புகலிடத்தமிழ் இலக்கியத்தில் அவுஸ்திரேலியாவின் வகிபாகம் - அங்கம் 02 முருகபூபதி கையெழுத்துப் பிரதி முதல் கணினி இதழ் வரையில்


அவுஸ்திரேலியாவில் தமிழ் இதழ்களின் வருகையை கையெழுத்து ஏடுகளிலிருந்துதான் அவதானித்தல் வேண்டும். 1988 – 1989 காலப்பகுதியில் சிட்னியிலிருந்து எழுத்தாளர் மாத்தளைசோமு தமிழ்க்குரல் என்ற கையெழுத்துப்பிரதியை ஆரம்பித்தார். பின்னர் அதே பெயரில் ஒரு பதிப்பகமும் நடத்தி நூல்களை தமிழகத்தில் அச்சிட்டு பெற்றார்.
அதே காலப்பகுதியில்  மெல்பனில் சில நண்பர்கள் இணைந்து அரசியல் – சமூக விமர்சன ஏடாக மக்கள் குரல், செய்திச்சுடர் முதலான கையெழுத்து  ஏடுகளை வெளிக்கொணர்ந்தனர்.
கணினியில் தமிழ்  உருபுகள் அறிமுகமானதும், கையெழுத்து இதழ்களின் அவசியம் அற்றுப்போனது.
விமல்.அரவிந்தனின் மரபு, யாழ். பாஸ்கரின் அக்கினிக்குஞ்சு, பொன். சத்திய நாதனின் தமிழ் உலகம் - TAMIL WORLD, தமிழர் ஒன்றியத்தின் அவுஸ்திரேலிய முரசு,  தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மாணவர் அமைப்பின் உணர்வு, மற்றும் கதிர், பிரவாகம் , முனைவர் சந்திரிக்கா சுப்பிரமணியத்தின்  தமிழ் அவுஸ்திரேலியன், மருத்துவர்  கேதீஸ்வரனின் கலப்பை,  நடேசனின் உதயம் ,  தமிழர் ஒருங்கிணப்புக்குழுவின் ஈழமுரசு,  அறவேந்தனின் மெல்லினம்    முதலான இதழ்களும் பாரதி சிறுவர் இதழ், இன்பத்தமிழ், தினமுரசு முதலான இதழ்களும்  வந்தன. காலப்போக்கில் நின்றன.
தற்போது தொடர்ந்தும் சிட்னியிலிருந்து மாத்தளை சோமு ஆசிரியராகவிருக்கும்  தமிழோசையும்   மெல்பன் கேசி  தமிழ் மன்றத்தின் இளவேனில் சிறுவர் இலக்கிய இதழும் வெளிவந்துகொண்டிருக்கின்றன.
கடந்த இரண்டு வருடகாலமாக தெய்வீகன் – ஜெயபிரசாந்த் இணைந்து வெளியிடும் எதிரொலி மாத இதழ் இதுவரையில் தங்கு தடையேதுமின்றி வெளிவருகின்றது.
கடல்சூழ் கண்டத்தில் தமிழ் வளர்ப்போம், நாம் கலை வளர்ப்போம், எங்கள் மொழி வளர்ப்போம், பற்பல திசையிலும் சென்றவர்கோடி, எம்மிடை வாழ்வோர் சிந்தனை நாடி, விக்ரோரியாவில் உதித்தது ஒன்றியம், விடியலை நோக்கி தமிழ் ஒளிபரப்பும்  என்ற எழுச்சிக்கீதத்துடன் தோன்றிய தமிழர் ஒன்றியத்தின் மாத இதழ் அவுஸ்திரேலிய முரசு.  இதன் ஆசிரியராக இருந்தவர் ( அமரர் ) அருண். விஜயராணி.

“  சுழலும் சக்கரத்தின்  சுழலாத புள்ளியே மரபு  “  என்ற  வாழ்க்கைத் தத்துவத்தை முன்வைத்து வெளியான விமல் அரவிந்தன் வெளியிட்ட மரபு மாத இதழும் காலப்போக்கில் நின்றது. இவ்விதழ் 1990 ஆம் ஆண்டு செப்டெம்பர் முதல் வெளியானது.  இதில்தான் எஸ்.பொ.வின் புகழ்பெற்ற நனவிடை தோய்தல்  தொடரும் வெளியானது.
புலம்பெயர்ந்த ஈழத்தமிழரின் சர்வதேச கலாசார இலக்கிய மாசிகை என்ற அறிமுகத்துடன் மூத்த எழுத்தாளர் எஸ்.பொ. அவர்களை பிரதம ஆலோசகராகவும், யாழ். எஸ். பாஸ்கரை ஆசிரியராகவும், டென்மார்க் ரி. தர்மகுலசிங்கம், தமிழ்நாடு இளம்பிறை எம். ஏ . ரஹ்மான் ஆகியோரை துணை ஆசிரியர்களாகவும்  கொண்டு தமிழ்நாட்டில் அச்சாகி  அவுஸ்திரேலியா பிரியா பப்ளிகேஷன் சார்பாக 1991 பெப்ரவரியில்   அக்கினிக்குஞ்சு  வெளியானது.
பின்னாளில் இவ்விதழும் நின்றது. 
 “ இங்கு வாழும்   தமிழ் மாணவர் உள்ளங்களோடு உணர்வு உறவாட வரவிருப்பது, தமிழ்த் தாகத்தில் தவித்திருக்கும் எமக்கு ஒரு தண்ணீர் மழை கண்ட நிறைவு  “ என்று தனது இதழின் நோக்கத்தை வெளிப்படுத்திய உணர்வும் நாளடைவில்  நின்றது.
அவுஸ்திரேலியாவிலிருந்து வெளிவரும் தமிழ் சமூகத்துக்கான முதலாவது செய்தித்தாள் என்ற பிரகடனத்துடன் 1994 மே மாதம் முதல் வெளியான இதழ் தமிழ் உலகம்.  சில பக்கங்கள் தமிழிலும் மேலும் சில பக்கங்கள் ஆங்கிலத்திலும் பதிவாகின. ஆங்கிலப்பகுதி TAMIL WORLD எனப்பெயரிடப்பட்டிருந்தது.
தமிழ்ப்பகுதிக்கு எழுத்தாளர் பாடும் மீன் சு. ஶ்ரீகந்தராசாவும், ஆங்கிலப்பகுதிக்கு திரு. சீவநாயகமும் பொறுப்பாசிரியர்களாக இருந்தனர்.  இதனை விக்ரோரியா LIMAT MULTIMEDIA PUBLICATION சார்பில் மருத்துவர் பொன். சத்தியநாதன் வெளியிட்டார்.  தமிழ் உலகம் - TAMIL WORLD 1994 மே மாதம் முதல் வெளியாகி சில மாதங்களின் பின்னர் நின்றுவிட்டது.
அவுஸ்திரேலியா நியூசவுத்வேல்ஸ் மாநிலத்திலிருந்து மருத்துவர் கேதீஸ்வரன் நடத்திய கலப்பை இதழ் 1994 ஆம் ஆண்டில் ஜூலை மாதம் முதல் வெளிவரத்தொடங்கி சில வருடங்கள் தொடர்ந்து வாசகரை சென்றடைந்தது.
 “மனித மனதை உழுகின்ற கலப்பை உலகத்தமிழர்கள் உணர்வை உயர்த்தி நிற்கும்  “ என்ற தாரக மந்திரத்தையே கலப்பை உச்சரித்தது.
இவற்றையடுத்து, TAMIL NEWS PTY LTD  என்ற நிறுவனத்தை தொடக்கிய எழுத்தாளரும் விலங்கு மருத்துவருமான நடேசன் உதயம்  ( தமிழ் – ஆங்கில ) UDAYAM இருமொழிப் பத்திரிகையை 1997 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் முதல் வெளியிட்டார். இதற்கும் ஒரு ஆசிரியர் குழு இயங்கியது. இவ்விதழில் தமிழக எழுத்தாளர்கள் ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், சாருநிவேதிதா, பாவண்ணன் முதலானோரும் எழுதியுள்ளனர். 2009 இறுதிவரையில் உதயம் வெளியானது.
அவுஸ்திரேலியா தமிழ்  இதழ்களைப்பற்றிய விரிவான  ஆய்வுக்கட்டுரையை  எனது இலக்கிய மடல் நூலில் (2000)  பதிவுசெய்துள்ளேன்.
முனைவர் சந்திரிக்கா சுப்பிரமணியத்தின்  தமிழ்  - அவுஸ்திரேலியன்  -  பல்சுவை கதம்ப ஏடாகவே சிறிது காலம் வெளியானது.  அரசியல், ஆன்மீகம், கலை, இலக்கியம் , சினிமா, துணுக்குகள், நேர்காணல் முதலான பல்வேறு அம்சங்களும் இடம்பெற்ற ஜனரஞ்சக இதழாகவே வெளியாகி நின்றுவிட்டது.
சிட்னியிலிருந்து வெளியாகும் தமிழ்முரசு இணைய இதழ் பத்தாண்டுகளை நிறைவுசெய்துள்ளது.  முற்றிலும் கலை – இலக்கிய – சமூக இதழாக தங்கு தடையின்றி வெளிவருகிறது.
இதன் ஆசிரியர்குழுவில் கவிஞர் செல்லையா பாஸ்கரன், கருணாசலதேவா, மதுரா மகாதேவா ஆகியோர் அர்ப்பணிப்புடன் இயங்குகின்றனர். ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை   காலையில் இந்தத்  தமிழ்முரசு இணைய இதழில் வாசகர்கள் கண்விழிக்கிறார்கள்.
மூத்த படைப்பாளி எஸ். பொன்னுத்துரையை ஸ்தாபக ஆசிரியராக்கித்  தொடங்கப்பட்ட  அச்சில் வெளியான  இதழ் அக்கினிக்குஞ்சு , காலப்போக்கில்  நின்றுவிட்டாலும், தற்போது இணைய இதழாக வெளிவருகிறது.   நாளாந்தம் புதிய புதிய  இலங்கை, இந்திய, உலகச் செய்திகளையும் கதைகள், கவிதைகள், விமர்சனங்களை  பதிவேற்றி வருகிறது. வருடாந்தம் நிறைவு விழாவும் நடத்தி, வாழ்நாள் சாதனையாளர்களாக கலை, இலக்கியவாதிகளை இனம் கண்டு விருது வழங்கி பாராட்டுகின்றது. இதன் ஆசிரியர் யாழ். பாஸ்கர்.
கன்பரா மாநிலத்தின் தமிழ் மூத்த பிரஜைகள்  அமைப்பினரின் காவோலை மாத இதழும் வெளிவருகிறது. இதில் மூத்த தலைமுறையினரின் ஆக்கங்கள் இடம்பெறுகின்றன.
எழுதுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து  அச்சு ஊடக இதழ்களின் எண்ணிக்கையில் ஏன் சரிவு ஏற்பட்டது ? என்பதை ஆராயப்புகும்பொழுது சில உண்மைகள் தெளிவாகின்றன.
 அவுஸ்திரேலியாவில் தமிழர் வாழும் மாநிலங்கள் தோறும் வானொலி ஊடகங்கள் இயங்குகின்றன. இவற்றினூடாகவும் இலக்கியம் பேசப்படுகிறது. 24 மணி நேரமும் ஒலிக்கும்  இணைய வானொலிகளும் இங்கு  சமூகப்பணி தொடர்வதனால், பல எழுத்தாளர்கள் வானலைகளில் மிதக்கின்றார்கள்.
  சிலர், இதுவரையில்  தாம் எழுதியிருப்பவற்றை நூலாக்கிக்கொண்டிருக்கிறார்கள்.  (இங்கே இலக்கியத்துறையில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்களைப்பற்றிய எம்மவர் என்ற நுலை 2003 ஆம் ஆண்டு வெளியிட்டிருக்கிறேன்.
 சிலர், இலங்கை, தமிழக இதழ்களுக்கும் இணைய இதழ்களுக்கும் தொடர்ந்தும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

( தொடரும் )

No comments: