இலங்கைச் செய்திகள்

தலதா, பூஜித் அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழுவில்

சிங்கராஜ வனப்பகுதியில் யோஷிதவுக்கு ஹோட்டல்?

பலாலி விமான நிலையத்தை புனரமைக்க நடவடிக்கை

சர்ச்சைக்குள்ளான விக்கியின் உரை ஹன்சார்ட்டில் சேர்ப்பு

மைத்திரியின் இல்லத்தில் ஏப். 21 ஆணைக்குழு பொலிஸ் பிரிவு

வட மாகாண மக்களின் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல்

யாழ். பல்கலை துணைவேந்தராக சிறிசற்குணராசா ஜனாதிபதியால் தெரிவு

உடன் அமுலுக்கு வரும் வகையில் மாத்தளை மேயர் தற்காலிக பதவிநீக்கம்

அரசுடன் இணைந்து பயணிக்க முன்வருமாறு சகல எம்.பிக்களுக்கும் பிரதமர் அழைப்பு

புதிதாக களமிறங்கிய எனக்கு கிடைத்த வாக்குகளை வெற்றியாகவே கருதுகிறேன்


தலதா, பூஜித் அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழுவில்

கட்டாய விடுமுறையிலுள்ள பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தரவும், முன்னாள் அமைச்சர் தலதா அத்துகோரளவும் இன்று (24) முற்பகல் அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளனர்.

எதிர்வரும் 14ஆம் திகதி மீண்டும் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்ட பின்னர், அவர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

குறித்த சாட்சியமளிப்பு தொடர்பில் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ளமை தொடர்பான பிரதி தங்களுக்கு கிடைக்கவில்லை என, சட்டத்தரணி ஊடாக தெரிவித்தமைக்கு அமைய குறித்த தினத்தில் மீண்டும் முன்னிலையாவதாக தெரிவித்து, அவர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.  

முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவவினால் குறித்த ஆணைக்குழுவில் அளித்த முறைப்பாடு  தொடர்பாக அவர்கள் இருவரும் இன்று ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 

 





சிங்கராஜ வனப்பகுதியில் யோஷிதவுக்கு ஹோட்டல்?

சிங்கராஜ வனப்பகுதியில் யோஷிதவுக்கு ஹோட்டல்?-Defematory Statement Against-Yoshitha Rajapaksa

- பொய்யான குற்றச்சாட்டு என முற்றாக மறுப்பு
- ரூபா 500 மில்லியன் கோரி கடிதம்

சிங்கராஜ வனப்பகுதியில் தனக்கு ஒரு ஹோட்டல் இருப்பதாக ஒரு சிலரால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை முற்றாக மறுப்பதாக, யோஷித ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஒரு சிலரால் வெளியிடப்பட்டுள்ள கருத்துகள் தொடர்பில், அதனை வெளியிட்ட நபர்களுக்கு எதிராக தனது சட்டத்தரணி மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தனது ட்விற்றர் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வரும், கடற்படை அதிகாரியுமான லெப்டினன்ட் கொமாண்டர் யோஷித ராஜபக்‌ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.

 

கடந்த ஓகஸ்ட் 19ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில், காணி மற்றும் விவசாய மறுசீரமைப்பு தொடர்பான அமைப்பின், சுற்றாடல் மற்றும் சட்ட அதிகாரியான சஜீவ சமிக்கரவினால் தெரிவிக்கப்பட்டதாக வெளியிடப்பட்டுள்ள குறித்த கருத்துக்கு எதிராகவே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் குறித்த கருத்தை வெளியிட்ட நபருக்கு எதிராக அவதூறு தெரிவித்ததாக, தனது சட்டத்தரணி மூலம் அனுப்பப்பட்ட கடிதத்தையும் அவர் வெளியிட்டிருந்தார்.

அக்கடிதத்தில், குறித்த நபரை தன்னிடம் மன்னிப்புக் கோருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, தெரிவிக்கப்பட்ட அவதூறு தொடர்பில் 7 நாட்களுக்குள் ரூபா 500 மில்லியனை செலுத்துமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது சட்டத்தணியால் அனுப்பப்பட்டுள்ள அக்கடிதத்தில், தனது கருத்தில் எந்தவிதமான உண்மையும் இல்லை என ஒப்புக் கொண்டு, யோஷிதவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், இந்த தவறான செய்தி ஊடகங்கள், சமூக ஊடகங்கள்,  இணைய ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தால், அதை அகற்றுமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அல்லது தரப்பினருக்கு அறிவித்து, தொடர்புடைய செய்திகளை அகற்ற நடவடிக்கை எடுத்தல், சம்பந்தப்பட்ட கருத்து உண்மை இல்லை என்று செய்திக்குறிப்பு மூலம் ஊடகங்களுக்கு தெரிவித்தல், யோஷித ராஜபக்ஷ மீது மீண்டும் எந்தவொரு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் கூறப்பட மாட்டாது என அறிவித்தல், 7 நாட்களுக்குள் இழப்பீடாக ரூ. 500 மில்லியனை செலுத்துதல், ஆகிய விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் சஜீவ சமிக்கர பின்வருமாறு கருத்து வெளியிட்டுள்ளதாக அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது,

"அண்மையில், லங்காகம மற்றும் அதனை அண்டி வாழும் மக்களுக்கு போக்குவரத்து வசதி செய்வதாக தெரிவித்து, சிங்கராஜ வனப் பகுதியில், பாரிய சட்ட விதிமீறல் நடவடிக்கையாக காடழிக்கப்பட்டு வருகின்றது. இதன் பின்புலத்தில் பாரிய முதலீட்டு நடவடிக்கைகள் காணப்படுவதோடு, யோஷித ராஜபக்‌ஷவுக்குச் சொந்தமான ஹோட்டலொன்றும் அங்கு காணப்படுவதை நாம் அறிவோம்.."






பலாலி விமான நிலையத்தை புனரமைக்க நடவடிக்கை

யாழ்ப்பாணம், பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக இந்திய அரசாங்கத்துடன் கைச்சாத்தாகவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தம், அமைச்சரவை அனுமதிக்காக முன்வைக்கப்படும் என, சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

எதிர்வரும் 02 வாரங்களுக்குள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைச்சரவையில் முன்வைக்கப்படும் எனவும், அவர் தெரிவித்தார்.

இது தொடர்பான கலந்துரையாடல், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயிற்கும், அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கும் இடையில் நேற்று (25)  அமைச்சில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்தார்.

அமைச்சரவை அனுமதி கிடைத்தவுடன் இரு தரப்பினர்களுக்கு இடையில் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தாகும் என்பதோடு, அதனைத் தொடர்ந்து பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என, அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம், பலாலி விமான நிலையம் இரண்டாவது உலக மகா யுத்தத்தின்போது, நிர்மாணிக்கப்பட்டது.

பலாலி விமான நிலைய அபிவிருத்திக்காக இந்திய அரசாங்கம் 300 மில்லியன் ரூபா நிதியை வழங்குவதற்கு இணங்கியுள்ளது.(சு)    நன்றி தினகரன் 




சர்ச்சைக்குள்ளான விக்கியின் உரை ஹன்சார்ட்டில் சேர்ப்பு

தென்னிலங்கை அரசியல் களத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரனின் பாராளுமன்ற உரை ஹன்சாட்டில் சேர்க்கப்பட்டுள்ளது. 

உலகில் உயிர்வாழும் மூத்த மொழிகளில் ஒன்றும், இந்நாட்டின் முதல் சுதேச குடிமக்களின் மொழியிலும் வாழ்த்துக்களை தெரிவிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் கடந்த 20ஆம் திகதி உரையாற்றினார். இதனையடுத்து சி.வி.விக்கினேஸ்வரனின் உரையை ஹன்சார்ட்டில் இருந்து நீக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார கோரிக்கை விடுத்திருந்தார். 

இது குறித்து ஆராய்வதாக அன்றையதினமே சபாநாயகர் மஹிந்த யப்பா அபேவர்தன தெரிவித்திருந்தபோதும் விக்கினேஸ்வரனின் உரையின் விவரிக்கப்படாத பதிப்பு பாராளுமன்றத்தின் ஹன்சார்ட்டில் சேர்க்கப்பட்டுள்ளது.  நன்றி தினகரன் 






மைத்திரியின் இல்லத்தில் ஏப். 21 ஆணைக்குழு பொலிஸ் பிரிவு

ஏப்ரல் 21, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவு அதிகாரிகள், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்றுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதியின் கொழும்பு, பேஜட் வீதியில் அமைந்துள்ள இல்லத்திற்கு, குறித்த அதிகாரிகள் சென்றுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், வாக்குமூலமொன்றை பெற்றுக்கொள்வதற்காக இன்றையதினம் (26) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், தன்னால் குறித்த பொலிஸ் பிரிவிற்கு வருகை தர முடியாது எனவும், கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் வருகை தந்து வாக்குமூலம் பெற்றுக்கொள்ளுமாறும், குறித்த ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவுக்கு, முன்னாள் ஜனாதிபதி அறிவித்திருந்தார்.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில்  வாக்குமூலம்வழங்குவதற்காக முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவை முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(சு)   நன்றி தினகரன் 




வட மாகாண மக்களின் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல்

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷவை வடமாகாண கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றிய தலைவர் வணக்கத்துக்குரிய அருட் கலாநிதி எஸ்.சந்திரகுமார் ,வட மாகாண மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தேவைகள் குறித்து சந்தித்துரையாடிய போது....   நன்றி தினகரன் 




யாழ். பல்கலை துணைவேந்தராக சிறிசற்குணராசா ஜனாதிபதியால் தெரிவு






உடன் அமுலுக்கு வரும் வகையில் மாத்தளை மேயர் தற்காலிக பதவிநீக்கம்

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மாத்தளை மாநகர சபை மேயர் டல்ஜித் அலுவிஹாரேயை அவரது பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்குவதற்கு, மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ. கமகே நடவடிக்கை எடுத்துள்ளார்.

திருத்தப்பட்ட மாநகர சபை கட்டளைச் சட்டத்தின் 277/1 பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றத்தை, மாத்தளை மாநகர சபை மேயர் புரிந்துள்ளாரா என்பது தொடர்பில் விசாரணை செய்து 03 மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிப்பதற்காக விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமிக்கவும் ஆளுநர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதோடு, குறித்த விசாரணையை முன்னெடுப்பதற்காக முன்னாள் நீதிபதி சரோஜினி குசலா வீரவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்தோடு, மாத்தளை மாநகர சபை மேயரின் கடமைகளைச் செய்வதற்கான அதிகாரத்தை வழங்கும் வகையில், பிரதி மேயர் சந்தனம் பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளதாக, குறித்த வர்த்தமானி அறிவித்தல் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.(சு)   நன்றி தினகரன் 






அரசுடன் இணைந்து பயணிக்க முன்வருமாறு சகல எம்.பிக்களுக்கும் பிரதமர் அழைப்பு

கொவிட் 19 ஆல் வீழ்ச்சியடைந்த பொருளாதாரம் துரிதமாக மீளுருவாக்கம்;

வழங்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதாகவும் தெரிவிப்பு

இடைக்கால கணக்கறிக்ைகயை சமர்ப்பித்து பிரதமர் பாராளுமன்றில் உரை

நாம் வழங்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றும் அரசாங்கம் என்பதாலேயே ஆட்சிக்கு வந்து இரு வாரங்களுக்குள் 1,60,000 தொழில்வாய்ப்புகளை வழங்க முடிந்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

எஞ்சிய காலாண்டிற்காக அரச செலவீனத்திற்கு 1,900 பில்லியன் ரூபா செலவிடவும் 1,300 பில்லியன் ரூபா வரை கடன் எல்லையை அனுமதிக்கவும் இடைக்கால கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்படுவதாக குறிப்பிட்ட அவர், எமது கொள்கை பிரகடனத்தை யதார்த்தமாக்குவதற்கு அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுமாறு சகல பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் கோருவதாகவும் அவர் தெரிவித்தார். கொவிட் 19 தொற்று காரணமாக வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு நாங்கள் அறிமுகப்படுத்திய மீளுருவாக்க தொகுப்பிற்கு முடியுமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

'கொவிட் 19 தொற்று காரணமாக வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் மக்களுக்காக அறிமுகப்படுத்திய மீளுருவாக்க தொகுப்பின் மூலம், நாட்டின் தொழில் முனைவோர் மற்றும் உள்ளூர் தொழிலதிபர்கள் நாங்கள் எதிர்பாராத வகையில் பொருளாதாரத்தில் செயற்பட்டு நீடித்திருக்க முடிந்துள்ளதெனவும் அவர் தெரிவித்தார். இடைக்கால கணக்கறிக்கையை சமர்ப்பித்து பாராளுமன்றத்தில்  தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்ச, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தலைமையிலான அரசாங்கத்தில் பிரதமர் பதவிக்கு மேலதிகமாக நிதி அமைச்சராக நான் 2020 ஆகஸ்ட் 18ஆம் திகதி கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டேன்.

கொவிட் 19 தொற்றுக்கு மத்தியில் பல நாடுகள் கடும் நெருக்கடிக்கும், ஆதரவற்ற நிலைக்கும் தள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில், இலங்கை இந்த தொற்றை வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு உட்பட ஏனைய சர்வதேச அமைப்புகள் ஏற்றுக் கொண்டுள்ளன.

பாராளுமன்றம் செயற்படாத சந்தர்ப்பத்தில் கூட ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட வேலைத்திட்டத்தினூடாக நாட்டின் நிறுவன கட்டமைப்பு வலுவாக செயற்பட்டமையால் அந்த நிலைமைக்கு எமக்கு மிகவும் ஆக்கபூர்வமாக முகங்கொடுக்க கூடியதாக அமைந்தது. சுகாதாரத்துறை, இராணுவத்தினர் மற்றும் நிர்வாக கட்டமைப்பு அத்துடன் வங்கி முறைமை உள்ளிட்ட நாட்டின் பொருளாதார மையங்களை சிறப்பாக கையாள்வதற்கு நாட்டின் தொலைநோக்குடைய தலைமைக்கு முடியுமானதாக அமைந்தது.

நாடு முடக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை செயற்படுத்துவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. விசேடமாக விவசாயத்துறையை பராமரிக்க சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன.

2019 நவம்பர் மாதம் இந்த அரசாங்கத்தை பொறுப்பேற்கும் போது நாட்டின் பொருளாதாரம் மிகவும் ஆபத்தான நிலையில் காணப்பட்டது.

2014 ஆம் ஆண்டு நாம் நாட்டை ஒப்படைக்கும் போது நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் 05 சதவீதத்திற்கும் 06 சதவீதத்திற்கும் இடையில் காணப்பட்ட போதிலும் இந்த நிலைமை வெகுவாக குறைவடைந்து 2019 ஆம் ஆண்டு இறுதியாகின்ற போது தெற்காசியாவில் மிகக் குறைந்த பொருளாதார வளர்ச்சி மட்டத்திற்கு அதாவது, 02 சதவீதம் வரை குறைந்திருந்தது.

நாட்டில் வர்த்தக நடவடிக்கைகள் சரிவடைந்தன. உள்ளூர் நிர்மாணக் கைத்தொழில், ஒளடத நிறுவனங்கள் மற்றும் உர நிறுவனங்களுக்கான கட்டணங்கள் செலுத்தப்பட்டிருக்கவில்லை. அதன்படி, 2019 ஆம் ஆண்டில் செலுத்தப்படாத கட்டணங்கள் ரூபாய் 242 பில்லியன், அதாவது இந்த ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.3 சதவீதத்திற்கும் அதிகமான அளவை தாங்கிக் கொள்வதற்கு வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு வரவுசெலவு திட்ட பற்றாக்குறை 6.8 சதவீதமாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட போதிலும், உண்மையில் இந்த செலுத்தப்படாத கட்டணங்களுடன் நோக்கும் போது வரவுசெலவு திட்ட பற்றாக்குறை 09 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.

இவை அனைத்தினாலும் பொருளாதார நடவடிக்கைகள் சீர்குலைந்து காணப்பட்டன. இந்த சூழ்நிலையில் பொருளாதாரம் சுருங்கி காணப்பட்டது. அவ்வாறான நிலையில் காணப்பட்ட வரி முறை எந்தவகையிலும் பொருளாதாரத்திற்கு தூண்டுதலாக காணப்படவில்லை. இதனால் நாட்டில் நிலவிய அதிக வட்டி விகிதங்கள் உள்ளூர் பொருளாதாரத்திற்கு ஏற்ற புதிய முதலீட்டு வாய்ப்புகளை அனுமதிக்கவில்லை. எமது நாட்டு மக்களுக்குள்ள ஆக்கபூர்வமான தொழில் முயற்சிகளின் மூலம் பயனடைவதற்கு தற்போதுள்ள பொருளாதார கட்டமைப்பில் இடமில்லை. இந்த நிலைமையை கடந்த ஆண்டுகளில் நாட்டில் இருந்த எந்தவொரு ஆட்சியாளரினாலும் புரிந்து கொள்ள முடியாது போனது.

கொவிட் 19 தொற்று பரவுவதற்கு முன்னதாகவே வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு பொருளாதாரத்தை புதுப்பிப்பதற்கான முயற்சி என்ற தொகுப்பு அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டது. சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு குறைந்த வட்டி வீதத்தில் கடன் வழங்குதல் மற்றும் அப்போதைய கடன்களை மறுசீரமைப்பதற்கு ஆரம்பிக்கப்பட்டது. கொவிட் தொற்றுக்கு பின்னர் நாட்டை முடக்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதம் செல்வதற்கு முன்னதாக ஏற்படக்கூடிய ஆபத்து நிலை குறித்து விளங்கிக் கொண்டு அதனைவிட பரந்த தொகுப்பொன்றை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தினோம். இதன் மூலம் நாட்டின் தொழில்முனைவோர் மற்றும் உள்ளூர் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு நாம் எதிர்பாராத வகையில் பொருளாதாரத்தில் செயற்பட்டு நீடித்திருக்க முடிந்துள்ளது. ஏற்றுமதி வருவாய் எதிர்பாராத விதமாக அதிகரித்துள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில் தான் ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனம் முன்வைக்கப்பட்டது. இந்த கொள்கை உள்ளூர் வர்த்தகர்களை அடிப்படையாகக் கொண்ட கொள்கையாகும். இந்த கொள்கையின் ஊடாக நாட்டின் அனைத்து மூலை முடுக்குகளிலுமுள்ள பிரஜைகளின் அடிப்படை உரிமை, அதாவது பொருளாதார ரீதியில் பலமான பாதுகாப்பான நாட்டில் வாழ்வதற்கான விருப்பத்தை நிறைவேற்றி கொடுப்பதற்கு திறன் உள்ளது. இந்த பரந்த அபிலாஷையை அடைவதற்கு ஏற்ற வகையில் நாட்டின் உள்ளூர் பொருளாதாரம் குறித்து விரிவாக ஆராய்ந்த பின்னரே அமைச்சுகளின் நோக்கங்கள் தீர்மானிக்கப்பட்டன.

இந்த ஒவ்வொரு அமைச்சகத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ள பணியின் நோக்கத்தை நாம் ஆராய்ந்தால், உண்மையிலேயே சுபீட்சத்தின் நோக்கு கொள்கையை நோக்கி பயணிக்கும் பாதை தெளிவாக விளங்கும்.

2019 நவம்பர் மாதம் ஜனாதிபதி நியமிக்கப்படும் போது புதிய அரசாங்கமொன்றை நியமித்து கொண்டு புதிய பொருளாதார கொள்கை ஊடாக இந்நாட்டிற்கு சிறந்த பொருளாதாரமொன்றை வழங்கக்கூடிய வாய்ப்பு பாராளுமன்றத்தில் சிறுபான்மை அரசாங்கம் காணப்பட்டதால் இழக்க நேரிட்டது. செலுத்தப்படாத கட்டணங்களை செலுத்துவதற்கு திருத்தம் பெப்ரவரி மாதம் என்னால் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், அன்று பெரும்பான்மை பலம் கொண்டிருந்த இன்றைய எதிர்க்கட்சி அதற்கு பாதிப்பை ஏற்படுத்தியது. அன்று பொருளாதாரத்தை உயிர்ப்பிப்பதற்கு இருந்த வாய்ப்பு இந்த தீர்மானத்தின் ஊடாக தாமதமாக்கப்பட்டது. அவ்வாறான நிலையில்தான் இன்று எனக்கு 2020 ஆம் ஆண்டிற்கான குறை நிரப்பு மதிப்பீட்டை சமர்ப்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 2020 செப்டம்பர் முதல் டிசம்பர் வரையான 4 மாத காலத்திற்கான அரசாங்கத்தின் செலவுகளை ஈடுசெய்வதற்கு ரூபாய் 1,900 பில்லியனை ஒதுக்கிக் கொள்வதற்கு மற்றும் அதற்காக ரூபாய் 1,300 பில்லியன் கடன் வரம்பை அங்கீகரித்துக் கொள்வதற்கே இந்த குறை நிரைப்பு மதிப்பீடு முன்வைக்கப்படுகிறது. 2020 ஆம் ஆண்டிற்கான இந்த குறை நிரப்பு மதிப்பீடுகள் அனைத்தையும் ஒதுக்கீட்டுச் சட்டங்கள் மூலம் நாங்கள் முன்வைப்போம்.

2020ஆம் ஆண்டின் முதல் 08 மாதங்களின் மொத்த அரச வருவாய் ரூபாய் 910 பில்லியன் பெற்றுக் கொள்ளப்பட்டிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. முதல் 08 மாதங்களில் அரச ஊழியர்களின் ஊதியத்திற்காக ரூபாய் 521 பில்லியன் செலவிடப்பட்டது. அதில் வட்டி செலுத்துவதற்கு ரூபாய் 675 பில்லியன் செலவிடப்பட்டதுடன், அரச மானியங்கள் மற்றும் பிற வளாகங்களுக்கு சுமார் ரூபாய் 390 பில்லியன் செலவாகின்றது. அதில் 2019ஆம் ஆண்டு முதல் செலுத்தப்படாத கட்டணங்களை செலுத்துவதற்கு பாரிய தொகையை செலவிட வேண்டியுள்ளது. அதன்படி அரசாங்கத்தின் செலவு ஒருவாறு நிர்வகிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்தில் அதிக பொருளாதார வளர்ச்சி விகிதத்துடன் அரசாங்க வரவுசெலவு திட்ட பற்றாக்குறையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த காலங்களில் மொத்த கடன் தொகையில் அரைவாசிக்கு மேல் வெளிநாட்டு கடனாக இருந்தது.

இந்த நிலையில் ரூபாய் 09 பில்லியனை அண்மித்த அனைத்து திட்ட கடன்களையும் மீளாய்வு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதில் சில திட்டங்கள் உள்ளூர் ஒப்பந்தக்காரர்களினால் குறைந்த விலையில் நிறைவு செய்யக்கூடியவையாகும். சில திட்டங்களினால் உண்மையில் சமூக அல்லது பொருளாதார ரீதியில் எவ்வித நன்மைகளும் இல்லை.

இதன் மூலம் திட்டங்களை செயற்படுத்துவதனை முழுமையாக நிறுத்துவது என்று பொருள்படாது. நாங்கள் இங்கு கடனுக்கு பதிலாக முதலீடுகளை ஊக்குவிப்பதற்கு முக்கியமாக நடவடிக்கை எடுப்போம். இந்த கொள்கை ஊடாக அரசாங்கத்தின் செலவினங்களை குறைத்து பொருளாதாரத்தை மேம்படுத்தலாம்.

நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் அரசாங்கம். நாங்கள் வழங்கிய வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றுவதனால்தான் நாங்கள் தேர்தலுக்கு முன்னர் வழங்குவதாக உறுதியளித்த ஒரு இலட்சத்து 60 ஆயிரம் வேலைவாய்ப்புகளை தேர்தல் நிறைவடைந்து இரு வாரங்களுக்குள் வழங்க ஆரம்பித்தோம்.

நாங்கள் இப்போது உருவாக்கியுள்ள தொழிற்படையை வழமையாக வேலைவாய்ப்பு வழங்குவது போன்று அலுவலங்களுக்குள் மட்டுப்படுத்த போவதில்லை. அவர்களை பொருளாதார நடவடிக்கைகளுக்கு நேரடியாக பங்களிப்பு செய்யும் வகையில் விவசாயத்துறை, நிர்மாணத்துறை போன்ற துறைகளில் ஈடுபடுத்துவோம். அவர்களை சிறந்த நிபுணத்துவம் கொண்டவர்களாக மாற்றுவோம். அதன் மூலம் சமூகத்தில் வறுமைக் கோட்டின் கீழுள்ள குடும்பங்களை வளப்படுத்துவோம்.

நாங்கள் இந்த அரசாங்கத்தை பொறுப்பேற்கும் போது ஊசி முதல் பாரிய இயந்திரங்கள் வரை அனைத்தையும் இறக்குமதி செய்கிறார்கள். உள்ளூர் விவசாயிகளை பாதிக்கும் வகையில் மிளகு, மஞ்சள் போன்றவற்றையும் இறக்குமதி செய்தனர். பட்டத்தையும் கொண்டு வந்துள்ளனர். வெசாக் தோரணங்களையும் கொண்டுவந்தனர்.

இதன்மூலம் உள்ளூர் உற்பத்தியாளர்கள் ஊக்கமிழந்ததுடன், புதிய உற்பத்திகளை சந்தையில் அறிமுகப்படுத்துவதற்கும் தயக்கமடைந்துள்ளனர். நமது வெளிநாட்டு இருப்புகள் உண்மையில் அத்தியவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக எமது அந்நிய செலாவணி தேவையற்று ஏற்ற இறக்கமடைந்துள்ளது. இது தொடர்பில் சிறந்த புரிதலுடன் நாம் இறக்குமதியை அத்தியாவசியமான பொருட்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தியுள்ளோம். இதன் பிரதிபலன் இன்று எமக்கு விளங்குகிறது. இதன் மூலம் அந்நிய செலாவணியை நிலையான மட்டத்தில் பேணுவதற்கு முடிந்துள்ளது. இவற்றில் இறுதி பிரதிபலனை பெறுவது யார்? எமது உள்ளூர் தொழில்முனைவோர், எமது வாடிக்கையாளர் உண்மையில் எமது மக்கள்.இந்நாட்டின் பொருளாதாரத்தை உயிர்ப்பிப்பதற்கு இந்த பாராளுமன்றத்திற்கு ஒரு பாரிய பொறுப்புண்டு. அதற்கு ஜனாதிபதி உள்ளிட்ட எமது அரசாங்கம் அது தொடர்பான சிறந்த புரிதலுடனேயே இந்த பொறுப்பை நிறைவேற்ற ஆதரவளிக்கின்றது. சுபீட்சத்தின் நோக்கு கொள்கையை யதார்த்தமாக்குவதற்கு இந்த அரசாங்கத்துடன் கைக்கோர்க்குமாறு நாம் உங்களிடம் வேண்டுகோள் விடுக்கிறோம் என்றார்.  ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிசாந்தன்  நன்றி தினகரன் 






புதிதாக களமிறங்கிய எனக்கு கிடைத்த வாக்குகளை வெற்றியாகவே கருதுகிறேன்

பாரிய சவால்களுக்கு மத்தியில் அம்பாறை மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்ட போதும், பாராளுமன்றத்திற்குத் தெரிவாகவில்லை என எவரும் கவலைப்படத் தேவையில்லை, மிகக் குறுகிய காலத்தில் எனக்கு கிடைத்த வாக்குகளை வெற்றியாகவே கருதுவதாக விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

தேர்தலுக்குப்பிறகு முதல் தடவையாக அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம்செய்த முன்னாள் பிரதியமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன், கல்முனையில் மக்களைச் சந்தித்து வாக்களித்தமைக்கு நன்றி தெரிவித்து உரையாற்றுகையிலே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்: எனது வெற்றிக்கு இரவுபகலாக உழைத்த உள்ளுர், வெளியூர் புலம்பெயர் மக்களுக்கு நன்றிகள். நான் ஒருபோதும் அம்பாறை மாவட்ட மக்களை மறக்கமாட்டேன். ஐந்து வருடத்திற்கொருதடவை வருபவனல்ல நான். நான் என்றும் உங்களோடு பணியாற்றுவேன்.

என்னைவிட குறைந்த விருப்புவாக்குகளைப் பெற்றுத்தான் சம்பந்தன் போன்றவர்கள் பாராளுமன்றம் சென்றுள்ளனர். வடக்கு, கிழக்கு மக்கள் த.தே.கூட்டமைப்பை தூக்கிவீசி எறிந்துள்ளனர். இந்த மாற்றம் இன்னும் மாகாண சபைத்தேர்தலில் தென்படவுள்ளது.

தமிழ் கூட்டமைப்புக்கு பின்னால் சென்றால் இருப்பதும் இல்லாமலே போகும். அவர்களே ஒற்றுமைப்படாதபோது மக்களை எவ்வாறு அவர்கள் ஒற்றுமைப்படுத்துவர்.

எமது கட்சிக் கிளைகளை மாவட்டம் பூராக விஸ்தரித்து இளைஞர், யுவதிகளுக்கு தொழில்வாய்ப்பை வழங்க திட்டமிட்டுள்ளேன். இன்னும் ஓரிரு வாரங்களில் நல்லசெய்திகள் வரலாம். எனவே மக்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.  காரைதீவு குறூப் நிருபர்  நன்றி தினகரன் 





No comments: