மனைவியின் பிரிவைத் தாங்கமுடியாத நீதியரசர் ஏ.ஆர்.லெட்சுமணன்; இரண்டே நாளில் தானும் இறந்த சோகம்! 

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியரசர் ஏ.ஆர்.லெட்சுமணன் இன்று அதிகாலை, திருச்சி தனியார் மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார். கரோனா தொற்றுக்கு ஆளாகிச் சிகிச்சையில் இருந்த இவரது மனைவி மீனாட்சி ஆச்சி, கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அந்த இழப்பைத் தாங்க முடியாத காரணத்தாலேயே மாரடைப்பு ஏற்பட்டு ஏ.ஆர்.லெட்சுமணனின் உயிர் பிரிந்ததாக உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளன.

காரைக்குடி அருகிலுள்ள தேவகோட்டையில் பாரம்பரியமான குடும்பம் ஏ.ஆர்.லெட்சுமணனின் குடும்பம். மூன்று தலைமுறைகளுக்கும் மேலாக கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறைக்குச் சான்றாக நிற்கும் இந்தக் குடும்பத்துக்கு செட்டிநாட்டுப் பகுதியில் தனிப்பெரும் மரியாதை உண்டு. சட்டம் படித்து உச்ச நீதிமன்ற நீதிபதி வரைத் தன்னை உயர்த்திக் கொண்ட ஏ.ஆர்.லெட்சுமணன், கேரள உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்தபோது அங்கே பல சாதனைகளை நிகழ்த்தியவர்.


பொது இடங்களில் புகை கூடாது!

கேரள உயர் நீதிமன்றத்தில் தேங்கிக் கிடந்த ஆயிரக்கணக்கான வழக்குகளைத் தூசிதட்டி எடுத்து அவற்றிற்கெல்லாம் விரைவாகத் தீர்ப்பெழுத வைத்தவர் ஏ.ஆர்.லெட்சுமணன். பொது இடங்களில் புகை பிடிக்கக் கூடாது என்று கேரள உயர் நீதிமன்றத்தில் இவர் பிறப்பித்த உத்தரவுதான் பிற்பாடு இந்திய அளவில் நடைமுறைக்கு வந்தது. முன்பெல்லாம், குருவாயூர் கோயிலுக்கு யானையைத் தானமாக கொடுப்பவர்கள் வெறுமனே யானையை மட்டும் தந்துவிட்டுச் சென்றுவிடுவார்கள். இதனால் தானமாகப் பெறும் யானைகளைப் பராமரிப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. இது தொடர்பான வழக்கு ஒன்று கேரள உயர் நீதிமன்றத்துக்கு வந்தபோது, ‘இனிமேல் யானை தானம் கொடுப்பவர்கள் அதன் பராமரிப்புச் செலவுகளுக்காக ஒரு லட்ச ரூபாய் கட்டணத்தையும் செலுத்த வேண்டும்’ என்று தீர்ப்பெழுதினார் ஏ.ஆர்.லெட்சுமணன்.

1999-ல், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்த மருத்துவ மாணவர் ஒருவர் தனக்கு உடல் நிலை சரியில்லாததைக் காரணம் காட்டி, தேர்வு எழுத தனக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் அளிக்க வேண்டும் என்று கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினார். அந்தக் கோரிக்கையின் நியாயத்தைப் புரிந்துகொண்ட ஏ.ஆர்.லெட்சுமணன், அந்த மாணவனுக்குக் கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்க ஆணை பிறப்பித்தார். அத்துடன் அந்த உத்தரவு பல்கலைக்கழக நிர்வாகத்தைச் சென்றடையத் தாமதமாகி அதனால் மாணவன் தேர்வு எழுதுவதில் எந்தச் சிக்கலும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத் தனது உத்தரவை உடனடியாகப் பல்கலை. நிர்வாகத்துக்குத் தந்தியாக அனுப்பி வைக்கும்படி நீதிமன்றப் பதிவாளருக்கு உத்தரவிட்டவர் ஏ.ஆர்.லெட்சுமணன்.

உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்ற முதல் தமிழர்

அரசியல் உள்ளிட்ட எவ்வித அழுத்தங்களுக்கும் இடம் கொடுக்காமல் தீர்ப்புகளை எழுதியவர் ஏ.ஆர்.லெட்சுமணன். அதற்காக அவர் சில நேரங்களில் சங்கடங்களையும் எதிர்கொண்டதுண்டு. உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்ற முதல் தமிழர் என்ற புகழுக்குச் சொந்தக்காரரான இவர், சட்ட ஆணையத்தின் தலைவர், முல்லைப் பெரியாறு அணை தீர்வுக்காக நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் தமிழகத்தின் பிரதிநிதி உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளையும் வகித்தவர்.

ஏ.ஆர்.லெட்சுமணனுக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள். பணி ஓய்வுக்குப் பிறகு தனது மனைவி மீனாட்சி ஆச்சியுடன் சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் தனியாக வசித்து வந்தார் ஏ.ஆர்.லெட்சுமணன். திருமணங்கள், விழாக்கள் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு மட்டும் சொந்த ஊர்ப் பக்கம் வந்து செல்வார். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக மனைவியைத் துணைக்கு அழைக்காமல் இவர் வெளியில் புறப்பட்டதே இல்லை. உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது கேரளத்தில் முதல்மாடா என்ற இடத்தில் நடந்த ஆன்மிக நிகழ்ச்சி ஒன்றுக்கு அழைக்கப்பட்டிருந்தார் ஏ.ஆர் லெட்சுமணன். அந்த நிகழ்ச்சிக்கும் மனைவியுடனே வந்திருந்தார்.

அப்போது சாமியார் ஒருவர் ஷீரடி சாயிபாபா சிலை ஒன்றை ஏ.ஆர்.லெட்சுமணனுக்குத் தந்தார். கணவன் - மனைவி இருவரும் சேர்ந்தே அந்த சிலையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது அன்பரின் விருப்பம். அப்படியே இருவரும் பெற்றுக் கொண்டார்கள். அந்த சிலையைப் பக்தியுடன் எடுத்துவந்து தேவகோட்டையில் உள்ள தனது வீட்டில் வைத்தார் ஏ.ஆர்.லெட்சுமணன். அந்தச் சிலைக்கு ஏதோ ஓர் அபூர்வ சக்தி இருப்பதாகவும் நம்பியவர், சிலை வீட்டுக்குள் வந்த பிறகு குடும்பத்துக்குள் பல நல்ல காரியங்கள் நடப்பதையும் மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டார். அந்த பக்தியின் வெளிப்பாடாக, பணி ஓய்வின்போது தனக்குக் கிடைத்த பணக் கொடையைக் கொண்டு தேவகோட்டையில் சாயிபாபாவுக்குக் கோயில் ஒன்றையும் எழுப்பினார். இப்போது தினமும் அந்தக் கோயிலில் இவரது செலவில் நித்திய பூஜைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

உடன்பிரியாத மனைவி

இவர் எப்படித் தனது மனைவியைப் பிரிந்து எங்கேயும் அடியெடுத்து வைக்கமாட்டாரோ அதுபோல மீனாட்சி ஆச்சியும் கணவர் கைபிடிக்காமல் எங்கும் வெளியில் கிளம்பியதில்லை. இந்த நிலையில். ஏ.ஆர்.லெட்சுமணனின் மூத்த மகன் சந்துரு என்ற அருணாசலம் தனது மகன் கார்த்திக் லெட்சுமணனுக்குத் திருமணம் நிச்சயம் செய்தார். பேரனின் திருமணத்துக்கு ஆசி வழங்கி நடத்தி வைப்பதற்காக ஆச்சியும் செட்டியாரும் (மீனாட்சி ஆச்சியும் ஏ.ஆர்.லெட்சுமணனும்) சென்னையிலிருந்து ஒன்றாகப் புறப்பட்டு தேவகோட்டைக்கு வந்தார்கள். திருமண வேலைகள் நடந்து கொண்டிருந்தபோதே மீனாட்சி ஆச்சியைக் கரோனா தொற்று பற்றிக் கொண்டது. விஷயத்தைக் கேட்டுப் பதறிப்போனார் இயல்பாகவே உடம்புக்கு முடியாத நிலையில் இருந்த ஏ.ஆர்.லெட்சுமணன். அருகில் இருந்தால் சவுகரியமாக இருக்கும் என்பதற்காகக் காரைக்குடி அருகே மானகிரியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் ஆச்சியை அட்மிட் செய்தார்கள்.

ஆச்சியை சிகிச்சையில் வைத்துக்கொண்டே திருமணத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளும் நடந்தன. ஆகஸ்ட் 24-ம் தேதி தேவகோட்டையில் ஏ.ஆர்.லெட்சுமணன் வீட்டில் திருமணம். திருமணத்துக்கு யாரையும் அழைக்காமல் விடமுடியாது என்பதால் நட்பு வட்டம் அனைத்துக்கும் அழைப்பிதழ் அனுப்பிய ஏ.ஆர்.லெட்சுமணன், ‘வீட்டிலிருந்தபடியே பேரனை வாழ்த்துங்கள்’ என்று மறக்காமல் குறுஞ்செய்தியும் அனுப்பினார்.

திங்கட்கிழமை திருமண நிகழ்வின்போது, எப்போதும் ‘மீனா’ என்று அன்போடு அழைத்துப் பழகிய மனைவி தன்னருகே இல்லாததால் உற்சாகமிழந்து காணப்பட்டார் ஏ.ஆர்.லெட்சுமணன். திருமணத்திற்கு வந்த நெருங்கிய சொந்தபந்தங்களை எல்லாம் சைகையால் மட்டுமே அவரால் வரவேற்க முடிந்தது. திங்கட்கிழமை திருமணம் முடிந்து அன்று இரவு, பெண்ணழைப்பு வைபவம் முடிகிறது. செவ்வாய்க்கிழமை விடிகாலை 3 மணிக்கு மீனாட்சி ஆச்சியின் உயிர் பிரிந்தது. கரோனா கட்டுப்பாடுகள் இருந்ததால் ஆச்சியின் உடல் தேவகோட்டைக்குக் கொண்டு வரப்படவில்லை. காரைக்குடி சந்தைப்பேட்டை இடுகாட்டிலேயே தகனம் செய்யப்பட்டது.

சாப்பாட்டைத் தேட மறந்தார்

தனது மனைவி இறந்த செய்தி கேட்டதிலிருந்தே சாப்பாட்டைத் தேட மறந்தார் ஏ.ஆர்.லெட்சுமணன். செவ்வாய்க்கிழமை பகல் பொழுது முழுவதுமே சாப்பிடாமல் இருந்ததால் அவருக்கு உடல் நிலை மோசமானது. உடனே, சிகிச்சைக்காகத் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அட்மிட் செய்யப்பட்டார். அங்கும் அவரது உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் போய், கடைசியில் மாரடைப்பு வந்து அவரது உயிரைப் பறித்துவிட்டது. இன்று அதிகாலையில் ஏ.ஆர்.லெட்சுமணன் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

இன்று காலையில் தேவகோட்டையில் ஏ.ஆர்.லெட்சுமணனின் இறுதிச் சடங்கு நிகழ்வுகள் நடக்கின்றன. சாதாரண நாட்களாக இருந்திருந்தால் இந்நேரம் ஒட்டுமொத்த செட்டிநாடே தேவகோட்டை நோக்கித் திரும்பியிருக்கும். இது கரோனா காலம் என்பதால் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே இருந்து ஏ.ஆர்.எல். என்று அழைக்கப்படும் ஏ.ஆர்.லெட்சுமணனின் இறுதிச் சடங்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.


nantri https://www.hindutamil.in/

No comments: