அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் – பகுதி 29 – கொட்டுத் தவில் மற்றும் வங்கப்பறை – சரவண பிரபு ராமமூர்த்தி


கொட்டுத் தவில் – தோற்கருவி


கொட்டுத் தவிலை மங்கல இசைக்கருவியான தவிலின் முன்னோடி என்கிறார்கள் இசை ஆராய்ச்சியாளர்கள். தற்கால தவிலை விட சிறியதாக இருக்கின்றது கொட்டுத் தவில். பலா மரம் அல்லது பூவரசு மரத்தைக் குடைந்து உடல் பகுதி செய்யப்படுகிறது. குமலா மரம், கல்நுருஞ்சி ஆகிய மரங்களும் முன்பு பயன்பட்டது. கனு இல்லாத மரப்பாகமே இதைச் செய்ய ஏற்றது என்கிறார் நெருப்பெரிச்சலை சேர்ந்த கொட்டுத் தவில் கலைஞர் திரு அண்ணாதுரை அவர்கள். தவிலை போல் நட்-போல்ட் இல்லாமல் பழைய முறையிலேயே வார்களைக் கொண்டு இத்தவில் கட்டப்படுகிறது. சில காலங்களாக நட்-போல்ட் பொருத்திய கொட்டுத் தவிலும் சிலரால் செய்யப்படுகிறது. பெரும்பாலும் எருமைக் கன்றின் தோலும் மறுபுறம் ஆட்டின் தோலும், சிலர் மாட்டுத் தோலும் பயன்படுத்தி தட்டும் முகங்களை செய்துகொள்கிறார்கள். இந்த வட்டவடிவமான தோல்களில் 11 ஓட்டைகள் இடப்படுகிறது எருமை மாட்டின் தோல் வாரைக் கொண்டு உடல் குதியுடன் சேர்த்துக் கட்டப்படுகிறது. ஒரு ஜான் அளவு இடப்பக்கம் அதைவிட  1-2 இன்ச் அளவு கூடுதல் அளவில் மறுபுறம் உள்ளது. தவிலின் நீளம் 45 சென்டிமீட்டர். குச்சியைக் கொண்டு ஒருமுகமும் கைகளால் ஒரு முகமும் இசைக்கப்படுகிறது. கைகளால் தட்டும் முகத்தை தேவைப்பட்டால் நெருப்பில் வாட்டிக் கொள்கிறார்கள்.


 

இக்கருவியைச் செய்பவர்களும் கொங்கு வட்டாரங்களில் தான் வசிக்கிறார்கள். கோவை கங்கநாயக்கன்பட்டியில் தொன்மையாக இக்கருவியைச் செய்பவர்கள் உள்ளனர். ஈரோடு மாவட்டம், பவானி அன்னா நகர், கின்னிப்பாளையம் ஆகிய இடங்களிலும் தயாரிப்பவர்கள் உள்ளனர். 10க்கும் குறைவான குடும்பங்கள் தான் இத்தொழிலை நிகழ் காலத்தில் தொடர்கிறார்கள் என்கிறார் ஈரோட்டைச் சேர்ந்த பறையிசை பயிற்றுனர் திரு மணிகண்டன் அவர்கள்.

 

கொங்கு தமிழ்நாட்டின் பிரதான இசைக்கருவியான மொடாமத்தளம் போன்றே இக்கருவியும் அப்பகுதி அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இங்கு வாழும் அருந்ததியர் சமூகத்தினர் தான் இதை இசைக்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் இக்கருவியை தவுலு/தவில் என்றே அழைக்கிறார்கள். வட/தென் தமிழகத்தில் இக்கருவியை நாம் காண முடியாது.

 


கொங்கு வட்டார சென்னிமலை காவடி, சிவன்மலை காவடி, பழனி காவடி ஆகியவற்றில் மொடாமத்தளமும் கொட்டுத் தவிலும் தவிர்க்க முடியாத இசைக்கருவிகளாக புழங்கி வருகின்றன. அரைசட்டி, உருட்டி, நாயனம் ஆகியவையும் உண்டு. கொங்கு பகுதி கருப்பராயன், அன்னமார் சாமி, சாம்புகன் ஆகிய தெய்வங்களைச் சாமி அழைக்கவும், அவர்களின் பூசை, பலி, விழாக்கள் ஆகியவற்றில் இசைக்கப்படும் முக்கிய இசைக்கருவி கொட்டுத் தவில். தவில் அடிப்பவருக்கும் தவிலுக்கும் மாலை மரியாதை எல்லாம் உண்டு இக்கோவில்களில். கொங்கு பகுதியில் நடைபெறும் அம்மன் கோவில் விழாக்களிலும் மொடாமத்தளத்தின் துணைக் கருவியாகவோ அல்லது முதன்மை கருவியாகவோ கொட்டுத்தவில் இசைக்கப்படும். கொட்டுத்தவிலுக்கு பல்வேறு அடி வகைகள் உள்ளன. திருவிழாவில் சாமி இறங்கியவர்கள் எனக்கு இந்த அடி வேண்டும் என்று கேட்டால் அதை இக்கலைஞர்கள் இசைப்பார்களாம். மாரியம்மன், கருப்பராயன்/அண்ணமார் என்று தெய்வங்களுக்கு தனி அடி வகைகள் உள்ளன. கரகம்/தீர்த்தம் எடுக்க என்று ஒரு வகை அடி. திருமண நிகழ்வுகளிலும் முன்பு இசைக்கப்பட்டது இக்கருவி. இறப்பு வீடுகளில் இக்கருவி இசைத்து ஒப்பாரி பாடல்கள் பாடுகிறார்கள். கல்யாண சாவு எனப்படும் நன்கு வாழ்ந்து இறப்பவர்களின் இறப்புகளில் அதுவும் கரூர், வெள்ளக்கோவில் போன்ற குறிபிட்ட சில பகுதிகளில் கொட்டுத் தவில், நாயணம், ஜால்ரா ஆகியவற்றுடன் புல்லாங்குழலும் இசைத்து ஒப்பாரி பாடல் பாடும் வழக்கம் உள்ளது. இதை கல்யாண சாவு கொட்டு முழக்கு என்று அழைக்கிறார்கள். இம்மரபும் அருகி வருகின்றது.

 


கொங்கு நாட்டு பெருஞ்சலங்கையாட்டத்தில் மண்மேளம், கொம்பு, தாசா, கொட்டுத்தவில் ஆகியவை முக்கிய இசைக்கருவிகள். இவ்வாட்டத்தில் மண்மேத்தின் துணைக்கருவியாக இத்தவில் முழக்கப்படுகிறது. கருப்பராயன் அடி, தாரைக்கொட்டு அடி ஆகியவை சலங்கையாட்டத்தில் இசைக்கப்படும் கொட்டுத்தவில் அடிகள். ஈரோடு மாவட்டம் நசியனுர் கூரபாளையம் கிராமம் தோட்டாணி காலனியில் பல கொட்டுத்தவில் இசைக்கலைஞர்கள் உள்ளனர். மூத்த கலைஞர்கள் பலரும் உள்ளனர். மிக நேர்த்தியாக இசைக்க வல்லவர்கள். இசைத்து உழைக்கிறார்கள். ரிட்டையர்மண்ட் அறியா உழைப்பாளிகள். சத்தியமங்கலம் பகுதிகளிலும் நாம் இக்கலைஞர்களை அதிகம் காணலாம். பெரும்பாலும் முதியவர்களும் நடுத்தர வயதைக் கடந்த சிலரும் தான் இக்கலையில் உள்ளனர். இதன் எதிர்காலம் கேள்விக்குறி தான். எந்த கலையும் கலைஞனும் போற்றப் பட வில்லையோ அக்கைலை மெல்ல அழியும். கொங்கு தமிழர்கள் கைகளில் தான் இக்கருவியின் எதிர்காலம் உள்ளது.

 

வங்கப்பறை – தோற்கருவி

 

கோவில்களில் கொட்டுத் தவிலோடு சேர்த்து இசைக்கப்படும் மற்றொரு பழம்பெரும் இசைக்கருவி வங்கப் பறை (வங்கு - குடைந்து உருவாக்கின ஒரு பகுதி. எலி வங்கு- எலி மண்ணைக் குடைந்து தன் இருப்பிடத்தை உருவாக்கின பகுதி) வங்கப்பறை என்பது தென்னை அல்லது பனை மரத்தைக் குடைந்து உருவாக்கி இசைக்கருவி. இது மரத்தில் இசைக்கருவி உருவாக்கி முறையின் ஆதி தொழில் நுட்பம். மொடாமத்தள இசைக்கருவியின் துணைக்கருவி. இதிலிருந்து தான் கொட்டுத் தவில் பரிணமித்தது என்கிறார்கள்.  "வாரிட்ட வங்கப் பறையும் தாரிட்ட தோல்கயிறு மத்தாளம் நாதசுவரமும்'' என்பது கொங்கு நாட்டு சாமி அழைப்பு பாடல். வங்கப்பறையை இப்பொழுது மரத்திற்கு பதிலாக வெண்கலத்தால் உருவாக்கி நட்போல்ட் பொருத்தி சிலர் இசைக்கிறார்கள்.  மரத்தில் செய்த இந்தப் பழைய பறை திருப்பூர் நெருப்பெரிச்சல் காளியப்பனிடம்(சலங்கையாட்ட பயிற்றுனர்) உள்ளது. சாமி அழைப்புப் பாடலைச் சொன்னர் நம்பியூர் இருகாளூர் சி.ராசு அவர்கள். இந்த அரிய தகவல்களை நமக்குப் பகிர்ந்தவர் வரலாற்று ஆய்வாளர் பல்லடம் திரு பொன்னுசாமி அவர்கள்.

 


காணொளி:

https://www.youtube.com/watch?v=xEFnmXTjZVI

https://www.youtube.com/watch?v=LXcH-crCewQ&t=35s

https://www.youtube.com/watch?v=_3ewYCLhF_Y

https://www.youtube.com/watch?v=NLV8lUMk3hQ

https://www.youtube.com/watch?v=F_0OifNCLnA

https://www.youtube.com/watch?v=KQWj03gSOM0&t=8s

https://www.youtube.com/watch?v=pMQdC_PdiDg

https://www.youtube.com/watch?v=BwKTAShoj4s

காவடி:

https://www.youtube.com/watch?v=iwDRGJPb_wA

https://www.youtube.com/watch?v=h8u30aeU0zY&t=187s

https://www.youtube.com/watch?v=6UjXRBKXDpw

https://www.youtube.com/watch?v=9GpYf3PHy6s

வங்கப்பறை:

https://www.youtube.com/watch?v=CkFOoZyzqnk&feature=youtu.be

https://www.youtube.com/watch?v=H3ppBktRtEA&feature=youtu.be

 


-சரவண பிரபு ராமமூர்த்தி

 

நன்றி:

1.   திரு மணிகண்டன்,பறை பயிற்றுனர், ஈரோடு

2.   வரலாற்று ஆய்வாளர் பல்லடம் திரு பொன்னுசாமி அவர்கள், பல்லடம்

 


No comments: