உலகச் செய்திகள்


அமெரிக்காவின் பல நகரங்களிலும் 6ஆவது நாளாக தொடர்ந்து பதற்றம்

பதற்றத்தை கட்டுப்படுத்த இராணுவத்தை அழைப்பதாக டிரம்ப் கடும் எச்சரிக்கை

டிரம்ப்பின் பதிவை கட்டுப்படுத்த பேஸ்புக் ஊழியர்கள் வலியுறுத்து

அமெரிக்காவில் தொடர்ந்தும் பெரும் ஆர்ப்பாட்டங்கள்: வன்முறை தணிவு

போராட்டக் களமாக மாறிய அமெரிக்க நகரங்கள்!

2016இல் கறுப்பினத்தவர் மரணம்: பிரான்ஸில் பாரிய ஆர்ப்பாட்டம்

ஆக்கிரமிப்பு மேற்குக் கரையை இணைக்க தயாராகும் இஸ்ரேல்

கறுப்பினத்தவர் மரணம்: பொலிஸார் மீது புதிய குற்றச்சாட்டுகள் பதிவு

ட்விட்டரில் ‘இனவாதி’ தேடலில் டொனால்ட் டிரம்ப் முதலிடம்


அமெரிக்காவின் பல நகரங்களிலும் 6ஆவது நாளாக தொடர்ந்து பதற்றம்



பொலிஸ் பிடியில் இருந்த கறுப்பின ஆடவர் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு வெளியிட்டு அமெரிக்காவின் பல நகரங்களிலும் ஆறாவது இரவாகவும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வன்முறைகள் இடம்பெற்றன.
சுமார் 40 நகரங்களில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு இருந்தபோதும் மக்கள் பெரும்பாலும் அதனைப் பொருட்படுத்துவதில்லை என்பதோடு பதற்றமான சூழல் நீடித்து வருகிறது.
நியூயோர்க், சிக்காகோ, பிலடெல்பியா மற்றும் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களில் கலகமடக்கும் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. கூட்டங்களை கலைப்பதற்கு கண்ணீர் புகைக் குண்டுகள் மற்றும் மிளகாய் குண்டுகள் பயன்படுத்தப்பட்டன.
பல நகரங்களிலும் பொலிஸ் வாகனங்கள் தீமூட்டப்பட்டு கடைகள் கொள்ளையிடப்பட்டன.
உள்நாட்டுப் பதற்றத்தை கட்டுப்படுத்த 15 மாநிலங்களில் 5,000 இராணுவத்தினர் பயன்படுத்தப்பட்டுள்ளனர். வெள்ளை மாளிகைக்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் எதிர்ப்புக் கூட்டம் கூடியதோடு கலகமடக்கும் பொலிஸார் மீது அவர்கள் தீப்பந்தங்கள் மற்றும் கற்களை வீசி எறிந்தனர்.
“மாநில மற்றும் உள்ளூர் சட்ட அமுலாக்கல் பிரிவினர் பாதுகாப்பிற்கு தொடர்ந்து பொறுப்பாக இருப்பர்” என்று அமெரிக்க தேசிய இராணுவம் அறிவித்துள்ளது.
வெள்ளை மாளிகைக்கு அருகில் இருக்கும் சொத்துகளுக்கு தீ மூட்டி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது வொஷிங்டன் பொலிஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். இதில் வெள்ளை மாளிகைக்கு அருகில் இருக்கும் ஜனாதிபதி தேவாலயம் என்று அறியப்படும் புனித ஜோன்ஸ் எபிஸ்கோபல் தேவாலயம் அடங்கும்.
இதன்போது சிலர் வீதியில் வைக்கப்பட்டிருந்த அறிவிப்புப் பலகைகள், பிளாஸ்டிக் தடுப்புகளுக்கு தீவைத்து ஒரு பிரிவினர் வன்முறையில் ஈடுபட்டனர். சிலர் அப்பகுதியில் இருந்த அமெரிக்க தேசியக்கொடியைப் பிடுங்கி தீயில் எறிந்தனர். அந்தப் பகுதியே திடீரென போர்க்களம் போல் ஆகியது.
இதனால் போராட்டக்காரர்களுக்கும், பொலிஸாருக்கும் மோதல் வெடித்து இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதனால் அந்தப் பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது.
அந்தப் போராட்டத்தில் ஈடுட்ட 31 வயது நிரம்பிய முனா அப்தி நிருபர்களிடம் கூறுகையில், “நாங்கள் கறுப்பினத்தவர்களின் பிள்ளைகள், கறுப்பினத்தவர்களின் சகோதரர்கள். நாங்கள் எதற்காக உயிரிழக்க வேண்டும்.
இதுபோன்று நடப்பதால் நாங்கள் சோர்வடையமாட்டோம். அந்தச் சோர்வு இந்தத் தலைமுறைக்கு இல்லை. நாங்கள் அடக்குமுறைக்கு மட்டும் சோர்வடைகிறோம்” எனத் தெரிவித்தார்.
இதனால் வெள்ளை மாளிகைக்கு அருகே ஆயிரக்கணக்கில் பொலிஸார் குவிக்கப்பட்டு போராட்டக்காரர்களை வரவிடாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பதற்ற சூழல் காரணமாக ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் சிறிது நேரம் வெள்ளை மாளிகையில் இருக்கும் நிலவறையில் அடைக்கலம் பெற வேண்டி ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
1968 இல் மார்டின் லுதர் கிங் படுகொலை செய்யப்பட்ட பின் ஏற்பட்ட வன்முறைகளுக்குப் பின்னர் மிகப்பெரியல் சமூகப் பதற்றம் மற்றும் இனக் கொந்தளிப்புக்கு முகம்கொடுத்திருப்பதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் காரணமாக சில நாட்களுக்கு முன்னர் வெறிச்சோடி இருந்த 75 க்கும் அதிகமான நகரங்களில் தற்போது ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜோர்ஜ் ப்ளோயிட் என்ற அந்த கறுப்பினத்தவரின் மரணம் வெள்ளையின பொலிஸாரினால் கறுப்பினத்தவர்கள் கொல்லப்படும் சம்பவங்களின் தொடர்ச்சியாகவே இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் இடம்பெற்ற மினியாபொலிஸ் நகர் மாத்திரமன்றி நாடெங்கும் உள்ள சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வு மற்றும் பாகுபாடு இந்த இந்த நிலைமை தீவிரமடைய காரணமாகியுள்ளது.
எனினும் கலவரத்தில் ஈடுபடுமாறு பொதுமக்களைத் தூண்டிவிடுவோரை, ‘உள்நாட்டுத் தீவிரவாதிகள்’ என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகம் சாடியுள்ளது.
ஆர்ப்பாட்டங்களின் போது கடைகள் சூறையாடப்படுதல், பொதுச் சொத்து அடித்து நொறுக்கப்படுதல், பொலிஸ் அதிகாரிகள் தாக்கப்படுதல் போன்றவற்றை ட்ரம்ப் நிர்வாகம் கண்டித்தது.
அமெரிக்காவின் பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் பரவிவருவதால், பாதுகாப்பு அதிகாரிகள் நூற்றுக்கணக்கானோர் ஆங்காங்கே குவிக்கப்பட்டுள்ளனர்.   நன்றி தினகரன் 












பதற்றத்தை கட்டுப்படுத்த இராணுவத்தை அழைப்பதாக டிரம்ப் கடும் எச்சரிக்கை





அமெரிக்காவில் பொலிஸாரின் பிடியில் கறுப்பினத்தவர் ஒருவர் மரணமடைந்த சம்பவத்தை அடுத்து அதிகரித்து வரும் வன்முறைகள் மற்றும் பதற்ற சூழலை கட்டுப்படுத்த இராணுவத்தை அழைப்பது பற்றி அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மாநிலங்கள் மற்றும் நகரங்கள் அர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்தி தமது குடிமக்களை பாதுகாக்காவிட்டால் இராணுவத்தை அனுப்பி பிரச்சினையை விரைவாக தீர்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வாரம் ஜோர்ஜ் ப்லொயிட் என்பவரின் மரணமே ஆர்ப்பாட்டங்களை தூண்டியது.
இந்த ஆர்ப்பாட்டங்களில் மிசுரியில் நான்கு பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்பதோடு சிக்காகோவில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் டஜன் கணக்கான பிரதான நகரங்களில் திங்கட்கிழமை இரவு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது. நியூயோர்க் நகர் நேற்று முடக்க நிலையில் இருந்ததோடு வொசிங்டனில் மேலும் இரு நாட்களுக்கு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.
நியூயோர்க்கின் பிரபலமான மாசிஸ் கடைத்தொகுதி உடைக்கப்பட்டு நைக்கி கடை சூறையாடப்பட்டுள்ளது. ஏனைய கடைகள் மற்றும் வங்கிகளின் முன் வாயில்கள் மற்றும் கண்ணாடிக் கதவுகள், ஜன்னல்கள் உடைக்கப்பட்டுள்ளன. பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
46 வயதான ப்ளொயிட் மின்னியாபொலிஸ் நகரில் கடந்த மே 25 ஆம் திகதி கைது செய்யப்பட்ட நிலையில் வெள்ளையின பொலிஸ் அதிகாரி ஒருவர் தனது காலால் அவரது கழுத்தை தொடர்ச்சியாக நெருக்கிக் கொண்டிருந்ததை அடுத்து அவர் உயிரிழந்த வீடியோ ஒன்று வெளியானது. அதனை அடுத்தே ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன.
இவ்வாறு கழுத்தை நெருக்கிய பொலிஸ் அதிகாரி டெரெக் ஹொவின் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருக்கும் நிலையில் அடுத்த வாரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். அவருடன் சம்பவ இடத்தில் இருந்த மூன்று பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஜோர்ஜ் ப்ளொயிட்டின் மரணம் ஒரு கொலை என அதிகாரபூர்வ பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹென்னெபின் கவுண்டி மருத்துவ ஆய்வாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், இறந்தவரின் உடலில் இதய நோய் மற்றும் சமீபத்திய போதைப்பொருள் பயன்பாடு ஆகியவை கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அவரது உடலின் பின்பகுதி மற்றும் கழுத்து நசுக்கப்பட்டதால், அவருக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டு மரணம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கறுப்பினத்தவர்கள் வெள்ளையின பொலிஸாரினால் கொல்லப்படும் சம்பவங்களின் தொடர்ச்சியாகவே ப்ளொயிட்டின் மரணம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வெள்ளை மாளிகைளின் ரோஸ் பூங்காவில் கடந்த திங்கட்கிழமை பேசிய டிரம்ப், ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்கும் நேரம் நெருங்கி விட்டதாக தெரிவித்தார்.
“ஓர் ஜனாதிபதியாக அமெரிக்காவையும் அமெரிக்கர்களையும் காப்பாற்ற வேண்டியது என் கடமை. அமெரிக்க வீதிகளில் நடக்கும் போராட்டங்களைக் கட்டுப்படுத்த இராணுவம் அனுப்பப்படும்” என்றார்.
கலவரம், கொள்ளை, தாக்குதல்கள் மற்றும் சொத்துக்களை அழிப்பதை நிறுத்தவும், சட்டத்தை மதிக்கும் அமெரிக்கர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் இராணுவம் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளையும் பயன்படுத்தத் தயார் என டிரம்ப் கூறினார்.
பல மாநில மற்றும் உள்ளூர் அரசுகள் தங்களது குடிமக்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டன எனவும் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.
வொஷிங்டனில் வெள்ளை மாளிகைக்கு அருகில் நடந்த கலவரம் மிகவும் அவமானகரமானது என கூறிய டிரம்ப், அங்கு ஊரடங்கு அமுல்படுத்தப்படுகிறது என்றார்.
மக்களிடம் உரையாடிய பின்னர் போராட்டக்காரர்களால் தீ வைக்கப்பட்டதில் சற்று சேதமடைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செயிண்ட் ஜோன் தேவாலயத்திற்கு டிரம்ப் நடந்தே சென்றார்.
தேவாலயத்திற்கு வெளியே கையில் பைபிளை வைத்திருந்தபடி பேசிய டிரம்ப், “நமது நாடு உலகின் சிறந்த நாடு. நான் அதை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளப்போகிறேன்” எனக் கூறினார்.
எவ்வாறாயினும் ஏழாவது நாளாகவும் அமெரிக்காவில் 75க்கும் அதிகமான நகரங்களில் கடந்த திங்கட்கிழமை இரவும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. இதனால் 40 நகரங்களில் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் இந்த உத்தரவை மீறுவது பதற்றமான சூழலை ஏற்படுத்துகிறது.
இரவு நேர ஊரடங்கு உத்தரவுக்கு முன்னர் நியூயோர்க்கில் ஆயிரக்கணக்கான மக்கள் பேரணி நடத்தினர். மான்ஹட்டனில் கடைகள் சூறையாடப்பட்டு வன்முறை வெடித்ததை அடுத்து பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். லொஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் ஓக்லாண்ட் உட்பட ஏனைய நகரங்களில் சிறு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. கலிபோர்னியா கடலோரப் பகுதிகளில் இருக்கும் சான் பிராசிஸ்கோ, சான் ஜோஸ், சாண்டா கிளாரா, ஓக்லேண்ட் உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கை மீறி போராட்டங்கள் நடக்கின்றன. அப்பகுதிகளில் வன்முறைச் சம்பவங்களும் சூறையாடல்களும் நடந்துள்ளன. மினசோட்டா தலைநகர் மினியாபொலிஸில் ஜோர்ஜ் ப்ளொயிட் மரணமடைந்த சதுக்கத்தில் பல்லாயிரம் போராட்டக்காரர்கள் கூடியுள்ளனர்.   நன்றி தினகரன் Email











டிரம்ப்பின் பதிவை கட்டுப்படுத்த பேஸ்புக் ஊழியர்கள் வலியுறுத்து





அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளியிடும் கருத்துகளைக் கட்டுப்படுத்துவதில் ட்விட்டர் அளவுக்கு பேஸ்புக் செயல்படவில்லை என அதன் ஊழியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
டிரம்ப்பின் பதிவுகளைக் கண்காணிப்பதில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் போதிய முனைப்புக் காட்டவில்லை என்று அவர்கள் குறைகூறினர். அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஊழியர்களில் கணிசமானோர் வீட்டிலிருந்து வேலை செய்வதைச் சற்று நேரம் நிறுத்தினர்.
டிரம்ப் அண்மையில் வெளியிட்ட ஒரு கருத்து இனவாதத்தையும் வன்முறையையும் தூண்டக் கூடியது எனக் கருதி, அதுபற்றிய எச்சரிக்கைக் குறிப்பைப் பதிவுக்கு அருகிலேயே வெளியிட்டது ட்விட்டர். ஆனால் பேஸ்புக் அவ்வாறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஸக்கர்பெர்க் செய்தது தவறு என்று குறிப்பிட்ட ஊழியர்கள் சிலர் அவர் தமது மனத்தை மாற்றிக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தினர்.
அமெரிக்காவில் கறுப்பினத்தவர் கொலை மற்றும் வன்முறை தொடர்பில் ட்ரம்ப் பதிவிட்ட ட்விட்டில், “சூறையாடல் தொடங்கும்போது துப்பாக்கிச்சூடு தொடங்குகிறது” என்ற பதிவே இந்த சர்ச்சைக்கு மூலகாரணமாகும்.
அமெரிக்க ஜனாதிபதிக்கும் ட்விட்டருக்கும் இடையில் உருவான உரசல் குறித்து ஸக்கர்பெர்க் ஏதும் தெரிவிக்கவில்லை. ஆனால் டிரம்ப்பின் பதிவு மற்றவர்களை ஆழமாகப் புண்படுத்தக் கூடியது என்று குறிப்பிட்டார்.   நன்றி தினகரன் 













அமெரிக்காவில் தொடர்ந்தும் பெரும் ஆர்ப்பாட்டங்கள்: வன்முறை தணிவு





பொலிஸ் காவலில் வைத்து ஆபிரிக்க அமெரிக்க இனத்தவரான ஜோர்ஜ் பிளொயிட் மரணத்த சம்பவத்திற்கு எதிராக எட்டாவது நாளாகவும் கடந்த செவ்வாய் இரவு ஆயிரக்கணக்கான மக்கள் பெரும்பாலும் அமைதியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
இதில் பிளொயிட்டின் சொந்த ஊரான டெக்ஸாஸின் ஹெளஸ்டனில் இடம்பெற்ற மிகப் பெரிய ஆர்ப்பாட்டம் ஒன்றில் அவரது உறவினர்களும் பங்கேற்றனர்.
பல நகரங்களில் ஊரடங்கு மீறப்பட்டதோடு, சூறையாடல் சம்பவங்களும் பதிவாகி இருந்தன. மத்திய வொஷிங்டனில் இரவு நேர ஆர்ப்பட்டத்தைக் கலைக்க கண்ணீர் புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
தலைநகரில் தொடர்ந்து இராணுவம் வீதிகளில் நிறுத்தப்பட்டிருப்பதோடு வெள்ளை மாளிகை நோக்கி வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மேலால் ஹெலிகொப்டர்கள் வட்டமிட்டன.
பிளொயிட்டின் சம்பவம் பொலிஸாரினால் மேற்கொள்ளப்படும் கறுப்பினத்தவர்களின் கொலைகள் மற்றும் இனவாத நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பை தூண்டியுள்ளது.
ப்ளொயிட்டை பொலிஸார் நடத்தில விதம் குறித்து மாத்திரமன்றி கறுப்பினத்தவர்கள் மீது பொலிஸார் பரந்த அளவில் மேற்கொண்டுவரும் கொடுமைகளுக்கு எதிராகவுமே ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.
நியூயோர்க் மான்ஹட்டனில் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்பட்ட இரவு நேர ஊரடங்கை மீறி ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற நிலையில் போக்குவரத்துகள் முடக்கப்பட்டன.
லொஸ் ஏஞ்சல்ஸ், பிலடொல்பியா, அட்லாண்டா மற்றும் சியாட்டில் நகரங்களிலும் பாரிய பேரணிகள் இடம்பெற்றன. 46 வயதான ப்ளொயிட் உயிரிழந்த மினியாபொலிஸ் நகரில் ஒப்பீட்டளவில் அமைதி நிலவியது.
அட்லாண்டாவில் சென்டனியல் ஒலிம்பிக் பூங்காவுக்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகைப் பிரயோகம் மேற்கொண்டனர்.
60,000 வரையான ஆர்ப்பாட்டக்காரர்கள் பங்கேற்ற ஹெளஸ்டன் பேரணியில் ஜோர்ஜ் ப்ளொயிட்டின் பதினாறு குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இதில் அவரது சகோதரி லா டன்யா மற்றும் சகோதரர் பிளோனசும் இருந்தனர். “எனது மாமாவுக்காக எமக்கு நீதி கிடைக்கும் வரை நிறுத்த வேண்டாம்” என்று பிளொயிட்டின் மருமகன் ஒருவர் கூட்டத்தினரிடம் குறிப்பிட்டார்.
பிளொயிட் நல்ல மனிதர் என்று அவரது மனைவி ரொக்சி வொசிங்டன் மினியாபொலிஸில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்தார்.
அவரது ஆறு வயது மகளுடன் அந்த செய்தியாளர் மாநாட்டில் பங்கேற்ற வொசிங்டன், “எனது குழந்தைக்காக, ஜோர்ஜிற்காக இங்கு வந்தேன். அவருக்காக எனக்கு நீதி வேண்டும்” என்றார்.
ஜோர்ஜ் ப்ளொயிட்டின் இறுதிச் சடங்கு வரும் ஜூன் 9 ஆம் திகதி ஹெளஸ்டனில் இடம்பெறவுள்ளது.
ஒரு காருக்கு அடியில் ஜோர்ஜ் பிளொயிட் கைவிலங்கிடப்பட்டிருப்பது போன்றும் அவரின் கழுத்தின் மேல் தனது முழங்காலை வைத்து பொலிஸார் ஒருவர் அழுத்துவதும் போன்றும் ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்தே ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன.
ஜோர்ஜ் ப்ளொயிட் கழுத்தின் மீது காலை வைத்து அழுத்தி கொன்றதாக, சாவின் என்ற பொலிஸார் மீது கொலை வழக்குப் பதியப்பட்டுள்ளது.
பிளொயிட் மரணத்திற்கு காரணமான நிகழ்வுகள் அனைத்தும் வெறும் 30 நிமிடங்களில் நடந்து முடிந்தன. இவை அனைத்தும் 20 டொலர் கள்ளநோட்டு விவகாரத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஒரு கடையில் பிளொயிட் சிகரெட் வாங்கியபோது, அவர் கொடுத்த 20 டொலர் பணம் கள்ளநோட்டு என சந்தேகித்த கடைக்காரர், பொலிஸாருக்கு தகவல் அளித்தார். இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த பொலிஸார் ப்ளொயிட்டை கைது செய்யும்போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.    நன்றி தினகரன் 










போராட்டக் களமாக மாறிய அமெரிக்க நகரங்கள்!




1968-ம் ஆண்டு மகத்தான கறுப்பர் இன புரட்சியாளர் மார்ட்டின் லூதர் கிங் படுகொலைக்குப் பின்னர் மிகப் பெரும் இன அடிப்படையிலான கொந்தளிப்பை அமெரிக்கா தற்போது எதிர்கொண்டிருக்கிறது என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.
அமெரிக்காவில் கறுப்பர் இனத்தைச் சேர்ந்த ஜோர்ஜ் ஃபிளொய்ட்  பொலிசாரால் படுகொலை செய்யப்பட்டதற்கு எதிராக அமெரிக்காவில் ஒரு வாரமாக போராட்டம் பற்றி எரிகிறது. அமெரிக்காவின் சுமார் 75 நகரங்களில் இந்தப் போராட்டங்கள் வெடித்திருக்கின்றன.
முதன்மை நகரங்களான வோஷிங்டன், நியூயோர்க், சிக்காகோ, லொஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்டவை பலவும் போர்க்களங்களாக உருமாறி நிற்கின்றன. எங்கெங்கு பார்த்தாலும் கடைகள் சூறை, பொலிஸ் ஒடுக்குமுறைகள்.
இப்போராட்டங்களுக்கு வெள்ளை இனமக்களும் ஆதரவு தருகின்றனர்.
ஒருபக்கம் போராட்டக்காரர்களின் ஆவேசம், மறுபக்கம் பொலிசாரின் தடுப்பு நடவடிக்கைகள். போராட்டக்காரர்களை ஒடுக்க கண்ணீர்ப்புகை குண்டு வீச்சுகள், மிளகு குண்டு வீச்சுகள். ஆனாலும் எந்த ஒரு பயனும் இல்லை. உக்கிரமான போராட்டங்கள் தொடருகின்றன. வரலாறு காணாத வகையில் வோஷிங்டனில் வன்முறை வெடித்து தீக்கிரை சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன.
1968-ம் ஆண்டு மார்ட்டின் லூதர் கிங், வெள்ளை இனத்தவர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அமெரிக்காவில் கறுப்பர் இனத்தவருக்கு வாக்குரிமை உள்ளிட்ட மனித உரிமைகளை பெற்றுத் தந்த மகத்தான மனிதர் அவர். ஒடுக்குண்ட மக்களுக்கு அஹிம்சை ஒரு மாபெரும் ஆயுதம் என்பதில் நம்பிக்கை கொண்ட மார்ட்டின் லூதர் கிங் படுகொலை செய்யப்பட்ட போது கறுப்பர் இன மக்கள் கிளர்ந்தெழுந்து போராட்டங்களை நடத்தியதால் அமெரிக்கா பற்றி எரிந்தது. அதேபோன்ற ஒரு நிலைதான் தற்போது இருக்கிறது என்கின்றனர் அங்கிருக்கும் மூத்த பத்திரிகையாளர்கள்.
வன்முறைகளில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் சுமார் 5,000 பேர் இதுவரை கைது செய்யப்பட்டிருக்கின்றனர். மேலும் கூடுதல் படையினர் வோஷிங்டன் நகரில் குவிக்கப்பட்டும் உள்ளனர். வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் மறைந்து இருக்கிறார் என்றெல்லாம் செய்திகள் வருகின்றன. இந்த போராட்டம் ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவி வருகிறது.
அமெரிக்காவில் போராட்டம் தீவிரம் அடைந்து வரும் நிலையில் அங்கு வோஷிங்டன் பகுதியில் தேசிய பாதுகாப்பு படையின் ஸ்னைப்பர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.அமெரிக்காவில் கடந்த 24ம் திகதி ஜோர்ஜ் ஃபிளொய்ட்  என்ற கறுப்பின இளைஞர் பொலிசாரால் கழுத்து நெரித்து   கொலை செய்யப்பட்ட வீடியோ இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. பொலிஸ் செய்த இந்த கொடூரத்திற்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன.
மின்னேசோட்டா, நியூயோர்க் பகுதியில் போராட்டம் நடந்து வந்த நிலையில்  போராட்டம் வெள்ளை மாளிகைக்கு வந்தது. வெள்ளை மாளிகைக்கு அருகே மக்கள் போராட்டம் செய்தனர். ஜோர்ஜ் படுகொலைக்கு நீதி கேட்டு வெள்ளை மாளிகையை போராட்டக்காரர்கள்  சுற்றி வளைத்தனர். அங்கு இதனால் வெள்ளை மாளிகை விளக்குகள் அணைக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது .
அங்கு தற்போது தேசிய பாதுகாப்புப் படை பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகிறது. போராட்டம் செய்யும் கறுப்பின் மக்களை எல்லாம் தேசிய பாதுகாப்புப் படையினர் கைது செய்து வருகிறார்கள். அங்கு தேசிய பாதுகாப்புப் படைக்கு கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 
கலவரம் செய்யும் நபர்களை சுட்டுத் தள்ளும் வகையில் ஸ்னைப்பர் துப்பாக்கிகளைப் பயன்படுத்தும் பாதுகாப்பு வீரர்கள் களமிறக்கப்பட்டு உள்ளனர். இதனால் இனி போராட்டத்தின்போது துப்பாக்கி சூடு நடக்க வாய்ப்புள்ளது.
போராட்டத்தை அரசு கட்டுப்படுத்தத் தவறிய காரணத்தால் தற்போது தீவிரமான போக்கை கடைப்பிடிக்க அரசு முடிவெடுத்துள்ளது என்கிறார்கள்.
வெளி உலகத்தில் இருந்து வோஷிங்டன் துண்டிக்கப்பட்டுள்ளது. அங்கு என்ன நடக்கிறது, மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்று முழுமையாக விபரம் வெளியாகவில்லை. இதனால் அங்கு பெரிய அளவில் அசம்பாவிதங்கள் நடக்கிறதா என்றும் கேள்வி எழுந்துள்ளது .
பொதுவாக அமெரிக்காவில் வெள்ளை மாளிகை உள்ளே அனுமதி இல்லாமல் யாரும் செல்ல முடியாது. ஆனால்  பல போராட்டக்காரர்கள் வெள்ளை மாளிகை  கதவு அருகே வரை சென்றுள்ளனர். ஆனால் அதன் உட்பக்க வாயில் பூட்டப்பட்டு இருந்தது. 
மின்னேபோலிஸ் நகரத்தில் மட்டுமே போராட்டம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அங்கு வோஷிங்டன் பற்றி எறிவது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 
அமெரிக்காவில் பல நூறு வருடங்களாக கறுப்பின மக்கள் கடுமையான அழுத்தங்களை எதிர்கொண்டு வருகிறார்கள். அங்கு பொலிஸ் மூலமும், அரசு மூலம் தொடர்ந்து கறுப்பின மக்கள் ஒடுக்கப்பட்டு வருகிறார்கள்.  தற்போது இந்த அழுத்தங்கள் எல்லாம் சேர்ந்து போராட்டமாக உருவெடுத்து உள்ளது. இந்த போராட்டங்களுக்கு பின்னால் அமெரிக்காவைச் சேர்ந்த கறுப்பின நபர் ஒருவரின் கொலைதான் காரணம்.
கடந்த 27ம் திதி அமெரிக்காவின் மின்னேபோலிஸ் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு ஜோர்ஜ் ஃபிளொய்ட்  என்று 46 வயது நபர் பொலிசால் கைது செய்யப்பட்டுள்ளார். கள்ள நோட்டு பயன்படுத்தியதாக இவர் கைது செய்யப்பட்டார். ஆனால் விசாரணையின் போதே இவர் கொலை செய்யப்பட்டார்.
இவரை கைது செய்த போது, இவரை காருக்கு வெளியே தள்ளிவிட்டு கழுத்தில் பொலிசார் காலை வைத்து அழுத்தி இருக்கிறார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் தற்போது வீடியோவாக வெளியாகி உள்ளது. 
வெள்ளை மாளிகைக்கு வெளியே  பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. அதேபோல் பாதுகாப்பு படையும் அங்கு கண்ணீப் புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளது. ட்ரம்ப் இருக்கும் வெள்ளை மாளிகைக்கு வெளியேதான் இத்தனை கலவரங்கள்  நடந்துள்ளன. 
அணு ஆயுத தாக்குதல்களில் இருந்து தப்பிக்கும் வகையில் அங்கு அமைக்கப்பட்ட பதுங்குகுழியில் ட்ரம்ப் பதுங்கி உள்ளதாக செய்திகள் வருகின்றன.
அமெரிக்கா மொத்தமாக நிலைகுலையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு போராட்டம் கைமீறி போய் உள்ளது.  அங்கு ஒரு பாதுகாப்பு அதிகாரிக்கு எதிராக 5 போராட்டக்காரர்கள் போராடி வருகிறார்கள். 1:5 என்ற ரீதியில் போராட்டம் நடப்பதால் பொலிசால் அங்கு போராட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
அங்கு கடைசியாக 155 ஆண்டுகளுக்கு முன்னர் 1865ல் உள்நாட்டு யுத்தம் நடை பெற்றது. ஆப்ரஹாம் லிங்கன் ஆட்சி காலத்தில் அங்கு உள்நாட்டு யுத்தம் நடைபெற்றது. தென் அமெரிக்கா, வட அமெரிக்கா இடையில் இந்த உள்நாட்டு யுத்தம் நடைபெற்றது.
கறுப்பு மற்றும் வெள்ளையர்களுக்கு இடையிலான போராட்டமாக இது உருவெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது உள்நாட்டு போராக மாறலாம். அல்லது அமெரிக்காவில் புதிய புரட்சி வெடிக்க இது வாய்ப்பாக அமையும் என்றும் கூறுகிறார்கள். இனி வரும் நாட்கள் அமெரிக்காவில் இன்னும் நிலைமை மோசம் அடையும் என்கிறார்கள்.
அமெரிக்காவில் ஜோர்ஜ் ஃபிளொய்ட்  கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முன்னாள் ஜனாதிபதி ஒபாமா மிகவும் உருக்கமாக கருத்துத் தெரிவித்துள்ளார்.
“அமெரிக்காவில் இப்படி கறுப்பின இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டது எனக்கு பெரிய அதிர்ச்சி அளிக்கிறது. இது சாதாரண விஷயம் கிடையாது. என்னால் இதை தாங்கி கொள்ள முடியவில்லை. நாம் உண்மையில் 2020ம் ஆண்டில்தான் வசிக்கிறோமா என்று சந்தேகம் வந்து இருக்கிறது” என்று கூறியுள்ளார் ஒபாமா.
அமெரிக்க போராட்டம் குறித்தும், ஜோர்ஜ் கொலை குறித்தும் ஒபாமா தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்து வருகிறார். அதேபோல் இன்னொரு பக்கம் அவரின் மனைவி மிட்சல் ஒபாமா இந்த போராட்டத்திற்கு ஆதரவாக பேசி வருகிறார். இவர்களின் வருகை ட்ரம்பிற்கு பெரிய அழுத்தமாக மாறியுள்ளது. ஏற்கனவே பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்து வரும் ட்ரம்ப், ஒபாமா வருகையால் அதிர்ச்சியில் இருக்கிறார்.    நன்றி தினகரன் 








2016இல் கறுப்பினத்தவர் மரணம்: பிரான்ஸில் பாரிய ஆர்ப்பாட்டம்




பிரான்ஸில் தடையை மீறி சுமார் 20,000 பேர் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். 2016 ஆம் ஆண்டு பிரான்ஸ் பொலிஸார் கட்டுப்பாட்டில் இருந்த கறுப்பின வாலிபர் உயிரிழந்ததை நினைவுகூரும் வகையில் அந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஓரிடத்தில் பத்துப் பேருக்கு மேல் கூடக் கூடாது என்ற விதி பிரான்ஸில் நடப்பில் உள்ளது. அதைப் பொருட்படுத்தாமல் பாரிஸ் நீதிமன்றத்துக்கு வெளியே ஆயிரக்கணக்கானோர் அணி வகுத்தனர்.
பொலிஸ் காவலில் இருந்தபோது அடாமா டிராவோரெஸ் என்ற கறுப்பின ஆடவர் உயிரிழந்தார். அவருடைய மரணத்துக்கான காரணம் குறித்து இருவேறு விதமான அறிக்கைகள் வெளியானதைத் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைப்பதற்காகக் பொலிஸார் இரப்பர் தோட்டாக்களையும், கண்ணீர்ப் புகையையும் பயன்படுத்தினர். பிரான்ஸின் வேறு சில இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அடாமாவின் மரணம் தொடர்பில் பொலிஸாரின் வன்முறையைக் கண்டித்து பிரான்ஸில் நீண்ட நாட்களாகப் பேரணிகள் நடத்தப்படுகின்றன.
அமெரிக்காவில் ஜோர்ஜ் ப்ளொயிட் என்ற கறுப்பினத்தவரின் மரணம் அந்நாட்டில் பாரிய ஆர்ப்பாட்டங்களுக்கு வழிவகுத்திருக்கும் நிலையிலேயே பிரான்ஸிலும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.    நன்றி தினகரன் 











ஆக்கிரமிப்பு மேற்குக் கரையை இணைக்க தயாராகும் இஸ்ரேல்




மேற்குக் கரையின் பகுதிகளை இஸ்ரேலுடன் இணைக்கும் நடவடிக்கைகளுக்கு தயாராகும்படி பாதுகாப்பு அமைச்சர் பென்னி கான்ட்ஸ் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினரை அறிவுறுத்தியுள்ளார்.
இஸ்ரேலிய பாராளுமன்றம் ஒப்புதல் அளித்தால் ஜூலை 1ஆம் திகதி தொடக்கம் இஸ்ரேலுடன் இணைக்கும் இந்தத் திட்டத்தை முன்னெடுக்க பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு எதிர்பார்த்துள்ளார்.
இதற்கு இன்னும் ஒரு மாதம் இருக்கும் நிலையிலேயே, மேற்குக் கரையில் சுமார் 30 வீத நிலப்பகுதியை இஸ்ரேலின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் இந்தத் திட்டத்திற்கு தயாராக இஸ்ரேலிய பாதுகாப்பு படையிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
“பலஸ்தீன அரங்கில் அரசியல் நோக்கிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதையொட்டி துரிதமாக தயாராதல் வேண்டும்” என்று காட்ஸ் பாதுகாப்பு படையினரிடம் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்த இணைப்புத் திட்டத்தின் சரியான விபரம் மற்றும் விரிவடையவிருக்கும் இஸ்ரேலிய நிலப்பகுதிகளின் வரைபடம் இன்னும் வெளியிடப்படவில்லை.
எனினும் இந்த நடவடிக்கைக்கு பலஸ்தீனர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு மற்றும் வன்முறை வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதோடு அது பிராந்திய அளவிலும் தாக்கத்தை எற்படுத்தும் அச்சம் உள்ளது.
1967 மத்திய கிழக்கு யுத்தத்தின் போதே கிழக்கு ஜெரூசலத்துடன் மேற்குக் கரையையும் இஸ்ரேல் ஆக்கிரமித்தமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 













கறுப்பினத்தவர் மரணம்: பொலிஸார் மீது புதிய குற்றச்சாட்டுகள் பதிவு



அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜோர்ஜ் பிளொயிட்டின் மரணத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகள் மீது புதிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிளொயிட்டின் மரணத்திற்கு நேரடி காரணமாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரியான டெரெக் சாவின் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்போது இரண்டாம் நிலை கொலை (திட்டமிடப்படாத கொலை) குற்றச்சாட்டாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
அதுமட்டுமன்றி, இந்த சம்பவத்தின்போது சம்பவ இடத்தில் இருந்த மூன்று பொலிஸ் அதிகாரிகள் மீது முதல் முறையாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலைக்கு உடந்தையாக இருந்ததாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மின்னசோட்டா மாநில தலைநகர் மினியாபொலிஸில், மே 25ஆம் திகதி 46 வயதான ஜோர்ஜ் பிளொயிட் பொலிஸ் அதிகாரி சாவின் பிடியில் இருந்தபோது கழுத்து நெரிபட்டு இறந்தார். இதன் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி அது நாடு தழுவிய போராட்டத்துக்கு வித்திட்டுள்ளது.   நன்றி தினகரன் 











ட்விட்டரில் ‘இனவாதி’ தேடலில் டொனால்ட் டிரம்ப் முதலிடம்



ட்விட்டர் சமூக ஊடகத்தில் 'இனவாதி' என்று தேடினால், அமெரிக்க ஜனாதிபதி டோனால்ட் டிரம்ப்பின் கணக்கு முதலில் தென்படுகிறது.
ஏ.எப்.பி செய்தி நிறுவனத்தால் உறுதிப்படுத்தப்பட்ட அந்தத் தகவல் டிரம்ப்புக்கு மக்களிடையே நிலவும் எதிர்ப்பை எடுத்துக்காட்டுவதாய் அமைந்துள்ளது. ஆனால் அது பற்றி ட்விட்டர் விரிவாக ஏதும் தெரிவிக்கவில்லை.
இணையத்தளத்தில் உள்ள தேடல் விதிகளின் அடிப்படையில் ஜனாதிபதி டிரம்ப்பின் கணக்கு தென்படுகிறது என்று ட்விட்டர் கூறியது.
மற்ற ட்விட்டர் கணக்குகளுடன் ஒப்பிடுகையில் டிரம்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மிக அதிகமானோர் அவரை 'இனவாதி' என்று அழைத்துள்ளதால், அவரின் கணக்கு முதலிடத்தில் வந்துள்ளது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்காவில் இனவாதத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதனையொட்டி ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்ட கருத்துகளைப் பலரும் சாடினர். அவை இனவாதத்தையும் வன்முறையையும் தூண்டக் கூடியவை எனக் கருதி ட்விட்டர் எச்சரிக்கைக் குறிப்பை வெளியிட்டது.    நன்றி தினகரன் 










No comments: