எண்ணமதை உரமாக்கி எம்சிறகை விரித்திடுவோம் ! கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா


   காமமெனும் பெருநெருப்பு
            காலமதை பொசுக்கிறது 
   காசுவெனும் போதையது
          கருணையினை ஒதுக்கிறது 
   வீதிதோறும் மதுவெண்ணம்
           விரிவாகிப் பெருகிறது
   நீதிசொல வந்தாலும்
           நெருக்குவாரம் பெருகிறது   !


    மலர்வனங்கள் நிலையிழந்து
             வரட்சிவரப் பாக்கிறது 
    வண்டெல்லாம் தேனெடுக்க 
             வகையறியா திகைக்கிறது
    உளமதினில் நல்லுணர்வு
             ஊற்றெடுக்க மறுக்கிறது
    வளமிழந்து வாழ்ந்திடவா
             மாநிலத்தில் பிறந்திட்டோம்  !           
 

     மேகமது கறுத்தாலும்
           வில்லங்கம் தருவதில்லை
    விண்மீன்கள் மண்ணதனை 
            வெறுத்துவிட  நினைப்பதில்லை
    கோபதாபம் அத்தனையும் 
            குத்தகைக்கு எடுத்தபடி 
    குறைபேசும் மானிடரே
            குவலயத்தைக் குலைக்கின்றார்  ! 
      

    மண்ணிருந்து எழுச்சியுடன்
          விண்ணெழுந்து வியப்படைய 
     எண்ணமதை உரமாக்கி
         எம்சிறகை விரித்திடுவோம் 
     கண்ணழகு தெரியாமல்
         கழித்துவிட்ட  காலமதை 
     கண்ணோட்ட  மெனுமழகால் 
          கண்டுவிடல் கண்ணியமே    ! 
No comments: