கல்வி மறுசீரமைப்புக்கான பணிகள் முனைப்புடன் வேகமெடுத்துள்ளன. அடுத்த 2023இல் புதிய கல்வி யுகத்தில் நுழைவதற்கான செயற்பாடுகளில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள ஒரு செயலணியினர் வேகவேகமாக இறங்கியுள்ளனர்.
இன்றைய அரசால் அச்செயலணி ஆற்றுப்படுத்தப்படுகின்றது. எனவே, அது நிச்சயமாக நடைமுறைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கலாம். காரணம் அவர்களிடம் மூன்றில் இரண்டு இருக்கிறது.
எனவே, எதையும் நினைத்துவிட்டால், அதை நிறைவேற்றிவிடக்கூடிய பலம் அவர்களிடம் உண்டு. மற்றது யார் சொல்லியும் கேட்கப்போகிற குணம் அவர்களுக்கு இல்லை. எனவே, புதிதாக வர இருக்கிற கல்வி மறுசீரமைப்புக் குறித்து (அது இன்னமும்) பிரசவம் ஆகாவிட்டாலும் கொஞ்சம் அதைப் பற்றி அறிவது நல்லதல்லவா? அப்போதுதானே எம்மைத் தயார்ப்படுத்தி வைத்திருக்கலாம்.
உலகில் கல்வித் தரத்தில் உயர் நிலையில் உள்ள நாடான பின்லாந்தின் கல்விக் கொள்கையை எமது தேசத்துக்குரிய கலை, கலாசார, விழுமியங்களுடன் கலந்து பூசி மெழுகி, வர இருக்கிறது இப்புதிய சீரமைப்பு.
ஒன்று, இனி தவணை முறைக்கு, பிரியாவிடை கொடுத்து விடலாம். வர இருக்கிறது பல்கலைக்கழகங்களில் இருப்பது போன்ற பருவகால முறை (செமஸ்டர் முறை). ஆனால், மூன்று பருவங்கள்.
அதனால், பிள்ளைகள் இனி முதுகைக் கூனலாக்கும் பாரமான நூல்களை ஆண்டு முழுவதும் காவித் திரிய வேண்டியதில்லை. சின்னச் சின்னதாக அவர்களுக்கு இனி வழங்கப்படும், பருவ காலத்துக்கான கற்றல் கையேடுகள்.
க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர் தரம் ஆகியவற்றுக்கு இனி ஏ, பி என்ற தரங்களோடு, மதிப்பெண் விகிதமும் (ஜி.பி.) வழங்கப்படும். இதன்மூலம், ஏ பெற்ற மாணவர்கள் பலர் இருப்பினும், அவர்களுள் அதிவிவேகி யாரென, ஜி.பி. மூலம் இலகுவாக அறிந்துகொள்ளலாம். வேறுபடும் அவர்களுடைய விவேக மட்டத்தைசகு அலகுப் பெறுமதியும் (கிரடிற்) தரப்படவுள்ளது. மாணவர் ஒருவர் குறித்த மொத்தக் கிரடிற் பெறுமதியைப் பெற்று விட்டால் க.பொ.த. சாதாரண தரத்தில் சித்தி அடைந்தவராகக் கருதப்படுவார்.
இதில் விசேடம் என்னவென்றால், இவ்வாறு எதிர்பார்க்கப்படும் கிரடிற்றைப் பெற அவர் 11ஆம் வகுப்புவரை காத்திருக்க வேண்டியதில்லை. அவர், விரைவாகக் கற்கும் மாணவராக இருந்தால் ஒருசில வருடங்கள் முன்னதாகவே க.பொ.த. சாதாரணதரத்தைப் பூர்த்திசெய்ய முடியும்.
மெல்லக் கற்கும் மாணவராயின் கூடுதலாக ஓரிரு வருடங்களை எடுத்துக்கொள்ளலாம். எப்படியாயினும் ஓ.எல். பாஸ் பண்ணி முடித்து விடலாம்.
மட்டுமல்ல, க.பொ.த. சாதாரண தரத்தில் கற்கும் பாடங்களுக்கான பெறுபேறுகளை, இனி ஒரு எழுத்துப் பரீட்சையில் மட்டும் தீர்மானிக்கும் நடைமுறை மலையேறப்போகிறது. ஆம், ஒரு பொதுப் பரீட்சையை மட்டும் வைத்து மாணவர் அறிவைப் பரீட்சித்து, அவருக்கு ஏ என்றும் இவருக்கு பி என்றும் இனிச் சொல்வதற்கில்லை.
அனைத்துப் பாடங்களுக்கும் வர இருக்கிறது பாடசாலை மட்டத்திலான செய்முறைச் செயற்பாடுகள். கிட்டத்தட்ட 50 வீதமான புள்ளிகள் அவற்றுக்கும் உண்டு. இச் செய்முறையாற்றலை மதிப்பிடும் நடுவர்கள் ஆசிரியர்களே. அவர்கள் மதிப்பீட்டைக் கண்காணிக்க இருக்கிறது கல்வித் திணைக்களம் அல்லது பரீட்சைத் திணைக்களம்.
மற்றொரு விடயம் இனிமேல் ஒவ்வொரு பரீட்சைக்கும் ஒவ்வொரு சுட்டெண் இருக்காது.
புலமைப்பரிசில் பரீட்சைக்கு வழங்கப்பெறும் எண்ணே ஒரு மாணவருக்குக் க.பொ.த. சாதாரண தரத்திற்கும் வழங்கப்படும். அதுவே, க.பொ.த. உயர் தரத்திற்குமாகும். எனவே, ஒரே பார்வையில் மாணவர் கல்வி அடைவுகளைக் காணுவதற்கு முடியும்.
அதுமட்டுமல்லாமல், மாணவரது புறக்கிருத்திய ஆற்றல்களையும் அவர்கள் பெறும் பரிசு, விருது விவரங்களையும், இவ்வெண்ணின் மூலம் பாடசாலை அதிபர்கள் இணைத்துக்கொள்ள முடியும். இதன் பயனாக, கணினியின் ஒரு பொத்தானை அழுத்தினால், மாணவர் பாடசாலையை விட்டு விலகும்பொழுது பெறும் விடுகைப் பத்திரத்தினைப் பெற்றுக் கொள்ளலாம்.
அம்மாணவர் ஏதேனும் வேலைக்கான நேர்முகத் தேர்வுக்குச் செல்கிறார் என்றால், இனிமேல் மூட்டை முடிச்சுகளாகச் சான்றிதழ்களைக் கட்டிக் கொண்டு செல்லத் தேவையில்லை. தன், சுட்டிலக்கத்தைக் கூறினாலேயே போதும். வேண்டிய விவரங்களைக் கணினி மூலமாகவே தேர்வை நடாத்துபவர்கள் அறிந்து விடுவார்கள்.
பெரும்பாலும் பாடசாலைகளுக்கிடையிலான தர வேறுபாடுகள் புதிய மறுசீரமைப்பின் பின்பு பேணப்பட மாட்டாது எனத் தெரிகிறது. அதாவது, தேசியப் பாடசாலை, ஏபி பாடசாலை என்ற உயர்வு தாழ்வெல்லாம் கிடையாது. அனைத்துப் பாடசாலைகளும் இலங்கைப் பாடசாலைகளே. அவற்றின் கற்றல் நடவடிக்கைகளும் சமனாக இருத்தல் வேண்டுமென்ற நீண்ட பெருங் கனவே இம்மறுசீரமைப்பினதும் விருப்பாக உள்ளது.
இதில், நம் நாட்டுக்குரிய கலை, கலாசார அமிசங்களுக்கு மிகுந்த முன்னுரிமை கொடுக்கப்படும் எனவும், தொழிலுக்குரியதான தொழில்நுட்பப் பாடத்துடன் மனிதாபிமானம், அறம், நம் நாட்டு வரலாறு முதலியவற்றுக்கும் தக்க இடம் வழங்கப்படும் எனவும் தெரிகிறது.
பிறரிடமும் அரசிடமும் வேலையை எதிர்பார்க்கும் நல்ல தொழிலாளர்களைத் தரமுள்ள தரமான வேலை செய்பவர்களை உருவாக்குவது மட்டுமல்ல கல்வியின் நோக்கம் 'தாமாகத் தொழில் துறைகளை விருத்தி செய்து பிறருக்கும் வேலை வாய்ப்பை வழங்குபவர்களை உருவாக்குவதும் கல்வியின் நோக்கமாகும்' என்கிறது கல்வி மறுசீரமைப்புக் குழு.
இந்த மறுசீரமைப்புப் பற்றிய கூட்டத்தில் கலந்துகொண்டு வீடு வந்து பார்த்தால் செய்தித் தாளில் சிரிக்கிறது ஒரு கட்டங்கட்டப்பட்ட செய்தி:
'ஒன்றிணைந்த நாடு தொடர்பில் உறுதிவழங்கிய மக்கள் பிரதிநிதி விக்னேஸ்வரன் இனவாத செயற்பாட்டை மீண்டும் விதையிலிருந்து உருவாக்குவதற்கு முயற்சிக்கின்றார். அதற்கு நாங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கின்றோம். இந்த நாட்டில் இரத்த ஆறு ஓடுவதற்கும் மயான பூமியாக மாறுவதற்குமேற்ற உரைகளை இந்தப் பாராளுமன்றத்திலும் பாராளுமன்றத்திற்கு வெளியேயும் வெளியிடுவது பிழையானது.'
இது, பாராளுமன்ற சபாநாயரை வாழ்த்தி ஆற்றிய உரையில் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்த உரைகுறித்து இன்னொரு 'கௌரவ' தெரிவித்த கருத்து.
கவனித்துப் பாருங்கள், இதில் காணப்படும் 'இந்த நாட்டில் இரத்த ஆறு ஓடுவதற்கும் மயான பூமியாக மாறுவதற்குமேற்ற உரைகளை' என்று குறிப்பிடப்படுவது எவ்வளவு பாரதூரமானது.
இது தமிழைக் குறித்து, தமிழினம் குறித்து, அவற்றின் தொன்மை குறித்துப் பேசினால் என்ன நடக்கும் என்பதைப் பூடகமாகத் தெரிவிக்கும் கண்மூடித்தனமான எச்சரிக்கை அல்லவா?
தொழிற் கல்வி, தேசம்பற்றிய கல்வி, நம் கலைபற்றிய கல்வி எல்லாவற்றையும் வழங்கிவிடத் துடிக்கும் கல்வி மறுசீரமைப்புக் குழுவினரிடம் என் பணிவான விண்ணப்பமெல்லாம் பின்வரும் ஒன்றுதான்.
'பல் கலாசார நாட்டில் மற்றவரையும் மதித்து, அவரது உரிமையையும் பேணி அன்புடன் வாழுதல் எப்படி என்பதை, சின்ன வயது முதலாகக் கற்று கொடுக்க, தயவுசெய்து ஏதேனும் செய்யுங்கள்'
No comments:
Post a Comment