எழுத்தும் வாழ்க்கையும் - அங்கம் -06 வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் ! தினக்கூலி ஏழு ரூபா ஐம்பது சதம் தந்த வெளிநாட்டு குதிரைகள் !! முருகபூபதி


 “ ஓடுவது எப்படி எனச்சொல்பவர்கள்தான்  விமர்சகர்கள்!  “ என்று  இலக்கிய உலகில் பலரும் பேசத்தொடங்கிய கால கட்டத்தில்,  நானும்  சிறுகதைகள், செய்திக்கட்டுரைகள் எழுதத் தொடங்கியிருந்தேன்.

எதனையும் தாங்களாகவே ஆக்கபூர்வமாகச்செய்யாமல், மற்றவர்களின் உருப்படியான செயல்களில் குறைகண்டுபிடித்து தங்களை மேதைகளாக்கிக்கொள்பவர்கள்,  அன்றும் இருந்தார்கள் இப்பொழுதும் இருக்கிறார்கள்.

            

முகநூல் கலாசாரம் வந்தபின்னர் இந்த விமர்சகர்களின் தொல்லை அதிகரித்துவிட்டமையும் கண்கூடு.

எவரும் எவரையும் விமர்சிக்கலாம் எனச்சொல்லி,  அதற்கும் ஜனநாயக மரபைச் சூட்டிவிடுவார்கள்.

மல்லிகை, பூரணி , புதுயுகம் ஆகிய இதழ்களில் எனது ஆரம்பகால சிறுகதைகள் வெளிவந்துகொண்டிருந்தபோது, வீரகேசரியிலும் மித்திரனிலும் எனது செய்திகளும் செய்திக்கட்டுரைகளும் பிரசுரமாகிக்கொண்டிருந்தன.

நிருபர் பணியிலிருந்து சொற்ப வருமானம்தான் வந்தது.  வாழ்க்கை படகை செலுத்துவதற்கு அந்த வேதனம் போதாது. நிருபராக இயங்கியவாறு வேலை தேடும் படலத்திலும் ஈடுபட்டேன்.

எங்கள் ஊர் முஸ்லிம் நண்பர் ஒருவரின் உறவினரான பிரபல கொழும்பு வர்த்தகர் முக்தார் பெரிய கோடீஸ்வரர்.  அவர் குதிரைப்பந்தயத்திற்கு பணம் செலுத்துபவர்களினால் செல்வந்தரானவர்.

புறக்கோட்டை கெய்சர் வீதியில் அவருக்கு ஒரு பெரிய புடவைக்கடையும் இருந்தது. அதன் மேல்மாடியில்தான் எனக்கு ஒரு வேலை கிடைத்தது.

தென்னிலங்கையெங்கும் ஊர்கள் தோறும் அதற்கு சிறிய பெரிய கிளைகளும் இருந்தன.  தினமும் வெளிநாடுகளில் நடக்கும் குதிரைப்பந்தயங்களில் ஓடும் குதிரைகளின் பெயரில் பணம்கட்டி அதிர்ஷ்டத்தின் மீது நம்பிக்கை கொண்டு வாழ்ந்தவர்கள் எண்ணிக்கை  அக்காலத்தில் அதிகம்.

முக்தார் போன்று முபாரக் தாகா என்ற பெயரில் மற்றும் ஒரு கோடீஸ்வரர்   குதிரைபந்தயத்தை நம்பி வாழ்ந்தார். இரண்டு வர்த்தகர்களுக்கும் இடையில் தொழில் போட்டியும் இருந்தது.

       


பின்னாளில் இவர்கள் இருவரும் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் ( 1970 – 1975 ) பதவிக்காலத்தில் அந்நியசெலவாணி மோசடிக் குற்றச்சாட்டிலும் கைதானார்கள்.  புறக்கோட்டை பிரதானவீதியிலிருந்த மற்றும் ஒரு பெரிய கோடீஸ்வரர் பகவன்தாஸ் ஐதராமணி என்ற வடஇந்திய வர்த்தகரும் அதே மோசடிக்குற்றச்சாட்டில் கைதாகி நீர்கொழும்பு சிறையிலும் இருந்தார்.  அச்சிறையிலிருந்தும் நான் பல செய்திகளை சேகரித்து எழுதியிருக்கின்றேன்.

தேசிய சுவடிகள் திணைக்களத்தில் பழைய பத்திரிகைகளை தேடி எடுத்துப்பார்த்தால், அக்கால கட்டத்தின் அந்நியசெலவாணி மோசடி குற்றச்சாட்டு பற்றிய செய்திகளை காணலாம்.

முக்தாரின் நிறுவனத்தின் மேல்மாடிக்கு தென்னிலங்கையிலிருந்து  பணம் செலுத்திய குதிரைப்பந்தயச்சீட்டுக்கள் காகித உறைகளில் வந்து சேரும். அவை சிறிய குன்றுபோல் குவிந்துவிடும்.

அவற்றை தரம்பிரித்து,  எமக்குத்தரப்பட்ட கணிப்பு முறையில் பதிவுசெய்துகொடுக்கவேண்டும்.  நீண்ட மேசைகளில் அந்த  பந்தயச்சீட்டுக்கள் அடங்கிய உறைகள் பரப்பப்பட்டிருக்கும்.  மாலை ஆறுமணிக்கு எமது பணி தொடங்கினால், நடுஇரவும் கடந்தும் கணிக்கும் வேலை இருக்கும். அதிலும் சில பிரிவுகள் தனித்தனியாக இயங்கின.

அங்குதான், ரூபாய் நாணயத்தாள்கள் கட்டுக்கட்டாக அடுக்கப்பட்டு,  பெரிய பொதியாக வைக்கப்பட்ட அரிய காட்சிகளை தினமும் காண்பேன்.  திரைப்படங்களில் நாம் கண்டிருக்கலாம். ஆனால், முதலும் இறுதியுமாக அந்தப்பணியில்தான் ரொக்கப்பணத்தை பொதிசெய்யும் காட்சிகளை நேருக்கு நேர் கண்டேன்.

ஆனால், எமது தினச்சம்பளம் எவ்வளவு தெரியுமா..? ஏழு ரூபா ஐம்பது சதம் ( Rs. 7-50 )

நான் ஒரு குதிரைப்பந்தய முதலாளியிடம்தான் வேலை செய்கின்றேன் என்பது வீட்டுக்குத்தெரியாது.  சூதாட்டம், தீய சேர்க்கை எதுவுமே நெருங்கமுடியாத  நாணயம் நம்பிக்கை பொறுப்புணர்வு, கடமை, கண்ணியம் , கட்டுப்பாடு மிக்க ஒரு பொலிஸ் சார்ஜன்ட்டுக்கு பேரனாகப்பிறந்த என்னையும் எனது சகோதரங்களையும்  அவரை உதாரணம் காண்பித்தே வீட்டில் வளர்த்திருக்கிறார்கள்.

கொழும்பில் ஒரு நிறுவனத்தில் இரவுநேர பாதுகாப்பு உத்தியோத்தராக பணியாற்றுகிறேன் என்று பெரிய பொய்யைச்சொல்லிக்கொண்டுதான் அம்மா கட்டித்தரும் இரவு உணவுப்பொதியுடன் வேலைக்குச்சென்று வந்தேன்.

கல்யாணப்பரிசு படத்தில் வரும் தங்கவேலு,  மனைவி  சரோஜா , ஃபிளாஸ்கில் தந்துவிடும் காப்பியுடனும்,  சாப்பாட்டு கெரியருடனும் பூங்காவுக்கு வந்து சீட்டாடிவிட்டு, தான் மன்னார் அன் கம்பனியில் வேலை செய்வதாக பொய்பேசுவாரே… அப்படி என்று என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

தினமும் கிடைக்கும் பணத்தை இரகசியமாக சேமித்துவைத்துக்கொள்வேன்.  பஸ் கட்டணத்திற்கும் எனது இதர செலவுக்கும் இரண்டு ரூபா ஐம்பது சதத்தை தினமும் செலவிட்டு, எஞ்சிய ஐந்து ரூபாக்களை சேகரித்து, மாதம் முடிய நூற்று ஐம்பது ரூபா ( Rs. 150/= ) பணத்தை ரொக்கமாக அம்மாவிடம் நீட்டுவேன்.  .” என்ன… உனது சம்பளப்பணத்தில் ஐந்து ரூபா தாள்கள் இருக்கிறதே ?   “ எனக்கேட்டால், அந்ததந்த நேரத்திற்கு வசதியான  பொய் இருக்கவே இருக்கும்.

எனக்காக எடுத்துவைத்துக்கொள்ளும் சொற்ப பணத்தையும் சேமித்து,  புத்தகங்கள் வாங்குவேன்.  கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாகவிருந்த ராஜேஸ்வரி பவான், கொம்பனித்தெருவில் மலே வீதியில் இருந்த ரத்னா ஸ்ரோர்ஸ் வெள்ளவத்தை ரகுநாதன் பதிபகம், விஜயலக்‌ஷ்மி புத்தகசாலை, ஆட்டுப்பட்டித்தெரு ஜெயா புக்டிப்போ,  இளம்பிறை அரசு வெளியீட்டகம் என்பன நான் செல்லும் புத்தக கடைகள்.

பகலில் வீரகேசரிக்கு செய்தி வேட்டை.  மாலையானதும் கொழும்பு பயணம். மறுநாள் காலை வீடு திரும்பல். குட்டித்தூக்கம்.  அம்மாவிடம்  ---   “ ஆகா… மகன் கடுமையாக உழைக்கிறான்!  “  என்ற நற்சான்றிதழ்.

நாடாளுமன்றில் நிதியமைச்சர் கலாநிதி என். எம். பெரேரா. சமசமாஜக்கட்சியின் ஸ்தாபகர்களில் ஒருவர். அத்துடன் அதன் தலைவர். ட்ரொக்ஸியவாதி. அந்நியசெலவாணி மோசடிக்கார்களின் மீது அவரது பார்வை விழுந்தது.

குதிரைப்பந்தயம் சட்டவிரோதமானது என்று அரசு பிரகடனப்படுத்தியது. வெளிநாடுகளில் ஓடிக்கொண்டிருந்த குதிரைகளின் மீது பணத்தை கட்டிவிட்டு அதிர்ஷ்டத்தை நம்பிக்கொண்டிருந்தவர்கள் மீது பேரிடி விழுந்தது.  இத்தனைக்கும் எனக்கு பந்தயச்சீட்டுக்களை கணித்து செலுத்தப்பட்டுள்ள பணம் எவ்வளவு என்பதை கூட்டிப்பார்த்துச்சொல்ல மாத்திரம்தான் தெரியும். குதிரைகளின் பெயரும் மனதில் நிற்காது.  அவற்றின் மீது பந்தயம் கட்டவும் தெரியாது.

குதிரை போன்று எம்மவர்களினால் வேகமாக ஓடமுடியாது, ஆனால், எவ்வாறு ஓடவேண்டும் என்று பந்தயத்திடலில் கத்துவார்கள். குதிரைகளும்  என்ன நடக்கிறது என்பது தெரியாமல் ஓடிக்கொண்டிருக்கும்.  

இலக்கியமும் பந்தயத்திடலானால்,  ஆக்கவிலக்கிய படைப்பாளி குதிரையாகவும்  பார்வையாளன்   விமர்சகனாகவும்  மாறி விடுவான். 

என்னைப்போன்ற பலருக்கும்  அந்த பணியிடத்தில் வேலை காலியானது.

கொழும்புக்கு அந்த இரவுநேர வேலைக்குச்செல்லும்போது பல நாட்கள் உரியநேரத்தில் இ. போ. ச. பஸ்ஸையும் தவறவிட்டு,  அடுத்த பஸ்ஸில் ஏறிச்சென்றிருக்கின்றேன்.

அதிலும் ஒரு வாழ்க்கைத்தத்துவம் இருக்கிறது! ஒரு பஸ் போனால் என்ன…?! மற்றும் ஒரு பஸ் இருக்கும்தானே…? அதில் தொற்றிக்கொண்டு செல்வோம்தானே…!?  வாழ்க்கையும் அப்படித்தான்!

எமது வீட்டுக்குப்பக்கத்தில் கொழும்பு மின்சார சபையில் எழுதுவினைஞராக பணியிலிருந்த சிங்களம் பேசும் கத்தோலிக்கர் என்னை குழந்தைப்பருவம் முதல் நன்கறிந்தவர். அவர் என்னை ராஜூ என்றே அழைப்பார். நான் வேலை தேடிக்கொண்டிருக்கும் அவலத்தை ஒருநாள் அவரிடம் சொன்னேன். “    கொழும்பு காலிமுகத்திடல் வீதியை அகலமாக்கப்போகிறார்கள். அங்கே வேலைசெய்ய வரவிருக்கும் தொழிலாளர்ளை மேற்பார்வை செய்வதற்கு ஆள் எடுக்கவிருப்பதாக அறிகிறேன்.  P. W. D. யில் வீதி பராமரிப்பில் ஈடுபட்ட  யாராவது ஒரு ஓவஸீயரிடம் உதவி ஓவஸீயராக பணியாற்றியிருப்பதாக ஒரு கடிதம் வாங்கிக்கொண்டு வா. உனக்கு அந்த வேலையை எடுத்துத்தருகின்றேன் .   “ என்றார்.

அக்காலப்பகுதியில் எங்கள் ஊரில் வடபுலத்து கரம்பனைச்சேர்ந்த டொமினிக் என்பவர் ஓவஸீயராக இருந்தார். அவருக்கும் நான் பத்திரிகைச்செய்திகள் சொல்வதனால் நண்பராக இருந்தார். 

அதுவரையிலும் காகம்,  நாய், பன்றி  கலைப்பதற்கு மாத்திரமே கல்லைத்தூக்கத் தெரிந்த நான், எனக்கும் வீதியில் கருங்கல் பதித்து எந்த வீதத்தில் தார் ஊற்றி, மண்பரப்பத் தெரியும் - கார்பட் வீதி புனரமைப்பில்  எவ்வாறு தொழிலாளர்களை மேய்க்கத் தெரியும் என்று நற்சான்றிதழ் ஒன்றை டொமினிக் ஓவஸீயரிடம் பெற்றுக்கொண்டு கொழும்பு சென்று குறிப்பிட்ட நேர்முகத்தேர்விலும் தெரிவுசெய்யப்பட்டேன்.

அந்த நிறுவனத்தின் பெயர்:  Territorial Civil Engineering Organization. கொழும்பு – 07 இல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு அருகில் அதன் தலைமை அலுவலகம் இருந்தது.

அதற்கு அருகில்தான் கட்டிடக்கலை வரைஞர் திணைக்களமும் அமைந்திருந்தது. இங்குதான் ஒருகாலத்தில் பாலுமகேந்திரா, ஓவியர் ஞானம்,  எழுத்தாளர்கள்  நல்லைக்குமரன், ஐ. சாந்தன், புளட் இயக்கத்தின் உமா மகேஸ்வரன் ஆகியோர் பணியாற்றினார்கள் என்பது மேலதிக செய்தி.

நான் நேர்முகப்பரீட்சையில் சந்தித்த நிருவாகப்பொறியிலாளரின் பெயர் குகதாசன். அவர் என்னை காலிமுகத்தில்  நாடாளுமன்றத்திற்கு அருகில் அமைந்திருந்த இராணுவமுகாம் கட்டிடத்தொகுதியில் தற்காலிகமாகவிருந்த, அந்த நிறுவனத்தின் அலுவலகத்திற்கு அனுப்பினார்.

அங்கிருந்த வீதி நிர்மாணிப்பு பொறியிலாளர் பெர்ணான்டோ என்ற சிங்களவரிடம்  எனக்கு ஓவஸீயர் டொமினிக் தந்த சான்றிதழை காண்பித்தேன்.  வீதியை எவ்வாறு அமைப்பது எனக்கேட்டார்.

                  “ தரையை செப்பனிட்டு, கருங்கல் பதித்து அதற்குமேல் கொதிக்கும் தார் ஊற்றி, அதற்குமேல் மணலை தூவவேண்டும் “   என்றேன்.

அவருக்கு சிரிப்பு வந்துவிட்டது. நான் சிரிக்கவில்லை.

 “ சுமார் ஐம்பது தொழிலாளர்களை மேற்பார்வை செய்ய முடியுமா…? நீர் தமிழராக இருக்கிறீர்…!  சிங்களம் பேசத்தெரியுமா.?  “  எனக்கேட்டார்.

 “ ஓம் தெரியும்… நான் நன்றாக சிங்களம் பேசுவேன்.  G.C.E. பரீட்சையில் சிங்களப்பாடத்தில் கிரெடிட் பாஸ்.  “ எனச் சொல்லிவிட்டு,  மார்ட்டின் விக்கிரமசிங்கா, டீ. பி. இலங்கரத்னா, கருணாசேன ஜயலத், கே. ஜயதிலக்க ஆகியோரின் கதைகளும் படித்திருக்கின்றேன்.   “ என்றேன்.

 “ இங்கே அந்தக்கதைகளைச் சொல்லமுடியாது.  ரோட்டுத்தான் போடவேண்டும். அதனையும் சரியாகப்போடவேண்டும்.  பிரதமர், அமைச்சர்கள், எம்.பி.க்கள் செல்லும் பாதைக்கு அருகிலிருந்து வேலைசெய்யவேண்டும். முக்கியமாக நீர்ப்பாசன -  நெடுஞ்சாலைகள் அமைச்சர் மைத்திரிபால சேனநாயக்காவின் அமைச்சின் கீழ்தான் இந்த வீதி அகலமாக்கும் திட்டம் வருகிறது. அவரும் இந்தப்பாதையினால்தான் அடிக்கடி செல்வார். அவரது அமைச்சும்  அருகில் நாடாளுமன்ற கட்டிட வளாகத்தில்தான் இருக்கிறது. வேலை கவனம்  “ என்றார்.

 “ அந்த அமைச்சரின் மனைவியும் தமிழ்தான் சேர்  “ என்றேன்.

 “  உண்மையாகாவா….? உமக்கு எப்படித் தெரியும்…?  “

 “ நான் பத்திரிகை செய்தியாளன் சேர்… தெரியும்…   “

 “ இங்கே செய்தி எழுதமுடியாது,  செய்தியில் சிக்காமல் வேலைசெய்யவேண்டும். சரியா..? “  என்றார்.

மறுநாளிலிருந்து மீண்டும், அந்த வேலைக்காக தினமும் நீர்கொழும்பிலிருந்து காலை ஆறுமணிக்கு பஸ் ஏறினன்.

மகனுக்கு அரசாங்க உத்தியோகம் கிடைத்துவிட்டது என்று அம்மா புளகாங்கிதம் அடைந்தார்.

அமைச்சர் மைத்திரிபால சேனநாயக்காவை மாத்திரமல்ல, பிரதமர் ஶ்ரீமாவோ, அன்றைய எதிர்க்கட்சித்தலைவர் ஜே.ஆர். ஜெயவர்தனா, ஆர். பிரேமதாஸ, தகநாயக்கா, செல்லையா குமாரசூரியர், தந்தை செல்வநாயகம்,  குமார் பொன்னம்பலம், உட்பட பல அரசியல் தலைவர்களையெல்லாம் அந்த வீதி நிர்மாணப்பணியின்போது அடிக்கடி கண்டிருக்கின்றேன்.

எரிபொருள் விலையேற்றத்தின்போது சில எதிரணி எம்.பி.க்கள் மாட்டுவண்டியில் வந்து இறங்கிய காட்சிகளையும் தரிசித்தேன்.

பல சிங்களத்திரைப்படங்களுக்கான காட்சிகள் படமாக்கப்பட்டதையும் அவதானித்தேன். கடலில் மிதந்து வந்த பிரேதங்களையும் கண்டேன்.

குடைகளுக்குள் சல்லாபத்திலிருந்த காதலர்களையும் பார்த்தேன். 

காலிமுகம் பற்றி நான் சம்பந்தப்பட்ட நேர்காணல்களிலும் தெரிவித்துள்ளேன். எனது சொல்ல மறந்த கதை நூலிலும் நடந்தாய் வாழி களனி கங்கை தொடரிலும் ஏற்கனவே பதிவுசெய்துள்ளேன்.

ஒரு நாள் முற்பகல் வீதி நிர்மாணிப்பில் தொழிலாளர்களை மேய்த்துக்கொண்டிருந்தபோது,  வீதியில் சைக்கிளில் வந்துகொண்டிருந்த இலக்கிய விமர்சகர் எம். ஶ்ரீபதி, என்னைக்கண்டுவிட்டு, அருகில் அழைத்தார். அவர் பருத்தித்துறையைச்சேர்ந்தவர்.  வெள்ளவத்தை மேரிஸ் வீதியில் ஒரு வீட்டில் அறையெடுத்து தங்கியிருந்தார்.

தினகரனில் புதுக்கவிதை பற்றி அடிக்கடி விமர்சனக்கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்தார். பொரளையில் கொட்டா வீதியில் அமைந்திருந்த இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக்காரியாலயத்திலும் அவரை நான் சந்தித்திருக்கின்றேன். அவரும் என்னைப்போன்று அக்கட்சியின் ஆதரவாளர். 

எனது சிறுகதைகளை படித்திருப்பவர்.  அச்சமயம் நான் மூன்று அல்லது நான்கு சிறுகதைகள்தான் எழுதியிருப்பேன். அவை அனைத்தும் எங்கள் பிரதேசத்து மீனவர் சமூகத்தின் பேச்சு மொழிவழக்கில் எழுதப்பட்ட கதைகள்.

 “ முருகபூபதி, நாளை வரும்போது, இதுவரையில் வெளியான உமது கதைகளின் நறுக்குகளை கொண்டு வந்து தரமுடியுமா… மீண்டும் ஒரு தடவை படிக்கப்போகிறேன் . “ என்றார்.

அவர்கேட்டவாறு எடுத்து வந்தேன்.  மீண்டும் அங்கே வருகை தந்து பெற்றுச்சென்றார்.  சில நாட்களில் அவற்றை திருப்பித்தந்துவிட்டுச்சென்றார். வேறு எதுவும் சொல்லவில்லை.

நீர்கொழும்பில் பவாணிராஜா என்ற நண்பர், ஒருநாள் நான் வேலை முடிந்து திரும்புகையில் நேரில்சந்தித்து, அன்றைய                               ( 1974 – ஏப்ரில் 16 ஆம் திகதி ) தினகரன் பத்திரிகையை காண்பித்தார்.

எழுத்துலக இளம்பங்காளி என்ற தலைப்பில் எம். ஶ்ரீபதி எனது சிறுகதைகள் பற்றிய தனது வாசிப்பு அனுபவத்தை விமர்சனக்கண்ணோட்டத்தில் விரிவாக எழுதியிருந்த கட்டுரை அதில் வெளியாகியிருந்தது.

மல்லிகையில்  1972 ஓகஸ்ட் மாதம் சுலோ அய்யர் எழுதிய விமர்சனம், அதனையடுத்து, அதே ஆண்டு இறுதியில் அநு.வை. நாகராஜன் பூரணி இதழில் எழுதிய விமர்சனம் ஆகியவற்றுக்குப்பின்னர், 1974 இல் ஶ்ரீபதியின் விமர்சனம் தினகரனில் வெளிவந்திருந்தது.

இந்த விமர்சனங்களை நான் எதிர்பார்க்கவில்லை. 

ஶ்ரீபதி, தனது விமர்சனத்தில்,  “ …. மீன் பிடித் தொழிலாளிகளின் மன உணர்வுகளையும், வாழ்க்கை முறைகளின் அடிப்படையாக எழும் சிந்தனைகளையும், ஆசாபாசங்களையும், நெட்ட நெடும் பெருமூச்சுக்களையும் , போலி உணர்வற்றதும் அதே வேளையில் மேடு பள்ளமும் பொக்கை பொள்ளல்கள் விழுந்த வாழ்க்கைக்கோடுகளையும் ஆசிரியர் தரையும் தாரகையிலிருந்து சுமையின் பங்காளிகள் வரை உள்ள தனது குறும் புனைகதைகளிலே வெளிப்படுத்தியுள்ளார்…. இவர், தன்னுடைய கதைகளிலே நனவோடை உத்தியை பயன்படுத்தி கதை சொல்ல முற்பட்டிருக்கிறார். இவருடைய கதைகளில் பெரும்பாலானவற்றில்  இவற்றை அவதானிக்க முடிகிறது.  “

ஶ்ரீபதி பின்னாளில் ஆசிரியராகவும் பணியிலிருந்தவர்.  இறுதியாக பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியில் அதிபராகக் கடமையாற்றினார்.  யாழ். மாவட்டத்தில்  ஒரு தடவை நடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டார்.

நீண்ட இடைவெளிக்குப்பின்னர் போர் முடிந்ததும் 2010 ஆம் ஆண்டு பருத்தித்துறை சென்று அவரையும் எழுத்தாளர் நண்பர் தெணியானையும் அழைத்துக்கொண்டு வல்லிபுரக்கோயிலுக்குச்  சென்றேன்.   எனது சுமையின் பங்காளிகள் தொகுதியிலும் ஶ்ரீபதியின் விமர்சனத்தில் ஒரு பகுதியை வெளியிட்டுள்ளேன்.

நண்பர் கே. எஸ். சிவகுமாரன் எனது சிறுகதைகள் பற்றி எழுதிய விமர்சனமும் தினகரன் வாரமஞ்சரியில் வெளிவந்துள்ளது.  இவர் இலங்கை வானொலி, மற்றும்  The Island ,  வீரகேசரி பத்திரிகைகளிலும் பணியாற்றியிருக்கும் சிறந்த திறனாய்வாளர்.

படைப்பு இலக்கியமும் மீனவ மக்கள் வாழ்வும் என்ற தலைப்பில் வாமனன் என்ற புனைபெயரில் செ யோகநாதன் எழுதிய விமர்சனத்திலும் எனது ஆரம்பகால சிறுகதைகள் பற்றி குறிப்பிட்டிருந்தார்.

ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சு வழக்கு என்ற தமது பல்கலைக் கழக ஆய்வேட்டில் நண்பர் சி. வன்னியகுலமும் எனது கதைகளின் பிரதேச மொழிவழக்கு பற்றி எழுதியுள்ளார். வன்னியகுலம் பின்னாளில் வடக்கு – கிழக்கு  மாகாண அரசிலும்,  ரூபவாகினி கூட்டுத்தாபனத்தில் தமிழ்ச்சேவை பணிப்பாளராகவும், வீரகேசரியில் செய்தி ஆசிரியராகவும் பணியாற்றியவர்.

தமிழகத்தின் பிரபல பேராசிரியர் நா. வானமாமலை அவர்களும் எனது சுமையின் பங்காளிகள் தொகுதியை படித்துவிட்டு மல்லிகையிலும் தமிழக தாமரை இதழிலும் எழுதியிருக்கிறார்.

இலங்கையில் மற்றும் ஒரு முக்கிய விமர்சகரான ஏ.ஜே. கனகரட்ணாவும் எனது ஆரம்பகால சிறுகதைகளை படித்துவிட்டு,  மல்லிகையில் எழுதிய விமர்சனமும், அவருடைய செங்காவலர் தலைவர் யேசுநாதர் (கட்டுரைத் தொகுதி,  மித்ர பதிப்பகம், சென்னை ) நூலிலும் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு சில வசிட்டர்களின் பார்வையில் கண்டறியப்பட்டு வளர்ந்திருப்பதனால், “   விமர்சனத்தால் மழுங்கடிப்படுவதல்ல அழகு, திறனாய்வால் தெளிவுபடுத்துவதே சிறப்பு “   என்ற பால பாடத்தையும் அவர்களிடம் கற்றுக்கொண்டுதான்,  நானும் எனது இலக்கிய நயப்புரைகளை எழுதிவருகின்றேன்.

பிரதேச நிருபராகவும், குதிரைப்பந்தயத்தின் வெற்றி தோல்வியின் பிரகாரம்  வழங்கப்படவேண்டிய பரிசுத்தொகைகளை  கணிப்பவனாகவும்,  காலிமுக வீதியிலே மேய்ப்பனாகவும், இடதுசாரிகளின் சகவாசத்துடன் அலைந்துழன்று இலக்கியவாதியாக வாழ்ந்ததும் விதியின் விளையாட்டுத்தானே…?!

( தொடரும் )

 

 

 

 

 

 

 

 

 

 


No comments: