய தினத்துக்கு ஒரு 'சுடு செய்தி' நாளைக்கு வேறொன்று என, வியாபாரத்தை பார்ப்பது மட்டுமா, ஊடக தர்மம்? 
ஊடகக் கற்கைகளுக்கென்று இன்று 'புதுப்புது' மேலைத்தேசப் பாடப்புத்தகங்களைத் தாடனம் பண்ணி வைத்திருக்கும் அனைவருக்கும்,  நான் பழமையான – மிகப் பழமையான – திருக்குறளிலிருந்து இரண்டு குறள்கள் சொல்ல விரும்புவேன்.'எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு' 'எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு'

நன்றி - உகரம் |இந்தவாரச் சிந்தனை (01.07.20) | பேராசிரியர் ஸ்ரீ. பிரசாந்தன் www.uharam.comNo comments: