போர் - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்

.



  எம் இனம் ஒரு கொடுமையான போரில் சிக்கித் தவித்தது. கை கால்களை இழந்து தவிப்போர் பட்ட காயங்களுக்கு சிகிச்சை அளிக்கும் வைத்திய நிலையங்களும் குண்டுகளால் பாதிக்கப்பட்ட நிலையில் போதிய மருந்தில்லாமை, ஏன் குடிநீர் கூட கிடைக்காமல் தவித்தவர் எத்தனையோ பேர். நாம் போரை எதிர்கொள்ளும் காலம் வரை அதன் பாதிப்பை தொலைக்காட்சிகளிலே மட்டுமே கண்டோம். இன்றோ அது எமது வாழ்வின் அனுபவமாகிவிட்டது. சேர சோழ பாண்டியர்கள், போர் புரிந்தார்கள். நாடுகளைத் தமதாக்கினர், பெருமை மிக்க தமிழினம் என வாசித்து மகிழ்ந்தோம். ஆனால் போர் என்ற அந்த நாச சக்தியை உணரும்போது எமது இரத்தமே உறைந்துவிடுகிறது. இத்தனையையும் அறியும்போது இந்த போர்தான் என்ன, இதற்கு விடிவுண்டா? என எண்ணத் தொடங்கினேன்.  அதன் வெளிப்பாடே நான் உங்களுடன் பகிர உள்ளவை.

  மனித சமுதாயம் என ஒன்று உருவாகத் தொடங்கிய காலம் தொட்டு, இன்று வரை மனிதன் போர் என்ற பெயரால் தன் இனத்தைக் கொன்றுகொண்டேதான் இருக்கிறான். சில போர்களோ மிக குறுகிய காலமே நிலைப்பவை, வேறு சிலவோ பல வருடங்கள் தொடர்ந்து நடைபெறுபவை. மனிதன் ஆரம்ப காலத்திலேய கூட்டாக வாழ்ந்தான். இந்த கூட்டங்களே காலப்போக்கில் மாறுபட்ட பெயர்களுடன் இனக்குழுக்களாக வாழ்ந்தார்கள். வேறுபட்ட இனக்குழுக்கள் ஒருவருடன் ஒருவர் மோதிக் கொண்டனர். இதுவே மனிதனது போரின் ஆரம்பம் போலும். ஆதி மனிதன் வேட்டையாடி வாழ்ந்த காலத்திலே வேட்டை ஆடும் நிலப்பரப்பிற்காகப் போரிட்டான். தன் இனம் வேட்டையாடும் இடத்திலே மாற்றான் வந்தால் அவனை விரட்டினார்கள். முடிந்தால் கொன்றும் தீர்த்தனர்.



  பின் நிலத்தை உழுது பயிரிட்ட போதும் அவர்களுக்குப் போதிய உற்பத்தி கிடைக்கவில்லை. கிடைக்கும் உற்பத்தியை தனதாக்கப் போர். உழுது பயிரிட மனித சக்தி வேண்டியிருந்தது. அதனால் மனிதனை மனிதன் அடக்கி அடிமைகள் ஆக்கினார்கள். அந்த அடக்குமுறையில் இருந்து வெளியேறப் போர். ஆனால் இவை யாவுமே இன்றைய காலப் போர் போன்றவை அல்ல. ஏதோ கிளர்ச்சி என்றே கூறலாம்.

  மனித நாகரீகத்தின் உன்னத வளர்ச்சியைக் குறிப்பது உலோகங்களில் இரும்பின் வருகையே. இரும்பின் மூலம் உற்பத்தி பன்மடங்கானது. இரும்பாயுதத்தால் உழுது பயிரிட்ட மனித சமுதாயம் பல மாற்றங்களைக் கண்டது. முன்பு அடிமை நிலையில் வாழ்ந்த மக்கள் கூட்டம் விவசாயிகளும் ஆனார்கள். ஆனால் நிலத்தின் உரிமையாளர் ஒரு சிலரே, இவர்களே பெரிய நிலப்பரப்பின் உரிமையாளர்களான நிலச்சுவான்தாரர்கள். இந்த மாற்றத்தின் பின் தோன்றியதே அரசுகள், பேரரசுகள், சிற்றரசுகள். ஒவ்வொன்றும் தன்னைக் காப்பாற்ற படை பலம் வேண்டியிருந்தது. அதன் மூலமே போர் புரிய பயிற்சி பெற்ற போர் வீரர்களின் தேவை ஏற்பட்டது. இந்தப் படை பலமே குடிகளை அடக்கி ஆள்வதற்கும் உதவியது.

  விளைச்சல் பெருகியதால் ஒரு சாராருக்கு ஓய்வு கிடைத்தது. இதன் பயனால் கலைகளும் இலக்கியங்களும் வளர வாய்ப்பு ஏற்பட்டது. இந்த காலகட்டத்து இலக்கியங்களோ போரையும் வீரத்தையும் பறைசாற்றின. எமது பெரும் இதிகாசங்களான மகாபாரதமும் இராமாயணமும் போரையே மையமாகக் கொண்டு அமைந்தவை. மகாபாரதம் பாண்டவர்க்கும் அவர்கள் உறவினரான கௌரவர்களுக்கும் இடையே நடந்த போரை வர்ணிப்பவை. இராமாயணமோ இராமனுக்கும் இராவணனுக்கும் நடந்த போரை விவரிப்பவை.

  எமது தமிழ் மன்னர்களின் வாழ்வே போராகத்தான் இருந்தது போலும். எமது பண்டைய இலக்கியச் செல்வங்களான புறநானூறு, கலிங்கத்துப்பரணி யாவும் போரையும் வீரத்தையும் வர்ணிப்பவையே. அரசனோ, பேராசை கொண்டவனாக நாட்டை விரிவுபடுத்த போரில் ஈடுபடுவான். நாட்டை விரிவுபடுத்துவதன் மூலம் பெரிய செல்வமும் பெருமையும் அடைவான். இதையே கி.பி.6-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பர் சுவாமிகள் மனம் வெதும்பி பாடினார். “ஆசைக்கோர் அளவில்லை அகிலமெல்லாம் கட்டி ஆளினும் கடல் மீதே ஆணை செலவே நினைவர்” என்றார், மன்னர் குலத்தைப் பார்த்து. நிலத்தை எல்லாம் கட்டி ஆண்டாலும் திருப்தி அடையார் கடல் மீதும் ஆணை செலுத்த நினைப்பார் என்றார்.

  அன்று மன்னர் நாடுகளைப் பிடித்து தமது நாட்டை விஸ்தரிக்க முற்பட்ட பொழுது மக்கள் மன்னனை ஆதரித்தனர் எனக் கூறிவிட முடியாது.  அவர்கட்கு தெரிந்ததெல்லாம் தலைநகரில் இருக்கும் மன்னரின் உத்தியோகத்தார் வரிபெற வருவார். வரி செலுத்தாவிட்டால் அடியும் உதையும் கொடுப்பார்கள். இவ்வாறெல்லாம் நடைபெற்றது என்பதை எந்த இலக்கியமும் பாடி வைக்கவில்லை. இவற்றை புலவர் பெருமக்கள் பாடமாட்டார்கள். அவர்களோ அரசனுக்கு ஆக்கம் தேடும் அவனது கூலிப்படைகளே. “அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி” என்றும் கூறி வைத்தனர் இந்தக் கூலி பெற்ற புலவர்கள்.

  அரசன் ஆண்ட அரசு சாம்ராட்சியம் யாவும் பழங்கதையாகின. தேசப்பற்றுடன் மக்களின் தேசம் நாடு என நிலை மாறியது. ஒரே கலாச்சாரத்தையும் மொழியையும் கொண்டவர் ஒரு நிலப்பரப்பினர் ஒரு தேசத்தவர் எனக் கொள்ளப்பட்டது. இந்த அடிப்படையில் தோன்றிய தேசங்களே இங்கிலாந்து, France, Germany. இவை 19 ஆம் நூற்றாண்டில் தோன்றியவை. அவற்றை அடுத்து தோன்றியவையே Soviet Union, India, Switzerland. இவையோ முன்போன்றவை அல்லாது வேறுபட்ட மொழி கலாச்சார மக்களை உள்ளடக்கியவையே. இவர்களின் அரசியல் சித்தாந்தம் அதற்கமையவே இருந்தது.

  இனி நாம் இன்று அதிகமாக கேள்விப்படும் Guerilla போர் முறைக்கு வருவோம். இந்த வகையான போர் தந்திரத்தை முதலில் கையாண்டவர்கள் சீன வியட்நாமிய மக்களே. Guerra என்ற Spanish சொல்லின் அர்த்தம் போர் என்பதே. Guerilla என்பது போராளிகளாகும். இவர்கள் பயிற்றப்பட்ட போராளிகள் அல்ல, சிறு சிறு தாக்குதலில் ஈடுபடுபவர்கள். நாட்டின் பயிற்றப்பட்ட போராளிகளில் இருந்து மாறுபட்டவர்கள். இவர்களின் தந்திரம் வேறுபட்ட இடங்களில் எதிர்பாராத சில தாக்குதல்களைக் கையாண்டு பீதியை ஊட்டுவதே ஆகும். இத்தகைய போராட்டம் 1809 முதல் 1813 வரை ஸ்பானியர், போர்த்துக்கேயரால் பிரஞ்சு ஆதிக்கத்தை வெளியேற்ற நடந்தது. ஆனால் இத்தகைய ஒரு போர் முறை பற்றி கிறிஸ்துவிற்கு முன் 4-ஆம் நூற்றாண்டிலேயே சீனர் அறிந்திருந்தனர். சீனப்படைத் தளபதி SUN-TZU என்பவர் “போர்க்கலை” என்ற நூலில் எழுதியிருந்தார். சாதாரண மக்கள் அரசுக்கெதிராக நடத்திய போராட்டத்தில் மறைந்திருந்து எதிர்பாராத தாக்குதல்களை நடத்தினார்கள். இதனால் அரசை மிகுந்த பீதி அடையவைத்தனர் என விவரிக்கப்பட்டிருந்தது. இத்தகைய போராட்டம் மிகப் பெரிய படையைக் கொண்ட எதிரியையும் மிரட்ட வல்லது எனக் குறிப்பிட்டிருந்தார்.

  ஆனால் இன்றோ போர் என்ற நாசகார செயல் புதியப் புதிய கோலங்களில் தலைவிரித்தாடுகிறது. முன்பு காணாத அளவிற்கு மகா சக்தியுடன் நாசம் விளைவிக்கக்கூடியது. வேகம் கொண்ட பயங்கர ஆயுதங்களின் நாசத்தைக் காணமுடியும். இதன் எடுத்துக்காட்டாக விளங்குவது இரண்டு உலக மகா யுத்தங்களும் ஆகும். இதன் பலன் பல கோடி மக்கள் உலகம் பூராவும் மாண்டார்கள். அங்க ஈனர்கள் ஆனார்கள். அது மட்டுமா? அளவிட முடியாத பொருட்சேதம் ஏற்பட்டது. இந்தப் போர்களினாலே பாதிக்கப்பட்ட சாதாரண மக்களின் எண்ணிக்கை போர்வீரர்களின் எண்ணிக்கைகளிலும் அதிகமானது.

  இந்தப் போர்கள் ஏற்படுவதற்கான காரணம்தான் என்ன? ஆதிக்க பலம் மிக்க நாடுகள் உலக நாடுகளை தம்முள் பங்கு போடுவதில் ஏற்பட்ட போட்டியே இதற்குக் காரணமாகிறது. தாம் உற்பத்தி செய்த பொருட்களை சந்தைப் படுத்துவதில் ஏற்பட்ட போட்டியே இந்த அழிவுக்குக் காரணமாகும். பேராசையின் விளைவே இது. ஆதிக்க பலத்தை நிலைநிறுத்தி தாம் உற்பத்தி செய்த பொருட்களை விற்று பெரும் செல்வத்தைப் பெறவேண்டும். இதுவே உலக மகா யுத்தத்தின் பின்னணி.  

  மனிதன் மனிதனாக வாழ்வதற்கு பல மதங்களும் சித்தாந்தங்களும் உள்ளன தான். மதங்களின் போதனையோ, சித்தாங்களின் அறிவார்ந்த சிந்தனையோ போரை நிறுத்த முடியவில்லை. உலகின் வியாபாரத்தை விரிவடையச் செய்யும் மனிதனால், மனிதனை மனிதனாக மதிக்க முடியவில்லையா? பேராசையின் வாரிசா மனித சமுதாயம்? மனிதாபிமானம் எங்கே?    

No comments: