அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் – பகுதி 21 – இடக்கை - சரவண பிரபு ராமமூர்த்தி


இடக்கை - தோற்கருவி
இடக்கை ஒரு தோற் கருவி ஆகும். இது பேரிகை, படகம் , உடுக்கை,
மத்தளம் முதலிய தாள இசைப் பறைகளுள்  ஒன்று. இதன் நடுப்பாகம் சுருங்கி இருக்கும். இதனை தோளில் தொங்க விட்டுக் கொண்டு இடது கையினால் நடுவில் உள்ள வார்க் கட்டுக்களை அழுத்திப் பல்வகை ஓசை அளவு வெளிப்பட முழக்கப்படுவது. ஒரு குச்சி கொண்டு வலப்பக்கத்தில் அடித்து வாசிப்பர். குச்சியின் நுனியில் சற்று வளைந்து இருப்பதால் இக்குச்சி குனில் என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு முகப் பறையாகும் - அதாவது ஒரு பக்கத்தில் மட்டும் வாசிக்கப்படுவது.

இடது கையினால் கருவியின் நடுவில் உள்ள வார்க்கட்டுக்களை
அழுத்திக்கொண்டு ஒசை வகைகள் எழுப்பப்படுவதினால் இடக்கை எனப் பெயர் பெற்றது. இடக்கை வேறு பல பெயர்களை உடையது என்று அடியார்க்கு நல்லார் தம் சிலப்பதிகார உரையில் குறித்துள்ளார். ஆவஞ்சி எனினும், குடுக்கை எனினும் இடக்கை எனினும், ஒக்கும் என்றும் குறித்துள்ளார். இதற்கு ஆவினுடைய வஞ்சித் தோலை பொருத்தி செய்வதால் ஆவஞ்சி எனப் பெயர் ஆயிற்று என்கிறார் அடியார்க்கு நல்லார். குடுக்கையாக குடையப்பெற்றதால் குடுக்கை என்று பெயராயிற்று என்கிறார். ஒரு சிலர் இடக்கையும் உடுக்கையும் ஒன்று என்பர். இது தவறான கருத்து என்கிறார் தமிழிசை அறிஞர் வீ.ப.க.சுந்தரம் அவர்கள். திருப்புகழ் ஆசிரியர் அருணகிரிநாதர் இடக்கையும் உடுக்கையும் யாவும் மொகுமொகென அதிர (திருப்புகழ் 1124 அகர முதலென -பொதுப்பாடல்கள்) என்று பாடுவதினால் இவை இரண்டும் இரு வேறு இசைக்கருவிகள் என்பது திண்ணம். கல்லாட உரையில் இடக்கைக்கு அவுகள் நீளம் 16 விரலும் முகம் 10 குண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இது துடி, திமிலை, மத்தளம் முதலிய கருவிகளுடன் சேர்த்து இசைக்கப்பட்டது என்றும் கல்லாட உரை கூறுகிறது. தமிழர் இசைக்கருவிகள் பல இந்தியாவில் பரவி வெவ்வேறு வடிவங்களில் புழக்கத்தில் இருந்தாலும், தமிழர் இனத்திற்கே உரிய ஒரு பிரத்யேக இசைக்கருவி இடக்கை எனலாம். இதிலிருந்து வெளிப்படும் ஓசை மற்ற இசைக்கருவியில் இருந்து வரும் இசையில் இருந்து மிகவும் மாறுபட்டது, பிரத்தியேகமானது. இத்தனை பெருமை வாய்ந்த இந்த இசைக்கருவியை தமிழர்களாகிய நாம் மறந்தது நமது துர்பாக்கியம்.


தற்காலத்தில் கேரளத்தில் மட்டுமே இடக்கை செய்யப்படுகிறது. குமுது, கருங்காலி, ரத்த சந்தனம், வரிக்கை பலா போன்ற மரங்களைப்
பயன்படுத்தி இடக்கையின் உடல் பகுதி தயாரிக்கப்படுகிறது. இக்கருவியின் நடுப்புறத்தைவிட, பக்கவாட்டில் உள்ள வளைய முகங்களின் விட்டம் அதிகமாக இருக்கும். பிரதான உடல் பகுதி குற்றி என்று அழைக்கப்படுகிறது, இது அரை அங்குல தடிமன் கொண்டது. அதன் மையத்தில் குறுகளாகவும், இறுதியில் அகலமாகவும் இருக்கும். 8 முதல் 8 ½ அங்குல விட்டம் கொண்ட இரண்டு வளையங்கள் பலா அல்லது மா மரத்தில் செய்யப்படுகின்றன. முன்பு, காட்டில் கிடைத்த கொடி வகைகளில் செய்யப்பட்டது. இந்த வளையங்களில் மாட்டு அடிவயிற்று சவ்வு (இரைப்பையில் எடுக்கப்படுவது) ஒட்டப்பட்டு, ஆறு துளைகள் இடப்பட்டு கயிற்றினால் கோர்க்கப்படுகிறது. இந்தத் தோல்தான் இடக்கையின் பிரத்யேக நாதத்திற்கு ஆதாரம். இந்தச் சவ்வை எடுப்பது அத்தனை சுலபம் அல்ல. கடும் துர்நாற்றத்தைச் சகித்து, பீய்த்து எடுக்க வேண்டும். இந்தத் தோல்கள் பெரும்பாலும் மாட்டிறைச்சி கடைகளில் இருந்து பெறப்படுகிறது. தற்கால கேரள இடக்கையில் நான்கு ஜீவகோல்கள் எனப்படும் கட்டைகள் இணைக்கப்பட்டுள்ளன. இவை புளிய மரம் அல்லது தேக்கில் செய்யப்படுகின்றன. இந்த ஜீவகோல்கள் ஒவ்வொன்றிற்கும் 16 கம்பளிப் பந்துகள் கட்டப்பட்டுள்ளன, ஆக 64. இவை ஆய கலைகள் 64ஐயும் குறிப்பதாகச் சொல்கிறார்கள். பழைய இடக்கைகளில் இவ்வாறு இருந்ததாகத் தெரியவில்லை. இடக்கை அடிக்கப் பயன்படுத்தப்படும் குச்சி பதிமுகம், சந்தனம், மூங்கில், புளிமரம் அல்லது சண்பக மரம் ஆகியவற்றால் செய்யப்படுகிறது.
 
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் இருந்து படியெடுக்கப்பட்டுள்ள சடையவர்மன் குலசேகர பாண்டியரின் 26ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு (தெ. க. தொ. 5: 415) இடக்கை பற்றிய தரவுகளை உள்ளடக்கியுள்ளது. தமிழ்நாட்டுக் கல்வெட்டுகளில் தோல், காற்று, நரம்பு, கஞ்சம், மிடறு என ஐவகை இசைக்கருவிகள் பற்றிய குறிப்புகள் உள்ளன. தோல் இசைக்கருவிகளாகப் பறை, மத்தளம், பேரிகை, உடுக்கை, திமிலை ஆகியவை கல்வெட்டுகளில் பரவலாக இடம்பெற்றிருந்தபோதும், தமிழ்நாட்டுக் கோயில்களிலுள்ள இடைக்கால ஆடற்சிற்பங்களில் நிறைய காட்சியளிக்கும் இடக்கையைப் பற்றி கல்வெட்டுகளில் மிக மிக அரிதாகவே தகவல்கள் இடம்பெறுகிறது. திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் கல்வெட்டு, இடக்கையைக் கோயிலில் நாளும் வாசிக்கப்பட்ட தோலிசைக் கருவியாகப் படம்பிடிப்பதுடன், அதை இசைத்த கலைஞரின் பெயரையும் பதிவு செய்திருப்பது மிக அரிய செய்தியாகும். நிலவும் கதிரவனும் உள்ளவரை நெல்வேலிக் கோயில் இறைவனுக்கு இடக்கை வாசிப்பதற்காகக் கோயில் இசைக்கலைஞர்களுள் ஒருவரான தேவன் அனவரததான இடக்கை மாராயனுக்கு நெல்வேலி சீயன் தேவனான கண்டியதேவர் 3 மா நிலம் அளித்தார். இந்நிலத்திற்கான கடமையை நிருணயித்து, கீழ்வெம்பநாட்டு சிவசரணசேகரப் பெருந்தெருவான ஸ்ரீவல்லவபுரத்து நகரத்தார் ஓலையளித்தனர். ஒரு மா நிலத்துக்கு 10 கலம் நெல்லெ30 கலம் நெல் கார் விளைச்சலின்போது அளிக்க முடிவாகியது. தற்காலத்தில் வீணை காயத்ரி என்று நாம் அழைப்பதை போன்று அக்காலத்தில் இசைக்கருவியை சேர்த்து அதில் தேர்ந்த கலைஞரை அழைக்கும் வழக்கம் இருந்ததை நாம் இதன் மூலம் அறிகின்றோம்.

திருச்சி அடுத்த சீனிவாசநல்லூர் அருள்மிகு குரங்குநார் கோவிலில் தோரசிற்பங்களில் இடக்கை இசைக்கும் ஆண் கலைஞரின் சிற்பமும் அவ்விசைக்கு ஆடும் நாட்டிய மங்கையின் சிற்பமும் செதுக்கப்பட்டுள்ளது. தஞ்சை சரஸ்வதி மஹாலில்  உள்ள சிற்பத்தில் இடக்கை இசைக்கும் கலைஞன் மற்றும் நடனமாடும் ஆடவனின் உருவமும் செதுக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் அலுவல் ரீதியாக இடக்கை இசைக்கப்படும் ஒரே திருத்தலம் திருவரங்கம் ரங்கநாதர் கோவில். தக்கை என்னும் பழமையான வாத்தியமும் இடக்கையும் இராப்பத்து பகல்பத்து திருவிழா நாட்களில் இசைக்கப்படுகிறது. மார்கழி மாத பகல் பத்து நாட்களில் நம்பெருமாள் அரையர் சேவை முடிந்து அர்ச்சுன மண்டபத்தில் இருந்து கிளி மண்டபம் வெளிப்படும் நேரத்தில் இடக்கை முக்கப்படுகிறது. இத்தலத்தில் பெருமாள் புறப்பாடு நடப்பதற்கு முன் இசைக்கப்படும் கருவிகள் – வீரவண்டி(தவண்டை) மற்றும் சேமங்கலம். பெருமாள் மேற்கு படி வந்தவுடன் இசைக்கப்படும் கருவிகள் – எக்காளம் மற்றும் திருசின்னம். பெருமாள் இரண்டாம் பிரகாரத்தில் உலா வரும்போது இசைக்கப்படும் வாத்தியம் – மத்தளம் மற்றும் இடக்கை/தக்கை. முன்பு தக்கை மட்டுமே இசைக்கப்பட்டு வந்ததாகவும் (தக்கையின் பழமை கருதி அதனை பாதுகாக்கும் பொருட்டு) கேரளத்தில் இருந்து புதிய இடக்கை தருவிக்கப்பட்டு இசைக்கப்படுகிறதாம். வைகுண்ட ஏகாதசி மற்றும் இராப்பத்தின் முக்கிய நாட்களில் மட்டும் தக்கை இசைக்கப்படுகிறது என்கிறார் இக்கோவில் இசைக் கலைஞர் திரு  ரஞ்சித்குமார் அவர்கள்.

கேரளாவில் மாரார், பொதுவாள் போன்ற இனத்தார் இடக்கை
வித்வான்களாக உள்ளனர். கேரளக் கோவில்களின் கருவறை அருகே பயன்படுத்தப்படும் ஒரு சில இசைக்கருவிகளில் ஒன்று இடக்கை. இக்கோவில்களில் இறைத் திருமேனிகள் முன்பு இனிமையான பாடல்களைப் பாடும் வழக்கம் உள்ளதுஇதை சோபனசங்கீதம் என்கிறார்கள். இப்பாடல்களுக்கு பக்க இசையாக இடக்கையும் சேமக்கலமும் அல்லது இடக்கை மட்டும் பயன்படுத்தப்படுகிறது.

சைவத் திருமுறைகளில் குறிப்பிடப்படும் இடக்கை இசைக்கருவி தமிழகத்தில் உள்ள பெரும்பாலான சிவன் கோவில்களில் இசைக்கப்படாதது பெரும் வருத்தம். சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலையர் திருக்கோயில் ஆண்டுப் பெருவிழாவில் இடக்கை இசைக்கப்படுவதாக கூறுகிறார் பறக்கையை சேர்ந்த திமிலை இசைக் கலைஞர் திரு சபரி கிரிஷ் அவர்கள். பறக்கை மதுசூதனப் பெருமாள் கோவிலிலும் இடக்கை பெருவிழாவின் பொழுது இசைக்கப்படுகிறதாம். அதேபோல்தான் திருப்புகழில் பல இடங்களில் இடக்கை பற்றிய குறிப்புகள் இருந்தும் எந்த முருகன் கோவிலிலும் இசைக்கப்படுவது இல்லை. இந்த நிலை மாறித் தமிழகம் எங்கும் மீண்டும் நமது தொல் தமிழர் இசைக்கருவியான இடக்கை ஒலிக்க வேண்டும் என்பது நம் அனைவரது எண்ணமாகும்.

பாடல்:
கத்திரிகை துத்திரிக றங்குதுடி தக்கையொ டிடக்கைபடகம்
எத்தனையு லப்பில்கரு வித்திரள லம்பஇமை யோர்கள்பரச
ஒத்தற மிதித்துநட மிட்டவொரு வர்க்கிடம தென்பருலகில்
மெய்த்தகைய பத்தரொடு சித்தர்கள் மிடைந்துகளும் வேதவனமே - திருமுறை 3 , சம்பந்தர்

கொக்கரை சச்சரி மத்தளி யொத்துவி
டக்கைமு ழக்கொலி யாலக்
கொக்கிற கக்கர மத்தம ணிக்கருள்
குத்தத ணிக்கும ரேசா திருப்புகழ், அருணகிரிநாதர்

திமித்தி மிந்திமி திமிதிமி யென்றிட்
டிடக்கை துந்துமி முரசு முழங்கச்
செருக்க ளந்தனில் நிருதர் தயங்கச் சிலபேய்கள் திருப்புகழ், அருணகிரிநாதர்

முதிர்திமிலை கரடிகையி டக்கைக்கொ டுந்துடியு
டுக்கைப்பெ ரும்பதலை
முழவுபல மொகுமொகென வொத்திக்கொ டும்பிரம
கத்திக்க ளும்பரவ திருப்புகழ், அருணகிரிநாதர்

காணொளி:
திருவரங்கம்:
கேரளம்:
- சரவ பிரபு ராமமூர்த்தி

நன்றி:
1.     தமிழிசைக் கலைக் களஞ்சியம் தொகுதி 1, முனைவர் வீ.ப.கா சுந்தரம் அவர்கள், பாரதிதாசன் பல்கலைக்கழகம்
2.     படங்கள் உதவி - திரு PRK ரஞ்சித்குமார் அவர்கள், திருவரங்கம் பெரிய கோவில் இசைக் கலைஞர் மற்றும் திரு சபரி கிரிஷ் அவர்கள், பறக்கை அருள்மிகு மதுசூதன பெருமாள் கோவில் இசைக்கலைஞர்






No comments: