படித்தோம் சொல்கின்றோம்: காற்றுவெளி – மொழிபெயர்ப்புச்சிறப்பிதழ் வாசிப்பு அனுபவத்திற்கு புதிய வாசல்களை திறந்திருக்கும் சிற்றிதழ் ! முருகபூபதிஇங்கிலாந்திலிருந்து  எழுத்தாளர் முல்லைஅமுதன் நீண்டகாலமாக வெளியிட்டுவரும் காற்றுவெளி  இம்மாதம்                ( 2020  ஆவணி )  மொழிபெயர்ப்பு சிறப்பிதழாக வெளியாகியுள்ளது.      

இவ்விதழில்  ( அமரர்கள்  ) பெரி.சண்முகநாதன்,  எம்.எச்.எம்.ஷம்ஸ் ஆகியோர் மொழி பெயர்த்த துருக்கிய கவிதை  (நஸீம் ஹிக்மத்/துருக்கி), சிங்கள கவிதை (பராக்கிரம கொடிதுவக்கு ) என்பனவற்றுடன்,

அ.தமிழ்ச்செல்வன்(கடவுள் என்று..) முனைவர்.ர.ரமேஷ் (சந்திரா மனோகரன்), வ.ந.கிரிதரன் (பிஷ் ஷெல்லி, கவிஞர்.பைரன்), லதா ராமகிருஷ்ணன்(அன்னா அக்மதோவா), ராஜி வாஞ்சி(பிரான்ஸிஸ் எலன் வாட்கின்ஸ் ஹார்பர்),  பேராசிரியர். மலர்விழி. கே (மூட்னகூடு.சின்னச்சாமி/பா.தென்றல்),தமிழ்க்கிழவி(அஜித்.சீ.ஹேரத்/டீ.பிரீத்தி,எம்.கல்பனா,கூம்பியா,பேராசிரியர்.கிளார்க்),கோகிலவாணி தேவராஜா (லாரா ஃபெர்ஹஸ்/ அனிருத்தன் வாசுதேவன்),சுகிர்தா சண்முகநாதன்(ரேசா சைய்ச்சி/பேர்சிஸ்),  முருகபூபதி ஆகியோரும் எழுதியுள்ளனர்.

மு.தயாளன் ( மாக்சிம்.கார்க்கி),  மதுரா  (Nichanor parra/ Miller Williams  ), சாந்தா தத் (எம்.எஸ்.சூர்யநாராயணா),க.நவம்(’Things you didn’t do!’), ஆகியோரின் படைப்புக்களும்  வெளிவந்துள்ளன.

பிறமொழி கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகளும்  இடம்பெற்றிருப்பதனால், முடிந்தவரையில்  இதனை முழுமையான சிறப்பிதழாக்க  முயன்றிருக்கும்  ஆசிரியர் கவிஞர் சோபா அவர்கள் பாராட்டுக்குரியவர்.

மேனாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும் என்ற மகாகவி பாரதியின் கனவை  கவிஞர் சோபா அவர்களும்  முல்லை அமுதனும்  நனவாக்கியிருக்கிறார்கள்.

அத்துடன் பாரதி,  சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைப்போம்  என்று சொன்னதையும்  விகற்பமாக அவதானிக்கும் எம்மவர்களில் பலருக்கு,  “  ஏன்… அவர் சிங்கள இலக்கியங்களை தமிழர்களும், தமிழ் இலக்கியங்களை சிங்களவர்களும் படித்து தெரிந்துகொள்ளவேண்டும் என்ற சிந்தனையை மறைபொருளாகவும் கொண்டு சொல்லிச் சென்றார் என்ற பார்வையிலும்  ஏற்கமுடியவில்லை!?  என்றும் இச்சந்தர்ப்பத்தில் யோசிக்கத் தோன்றுகிறது.

பல வருடங்களுக்கு முன்னர் புத்தளத்தில் வதியும் எமது இலக்கிய நண்பரும் கவிஞருமான ஜவாத் மரைக்கார் அவர்களுடன்  குருநாகலில் ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருந்த கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான பராக்கிரம கொடிதுவக்கு அவர்களைப் பார்க்கச் சென்றிருக்கின்றேன்.

இலங்கையில்  பண்டிதர் வண. சரணங்கரா தேரர்  அவர்கள் திருக்குறள், சிலப்பதிகாரம் முதலானவற்றை சிங்களத்திற்கு மொழிபெயர்த்தவராக அறியப்படுகிறார்.

அதுபோன்று கம்பகா மாவட்டத்தில் வாழ்ந்து மறைந்த பண்டிதர்  வண. ரத்னவன்ஸ தேரோ அவர்களும் திக்குவல்லை கமாலின் கவிதைகளை சிங்களத்திற்கு மொழிபெயர்த்ததுடன் செங்கை ஆழியானின் வாடைக்காற்று நாவலையும் சிங்களத்திற்கு மொழிபெயர்த்தவர்தான். அந்த மொழிபெயர்ப்புகளின் மூலப்பிரதிகளை திக்குவல்லை கமாலும் செங்கைஆழியானும் மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவும்  நேரில் சென்று பார்த்துமிருக்கிறார்கள்.

எனினும் குறிப்பிட்ட பௌத்ததேரரின் கண்பார்வை மங்கியதையடுத்து நோய்வாய்ப்பட்டமையால், அந்த முயற்சிகளை அவரால் முன்னெடுக்கமுடியாது போய்விட்டது.

பாரதியாரின் சில கவிதைகளை தமிழ் அபிமானிகள் கே. ஜீ. அமரதாச, ரத்ன நாணயக்கார ஆகியோர் இணைந்து சிங்களத்தில் மொழிபெயர்த்தபோது  (  நூலின் பெயர் : பாரதி பத்ய ) இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் பாரதி நூற்றாண்டு காலத்தில்  தமிழக பாரதிய இயல் ஆய்வாளர்கள் முன்னிலையிலே  1983 தொடக்கத்தில்  வெளியிட்டு வைத்துள்ளது.

திக்குவல்லை கமால், ஷம்ஸ்,  பேராசிரியர்கள் உவைஸ், நுஃமான், உபாலி லீலாரட்ண,  மடுளுகிரியே விஜேரட்ண, ரிஷான் ஷெரீப் , கமால் பெரேரா,  தெனகம ஶ்ரீவர்தன , சோபா  உட்பட பலர் இவ்வாறு தமிழ் – சிங்கள இலக்கியப்பரிவர்த்தனைக்கு மகத்தான சேவையாற்றியுள்ளனர்.

இந்த அரிய தகவல்களின் பின்னணியில்தான் முல்லைஅமுதன் வெளியிட்டிருக்கும் காற்றுவெளி மொழிபெயர்ப்பு சிறப்பிதழையும்  நாம் அவதானிக்கின்றோம்.

பெரி.சண்முகநாதன், ஷம்ஸ் ஆகியோர் என்றோ மறைந்துவிட்டனர், எனினும் அவர்களையும்  இந்த சிறப்பிதழில் மறந்துவிடாமல் நினைவுகூர்ந்திருப்பது வரவேற்கத்தக்கது.

சமகால கொரோனா அச்சுறுத்தலுக்கு பிரதான காரணம் காற்றுத்தான்.  இந்த வளிமண்டலத்திலிருந்து தம்மை காத்துக்கொள்வதற்கு  உலகெங்கும் மக்கள் முகக்கவசத்துடன் ஒன்றித்திருக்கிறார்கள்.

கண்ணுக்குத் தெரியாத வைரஸிடமிருந்து தப்பிக்க மக்கள் கடும்பிரயத்தனங்களை மேற்கொண்டுவரும் இக்காலத்தில் காற்றுவெளியின் இச்சிறப்பிதழ் தனது ஆசிரியத்தலையங்கத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளது:

 “ உள்ளிருக்கை, சுயதனிமைப்படுத்தல் எல்லாம் ஆகி வெளிவரும்போதும், முகமூடி அணிந்துவரச்சொல்கிறது கொரோனா.  காற்றுவெளியும் அப்படியே தனிமைப்பட்டுவிடலாம் என்று சொன்னவர்கள் மத்தியில் தொடர்ந்து விளம்பரங்கள் ஏதுமின்றி, இருபது வருடங்களைத் தாண்டி வருகின்றமை அனைத்துப் படைப்பாளர்களின்  ஒத்துழைப்பே எனச்சொன்னால் மிகையில்லை.

ஒவ்வொருவருக்கான அரசியல் சிந்தனை வெவ்வேறானவைதான். கொள்கையிலும் முரண்பாடுகள் இருக்கலாம். ஆனாலும், காற்றுவெளி நட்புடனே பயணிக்கவிரும்புகிறது.  பயணித்தும் வந்திருக்கிறது. இது தொடரும்.  “

பலவருடங்களா சக்கரநாற்காலியில் முடங்கியிருந்து  பிரபஞ்சத்தை ஆராய்ந்த மேதை  இயற்பியல் விஞ்ஞானி ஸ்றீஃபன் ஹக்கின்ஸ்  பற்றிய கடவுள் என்றொருவர் இருக்கிறாரா…?  என்ற அ. தமிழ்ச்செல்வன் எழுதியிருக்கும் ஆக்கம் இச்சிறப்பிதழில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

எதிர்காலம் குறித்தும், தீவிர பாய்ச்சலுடன் எகிறிக்கொண்டிருக்கும் நவீன தொழில் நுட்பங்கள் குறித்தும், கைப்பேசியும் கணினியும் நம்மை விஞ்சிவிடுமா… ?  என்ற கேள்வியையும் முன்வைத்து ஆராய்கிறது.

எதிர்பாராமல் வந்து பாடாய் படுத்தும் சமகால எதிரியுடன் நாம் போராடிக்கொண்டிருக்கும்போது,  காற்றுவெளி, வெறுமனே மொழிபெயர்ப்பு இலக்கியத்துடன் மாத்திரம்  நின்றுவிடாமல், வாசகரின் சிந்தனையில் ஊடுறுவுவதற்கும் முனைந்துள்ளது.

கவிஞர் சந்திரா மனோகரன் தொகுத்திருக்கும் இழந்த கையெழுத்துபிரதி ( மொழிபெயர்ப்புக் கவிதைகள் ) பற்றிய தனது  மதிப்பீட்டுரையை , Language is different but literature is one  எனத் தொடங்கியிருக்கும் முனைவர் ர. சுரேஷ் , தனது ஆக்கத்தில்,  “  ஒரு மொழிபெயர்ப்பு பிரதியின் வெற்றி என்பது , அப்பிரதிக்கும் அதனை வாசிக்கும் வாசகனுக்குமான நெருக்கத்தை பொருத்தே அமைகிறது. வாசகன் எந்த சூழலிலும் மொழிபெயர்ப்பு பிரதியின் போதாமையை உணரச்செய்யாததாய் இருந்தாலே அது மொழிபெயர்ப்பாளரின் வெற்றிக்குச் சான்றாகும். அவ்வகையில் இம்மொழிபெயர்ப்பு நூல் தன்னளவில் வெற்றியடைந்துள்ளது எனலாம்  “ என்று விதந்து குறிப்பிட்டுள்ளார்.

பேர்ஸி பிஷ் ஷெல்லி, கவிஞர் பைரன் ஆகியோரின் காதல் உணர்வு பொங்கும் சிறிய கவிதைகளை வ.ந. கிரிதரன்  அழகியலோடு  மொழிபெயர்த்துள்ளார். 

கோகிலவாணி தேவராஜா, தமிழ்நாடு காலச்சுவடு பதிப்பகம் உலக கிளாசிக் நாவல் வரிசையில் வெளியிட்டுள்ள லாராஃபெர்கஸ் எழுதிய இழப்பின் வரைபடம்                                          ( மொழிபெயர்ப்பு )  நாவல் பற்றிய அறிமுகத்தை எழுதியுள்ளார்.

மு. தயாளன், மாக்சிம் கார்க்கியின் உப்பளத்தில்… என்ற நெடுங்கதையை மொழிபெயர்த்துள்ளார்.

காற்றுவெளி மொழிபெயர்ப்புச்சிறப்பிதழில் , கருத்தைக் கவரும்  ஓவியங்கள் – கோட்டுச்சித்திரங்கள்  ஆக்கங்களுக்குப் பொருத்தமாக இணைக்கப்பட்டிருப்பதும் சிறப்பாகும்.

காற்றுவெளியை  தங்கு தடையின்றி வெளியிட்டுவரும் இங்கிலாந்து முல்லை அமுதன், அங்கே அவ்வப்போது உலகெங்கும் வெளிவரும் சிற்றிதழ்களின் கண்காட்சிகளையும் நடத்திவருபவர்.

இவரும் தமிழ் உலகில் சிறந்த ஆவணக்காப்பாளர்தான். அத்துடன் அயர்ந்துவிடாமல், காற்றுவெளியையும் தரமான உள்ளடக்கங்களுடன் வெளியிட்டு வருபவர்.

காற்றுவெளி 2020 ஓகஸ்ட் சிறப்பிதழை பெறவிரும்புவோர் பின்வரும் மின்னஞ்சலில் அவரை தொடர்புகொள்ளலாம்:

mullaiamuthan16@gmail.com

தரமான ஆக்கங்களுடன் வெளிவந்துள்ள இவ்விதழ் வாசிப்பு அனுபவத்திற்கு மேலும் புதிய வாசல்களைத் திறந்துள்ளது.
No comments: