தமயந்தியும், உதயசங்கரும் சென்றபின்னர், அபிதாவின் பொழுதுகள் அடுத்தடுத்து வந்த தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் சொல்வதிலேயே கழிந்துவிட்டது.
“ அபிதா அறுசுவை… எப்படி இருக்கிறீங்க…? ஒரு கலியாண வீட்டுக்கு சாப்பாட்டு ஓடர் இருக்கிறது. தலைக்கு எவ்வளவு என்ற கணிப்பா, எத்தனை கறி , என்ன மாதிரியான கறி, சைவமா… மச்சமா… என்ன அடிப்படையில் சார்ஜ் சொல்வீர்கள்…? “ மறுமுனையிலிருந்து சுபாஷினி கிண்டலடித்தாள்.
“ இப்போதுதான் மஞ்சு நக்கலடித்தா…. அடுத்து நீங்களா…? போனவிடயம் சரியா… யாருக்கு கலியாணம்…? யாருக்கு முதலில்...? உங்களுக்கா…? மஞ்சுவுக்காக…? “ எனத் திருப்பிக்கேட்டாள் அபிதா.
“ பேச்சுவார்த்தை தொடருது. முதலில் என்னுடையதை முடிப்போம் என்று அம்மாவும் தம்பியும் சொல்றாங்க அபிதா. அம்மாவுக்குத் தெரியும்தானே… இன்னமும் ஆஸ்த்மா தொல்லையினால் அவதிப்படுறாங்க. கெதியா போய்விடுவோமோ என்ற பயம் அம்மாவுக்கு வந்துவிட்டது. இந்த நோய்… நித்திய கண்டம் பூரண ஆயுசு மாதிரித்தானாம். என்ர அம்மாவின் கதை கிடக்கட்டும் அபிதா, நீங்கள் காஞ்சிபுரம் பட்டுச்சேலையில் நல்ல வடிவாக இருந்தீங்க…? மஞ்சு ரீவி பார்த்திட்டு சொன்ன பிறகுதான் நானும் அந்த செனலை போட்டுப்பார்த்தேன். ஜீவிகாவும் ஜெயசீலனும் உங்களுக்கு ஒரு புதிய வழியை காண்பித்திருக்கிறாங்க. இனி நீங்களும் கொழும்போடு போய்விடலாம்… இல்லையா…? “
“ இப்படித்தான் மஞ்சுவும் சொன்னா. நான் எதிர்பாராத சம்பவங்கள் எல்லாம் வேகமாக நகர்ந்துகொண்டிருக்கிறது. எங்கே சென்று முடியுமோ தெரியவில்லை. சமைக்கத்தான் வந்தேன். இதுவரையில் கொழும்பே பார்த்ததில்லை. இனி ரீவி செனலுக்குள்ளேயும் செல்லப்போகிறேனா…? என்ற பயம்தான் வந்திருக்கிறது சுபா. எனக்கு இதிலெல்லாம் விருப்பம் இல்லை. நீங்கள் எல்லாம் ஒவ்வொருத்தராக சென்றபிறகு வீடே வெறிச்சோடிப்போயிருக்கு. இதே நிகும்பலையூரில் யாருடனாவது இருந்துகொண்டு, பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுத்து, எஞ்சிய காலத்தையும் கடத்திவிடுவோம் என்றுதான் தீர்மானித்திருந்தேன். அதற்குள் ஜீவிகாவும் ஜெயசீலனும் என்னை இந்த ரிவி செனலில் சமையல் குறிப்பு நிகழ்ச்சிக்குள் இழுத்துவிடப்பார்க்கிறாங்க. இந்த விடயம் வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும் இருக்கும் என்ர அவரின் உறவுக்காரங்கள் அறிந்தால், “ பார்… புருஷன் போய் பதினொரு வருஷமாச்சுது. அதற்குள்ளே, சிங்காரிச்சுக்கொண்டு ரி.வியில் ஆட்டம் காண்பிக்கிறாள் என்று இளிச்சு கறிச்சுக்கொட்டத் தொடங்கிவிடுவாங்க… “ என்றாள் அபிதா.
“ அபிதா… ஒரு விடயத்தை நீங்கள் புரிந்துகொள்ளவேணும். இந்த சமூகம் வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும். ஆனால், உதவிக்கு வராது. உங்கள் மீது அக்கறை இருந்திருந்தால், உங்கட அவரின் ஆட்கள் இப்படி கைவிட்டிருக்கமாட்டாங்க. பிள்ளையையும் பறிகொடுத்திட்டு, புருஷனையும் காணாமலாக்கிப்போட்டு தனிமரமா நீங்கள் நின்றபோது, உறவுகள் என்ன செய்திருக்கவேண்டும்…? அருகில் வளர்ந்த கொடிகள் மரத்தைச்சுற்றி படர்ந்து அணைத்து ஆறுதல் தருவதை பார்த்திருப்பீங்க… இயற்கையிடமிருந்த கருணைகூட ஆறு அறிவு படைத்த மனுஷருக்கு இல்லை. நாங்க எங்கே இருந்தாலும் உங்களுடன் தொடர்பில் இருப்போம். “ என்று சுபாஷினி சொன்னபோது அபிதாவுக்கு கண்கள் கலங்கின.
அடுத்து என்ன சொல்வது எனத்தெரியாமல் ஒரு கணம் மௌனமாக நின்றாள்.
“ என்ன… அபிதா… சைலன்ஸ் ஆகிட்டீங்க… அதிகம் வொரி பண்ணவேண்டாம். ரிவி சான்ஸ் எளிதில் கிடைக்காது. விட்டுவிடவேண்டாம். “
“ அது சரி சுபா… உங்கட வேலை விசயம் என்னவாகும்…? விடப்போறீங்களா…? “ அபிதா அக்கறையுடன் கேட்டாள்.
“ அம்மாவும் தம்பியும் அவரும் விடத்தான் சொல்றாங்க. அம்மாவை விட்டு இனிமேல் நகர முடியாது அபிதா. தற்போதைக்கு மெடிக்கல் சேர்டிபிகேட் அனுப்பியிருக்கிறேன். மனேஜருக்கும் போன் எடுத்து சொல்லிவிட்டேன். நுவரேலியா பிராஞ்சுக்கு ட்ரை பண்ணியும் பார்க்கச்சொன்னார். பார்ப்போம்… எல்லாம் விதிப்படிதான் நடக்கும் அபிதா… சரி பிறகு பேசுறன். அம்மாவை இன்று டொக்டரிடம் கூட்டிப்போகவேணும். எதனையிட்டும் கவலைப்படவேண்டாம். நீங்கள் எனக்கு எவ்வளவு ஆறுதல் சொல்லியிருக்கிறீங்க. நீங்கள் தைரியமான பெண். வைக்கிறன். “
சுபாஷினி சொல்வதும் சரிதான். அவளால் எவ்வாறு இப்படியெல்லாம் பேசமுடிகிறது என்று அபிதா யோசித்தாள். வன்னியில் மரங்களை சுற்றிப்படர்ந்த வெற்றிலைக்கொடிகளை அபிதா முன்னர் பார்த்திருக்கிறாள்.
நான் அவரை காதலித்து கட்டியதுதான் என்னுடைய உறவுகளுக்கு பிடிக்கவில்லை. அவர்கள் பார்வையில் அவர் குறைந்த சாதி. அது அவரது குற்றமா…? சாதியில் என்ன குற்றம் இருக்கிறது…? மரங்கள் இனம் மொழி சாதி பார்த்துத்தானா ஒன்றையொன்று பற்றிப்பிடித்து வளருகின்றன…? வாழ்கின்றன…? காட்டில் எத்தனை வகையான மரங்கள் செடிகள், கொடிகள் புற்கள் வாழ்கின்றன. அவற்றுக்குள் ஏதும் வேறுபாடு, பாகுபாடு இருக்கிறதா..,?
அபிதா, தனது அறைக்கு விரைந்து சென்று, மடிக்கணனியைத் திறந்து மரம், செடி,கொடி மனித உறவுகள் பற்றி ஒரு பக்கம் எழுதினாள். மண்ணுக்கு மரம் பாரமா..? மரத்துக்கு இலை பாரமா… கொடிக்கு காய் பாரமா…? என்ற ராஜேஸ்வரியின் பாடல்தான் அவளுக்கு உடனே நினைவுக்கு வந்தது.
சிறிய வயதில் தாய் சொல்லித்தந்து, நான்காம் வகுப்பில் பாடசாலை மாணவர் இலக்கிய மன்றத்தில் அபிதா பாடிய பாடல் அது.
சமையலறையில் சாப்பாட்டு மேசையிலிருந்த அபிதாவின் கைத்தொலைபேசி மீண்டும் சிணுங்கியது.
அபிதா எழுந்து ஓடிவந்து எடுத்தாள். மறுமுனையிலிருந்து லண்டன் சண்முகநாதன்.
“ அவுங்க மிகவும் பிஸி அய்யா… தேர்தல் முடிந்து புதிய அரசாங்கம் வந்திட்டுது தெரியும்தானே…? நாடாளுமன்றம் போவதும் வருவதுமாக இருக்கிறாங்க. எல்லாம் செய்தி வேட்டைக்குத்தான் அய்யா…. ஏதும் சொல்லவேண்டுமா…? “ எனக்கேட்ட அபிதா, ஜீவிகா, இரண்டு நாட்களாக சீலனுடன்தான் மிணக்கெடுகிறாள் என்பதை சொல்லவில்லை.
“ ஒன்றுமில்லை. வந்ததும் நான் எடுத்தேன் என்பதை சொல்லிவிடு சரியா… “
“ ஏதும் அவசரமா அய்யா…? “
“ ஓம்… அவசரம்தான்… வீடு விசயம்தான். அது பற்றிப்பேசத்தான். விநாயகர் சதுர்த்தி வந்ததே… பிள்ளையார் படத்துக்கு மோதகம் அவித்து படையல் செய்தாயா.. அபிதா…? “
“ லண்டனிலிருந்தாலும் அய்யா பிள்ளையாரை மறக்கமாட்டீங்க அப்படித்தானே…?! ஓம் அய்யா…. நீங்கள் என்னிட்ட சொல்லிவிட்டுச்சென்ற ஒவ்வொரு விஷயத்தையும் மறக்காமல் செய்யிறன். அம்மாவின் பிறந்த தினம், இறந்த தினம், திதி வரும் நாட்கள் எல்லாம் சைவசாப்பாடு சமைத்து படையலும் வைத்து, இரண்டு பிச்சைக்காரங்களுக்கும் சாப்பாடு கொடுக்கிறன் அய்யா. விநாயகர் சதுர்த்தியிலும் மோதகம் அவித்து பிள்ளையார் படத்துக்கு படைத்தேன். அவரின் வாகனம் வீட்டில் பெருகியிருக்குது அய்யா. அதற்கும் எலிப்பாஷாணம் வைத்தேன். “ என்று கொடுப்புக்குள் சிரித்துக்கொண்டே அபிதா சொன்னாள்.
இந்த துடுக்குத்தனமான பேச்சை அவர் எவ்வாறு எடுத்துக்கொள்வாரோ..? என்பதைப்பற்றிய எந்தக்கவலையுமற்றவளாய் வாயில் வந்ததை உளறிவிட்டாள்.
“ சரி… சரி… நீயும் நன்றாக பேசப்பழகிவிட்டாய்…? எங்கே மற்றவர்கள் எல்லாம்… கற்பகம், சுபாஷினி, மஞ்சுளா…? “
“ ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசைக்குப்போய்விட்டாங்க அய்யா. வீட்டில் இப்போது நான் மாத்திரம்தான் நிற்கிறேன். “
எனச்சொன்ன அபிதா, அவரவர் பயணத்திற்கான காரணங்களையும் விளக்கினாள்.
“ கற்பகத்திற்கு ட்ரான்ஸ்ஃபர் கிடைக்குமா…. அபிதா…? “
“ அது பற்றி நீங்கள் அவவிட்டதான் கேட்கவேணும் அய்யா. இனி அவவவுக்கு ஊரோடுதான் கிடைக்கும். அடுத்த தடவை நீங்கள் வரும்போது ஊருக்குப்போய் பார்க்கலாம் அய்யா. “ எனச்சொல்லிவிட்டு, மீண்டும் வரும்போது ‘ லண்டன் பாட்டா செருப்பு வாங்கி வாரீங்களா..? எனக்கேட்காமல் மௌனம் காத்தாள்.
லண்டன் சண்முகநாதன், சில செக்கண்டுகள் தொடர்ந்து ஊர் புதினம் விசாரித்துவிட்டு தொடர்பை துண்டித்துக்கொண்டார்.
இனி யாரும் கோல் எடுப்பதற்கு முன்னர், வீட்டிலிருக்கும் வேலைகளில் அபிதா மூழ்கினாள்.
லண்டன்காரர் சொன்ன வீடு விசயம்தான் அபிதாவிடத்தில் கற்பனைகளை உருவாக்கியது. எல்லோரும் போய்விட்ட பின்னர், இந்த வீட்டை வேறு யாருக்காவது வாடகைக்கு கொடுக்கப்போகிறாரோ..? அல்லது விற்கப்போகிறாரோ..?
அவர் வீடு, அவர் சொத்து. அவர் என்னவேண்டுமென்றாலும் செய்யலாம். பிற்காலத்தில் அவரே அந்த லண்டன் வாழ்க்கையில் சலிப்புற்று திரும்பி வந்தும் சேரலாம். அல்லது பெறாமகள் ஜீவிகாவுக்கும் விற்கலாம். ஆனால், ஏதோ செய்யப்போகிறார் என்பது மாத்திரம் அபிதாவுக்குப் புரிந்தது.
வாழ்க்கையில் எவருக்கும் எதுவும் எப்போதும் நேரலாம். எதற்கும் தயாராகவிருக்க மனதை பக்குவப்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதை அபிதா புத்திக்கொள்முதலாகவும் வைத்திருந்தாள்.
அந்த வீட்டிலிருந்தவர்களின் வாழ்க்கையில் விழுந்திருந்த முடிச்சுகள் சில அவிழ்ந்தாலும், சில இன்னமும் முடிச்சாகவே துருத்திக்கொண்டிருப்பதையும் அபிதாவால் கண்டுகொள்ள முடிந்திருக்கிறது.
வீட்டிலிருந்த வேலைகளை ஓரளவு முடித்துவிட்டு, மடிக்கணினியுடன் சமையலறை மேசையில் வந்து அமர்ந்தாள்.
சமையல் கலை பற்றிய மேலதிக தகவல்களை அறிந்துகொள்வதற்காக, காணொளி நிகழ்ச்சிகளை பதிவிறக்கம் செய்து பார்த்து, குறிப்புகள் எடுத்துக்கொண்டாள்.
சமையல் பக்குவம் பற்றி சொல்லும் பெண்கள், எவ்வாறு அபிநயம் பிடிக்கிறார்கள். அவர்களின் கண் அசைவு, உதட்டசைவு, சொற்சிக்கனத்துடன் விளக்கும் பாங்கு, அனைத்தையும் கூர்ந்து கவனித்தாள்.
ஜெயசீலன் அழைத்துச்செல்லவிருக்கும் ரி.வி. செனலில் பணியாற்றுபவர்களுடன் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்பது பற்றியெல்லாம் கற்பனையில் மனதிற்குள் நடித்தும் பார்த்தாள்.
ஆரோக்கியமான உணவு முறையைத்தான் இக்கால நேயர்களுக்கு சொல்லிக்கொடுக்கவேண்டும் என்ற தீர்மானத்துக்கும் வந்தவளாக, நோய் எதிர்ப்புச்சக்தியை தரும் ஊட்டச்சத்துள்ள உணவுகள் பற்றிய குறிப்புகளையெல்லாம் பதிவிறக்கம் செய்து எழுதிக்கொண்டாள்.
இரண்டு நாட்களாக தனிமையில் வாழப்பழகிக்கொண்டதனால் பெற்றிருக்கும் இந்த அனுபவமும் எதிர்காலத்தில் கைகொடுக்கும் விந்தையையும் நினைத்து நினைத்து ரசித்தாள்.
தனித்து வந்து தனித்தே செல்லும் வாழ்க்கையைத்தானே மனிதர்களுக்கும் ஜீவராசிகளுக்கும் படைத்தவன் தந்திருக்கும் பெரும் சொத்து. அந்தத் தனிமைதானே இறுதியிலும் எஞ்சப்போகிறது. வந்துள்ள கொரோனாவும் இதனைத்தானே போதித்துக்கொண்டிருக்கிறது.
சமையல் கலை பற்றிய பதிவிறக்கத்தை நிறுத்திவிட்டு, கணினியின் திரையில் தனது நாட்குறிப்பு பக்கத்தை வரவழைத்து, தனிமை பற்றி சில வசனங்களை எழுதத்தொடங்கினாள்.
தனிமை பற்றி யார் யார் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதையும் பதிவிறக்கம் செய்து பார்த்து தெரிந்துகொண்டாள்.
“ வாழ்க்கையில் எதிர்பார்த்தவை கிடைக்காமல் போனாலும், தன்னைவிட்டு அகலாதிருந்த தனிமைதானே ஆறுதலும் தேறுதலும் தந்தது. அதற்காகவாவது தனிமையை கொண்டாடலாம் “ என்று தனது நாட்குறிப்பில் அபிதா எழுதினாள்.
அவர் சரணடைந்து காணாமல்போய் பதினொரு வருட காலமாக, அவர் பற்றிய நினைவுகள்தானே தனிமைத்துயரையும் போக்கியது. காணாமல்போனவர்களுக்காக நாடெங்கும் கவனஈர்ப்பு போராட்டம் நடத்தப்போவதாக வெளியான செய்திகளையும் பதிவிறக்கம் செய்து பார்த்தாள்.
இந்தப்பதினொரு வருடகாலத்தில் இந்த தொடர்போராட்டத்தில் கலந்துகொண்ட உறவுகள் பலவும் மரணித்துப்போய்விட்ட துயரத்தையும் கடந்துதானே வந்திருக்கின்றேன்.
அந்த வீட்டைச்சூழ்ந்திருக்கும் தனிமையிருட்டுக்குள் பார்த்திபனதும் குழந்தை தமிழ்மலரினதும் நினைவுகள் ஒளிக்கீற்றாய் எட்டிப்பார்க்கிறது.
எவரும் அருகில் இல்லாதவேளையில் நாம் யாருடன் தனிமையில் மனதிற்குள் பேசிக்கொள்கிறோமோ, அவர்தான் உனக்குப்பிடித்தமான முக்கிய நபராக இருக்கலாம் என்ற வரிகளை முன்னர் படித்திருந்தது அபிதாவின் ஞாபகத்தில் வந்தது.
அப்படிப்பார்த்தால் அந்த நபர்கள் எனது அவரும் எனது செல்வமும்தான். மகள் இப்போது இருந்திருந்தால், பன்னிரண்டு வயதாவது இருக்கும். குமரியாகியுமிருக்கலாம். அவருக்கும் நரை விழுந்திருக்கலாம்.
அபிதா, கூந்தலை முன்புறம் எடுத்துப்பார்த்தாள். சில மயிர்களில் வெள்ளி படிந்திருக்கிறது. சிரிப்பும் வந்தது. தொலைக்காட்சியில் தோன்றப்போகுமுன்னர், அங்கே இந்த வெள்ளிமயிர்களுக்கு டை அடிப்பார்களா..?
வேண்டாம் என்று மறுக்கவேண்டும். இயற்கை உணவு பற்றிப்பேசும்போது இயற்கையாகவே தோற்றமளிக்கவேண்டும் என்று விளக்கம் அளிக்கவேண்டும்.
அபிதாவுக்கு பசிவந்தது. ஆசனத்தை விட்டு எழுந்தபோது, மனதில் இனம்புரியாத தெளிவு வந்திருக்கும் உணர்வும் தோன்றியது.
இத்தனை வருடங்களை தனிமையில் போக்கிவிட்டேன். எஞ்சியிருக்கும் காலத்தையும் அவ்வாறே கடந்துவிடலாம் என்ற நம்பிக்கை பிறந்தது.
( தொடரும் )
No comments:
Post a Comment