ஸ்மார்ட் சிட்டி -மதுரைக் காஞ்சி தரும் கலைச் சொற்கள்


மதுரைக்காஞ்சி நூலை எடுத்து படித்தபோது அதிலுள்ள சில தகவல்கள் அறிந்து பிரமித்துப் போனேன். ஆங்கில வார்த்தைகளுக்கு இணையான தமிழில் கலைச் சொற்கள் கண்டுபிடிப்பதற்கு 3 பவுண்டு எடையுள்ள மூளையைப் போட்டு ரொம்பவே நாம் கசக்குகிறோம். துறைசார் பெயர்கள், தொழில்நுட்ப பெயர்கள் புதிது புதிதாக உண்டாக்குவதற்கு கலைச்சொல்லியியல் ஏற்படுத்தி நிறைய செலவுகள் அரசாங்கம் செய்கிறது.
அதற்குத் தேவையே இல்லை என்றுதான் நான் சொல்வேன். வெறும் மதுரைக் காஞ்சியை புரட்டினாலே போதும். அதில் ஏராளமான கலைச்சொற்கள் காணப்படுகின்றன. ஏனங்குடி தாடிவாலா, பொதக்குடி அஹ்மத் என்பதைப்போல இதை எழுதியவர் பெயர் மாங்குடி மருதனார். மாங்குடி மைனர் என்ற பெயரில்கூட நம்ம வனிதா மேடத்தோட தோப்பனார் நடித்த ஒரு திரைப்படம் வெளிவந்தது.
வேலையாட்கள் தேவை என்ற விளம்பரம் பத்திரிக்கைகளில் வரும்போதெல்லாம் மற்ற விவரங்களை யாவும் தமிழில் எழுதி விட்டு REQUIRED: MECHANIC, DRILLER, WORKER, SKILLED WORKER, CROP CUTTER, TURNER என்று ஆங்கிலத்திலேயே எழுதுவார்கள்.
இதற்கான கலைச்சொற்கள் மதுரைக்காஞ்சியிலேயே நான் படித்து அசந்துப் போனேன். இவை அனைத்திற்கும் முறையே கம்மியர், குயினர், வினைஞர், வன்கை வினைஞர், அரிநர், கடைநர் போன்ற இணையானச் கலைச்சொற்களை அதில் காண முடிகிறது.


உதாரணமாக மெக்கானிக் என்பதற்கு நாம் இயந்திர வல்லுனர், பொறிமுறையாளர், பழுதுபார்ப்பவர் என்று பல்வேறு பெயர்களைக் கூறுகிறோம்.
மதுரைக்காஞ்சியில் Mechanic என்பதற்கு கம்மியர் என்ற சொல் கையாளப்பட்டுள்ளது
“சிறியரும் பெரியருங் கம்மியர் குழீஇ (பாடல் வரி.521)”
நற்றிணை, புறநானூறு, நெடுநல்வாடை, மலைபடு கடாம் ஆகிய நான்கு நூல்களுள் ஆறு இடங்களில் இச்சொல்லாடலை நாம் காண முடிகிறது.
மேலும் நெடுநல்வாடையில் “கைவல் கம்மியன் கவின்பெறப் புனைந்த செங்கேழ் வட்டஞ் சுருக்கிக் கொடுந்தறிச் சிலம்பி வானூல் வலந்தன தூங்க” (நெடு. 56 - 59)
என்ற வரிகளைக் காணலாம். “கம்மியர்” என்ற சொற்பதம் கைவினைஞர் என்ற பொருளிலும் கையாளப்பட்டுள்ளது.
குயினர் என்றால் என்ன தெரியுமா? நான்கூட குயினர் என்றால் ராணியிடம் (குயின்) பணிபுரியும் சேவகர் என்று நினைத்தேன். (கஷ்டப்பட்டு ஜோக்கடித்ததற்கு இந்த இடத்தில் தயவு செய்து சிரிக்கவும்). குயினர் என்றால் Driller என்று பொருள்.
“கோடுபோழ் கடைநருந் திருமணி குயினரும் (பாடல் வரி :511)”
என்ற வரியை பாருங்கள். அப்படியென்றால் சங்க காலத்திலேயே நம்ம ஆசாமிங்க Black & Decker, Hitachi மாதிரியான Hammer Drill எல்லாம் வச்சு அமர்களப் படுத்தியிருந்தாங்க என்றுதானே அர்த்தம்?
Unskilled Worker, Skilled worker இந்த இருவருக்கும் தனித்தனிப் பெயர்கள்.
WORKER என்பதற்கு வினைஞர் என்று அழைப்பர்.
“நனந்தலை வினைஞர் கலங்கொண்டு மறுகப் (பாடல் வரி.539)”
இதுவே தொழில்நுட்பம் தெரிந்த SKILLED WORKER ஆக இருந்தால் அவருக்குப் பெயர் வன்கை வினைஞர்
“வன்கை வினைஞர் அரிபறை யின்குரல் (பாடல் வரி.262)
CROP CUTTER க்கு “அரிநர்” என்று பெயர்.
“நெல்லி னோதை அரிநர் கம்பலை (பாடல் வரி.110)”
நாகப்பட்டினம் பாலிடெக்னிக்கில் சேர்ந்து மாணவர்கள் படிப்பார்கள். “என்னப்பா படிக்கிறே?” என்று கேட்டால் “டர்னர் வேலைக்கு படிக்கிறேன்” என்பார்கள்.
டர்னருக்கு மதுரைக்காஞ்சியில் குறிப்பிட்டிருக்கும் பெயர் கடைநர்.
“கோடுபோழ் கடைநருந் திருமணி (பாடல் வரி.511)”
என்ற சொல்லாடலைக் காண முடிகிறது
நாம் போயஸ் கார்டன் வீட்டைப்போல பெரிய வீடுகளை பங்களா என்று சொல்கிறோம் அல்லவா? சங்க காலத்தில் இதனை வளமனை என்று அழைத்தார்கள். அதற்காக பங்களாதேஷ் நாட்டை வளமனை தேசம் என்று அழைக்கலாமா என்று கேட்டு என்னைப் படுத்தக்கூடாது, ஆமாம்.
அய்யங்கார் பேக்கரி தமிழ்நாடு முழுதும் இருக்கின்றன. அந்த காலத்தில் இந்த கேக்கு கடைக்குப் பெயர் பண்ணியக்கடை.
“பல்வேறு பண்ணியக் கடைமெழுக் குறுப்பக்” (பாடல் வரிகள் 661)
கேக் என்பதற்கு பண்ணியம் என்று பெயர்.
பல்வேறு பண்ணியந் தழீஇத்திரி விலைஞர் (பாடல் வரிகள் : 405)
இப்ப மொழி ஆய்வாளர்கள் எல்லாம் சேர்ந்து மண்டையை உடைத்துக் கொண்டு ஆளாளுக்கு கேக்குக்கு புதுப் பெயர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். பலுக்கல், கடினி, கட்டிகை, அணிச்சல், இனிப்பப்பம், இனியப்பம், இன்னப்பம், குதப்பிய வெதுப்பு, துரப்பணக்கசடு, சுட்ட அப்பம், அப்பப்பா.. இன்னும் என்னென்ன பெயர்கள் கண்டுபுடிச்சு நம்மள சோதிக்கப் போறாங்களோ தெரியலே.
பண்ணியம் என்ற அழகான தமிழ்ப்பெயர் சங்க காலந்தொட்டு இருக்கையில் ஏனிந்த சோதனை என்று புரியவில்லை. (இதைப் படித்துவிட்டு மொழி ஆய்வாளர்கள் என் மீது புலியாய் பாயக்கூடும்)
ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களை நாம் Honourable என்று சொல்வதற்கு “மேதகு” என்று சொல்கிறோம். இதனை மாங்குடி மருதனார் அன்றே மேதகு என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறார்.
“மேதகு தகைய மிகுநல மெய்திப் (பாடல்வரிகள் 565)”
சரி Honourableக்கு சொல்லியாச்சு. V.I.P. களுக்கு என்ன சொல்வது என்று நீங்கள் கேட்கலாம். அதற்கும் நம் மாங்குடி மருதனார் சொல்லிவிட்டார். விழுமியர் என்று சொல்லணுமாம்.
“உயர்ந்த தேஎத்து விழுமியோர் வரினும் பாடல் வரி. 200”
Honourary Title என்பதற்கு “காவிதி” என்று பெயர்
செம்மை சான்ற காவிதி மாக்களும் (பாடல் வரி 499)
JUDICIAL COURT என்பதற்கு கோர்ட், நீதி மன்றம் என்று நாம் எழுதுகிறோம், அதைவிட அழகான சொல்லாடலை சங்ககாலத்தில் வழங்கி இருக்கிறார்கள்.
அறங்கூறு அவையம் என்பதுதான் அந்த அழகிய சொல்லாடல். ஆகா!.. என்னவொரு அற்புதமான சொற்பதம்!!
சிறந்த கொள்கை அறங்கூ றவையமும் (பாடல் வரி 492)
#BANNER etc.,,,
இப்போதுதானே டிஜிட்டல் பேனர். அந்த காலத்திலும் பேனர், கட்-அவுட், எல்லாம் வைத்திருக்கிறார்கள் போலும். ரசிகர் மன்றங்கள் செய்வதுபோல் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் அன்று செய்தார்களா என்பது தெரியாது. பேனருக்குப் பெயர் பதாகை (பாடல் வரி 373).
அதுமாத்திரமல்ல
SLIPPERக்கு தொடுதோல் (பாடல் வரி.636),
NECKLACEக்கு மதாணி (பாடல் வரி.461)
TERRACEக்கு அரமியம் (பாடல் வரி.451)
கடைத்தெரு Day & Night சங்க காலத்துலே இருந்துச்சுங்க. Shift system என்று வைத்துக் கொள்ளுங்களேன். 24 x 7 Round a clock Service. காலை ஷிஃப்ட் கடைத்தெருக்குப் பெயர் நாளங்காடி :
“நாளங் காடி நனந்தலைக் கம்பலை (பாடல் வரி.430)”
EVENING BAZAARக்குப் பெயர் அல்லங்காடி :
அல்லங் காடி அழிதரு கம்பலை (வரி.544)
நாமதான் இப்ப டிஜிட்டல் இந்தியா, ஸ்மார்ட் சிட்டி, சப்கா சாத் சப்கா விகாஸ் என்றெல்லாம் பீத்திக்கிறோம். அப்பல்லாம் தமிழ்நாடு முழுவதும் ஸ்மார்ட் சிட்டியாதாங்க இருந்திருக்கு. அந்த பான்பராக்கு வாயன்களுக்கு கொஞ்சம் எடுத்துச் சொல்லுங்க

No comments: