கவிஞர் அம்பி எழுதும் சொல்லாத கதைகள் - அங்கம் 28 வாத்தியார் தொடக்கம் Professor வரையில்


எமது வடமாகாணத்தில்  ஒரு  காலத்தில்  திண்ணைப் பள்ளிக்கூடங்கள் இருந்தன.  அங்கு வரும் பிள்ளைகளுக்கு கற்பித்தவர்கள் குருவாகவும், மாணவர்கள் சீடர்களாகவும் அழைக்கப்பட்டனர்.

காலப்போக்கில் ஊருக்கு ஊர் பாடசாலைகள் தொடங்கியதும் குருவானவர்கள்  உபாத்தியாயர் என்றும் வாத்தியார் என்றும் அழைக்கப்படலாயினர்.  கிராமங்களில் பெண் ஆசிரியைகளை வாத்திச்சி என்றும் கூப்பிட்டார்கள். நான் ஆரம்ப பாடசாலையில் படித்த காலத்தில் சில ஊர்களில்  ஆசிரியை, அக்கா எனவும் அழைக்கப்படலானார்.

அமெரிக்க மிஷனரிமார் வரத்தொடங்கி, ஆங்கில பாடம் பிரதான இடத்தைப்பெற்றதும் சேர்,  மாஸ்டர், ரீச்சர், மிஸ் என்று மாணவர்கள் அழைக்கத்தொடங்கினர்.

பிள்ளைகள்,  வீட்டில் பெற்றோருக்கு அடுத்து, வெளியே அதிகநேரம் இருப்பது இந்த ஆசிரிய சமூகத்துடன்தான்.

பல்கலைக்கழகங்கள் அறிமுகமானதும்  அங்கு கற்பித்தவர்கள்  பட்டம் பெற்றவர்களாக கலாநிதிகளாவும்  பேராசிரியர்களாகவும்  மாறினார்கள்.   இலங்கையில் நாம் கலாநிதிகள் என்று அழைத்துக்கொண்டிருந்தோம். அயலில் தமிழ்நாட்டில் அவர்களை  டாக்டர்கள் என அழைத்தார்கள்.

இலங்கையில் மருத்துவம் கற்று மருத்துவமனைகளில் வேலைசெய்பவர்களை டொக்டர் என்றுதான் அழைக்கிறார்கள்.  ஆயுர்வேதம் படித்து வைத்தியம் செய்பவர்களை வைத்தியர் என்பார்கள். 

தற்காலத்தில் தமிழகத்தில் பேராசிரியர்களை முனைவர் என்று சொல்லிவருகிறார்கள்.


மக்கள் திலகம் எம். ஜி. ஆரை,  அவரது அபிமான தீவிர ரசிகர்கள் ஏன்தான் வாத்தியார்…?  என்று அழைத்தார்கள் என்பதுதான் எனக்குப்புரியவில்லை. அவருக்காக ஒரு திரைப்படத்தில் “  வாங்கய்யா வாத்தியார் ஐயா, வரவேற்க வந்தோம் ஐயா  “ வரவேற்று புகழாரம் சூட்டி பாடி ஆடுவதையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

அவரும் ஆரம்பத்தில் படிக்க வசதியில்லாமல்  மேடைநடிகராகி, திரைப்படத்துறையில் பிரவேசித்து, புரட்சி நடிகராகவும் மக்களின் மனம் கவர்ந்த மக்கள் திலகமாகவும் வாரி வாரி வழங்கி பொன்மனச்செம்மலாகவும் பேசப்பட்டார். போற்றப்பட்டார்.

அத்துடன் மக்கள் ஆதரவுடன் தமிழக முதல்வரும் ஆனார்.  அப்படி வளர்ந்த அவர் பல்கலைக்கழகத்தில் கற்காமலேயே டாக்டர் பட்டமும் பெற்றார்.

ஏதோ ஒரு பல்கலைக்கழகம்தான் அவருக்கு அந்தப்பட்டத்தையும் வழங்கியது. பின்னர் சுவரொட்டிகளில் மக்கள் திலகம், புரட்சி நடிகர், பொன்மனச்செல்வர் ,  டாக்டர் எம்.ஜி.ஆர் என்றுதான் எழுதினார்கள். பாருங்கள் அவருக்குத்தான்  எத்தனை பட்டங்கள்….?!

இலங்கை வானொலி வட்டாரத்திலும் அக்காலத்தில் ஒரு வாத்தியார் இருந்தார்.  அவர்தான் எனது நண்பர்  பல்கலைவேந்தர் சில்லையூர் செல்வராசன். இவருக்கு தான்தோன்றிக்கவிராயர் என்றும் ஒரு புனைபெயர் இருந்தது.

நான் இலங்கை வானொலி கலையகத்தில் நிகழ்ச்சிகள் தயாரிக்கச்சென்ற காலத்தில் வாத்தியார் சில்லையூரையும் காண்பதுண்டு.

நான் ஏன் இவ்வாறு பீடிகையோடு இந்த அங்கத்தினை எழுதுகின்றேன் தெரியுமா…?

என்னை இலக்கிய உலகில் கவிஞர் அம்பி என்பார்கள்.  கல்விப்பணியில் ஈடுபட்டதனால், அம்பி மாஸ்டர் என்பார்கள்.

ஆனால், எவரும் என்னை பேராசிரியர் என என்றைக்குமே அழைத்திருக்கமாட்டார்கள். ஆனால், ஒரே ஒருவர் மாத்திரம் அவ்வாறு அழைத்தார். எங்கே தெரியுமா..?

நான் தற்போது வாழும் அவுஸ்திரேலியா கண்டத்தில் விக்ரோரியா மாநிலத்தில் கல்வித்திணைக்களத்தில் பணிசெய்த ஆங்கிலேயரான ஒருவர்தான் என்னை Professor என்று அழைத்தார்.

இம்மாநிலத்தில் மெல்பன் மாநகரில் சுமார் அரைநூற்றாண்டுக்கு முன்னர் பாரதி பள்ளி என்ற பாடசாலையை தொடக்கிய எனது முன்னாள் மாணவரும் எழுத்தாளரும் சமூகப்பணியாளருமான மாவை நித்தியானந்தன்,  அதன் அங்குரார்ப்பண நிகழ்ச்சிக்கு என்னையும் அழைத்திருந்தார் என்று முன்னர் வெளியான அங்கம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளேன்.

   

இந்த நாட்டில் அரசாங்கப்பரீட்சையில் தமிழையும் ஒரு பாடமாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்ட காலப்பகுதியில் மாவை நித்தியானந்தன், விக்ரோரியா மாநிலத்தில் சமூகப்பாடசாலைகளை மேற்பார்வை செய்யும் கல்வி அதிகாரி திரு. ஸ்டெஃபானி ரொமனிவ் அவர்களிடம்  என்னை அழைத்துச்சென்றார்.

அவர்,  சமூகப்பாடசாலைகளை மேம்படுத்துவதில் அக்கறையோடு செயல்பட்டவர்.  அத்துடன் பாரதி பள்ளியின் வருடாந்த விழாக்களிலும் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றியிருப்பவர்.

அவர் என்னுடன் உரையாடியபொழுது, எனது அனுபவங்களையும் கேட்டறிந்தார்.  எனது நூல்கள்  கவிதை, மற்றும் ஆய்வு சம்பந்தமாகவும் இருந்தமையால் நானும் ஒரு பேராசிரியராகவும் இருத்தல்வேண்டும் எனக்கருதிவிட்டார்போலும்.

என்னை அவர் விளித்துப்பேசும்போது, அம்பி என அழைக்காமல் Professor என்றே அழைத்தார். அதன்பின்னர் மாவை நித்தியானந்தன் அவரை சந்திக்கச்சென்ற சந்தர்ப்பங்களிலும்  “ எங்கே Professor..? எப்படி இருக்கிறார்..?  “ என்று எனது நலமும் விசாரிப்பாராம்.

நான் இலங்கையிலிருந்து பாப்புவா நியூகினி சென்று அங்கே சிறிது காலம் பணியாற்றிவிட்டு, அவுஸ்திரேலியா சிட்னிக்கு 1992 ஆம் ஆண்டளவில் வந்து சேர்ந்தபோது, இங்கே தமிழ்ப்பிள்ளைகளுக்கான தமிழ் வகுப்புகள் நடந்துகொண்டிருந்ததை கண்டு மிக்க உவகை கொண்டேன்.

தமிழர்கள் பூமிப்பந்தில் எங்கே வாழத்தலைப்பட்டாலும், அவர்கள் சைவர்களாயின் முதலில் கோயில் கட்டுவார்கள். கிறிஸ்தவர்களாயின் தேவாலயம் கட்டுவார்கள். இஸ்லாமியர்களாயின் மசூதி அமைப்பார்கள்.

அடுத்து தங்கள் சமூகம் சார்ந்த சங்கங்களையும் தமது பிள்ளைகள் தாய்மொழியை மறக்காதிருப்பதற்காக தமிழ்ப்பாடசாலைகளையும் நிறுவுவார்கள்.

சிட்னியிலும் அதுதான் நிகழ்ந்தது.

நியூசவுத்வேல்ஸ் தமிழ்ப் பாடசாலைகளின் கூட்டமைப்பின் சார்பில் எழுத்தாளரும் தாவரவியல் பேராசிரியருமான ஆசி. கந்தராஜா என்னை வந்து சந்தித்தார்.  அவரும் எனது பூர்வீக ஊர் நாவற்குழிக்கு அயல் கிராமமான கைதடியை பூர்வீகமாகக்கொண்டவர். 

எங்கள் ஊரில் ஒரு பேச்சு வழக்கிருக்கிறது.

சுத்தியும் சுத்தியும் சுப்பரின்ட கொல்லையில்தான் என்பதுதான் அந்தப்பேச்சு வழக்கு.  அவ்வகையில் கந்தராஜாவும் எமது உறவினராக இருக்கலாம் என நம்புகின்றேன். அதற்கும் அப்பால் நாமிருவரும் எழுத்தாளர்கள் என்பதனால் நெருக்கமானவர்கள். நான் இந்த நாட்டிற்கு வந்த பின்னர் அவருடைய தலைமையில் நானும் எனது தலைமையில் அவரும் பல இலக்கிய கூட்டங்களிலும் பேசியிருக்கின்றோம்.

         அவர் என்னை வந்து சந்தித்தமைக்கு முக்கிய காரணம்,  இங்கு வாழும் தமிழ்ப்பிள்ளைகளுக்கு  தமிழ்க்கல்வி சாத்தியமானதா ..? என்பதை அறிந்துகொள்வதற்குத்தான் என்பதை அவர் முன்வைத்த சந்தேகங்களிலிருந்து என்னால் புரிந்துகொள்ளமுடிந்தது.

இங்கே எமது பிள்ளைகள் வாழும் சூழ்நிலை அப்படியானது.  அவரது சந்தேகம் நியாயமானது.  நானும் அதற்கு பாதகமான பதிலைத்தராமல், சாதகமான பதிலைத்தான் வழங்கினேன்.

அச்சந்தர்ப்பத்தில் நான் அவருக்கு என்ன சொன்னேன் என்பதை,  உடனடியாக நினைவுக்கு கொண்டு வந்து என்னால் சொல்லமுடியாது போனாலும் கடந்த 2019 ஆம் ஆண்டு சிட்னி வாழ் அன்பர்கள் எனக்காக நடத்திய கவிஞர் அம்பி அகவை 90 விழாவில் வெளியிட்ட சிறப்பு மலரில் பேராசிரியர் ஆசி. கந்தராஜா எழுதியிருக்கும்   “ அம்பியும் தமிழும்  “ என்ற விரிவான கட்டுரையை மீண்டும் படித்துப்பாருங்கள்.

கந்தராஜா  குறிப்பிட்ட 1992 ஆம் ஆண்டில் என்னைச்சந்தித்து நீண்டநேரம் உரையாடினார்.

அந்நிய மொழிச்சூழலில் வாழும் தமிழ்க்குழந்தைகளின் அறிவு விருத்தி, செயல் திறன் விருத்தி, மனப்பாங்கு விருத்தி ஆகியனவற்றை கருத்தில்கொண்டு அவருக்கு விரிவான பாடவிதானத்தை எழுதிக்கொடுத்தேன்.

இலங்கையில் கல்வித் திணைக்களத்தின் தமிழ்மொழி பாடநூலாக்கக் குழுவில் முன்னர் பணியாற்றியிருப்பதனாலும், அதற்கு முன்னர் பாடசாலைகளில் தமிழ், விஞ்ஞானம், கணிதம் கற்பித்த அனுபவமும் இருந்தமையாலும் கந்தராஜா அவர்கள் கேட்டிருந்தவாறு அன்று அந்த பாடவிதானத்தை தயாரித்து கொடுத்தேன்.

நண்பர் கந்தராஜாவைத் தொடர்ந்து இங்கு தமிழ்க்கல்வி வளர்ச்சி பற்றி உரையாடுவதற்கு வந்தவர் திருநந்தகுமார். இவர், இலங்கையில் கம்பன் கழகம் உருவாக்கப்பட்டபோது, அதன் ஸ்தாபகர்களில் ஒருவர். இன்றுவரையில் கம்பன் கழகத்துடன் இணைந்து இயங்கிவருபவர்.

இவரும் என்னைப்போன்று அலைந்துழன்றவர்தான். நியூசிலாந்துக்கு சென்றவேளையில் இவரை சந்தித்தேன்.  இவரும் அங்கே தமிழ்ப்பணிகளை செவ்வனவே மேற்கொண்டிருந்தவர்.

அங்கே வெண்ணிலவு என்ற பெயரில் ஒரு கலை, இலக்கிய இதழ் வெளிவந்துகொண்டிருந்தது. அதன் வெளியீட்டிலும் திருநந்தகுமார் முக்கிய பங்காற்றியவர்.

ஆசிரியனாகவும் எழுத்தாளனாகவும்  சமகாலத்தில் இயங்கிவந்தமையால், என்னிடம் தேடல் மனப்பான்மையும் குடியிருந்தது. உளவியல் சார்ந்த தேடலினால், சிறுவர் இலக்கியம் படைக்கமுடிந்தது.  ஆய்வு ரீதியான தேடல் கொண்டிருந்தமையால்,  மருத்துவத் தமிழ் முன்னோடி கிறீனின் அடிச்சுவடு எழுத முடிந்தது. அவர் பற்றி ஆங்கில வாசகர்களும் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக நானே அதனை ஆங்கிலத்திற்கு மாற்றியிருந்தேன்.

மாணவர்களின் சுயவிருத்தியை மேம்படுத்துவதற்கு மாணவர் பற்றிய உளவியலின் தேடலிலும் ஈடுபட்டு வந்துள்ளேன். அவ்வாறே கல்வி, இலக்கியம், சமூகம், அறிவியல் சார்ந்த துறைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருபவர்களை தேடிச்செல்வதும் எனது இயல்பாகும்.

அவ்வாறு நியூசிலாந்திற்குச்சென்றபோதும் திருநந்தகுமார் பற்றி முன்னரே தெரிந்துவைத்திருந்தமையால், அங்கு சென்றதும் அவர் பற்றி விசாரித்து தேடிச்சென்றேன்.

மீண்டும் நான் சிட்னிக்கு வந்த பின்னரும்  அவர் இங்கே வந்துவிட்டார் என்பதை அறிந்து தேடினேன்.  ஒரு நிகழ்ச்சியில் அவரைச் சந்திக்க முடிந்தது.

அதன்பின்னர் அடிக்கடி சந்திக்கின்றேன்.

சிட்னி, மெல்பன், கன்பரா முதலான மாநில நகரங்களில் நடந்த எழுத்தாளர் விழாக்களிலும் அவரை காண்பேன்.

எனக்கும்   நண்பர் திருநந்தகுமார்  அவர்களுக்குமிடையில் தொடரும் அன்புறவைப்பற்றி,  நான் காலவோட்டத்தில் மறந்துவிட்ட பலசுவரசியங்களுடன் விரிவாக எழுதியிருக்கிறார். அக்கட்டுரையையும் நீங்கள் கவிஞர் அம்பி அகவை 90 மலரிலும் பார்க்கமுடியும்.

தொன்னூறு வயதை கடந்துவிட்டவேளையில்,  முன்னரைப்போன்று என்னால் எவரையும் தேடி அலையமுடியவில்லை.

ஏறினால் படுக்கை, இறங்கினால் சக்கரநாற்காலி. நிகழ்ச்சிகளுக்கு செல்வதாகவிருந்தாலும்  சக்கரநாற்காலியில்தான் நகரவேண்டும். 

இந்த 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் எனது பிறந்த தினம் வந்ததும் இந்த சொல்லாத கதைகளை எழுதத் தொடங்கினேன்.  அத்துடன் உலகத்தையெல்லாம் அச்சுறுத்தத் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்றும் கொள்ளை நோயாக பரவத்தொடங்கிவிட்டது.

நான் வெளியே செல்லமுடியாமலும்  எனது நண்பர்கள் என்னை வந்து பார்க்கமுடியாமலும் சமூக இடைவெளி பேணலுக்குத்தள்ளப்பட்டிருக்கின்றேன்.

எனினும்,  படுக்கையிலிருந்தவாறு கடந்த காலத்தை மீண்டும் நினைவுக்குள் அழைத்து இந்தப்பதிவினை எழுதிவருகின்றேன்.

புகலிடத்தில் வளரும் தமிழ் மாணவர்களின்  தமிழ்உணர்வை அறிவுபூர்வமாக முன்னெடுப்பதற்கு   பேராசிரியர் ஆசி. கந்தராஜா,  திருநந்தகுமார், மாவை நித்தியானந்தன்  உட்பட பலருக்கும் துணைநின்றேன் என்ற மனநிறைவினை தெரிவிப்பதற்காகத்தான், வாத்தியார் தொடக்கம்   Professor வரையில்  இந்த அங்கத்தில் சொல்லநேர்ந்தது.

( தொடரும் )

 

 


No comments: