பொன்விழா ஆண்டில் இந்த படங்கள் 15 - வீட்டுக்கு வீடு - சுந்தரதாஸ்

.


தமிழ் சினிமாவில் அவ்வப்போது நகைச்சுவை படங்கள் உருவாவது உண்டு அவ்வாறு உருவான படங்களில் ஒன்றுதான் வீட்டுக்கு வீடு. பிரபல இயக்குனர் ஸ்ரீதரிடம் உதவியாளராக பணியாற்றிய சித்ராலயா கோபு, இயக்குனர் சி வி ராஜேந்திரன் இருவரும் இணைந்து இந்த படத்தை உருவாக்கினார்கள்.


திக்குத் தெரியாத வீட்டில் என்ற பெயரில் எழுதி பலதடவைகள் மேடையேற்றிய நாடகமே வீட்டுக்கு வீடு என்ற பெயரில் படமானது. படத்தில் மூன்று கதாநாயகர்கள் .ஜெய்சங்கர், முத்துராமன், நாகேஷ் மூவரும் படத்தை தன்வசப்படுத்தி கொண்டார்கள் .


வழக்கமாக துடிப்புடனும் ஆக்ஷன் ஹீரோவாகவும் நடிக்கும் ஜெய்சங்கருக்கு இந்தப் படத்தில் முற்றிலும் மாறுபட்ட வேடம். அப்பாவியாகவும் மனைவிக்கு அடங்கி நடக்கும் கணவனாகவும் இதில் நடித்திருந்தார். தன்னால் வித்தியாசமாகவும் நடிக்க முடியும் என்பதையும் நிரூபித்தார் ஜெய்சங்கர். முத்துராமனுக்கு மனைவியை அதிகாரம் செய்யும் வழக்கமான பாத்திரம், தனது பாணியில் அதனை செய்திருந்தார். படத்தின் விறுவிறுப்புக்கு குறையில்லாமல் பார்த்துக் கொண்டவர் நாகேஷ். அவரும் விகே ராமசாமியும் சேரும் காட்சிகள் எல்லாம் சிரிப்புத்தான்.


படத்தில் தன் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து கொண்டவர் லட்சுமிதான். ஏழ்மையில் பிறந்து வளர்ந்த தன்னம்பிக்கை உள்ள பெண்ணாக பாத்திரத்துடன் ஒன்றி நடித்திருந்தார். போதாகுறைக்கு படத்தில்இளமையாகவும் கவர்ச்சியாகவும் காட்சி அளித்தார். வெண்ணிற ஆடை நிர்மலாவும் முத்துராமனின் அடங்கிய மனைவியாக நடித்திருந்தார்.


ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரும் ராதிகா என்று ஒரு நடிகை இருந்தார் மேஜிக் ராதிகா என்று அழைக்கப்பட்ட இவர் இப்படத்தில் நடித்ததுடன் கவர்ச்சி நடனம் வழங்கியிருந்தார். படத்தின் வெற்றிக்கு மற்றுமொரு காரணம் எம் எஸ் விஸ்வநாதன். எஸ் பி பாலசுப்ரமணியம், ஈஸ்வரி குரலில் ஒலித்த அங்கம் புதுவிதம் அழகினால் ஒருவிதம் பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது பாலையாவின் மகன் சாய்பாபா . இப்படத்தில் இவர் நாகேசுக்கு ஒரு பாடலை பாடியிருக்கிறார். சாய்பாபாவின் குரலும் நாகேஷின் முகபாவங்களும் ஜோர் .


பாடல்களை கவிஞர் கண்ணதாசன் இயற்றியிருந்தார் ரசிகர்களை சிரிக்க வைத்த படம் வீட்டுக்கு வீடு
No comments: