அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் – பகுதி 23 – கொடுகொட்டி – சரவண பிரபு ராமமூர்த்தி


கொடுகொட்டி/கொடுங்கொட்டி – தோற்கருவி
அமைப்பு
இரு கருவிகள் இணைந்த தோலிசைக்கருவி கொடுகொட்டி.
அடியில் குறுகி, முகம் படர்ந்த இக்கருவிகள் இரண்டின் நடுப்புறமும் ஒன்றாக பிணைக்கப்பட்டிருக்கும். இடுப்பில் கட்டிக்கொண்டோ, கழுத்தில் மாட்டியபடியோ இசைப்பார்கள். மரச்சட்டிகளில் தோல் கொண்டு வார்த்து தயாரிக்கப்படும் கருவி இது. கனத்த பலா மரத்தை குடைந்து, சட்டி போன்ற உருவம் செய்து, மேலே ஆட்டுத்தோல் அல்லது மாட்டுத்தோல் கொண்டு வார்க்கப்படும். ஒன்று, தொப்பி. ‘தொம்... தொம்...’மென இசையெழுப்பும். மற்றொன்று வளந்தலை. இதில் ‘தா... தா...’வென ஒலி எழும்பும். ஒன்று பெரிதாகவும், மற்றொன்று சற்றே சிறிதாகவும் இருக்கும். தொப்பி மென்மையான தோலாலும், வளந்தலை கடினமான தோலாலும் வார்க்கப்படும். இக்கருவியின் வலந்தலையை புளியங்குச்சி கொண்டு இசைக்கிறார்கள். தடிமனற்ற புளியங்குச்சியை உடைத்து, தண்ணீரில் நன்கு ஊறவைத்து, ”உ” வடிவில் வளைத்து கட்டி, பின் நெருப்பில் வாட்டி வளைத்து  வலந்தலையில் வாசிக்கத் தகுந்ததாகிறது. இடந்தலைக்கு மூங்கில் பயன்படுதுவார்களாம்.

குறிப்பு
கிரிகிட்டி, கிடுகிட்டி, கிடிக்கட்டி, கொடுங்கொட்டி என பல பெயர்களால் அழைக்கப்படுகிறது இக்கருவி. தமிழறிஞர் வீ.பா.கா.சுந்தரனார் அவர்கள் இக்கருவியானது தொன்மையாக ஒரு பகுதி மண்சட்டியாலும் மற்றொரு பகுதி உலோகத்தாலும் செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். 10 அல்லது 12 அங்குலம் உயரமும் எட்டு அங்குல குறுக்களவும் உடைய மண்சட்டி இதை விட இரண்டு அங்குலம் அளவில் குறைந்த சிறிய உலோக சட்டி, இவைகளில் தோல் போர்த்தி, இரண்டையும் சேர்த்து இடுப்பில் கட்டிக் கொண்டு இசைப்பார்கள் என்று குறிப்பிடுகிறார். புதுச்சேரி மாநிலத்தில் சில இடங்களில் நாட்டார் இசைக் கலைஞர்கள் இக்கருவியை பண்டைய குறிப்புகளின்படி மீட்டுருவாக்கம் செய்து கச்சேரிகளில் பயன்படுத்தி வருகிறார்கள். புதுச்சேரியை சேர்ந்த திரு பிரபாகரன் அவர்கள் இவர்களில் குறிப்பிட தக்கவர்.  

கலித்தொகையின் கடவுள் வாழ்த்துப் பாடலில் கொடுகொட்டி என்ற சொல் முதன்முதலில் இடம்பெறுகிறது. கொடுகொட்டி, பாண்டரங்கம், காபாலம் ஆகியவை சிவனால் ஆடப்படும் ஆடல்கள் என்று கலித்தொகை கடவுள் வாழ்த்துப் பாடல் கூறுகிறது. சிலப்பதிகார உரையில் கொடுகொட்டி என்பது ஆட்ட வகை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கொடுகொட்டி இசைக்கருவி பற்றிய குறிப்புகள் தேவாரம் முழுவதும் காணப்படுகிறது. குறிப்பாக திருநாவுக்கரசர் தேவாரத்தில் கொடுகொட்டி ஒரு இசைக்கருவி என்று பாடப்பட்டுள்ளது. இதிலிருந்து கொடுகொட்டி என்பது ஒரு ஆட்ட வகை என்றும், ஒரு இசைக் கருவி என்றும் நாம் அறிகின்றோம். கொடுமையான தாள நடைகளை போடுவதனால் இதற்கு கொடுகொட்டி எனப் பெயராயிற்று என்கிறார் தமிழிசை அறிஞர் வீ.பா.கா. சுந்தரம் அவர்கள்.

விலில் வாசிக்கும் அத்தனை சொற்கட்டுக்களையும் கிடுகிட்டியில் வாசிக்க முடியும் என்பதால் இது நாதஸ்வரக் கச்சேரிகள் பக்கவாத்தியமாக பயன்பட்டதாக தெரிகிறது. திருவீழிமிழலை கிடுகிட்டி கிருஷ்ணன் பிள்ளை என்பவர் இவ்விசைக்கருவியை இசைப்பதில் பெறும் வல்லவராகத் இருந்ததை மெல்பர்ன் வக்ரதுண்ட பிள்ளையார் கோயில் நாதஸ்வர இசைக் கலைஞர் திரு ஸ்ரீநிவாசன் கலியமூர்த்தி அவர்கள் தெரிவிக்கிறார். தமிழ்நாட்டில் நாகப்பட்டிம் அடுத்த கீழ்வேளூர் கேடிலியப்பர் கோவிலில் இக்கருவி முப்பது ஆண்டுகள் முன்புவரை நாள்தோறும் இசைக்கப்பட்டு வந்ததாக ஆலயவழிபாட்டில் இசை என்கிற நூல் குறிப்பிடுகிறது. ஆனால் தற்காலத்தில் காற்றோடு கலந்துவிட்டது இந்த கருவியின் ஓசை. மேலும் இக்கருவி கேடிலியப்பர் கோவிலில் இருந்து காணாமலும் போய்விட்டது.  இக்கருவியை பற்றிய எந்த செய்தியும் தற்காலத்தில் அக்கோவிலில் பணிபுரியும் இசைக்கலைஞர்களுக்கு தெரியவில்லை என்பது பெரிய வருத்தம். இவ்வூரில் கிடிகிட்டி வாத்தியக் கலைஞர்கள், தலைமுறைத்
தலைமுறையாக வாழ்ந்து வந்துள்ளனர். சுப்பிரமணியப் பிள்ளை (1787 - 1846), சண்முகம் பிள்ளை (1835 - 1897), ராமையா பிள்ளை (1876 - 1955) எனும் தலைமுறைக் குடும்பக் கலைஞர்கள் குறிப்பிடத்தக்கோர். கீவளூர் சுப்பராயப் பிள்ளை, பந்தணைநல்லூர் கோவிந்தப்பிள்ளை, தில்லையாடி ஸ்ரீநிவாசப்பிள்ளை ஆகியோரும் கிடுகிட்டி வல்லுனர்களாக விளங்கியுள்ளனர். சென்ற நூற்றாண்டின் தவில் நாதஸ்வர இசைக் கலைஞர்களின் வாழ்க்கை குறிப்புகளைப் பற்றி பேசும் மங்கல இசை மன்னர்கள் என்ற நூலில் சில கிடுகிட்டி கலைஞர்கள் பற்றிய குறிப்புகள் இருந்தாலும்கிடுகிட்டி கலைஞர்களைப் பற்றிய விரிவான தகவல்கள் அந்நூலில் இடம் இடம்பெறவில்லை. நந்தனார் திரைப்படத்தில் சேரியில் உள்ள மக்கள் சாமியாடிக் கொண்டிருக்கும்போது கிடிகிட்டி, உடுக்கை, தவண்டை, தவலசங்கு ஆகியவை வாசிக்கப்படும். சென்ற நூற்றாண்டில் மக்களின் வாழ்வோடு கலந்து இருந்த கிடிகிட்டி இசைக்கருவி இப்போது எங்குமே இல்லாமல் தமிழ்நாட்டில் வழக்கொழிந்து காணாமல் போய் விட்டது. பல கோவில்களின் கேட்பார்ரற்று ஆணிகளில் தொங்கிக் கொண்டு இருப்பதாக வருத்தப்படுகிறார் கோசை நகரான் அமைப்பின் நிறுவனர் சிவத்திரு சிவக்குமார் அவர்கள்.

 ‘‘தேரில் தியாகராஜர் உலாவரும்போது, பாரி நாதஸ்வரத்தோடு கொடுகொட்டி இசைக்கப்படும் என்கிறார் திருவாரூர் கோயில் இசைக்கலைஞர் பழனி.  திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்கு சென்றால் கொடுகொட்டியை காணலாம் என்கிற உத்தரவாதம் இல்லை. காரணம் இது வருடத்தில் ஒரு முறையோ இரண்டு முறையோ தான் இசைக்கப்படுகிறது. ஆனால் நமது கொடுகொட்டி இசைக்கருவி இலங்கையில் உள்ள புத்த விகாரையில் நாள்தோறும் இசைக்கப்படுகிறது. இவர்கள் இதை ”தம்மமட்டா” என்று அழைக்கிறார்கள். ம்பட்டை என்பதன் மருவிய வடிவம் தான் தம்மமட்டா என்பது இசை வல்லுநர்களின் கருத்து. சிறிய வகை முகவீணை போன்ற இசைக்கருவியான ஹொரானாவெ உடன் கொடுகொட்டி இலங்கையிலுள்ள புத்த விகாரைகளில் நாள்தோறும் முக்கப்படுகிறது. தமிழருக்கும் தமிழ் மண்ணிற்கும் சொந்தமானதும் தமிழகத்தில் இருந்த சிவன் கோவில்களில் ஒரு காலத்தில் முழக்கப் பெற்றதுமான இந்த கொடுகொட்டி இசைக்கருவி இன்று தமிழகத்தில் அரிதாகி போய்விட்டது. ஆனால் சிங்கள மக்கள் இக்கருவியை தவறாமல் தினமும் பயன்படுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது.

 தமிழ்நாட்டில் குறிப்பாக வட மாவட்டங்களில் வாழும் பழங்குடியின மக்கள் பூம்பூம் மாட்டுக்காரர்கள் எனப்படும் ஆதியன் இனமக்கள். இவர்கள் மாடுகளை வைத்து வீடுகள்தோறும் சென்று உருமி, கொடுகொட்டி மற்றும் நாயணம் ஆகிய கருவிகளை இசைத்து யாசகம் பெறுவதை தொழிலாக கொண்டுள்ளனர். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய கல்வி அறிவு இல்லாத சமூகமாக இருந்து வருகிறார்கள். இவர்கள் இசைக்கும் கொடுகொட்டியும் நாயனமும் ஆடாதவரையும் ஆடவைக்கும் மகிமை கொண்டது. இம்மக்களை போலவே இம்மக்களின் கொடுகொட்டி இசைக்கருவிகளும் மிகவும் நலிவுற்று காணப்படுகிறது. ஒரு முகத்தை மண்ணிலும் மற்றொரு முகத்தை எவர்சில்வர் போன்ற உலோகத்திலும், தோல்களுக்கு பதிலாக ஃபைபர் அல்லது எக்ஸ்ரே நகல்கள் பொருத்தி இசைக்கிறார்கள். அவர்களின் பொருளாதாரம் இதை தயார் செய்வதற்குத்தான் போதுமானதாக உள்ளது. ஆனால் இவர்கள் கொடுகொட்டி இசைப்பதில் வல்லவர்களாகவும் தாளக்கட்டுகளை இசைக்க வல்லவர்களாகவும் விளங்குகிறார்கள். யாசகம் பெறுவதற்காக அம்மக்கள் நிகழ்த்தும் ‘மாட்டுக்கல்யாணம்’ என்றொரு கூத்தின்போது கொடுகொட்டி மிக்க துணையாக இருக்கிறது. நகைச்சுவை பொருந்திய இக்கலையை இப்போது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சில ஆதியன்கள் மட்டுமே நிகழ்த்துகிறார்கள்.

கொங்கு பகுதி சலங்கை ஆட்டங்களிலும் கொடுகொட்டியின் பங்கு உண்டு. பொய்க்கால் குதிரை ஆட்டத்துக்கு இக்கருவி இசைக்கப்படும். மேலும் மதுரை வட்டாரங்களிலும், தெற்குத்
தமிழ்நாட்டில் சில பகுதிகளிலும் கிடுகிட்டி என்ற பெயரில் இந்த இசைக்கருவி அறிவிப்பு கருவியாக பயன்பாட்டில் உள்ளது. பலா மரத்தை குடைந்து ஒரு முகத்தை மட்டுமே கொண்ட இந்த இசைக்கருவி இடுப்பில் கட்டிக்கொண்டு இசைக்கப்படுகிறது. இக்கருவியை கரகாட்டம் போன்ற நாட்டார் கலை வடிவங்களிலும் அறிவிப்பு கருவியாகவும் பயன்படுத்துகிறார்கள்.

கருநாடக மாநிலத்தில் ருத்ர வாத்தியா என்ற பெயரில் நமது கொடுகொட்டியை ஒத்த இருமுக இசைக் கருவி ஒன்று இசைக்கப்படுகிறது. இது நமது தமிழ்நாட்டின் கொடுகொட்டியை விட அளவில் மிகப் பெரியதாக உள்ளது. அவர்கள் இதை சம்மேளா (சேர்ந்த மேளம்) என்று அழைக்கிறார்கள். பைரவர், வீரபத்திரர், சிவன் கோவில்களில் இசைக்கப்படுகிறது.

இருமுக கருவிகளான கொடுகொட்டி, குந்தளம், டமாரம் மற்றும் தம்பாளம் ஆகிய இசைக்கருவிகள் தற்காலத்தில் சில சில இடங்களில் புழக்கத்தில் இருந்தாலும் இவை அனைத்துமே அழிவின் விளிம்பில் உள்ள இசைக் கருவிகளாகும். இவ்விசைக்கருவிகளை காப்பாற்றுவது நமது கடமையாகும்.

புழக்கத்தில் உள்ள இடங்கள்
·       திருவாரூர் தியாகராஜர் கோயில்
·       பழங்குடி ஆதியன்(பூம்பூம் மாட்டுக்காரர்) மக்களிடம்
·       கொங்கு பகுதி சலங்கை ஆட்டங்களில்
·       இலங்கை உள்ள புத்தர் விகாரைகளில்

பாடல்:
தகைமலி தண்டுசூலம் அனலுமிழு நாகங் கொடுகொட்டி வீணை முரல
வகைமலி வன்னிகொன்றை மதமத்தம் வைத்த பெருமான் உகந்த நகர்தான்
புகைமலி கந்தமாலை புனைவார்கள் பூசல் பணிவார்கள் பாடல் பெருகி
நகைமலி முத்திலங்கு மணல்சூழ் கிடக்கை நனிபள்ளி போலும் நமர்காள்.
 - திருமுறை 2.84.7 , சம்பந்தர்

விடுபட்டி ஏறுகந் தேறீயென் விண்ணப்பம் மேலிலங்கு
கொடுகொட்டி கொக்கரை தக்கை குழல்தாளம் வீணைமொந்தை
வடுவிட்ட கொன்றையும் வன்னியும் மத்தமும் வாளரவுந்
தடுகுட்ட மாடுஞ் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே.
-        திருமுறை 4.111.8 , அப்பர்

கொக்க ரைகுழல் வீணை கொடுகொட்டி
பக்க மேபகு வாயன பூதங்கள்
ஒக்க ஆட லுகந்துடன் கூத்தராய்
அக்கி னோடர வார்ப்பர்ஆ ரூரரே.
-        திருமுறை  5.7.1 , அப்பர்

கொடுகொட் டிபடத் துடிகொட் டிநடத்

    தடமிட் டுவளைத் திருக்கு மொருதிரள் - திருவகுப்பு , அருணகிரிநாதர்

காணொளி:
தமிழகம்
https://www.youtube.com/watch?v=IGYrFwRsTBY
https://youtu.be/fy7athwRaBo

கருநாடகம்
https://www.youtube.com/watch?v=7UuBmdfOlW8&feature=youtu.be

இலங்கை:
https://youtu.be/fy7athwRaBo

-சரவண பிரபு ராமமூர்த்தி
நன்றி:
1.     வெ. நீலகண்டன், வாழ்விழந்து வரும் கிராமிய இசைக் கருவிகள்
2.     தமிழிசைக் கலைக் களஞ்சியம் தொகுதி 2, முனைவர் வீ.ப.கா சுந்தரம் அவர்கள், பாரதிதாசன் பல்கலைக்கழகம்
3.     ஆதியன் புகைப்படம் உதவி - திரு மணிகண்டன்(பறை பயிற்றுனர், +919865614511), ஈரோடு




1 comment:

MARIAPPAN A said...

கொடுகொட்டி விலை எவ்வளவு அண்ணா இருந்தா a.mariappan333@gmail.com 6383472477 க்கு அனுப்புங்க Please Please Please