உலகச் செய்திகள்

காந்தியின் மூக்குக்கண்ணாடி 340,000 டொலர்களுக்கு ஏலம் 

தடுப்பு மருந்தை சோதிக்க ஒப்புதல்

அமெரிக்காவில் கறுப்பினத்தவர் கொலையால் புதிய போராட்டம்

துருக்கி–கிரேக்கம் பரஸ்பரம் ‘போர் ஒத்திகை’ அறிவிப்பு

காசாவில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்

இரண்டு ஏவுகணைகளை செலுத்தி அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை

பலஸ்தீனர் கத்திக்குத்து: இஸ்ரேலிய மதகுரு பலி

கிரைஸ்ட்சேர்ச் ஆயுததாரிக்கு பரோலில் வராத வகையில் ஆயுள் தண்டனை

துப்பாக்கிதாரிக்கு பிணையில்லா முழு ஆயுள் தண்டனை விதிப்பு

அமெரிக்க – ரஷ்ய இராணுவ வாகனங்கள் சிரியாவில் ஒன்றோடொன்று மோதி விபத்து


காந்தியின் மூக்குக்கண்ணாடி 340,000 டொலர்களுக்கு ஏலம் 

இந்தியாவின் தேசத் தந்தை எனப் போற்றப்படும் மகாத்மா காந்தி அணிந்த தங்கமுலாம் பூசப்பட்ட மூக்குக்கண்ணாடி 340,000 டொலருக்கு ஏலம் போயுள்ளது.

அந்தக் கண்ணாடியை மகாத்மா காந்தி தமது உறவினருக்கு அளித்ததாக, குறிப்பு ஒன்றுடன் நான்கு வாரங்களுக்கு முன்பு ஒருவர் பிரிட்டனில் உள்ள ஈஸ்ட் பிரிஸ்டோல் ஏலக் கடையின் கடிதப் பெட்டியில் விட்டுச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தகவலை ஏல நிறுவனம் தனது இன்ஸ்டகிராம் பதிவில் குறிப்பிட்டது.

1920 அல்லது 1930களில் தென்னாப்பிரிக்காவில் உள்ள பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்தில் பணிபுரிந்த தம் உறவினருக்கு அந்தக் கண்ணாடியை மகாத்மா காந்தி வழங்கியதாக அந்த நபர் குறிப்பிட்டிருந்தார்.

அந்தக் கண்ணாடி சுமார் 15,000 பெளண்ட் விலைக்கு ஏலம் போகக்கூடும் என்ற எதிர்பார்ப்புகளை விஞ்சி பலமடங்கு அதிக விலைக்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.

“இந்தக் கண்ணாடி சரியில்லை என்றால் எறிந்துவிடுங்கள்” என்று கண்ணாடியை வழங்கிய நபர் குறிப்பிட்டதாக ஏல நிறுவனத்தைச் சேர்ந்த அண்ட்ரூ ஸ்டோவ் குறிப்பிட்டார்.  நன்றி தினகரன் 






தடுப்பு மருந்தை சோதிக்க ஒப்புதல்

கொவிட்–19 உத்தேசத் தடுப்பு மருந்தை மனிதர்களிடம் சோதிப்பதற்கு சீனா ஒப்புதல் வழங்கியுள்ளது.

பூச்சிகளின் உயிரணுக்களில் உள்ள புரதத்தைக்கொண்டு அந்தத் தடுப்புமருந்துகளைத் தயாரிக்கவிருப்பதாகத் தென்மேற்கு நகரமான செங்டுவின் உள்ளூர் அரசு தெரிவித்துள்ளது.

குறைந்த செலவில் தடுப்புமருந்துகளைத் தயாரிக்க சீனா முயன்று வருகிறது. சீனாவில் பூச்சிகளின் உயிரணுப் புரதத்தைப் பயன்படுத்தித் தடுப்பு மருந்துகளை தயாரிப்பது இதுவே முதல்முறை.

அது பெரிய அளவில் தடுப்புமருந்துகளைத் தயாரிக்க வகைசெய்யும் என்று செங்டு நகர அரசு வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.   நன்றி தினகரன் 






அமெரிக்காவில் கறுப்பினத்தவர் கொலையால் புதிய போராட்டம்

கறுப்பினத்தவர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தை தொடர்ந்து அமெரிக்காவின் விஸ்கொசினில் இரண்டாவது நாளாகவும் கட்டடங்கள் மற்றும் கார்கள் தீக்கிரையாக்கப்பட்டு மோதல் இடம்பெற்றுள்ளது.

29 வயதான ஜகப் ப்ளெக் என்ற அந்த கறுப்பின இளைஞர் தனது கார் வண்டியை நோக்கிச் சென்று அதன் கதவை திறக்கும்போதே பொலிஸார் பல தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸாரை கண்டித்தும் நிறவெறிக்கு எதிராகவும் போராட்டம் வெடித்துள்ளது.    

இதனை அடுத்து உள்ளூர் பொலிஸாருக்கு உதவியாக தேசிய காவல் படைக்கு ஆளுநர் டோனி எவர்ஸ் அழைப்பு விடுத்துள்ளார். நகரில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டபோதும் அதனை சில ஆர்ப்பாட்டக்காரர்கள் மீறியுள்ளனர்.

ஏற்கனவே கடந்த மே மாதம் மினசொட்டாவில் ஜோர்ஜ் பிளொயிட் என்ற கறுப்பினத்தவர் பொலிஸாரின் பிடியில் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து நிறவெறி மற்றும் பொலிஸ் வன்முறைகளுக்கு எதிராக அமெரிக்கா எங்கும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தமை குறிப்பிடத்தக்கது.  நன்றி தினகரன் 







துருக்கி–கிரேக்கம் பரஸ்பரம் ‘போர் ஒத்திகை’ அறிவிப்பு

கிரேக்க தீவான கிரீட்டுக்கு அப்பால் துருக்கி மற்றும் கிரேக்கம் பரஸ்பரம் கடற்படை பயிற்சிகளை மேற்கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளன.

கிழக்கு மத்தியதரைக் கடலில் எரிவாயு மற்றும் எண்ணைக்கு உரிமை கோரும் பதற்றம் அதிகரித்திருக்கும் நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த பகுதியில் வேறு கப்பல்களை தவிர்த்துக்கொள்ளும்படி துருக்கி உத்தியோகபூர்வ எச்சரிக்கையை விடுத்துள்ளது. நில அதிர்வு ஆராய்ச்சி கப்பலின் செயற்பாட்டை நீடிப்பதாக துருக்கி அறிவித்திருக்கும் நிலையிலேயே கிரேக்கம் இங்கு போர் ஒத்திகை பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இரு தரப்புக்கும் இடையிலான பதற்றத்தை தணிக்கும் முயற்சியாக ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் ஹெய்கோ மாஸ், துருக்கி மற்றும் கிரேக்கத்திற்கு பயணத்தை ஆரம்பித்துள்ளார். கிரீட் கடலுக்கு அப்பால் மற்றும் சர்ச்சைக்குரிய சைப்ரஸ் கடல் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பில் இரு நேட்டோ அங்கத்துவ நாடுகளான துருக்கி மற்றும் கிரேக்கத்திற்கு இடையே இழுபறி ஏற்பட்டுள்ளது.

தவிர, கருங்கடலில் பெருமளவு இயற்கை எரிவாயு இருப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக துருக்கி கடந்த வாரம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 






காசாவில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்

இஸ்ரேல் எல்லையில் தீயை பரவச் செய்யும் பலூன்களை பறக்கவிடுவதற்கு பதில் நடவடிக்கையாக காசாவில் ஹமாஸ் இலக்குகள் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் மற்றும் பீரங்கிகள் கடந்த திங்கட்கிழமை இரவும் தாக்குதல் நடத்தியுள்ளது.

காசாவில் இருந்து ரொக்கெட் குண்டு வீச்சுகள் மற்றும் தீப் பந்தத்துடனான பலூன்கள் தொடர்ந்து விடப்படுவதால் கடந்த ஓகஸ்ட் 6 ஆம் திகதி தொடக்க காசா மீது இஸ்ரேல் கிட்டத்தட்ட நாளாந்தம் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

“தெற்கு காசாவில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்குச் சொந்தமான இராணுவ நிலைகள் மற்றும் நிலத்தடி தளங்களை போர் விமானங்கள், பீரங்கிகள் மற்றும் விமானங்கள் தாக்கின” என்று இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டது. பலஸ்தீனர்கள் விடும் தீமூட்டும் பலூன்கன்களால் தெற்கு இஸ்ரேலின் விவசாய நிலங்களில் தீச் சம்பவங்கள் பரவலாக ஏற்பட்டிருப்பதோடு இதனால் பயிர்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

இதற்கு பதில் நடவடிக்கையாக காசா மீதான முடக்கத்தையும் இஸ்ரேல் கடுமையாக்கியுள்ளது.  நன்றி தினகரன் 





இரண்டு ஏவுகணைகளை செலுத்தி அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை

தென் சீனக் கடல் பகுதியில் சீனா இரண்டு இடைத்தொலைவு ஏவுகணைகளைப் பாய்ச்சியதாகத் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவை வெளிப்படையாக எச்சரிக்கும் வகையில் சீனா அவ்வாறு செய்திருப்பதாகக் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர். தனது இராணுவப் பயிற்சிகளை உளவுபார்க்க அமெரிக்கா விமானத்தை அனுப்பியதாக சீனா குற்றஞ்சாட்டியது. இந்நிலையில் நேற்று தென் சீனக் கடல் பகுதியில் இடைத்தொலைவு ஏவுகணைகள் பாய்ச்சப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதில் ஒன்று விமானதாங்கிக் கப்பலை அழிக்கக்கூடியது என்று செய்தி வெளியாகியுள்ளது.

இந்த இரு ஏவுகணைகளும் ஹய்னன் மாகாணம் மற்றும் பரசல் தீவுகளுக்கு இடையே ஏவப்பட்டுள்ளன.

தென்சீனக் கடலுக்கு சீனா உரிமை கொண்டாடுவது தொடர்பாக அமெரிக்கா எதிர்ப்புத் தெரிவித்து வருவதால் இரு நாடுகளுக்கும் இடையே உரசல் போக்கு உள்ளது.  நன்றி தினகரன் 





பலஸ்தீனர் கத்திக்குத்து: இஸ்ரேலிய மதகுரு பலி

இஸ்ரேல் நகரான பெடா டிக்வாவில் யூதா மதகுருவான ரப்பி ஒருவர் பலஸ்தீன ஆடவர் ஒருவரால் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளார்.

நான்கு குழந்தைகளின் தந்தையான 39 வயது ஷாய் ஒஹயோன் கடந்த புதன்கிழமை தாம் கற்ற சமயக் கல்லூரி ஒன்றில் இருந்து திரும்பி பஸ் வண்டியில் வந்திறங்கியபோது வீதியில் வைத்து தாக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் அங்கிருந்தவர்களால் துரத்திப் பிடிக்கப்பட்ட நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் நப்லுஸ் நகருக்கு அருகில் இருக்கும் கிராமத்தைச் சேர்ந்த 46 வயது ஆடவர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனை ஒரு பயங்கரவாதத் தாக்குதலாக கருதி விசாரணைகளை நடத்தி வருவதாக புலன்விசாரணையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 2015 தொடக்கம் இஸ்ரேல் மற்றும் மேற்குக் கரையில் பலஸ்தீனர்களின் கத்திக்குத்து, துப்பாக்கிச் சூடு மற்றும் காரை மோதவிட்டு நடத்தும் தாக்குதல்களில் இஸ்ரேலியர்கள் பலரும் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தக் காலப்பிரிவில் தாக்குதல்தாரிகள் எனக் கூறி இஸ்ரேலால் நூற்றுக்கணக்கான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 








கிரைஸ்ட்சேர்ச் ஆயுததாரிக்கு பரோலில் வராத வகையில் ஆயுள் தண்டனை

கிரைஸ்ட்சேர்ச் ஆயுததாரிக்கு பரோலில் வராத வகையில் ஆயுள் தண்டனை
கிரைஸ்ட்சேர்ச் பள்ளிவாசல் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள்...

- இதுவரை அந்நாட்டில் இவ்வாறு விதிக்கப்பட்ட முதலாவது தீர்ப்பு

கடந்த 2019ஆம் ஆண்டு நியூஸிலாந்தின் கிரைஸ்ட்சேர்ச்சிலுள்ள 02  பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபருக்கு கடூழிய ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் பிணையிலோ நன்னடத்தை காரணமாக பரோலில் (Parole) வெளி வர முடியாத வகையில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இது அந்நாட்டில் விதிக்கப்பட்ட இவ்வாறான முதலாவது தீர்ப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவத்தில் 51 பேர் உயிரிழந்ததோடு, சுமார் 40 பேர் காயமடைந்திருந்தனர்.

29 வயதான அவுஸ்திரேலியரான பிரண்டன் டரன்ட் (Brenton Tarrant) எனும் குறித்த குற்றவாளி, 51 கொலை குற்றச்சாட்டுகள், 40 கொலை முயற்சிகள் மற்றும் ஒரு பயங்கரவாத செயலைச் செய்தமை தொடர்பில் இவ்வாண்டின் ஆரம்பத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டிருந்தது. நியூசிலாந்தின் தெற்கு நகரில் இடம்பெற்ற குறித்த அசம்பாவிதம், பேஸ் புக் தளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 







துப்பாக்கிதாரிக்கு பிணையில்லா முழு ஆயுள் தண்டனை விதிப்பு

கிறிஸ்ட்சேர்ச் பள்ளிவாசல் தாக்குதல்:

கிறிஸ்ட்சேர்ச் நகரில் இரு பள்ளிவாசல்களில் 51 பேரை சுட்டுக் கொன்ற துப்பாக்கிதாரிக்கு நியூசிலாந்து நீதிமன்றம் ஒன்று பிணையில் வெளிவர முடியாத ஆயுள் தண்டனையை விதித்துள்ளது. நியூசிலாந்து வரலாற்றில் கைதி ஒருவருக்கு வழங்கப்படும் மிகக் கடுமையான தண்டனையாக இது உள்ளது.

51 பேரை கொன்றது, மேலும் 40 பேரை கொலைசெய்ய முயன்றது மற்றும் ஒரு பயங்கரவாத குற்றச்சாட்டை அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 29 வயது பிரென்டன் டரன்ட் ஒப்புக்கொண்டார்.

அவரது செயற்பாட்டை ‘மனிதாபிமானமற்றது” என்று குறிப்பிட்ட நீதிபதி அவருக்கு “மன்னிப்புக் காட்ட முடியாது” என்று தெரிவித்தார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்ற இந்தத் தாக்குதல் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது உலகெங்கும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.

டரன்ட் மீதான தண்டனை நியூசிலாந்து வரலாற்றில் பயங்கரவாத குற்றச்சாட்டில் வழங்கப்பட்ட முதல் தண்டனையாகவும் இருந்தது.

“இறக்கும் வரை சிறை வைக்கப்பட்டு அது தண்டனையின் தேவையை பூர்த்தி செய்யாத அளவுக்கு உங்களது குற்றங்கள் மிகக் கொடியது” என்று கிறிஸ்சேர்ச் நீதிமன்றத்தில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி கெமரூன் மன்டர் தெரிவித்தார்.

பிணை வழங்கப்படாத தண்டனை மூலம் குற்றவாளி தமது மொத்த தண்டனையில் ஒரு பகுதியை பூர்த்தி செய்த பின் சிறையை விட்டு வெளியேற கிடைக்கும் சந்தர்ப்பம் மறுக்கப்படுகிறது.

இவ்வாறான பிணையற்ற ஆயுள் தண்டனையை மிக மோசமான கொலையாளி மாத்திரமே அனுபவிக்க முடியும் என்று நீதிபதி மன்டர் தெரிவித்தார்.

நியூசிலாந்து நீதிக் கட்டமைப்பில் மரண தண்டனை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தீர்ப்புக் குறித்து கருத்து வெளியிட்ட நியூசிலாந்து பிரதமர் ஜெசின்டா ஆர்டர், “புகழ் இல்லை, மேடை இல்லை. அவரை பற்றி மீண்டும் கேட்பதற்கு, பார்ப்பதற்கு, நினைப்பதற்கு எமக்கு எந்த காரணமும் இல்லை.

அந்தப் பயங்கரவாதியின் பெயரை உச்சரிப்பது அல்லது கேட்பது இன்று தான் கடைசியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.

இந்தக் கொலைச் சம்பவத்தை அடுத்து நியூசிலாந்தில் கடுமையான துப்பாக்கிச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தண்டனைக்கான விசாரணையின்போது தாக்குதலில் தப்பியவர்களும் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களும் நீதிமன்றத்தில் இருந்தனர். நான்கு நாள் நீடித்த இந்த விசாரணையில் பாதிக்கப்பட்ட சுமார் 60 பேர் வாக்குமூலம் அளித்தனர்.

நான்காம் நாளான நேற்று நீதிமன்றத்தில் குர்ஆன் வாசகங்கள் ஓதப்பட்டன. தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் படங்களும் அங்கு காட்டப்பட்டன. தண்டனை விதிக்கப்படுவதற்கு முன்னர் எதுவும் பேச வேண்டாம் என்று டரன்ட் முடிவு செய்திருந்ததாகக் கூறப்பட்டது.   நன்றி தினகரன் 






அமெரிக்க – ரஷ்ய இராணுவ வாகனங்கள் சிரியாவில் ஒன்றோடொன்று மோதி விபத்து

வட கிழக்கு சிரியாவில் ரஷ்ய மற்றும் அமெரிக்க இராணுவ வாகனங்கள் மோதி பல அமெரிக்க துருப்புகளும் காயமடைந்த சம்பவம் தொடர்பில் இரு அரசுகளும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றன.

ரஷ்ய இணைதளத்தில் இந்த விபத்து நிகழும் வீடியோ பதிவேற்றப்பட்டிருப்பதோடு அது பரந்த அளவில் பகிரப்பட்டுள்ளது.

ரஷ்ய ஹெலிகொப்டர் ஒன்று தழ்வாக பறக்க, பாலைவனத்தில் தொடரணியாகச் சென்ற ரஷ்ய இராணுவ வாகனம் ஒன்று அமெரிக்காவின் கவச வாகனத்தில் மோதுவது அந்த வீடியோவில் காணமுடிகிறது.

அமெரிக்கா ரோந்து நடவடிக்கைக்கு இடையூறு செய்ததாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது. குறித்த பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவது பற்றி அமெரிக்க இராணுவத்தை முன்கூட்டியே அறிவுறுத்தி இருந்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

“தற்போதிருக்கும் உடன்படிக்கையை மீறி அமெரிக்கப் படையினர் ரஷ்ய ரோந்துப் பணியை தடுக்க முயற்சித்தனர்” என்று அமைச்சு வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் ரஷ்ய வாகனம் விபத்தை ஏற்படுத்தி அமெரிக்க படையினரை காயப்படுத்தியதாக வெள்ளை மாளிகை பாதுகாப்பு கெளன்சில் தெரிவித்துள்ளது.

இஸ்லாமிய அரசு குழுவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் குறித்த பகுதியில் சுமார் 500 அமெரிக்க துருப்புகள் நிலைகொண்டுள்ளன.   நன்றி தினகரன் 





No comments: