அணுங்கி ஒருகுரல் மீண்டும் சிணுங்குது
தன்னையும் வெளிக் காட்டிட நினைக்குது
இன்னமும் நம்பிட இருக்குது தமிழ்ச்சனம்
இதனால் தெறிக்குது அவர்களின் உரைகள்
ஏனென்றால் தமிழர் உளவியல் அடிமைகள்
தன்னினம் பிறனால் இழிக்கப் படினும்
மகிழ்ந்து சிரித்துக் கருத்தினை உவந்து
எங்களைப் பிழையென்று எப்போதும் ஏற்கும்
சங்கடக் குழுவென்று உலகமே நம்புது
இந்த எண்ணத்தை வலுவாய்ப் பற்றி
எடுத்துத் தொடங்குகிறார் திரும்பவும் பழங்கதை
இவரின் செய்தியை கேட்கநாம் தயார்தான்
காரணம் இன்னமும் புலிகளில் வெறுப்புண்டு
இராசிவ் காந்தியைக் கொன்றது புலிகளாம்
அன்ரன்பாலா தன் காதில் சொன்னாராம்
அவர்போன பின்தான் அறிக்கை போடுறார்
உயிருடன் இருக்கையில் உரைக்காது விட்டதேன்
உரியவர் உண்மையைச் சொல்லா நிலையில்
உதிர்ப்பவை யாவும் கற்பனைக் கதைகளே
சமாதானப் பிரியராய் சந்தினுள் நுழைந்து
வெள்ளைப் புலியென சிங்களம் சொல்லிட
வெட்கப் பட்டுச் செல்லமாய் நெளிந்து
தொன்நூற் றெட்டில் உள்ளே புகுந்து
தமிழர் தேசம் அழுகையில் துவண்டு
குருதியால் நிறைந்து பிணங்களால் குவிந்து
உணவின்றி வறண்டு உயிருக்காய் அலைந்து
எல்லாம் முடிந்து பதைத்துத் தவித்து
ஏங்கிப் பயந்து சிதைந்து கலைந்து
வழிதேடி ஓடிப் போகும் போது
எதுவும் செய்யும் வலிமை யற்று
இரண்டா யிரத்தொன்பதில் வெளியே சென்று
இப்ப சொல்லுறார் புலிகளில் வெறுப்பாம்
கருத்திட்டுத் தன்னையும் பெருமையாய்க் காட்டுறார்
மேலும் அவரே அறிவுரை பகார்கிறார்
வன்முறை தவிர்த்துக் களத்திலும் புலத்திலும்
நீண்ட நெடிய அமைதிப்போர் நடத்தி
வெல்லலாம் தமிழர் நல்வழி அதுவென்று
அரசுகள் எல்லாம் ஆயுதம் தாங்கி
சுட்டுப் பொசுக்கலாம் துரத்தி விரட்டலாம்
அப்பாவிக் குடிகளை அழித்து முடிக்கலாம்
அவர்க்கது அனுமதி தப்பே யில்லை
ஆனால் மக்கள் அமைதி காத்து
அறவழிப் போரினை நடத்த வேண்டும்
இப்படி மதியுரை கூறுவோர் எல்லாம்
சொல்லுக ஒருமுறை அரசு செய்வோர்க்கு
ஆயுதம் தவிர்த்து நீதியை உணர்ந்து
மக்கள் குறையினை மதித்து அறிந்து
அனைவரும் சமமாய் ஆக்கிடின் நலமே
சுற்றும் உலகின் பொதுவிதி எதுவெனில்
வெற்றியைப் போற்றித் தோல்வியை இழித்து
தாங்கள் வாழ வழியினைத் தேடல்
நல்லவர் என்று சிரிப்புடன் கூறல்
விடுதலைப் புலிகளை விடுவோம் ஒருபுறம்
இனிமேல் ஒன்றைத் தெளிவாய் புரிவோம்
தறிகெட்டுத் தவித்த தமிழருக் குதவிட
தாங்கள் செய்திட்ட செயல்கள் சொல்லுக
வெள்ளைக் கொடியுடன் உயிரினை விரும்பி
வெறுங்கை உயர்த்தி அடைக்கலம் கேட்டோர்
எங்கென்று தெரியா அவலமே எச்சம்
நாட்டினில் இருந்து வேற்றிடம் சென்றோன்
அகதியாய் தனிமையில் நொந்து வாழ்கிறான்
மனைவி பிள்ளைகள் ஊரினில் இருக்க
மாற்று நாட்டில் அநாதை ஆயினர்
அங்கும் பலபேர் செத்தும் போயினர்
எங்களுக்கும் அதுவெறும் செய்தி மட்டுமே
தமிழர்க்கு நாம் கவலைப்படவே மாட்டோம்
வென்றவன் உலகில் நன்றே வாழ
தோற்றவன் நிலையை சிந்திக்க யாருமில்லை
கூத்தின் கோமாளி சிரிக்க வைப்பதுபோல்
உத்திகள் புதிதாய் எடுத்து விடுகிறார்
முடியாமை கண்டால் ஒதுங்கிடல் பண்பு
மற்றோரைக் குறை கூறிடல் இழிவு
விறைப்பாய் நிமிர்ந்தவர் வீழ்ந்தது சோகம்
நொந்தவன் தமிழன் வெந்தது தமிழ்நிலம்
தாழ்ந்தது தமிழினம் வீழ்ந்தது தமிழ்க்குடி
உயிரீந்த பெரியோரை குறைகாணல் சரியல்ல
உயர்வாக நீங்கள் சிறப்பாக வாழுங்கள்
இழுக்காதீர் வீரர்களை உரைக்காதீர் புதுக்கதைகள்
அவர்கள்போல நாமும் அடிமையென உணர்கையிலே
தமிழினம் விடிவுபெறும் தரணியில் உரிமையுடன்
No comments:
Post a Comment