கமுக்கமான அமுக்கம் - இதய நோய் பற்றி ஆழமான வரிகள் -DR-- சிவாணி பத்மராஜா


 இதயம் எனும் பம்பி  வைத்து  இடை விடாது எம்ப வைத்து  

அதையும் இதையும் அனுப்பி வைக்க  அங்கோர் வலைப் பின்னல் வைத்து  

குருதிப் புனல் ஊற்றி வைத்து  குறிப்பறிந்து ஓட விட்டு,   

கலனில் புனல் ஓடும் போது  கணக்கீடாய் அமுக்கம் வைத்து,  

அதிகரிக்கும் பொழுதுகளில்  அதில் எம்மை அமுக்க வைக்கும்  

அந்தரத் தந்திரமே - குருதி  அமுக்கம் எனும் மந்திரமே.     

மேலொரு இலக்கம்  கீழொரு இலக்கம்  மேதினியிலே இது   மருத்துவர் வழக்கம்,  

மாறுதல் தொடக்கம் - பல   மாற்றங்கள் தொடரும்.  

புரியாத நிலையில்  போரொன்று தொடங்கும்.  

அறியாத வகையில்  அழிவு கதை எழுதும்.    

ஆரவாரமில்லா அமுக்க வெடியில்  அத்திவாரங்கள் ஆடும் - 

நாடித்  துவாரங்கள் மூடும்  - நெஞ்சில்  பாரங்கள் தோன்றும்  

பலமாகும் போது - குருதிப்  பாதைகள் மூடும் - வாழ்வு  பாடையைத் தேடும்.     

விசை என்னும் கசை பட்டு - இதயத்  தசைகள் தடிக்கும்.   

இடிப்புகள் தொடர  இதயம் களைக்கும்,   உனக்கும் களைக்கும்.  


இதய இசையமைப்பு மாறும்  இதயத்தின் அறையொன்றில்  இருட்டடிப்பு நடக்கும்.  

இடம் காணும்  குருதி  இங்கு கட்டிகளைக் கட்டும்.  கட்டிகள் களம் காணப் - 

புதுக்  கலகங்கள் தொடங்கும்.- 

மூளையின்  முட்டியைத் தட்டியுனை  முடக்கிப் போடும்.     

மூளையில் முழக்கம்  முடிச்சுக்கள் வெடிக்கும்.  காலும் அலை, வாழ்வைக்  கவ்வ நிலை மாறும்  

அன்றாடம் அமுக்கம்  அங்கு கதை எழுத,   அள்ளி வைத்த ஞாபகம்  

அலை அழித்த எழுத்தாகும்,  அங்கு ஞானம் விலை போகும்     

மூளை வழிகளில்  முரசு முழங்க  முயற்சியாய் அழற்சி   முன்னேற்றமடையும்,  

சுழற்சிகள் தயங்கும்   சுவர்ப் படிவு நடக்கும்.  சிரசு நாடிகள்  சிதிலமடைய   

உடம்பில் பாதி  உயிரற்றுப் போகும்   இருக்கின்ற பாதி   இதை பார்த்து ஏங்கும்.     

நயனங்களின் பயணங்களில்  நகர்கின்ற அமுக்கம்  

பணயங்களாய் உந்தன்  பார்வையைக் கேட்கும்.  

கண்ணிலும் வெடி வைக்கும்  கண்ணி வெடியிது  கவனங்கள் தேவை.     

சிறுநீரகத்தோடு  சீண்டிடும் அமுக்கம்  சிறுகதை எழுத  சிந்தனை வைக்கும்.  

பாரா முகமாய் நீங்களிருக்கப்  பாரதம் எழுதும் - உடலில்  பழுது நீர் தங்கும்,  

பாரம் ஏறும்.  சாரம் வடித்துச்  சமநிலை பேண - 

வைத்தியச்  சந்நிதி வந்து  சார்ந்திருக்க நேரும் - 

உறுப்பை  தேர்தெடுத்துத் தருவாரோ என்று  தேதி வைக்க நேரும்    

அமுக்கத்தின் கமுக்கக்    கதை வந்து சொன்னோம்.  

குமுக்கத்தில் விழிப்பேற்றிக்   குறைக்கும் வழி  காண்போம்.  

அரக்கனை இனங் காண   அடிக்கடி அளப்போம்.  

அவனெல்லை தாண்டுகையில்  ஒளடதம் எடுப்போம்.  

மருத்துவர்கள் உள்ளார்கள்   மனதிலதை வைப்போம்.  

மயக்கக் குணம் போக்கி    மாற்றும் வழி காண்போம்.    

இடர் வந்து சேர முன்னர்   இலக்குகளை வைப்போம் இரண்டிலக்க ஆட்சியிலே   

உயிர் இழக்க மாட்டோம்  உப்பென்ற தப்பெம்மை  உறுத்தாமற் குறைப்போம்   

உடல் நிறை கூடாமல்  உடற் பயிற்சியினைச் செய்வோம்.  

உணவும் ஒரு மருந்தென்று   உறுதியொன்று எடுப்போம்   

உண்பதற்காய் வாழோம்  - இனி   வாழ்வதற்காய் உண்போம்.  

உள்ளது ஒரு வாழ்வு   உயிர் நீட்டி வைப்போம்   

உறக்கத்தைத்  துறக்காது   ஊக்க வழி காண்போம்.  

புகையோடு பகை கொள்ளும்   புனித வழி காண்போம்.  

மதுவுக்கு மறுப்பெழுதி - புது   மனிதராய் வாழ்வோம்.  

மனப் பாரம் குறைக்கும்   மாண்பு வழி  காண்போம்,  

மந்தையாய் வாழோம் - சுக   மார்க்கம் ஒன்று காண்போம்.


No comments: