கவிஞர் அம்பி எழுதும் சொல்லாத கதைகள் அங்கம் -16 ஆனந்த பைரவியிலும் ஆதி தாளத்திலும் பிறந்த கல்லூரிக்கீதம்
நான்
1950 ஆண்டு முதல் யாழ்.தெல்லிப்பழை  யூனியன் கல்லூரியில்  ஆசிரியனாக பணிபுரியத் தொடங்கியிருந்தேன். அதன்பிறகு ,  10 -  12 ஆண்டுகளின் பின்னர்  நிலை மாறியது. அமெரிக்காவின்  இலங்கை மிஷனின் உடைமையாக இருந்த அக்கல்லூரி மட்டுமல்ல,   நாட்டின் அனைத்துப் பாடசாலைகளையும்  அரசு பொறுப்பேற்கும் காலம் வந்தது.
அதனால்,  நான் பணியாற்றத்தொடங்கிய அக்கல்லூரியும்   நாட்டு அரசின் உடைமையானது. அதனால்,  மிஷனின் பொறுப்பில் இருந்து அது விடுபட்டு,  இலங்கை  அரசு  விரும்பியபடியே அங்கும் நியமனங்கள் - இடமாற்றங்கள் யாவும் நடைபெற்றன.
நாலு தசாப்தங்களாக அதிபராக இருந்து இக்கல்லூரியை வளர்த்தெடுத்த அதிபர் திரு.  ஐ.பி.துரைரத்தினம் ஓய்வுபெறும் காலமும் வந்தது. பக்கத்திலிருந்த  மகாஜனாக் கல்லூரி உபஅதிபராக இருந்த திரு . கிருஷ்ணபிள்ளை யூனியன் அதிபராக நியமனம் பொற்று வந்தார்.  கல்லூரிக்கென   கல்லூரிக் கீதம் ஒன்று வேண்டும் என அவர் தீர்மானித்தார்.  அவர் அந்தப் பொறுப்பை என்னிடம் தந்தார்.
நான்  அது பற்றிச்சிந்தித்தேன். 1816 ஆம் ஆண்டு முதல்  தெல்லிப்பழை வாழ் மக்களுக்குச்  சேவை செய்த  அக்கல்லூரி அது.   சிறு பாடசாலையாக ஐந்தாறு  மாணவருடன் 1816 இல் தொடங்கிய அக்கல்வி நிலையம்,  1960 கனிஷ்ட  தரத்தில் பெரிய கல்லூரியாக வளர்ந்திருந்தது.

ஆயிரமாயிரம் மாணவருக்கு கல்வி அறிவூட்டிய ஆலயம் அது. அதற்கென ஒரு வரலாறு உள்ளது. அது புனிதமான வரலாறு. ஆகவே, புதிய கல்லூரிக் கீதம்,  அதையெல்லாம் வெளிக்கொணர்ந்து நினைவில் பதித்தல் வேண்டும்.

யாழ்.  பரியோவான் கல்லூரியிலே படித்துவிட்டு, அங்கிருந்து  நேரடியாக யூனியன் கல்லூரி ஆசிரியனாகப் பணி தொடங்கியவன் நான்.  நான் படித்த கல்லூரிக் கல்விபோல அல்ல யூனியன் கல்லூரியின் கல்விப்பண்பாடு.  மாணவரும் அத்தகைய பின்னணி  உள்ளவர்கள் அல்ல.
யூனியன் கல்லூரிக்குள் பிரவேசித்த  காலத்திலேயே அந்த வேறுபாட்டை நான் அவதானித்தேன். பரியோவான் கல்லூரியில் இல்லாத ஒரு அச்சகம், மரவேலை செய்யும் கூடம்  என்பன அங்கு இருந்தன.  அங்கு அந்தத் தொழிற்கல்வியும் மாணவருக்கு பயிற்றப்பட்டது. மாணவருக்கு மதிய நேர உணவும் இலவசமாக வழங்கப்பட்டது. அத்தேவையும்  அரச உதவியால் வழங்கப்பட்டது. மாணவர் பலர் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.
இனி, கல்லூரியின் பழைய கதைகளை ஆராய்ந்து  பார்த்தால், பரிதாபம்தான் மிஞ்சும்.  அங்கே பணியாற்றிய அமெரிக்க மிஷனைச்சேர்ந்த வெளிநாட்டு, ஆரம்பகால உழியர்கள் பலர் தமது தாயகம் சென்றவிடத்தில் பலவித நோய்களால் அவதியுற்றனர். அவர்கள் அனுபவித்த துன்பம், துயரம் பலப் பல. அவர்களில் சிலர்  திரும்பவே இல்லை. கொலரா என்ற வாந்திபேதி, கொள்ளை நோய் போன்றவற்றில் பாதிக்கப்பட்டு அவர்கள் உயிர் இழந்ததும் உண்டு.
ஆகவே, அவர்களையும்  நினைவூட்டுதற்கும் கீதம் வழிசெய்தல் வேண்டும். அன்று வந்தவர்கள் தமது உயிரைப் பணயம் வைத்து வந்தவர்கள். கப்பல் ஓட்டிய தமிழன் போல, திரைகடல் ஓடி திரவியம் தேடப் புறப்பட்ட மக்கள் அல்ல. அறியாமை  இருளிலே மூழ்கி  வருந்திய மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தைக் காண்பிக்க வந்த  ஊழியர்கள் அவர்கள்.
எனவே ,  இவற்றையெல்லாம் வெளிக்கொணரும் பாடலாக கீதம் அமைதல் வேண்டும். ஓர் புனிதமான பாடலாக அப்பாடல் மனதைத்  தொடல்வேண்டும். இவ்வாறு எண்ணி எண்ணிப் பார்த்தேன். இது எனது உள்ளுணர்வு. உணர்ச்சி  ஓட்டம். எவருடனும் பேசிப்பெறுவதல்ல,  ஆனால்,  மனதில் இருத்தி  செயல்பெற வேண்டும்.
கீதம் எழுதும் போது  யூனியன் கல்லூரியின் பின்னணி, பாரம்பரியம், முக்கியத்துவம் போன்றவை மட்டுமல்ல,  கல்லூரி மாணவர் பழைய கதைகளையும் அறிதல் அவசியம். யூனியன் கல்லூரி இரவோடு இரவாக தோன்றவில்லை. இன்று அது  பெரும் கல்லூரியாக விளங்கிடினும்,  அன்று ஒரு நாள் அது சிறிய பாடசாலையாக  நான்கைந்து  மாணவருடன் ஆரம்பித்து, இன்று ஆயிரத்துக்கும்  மேற்பட்ட  மாணவர்கள் கற்கும் கல்லூரி, 150-200 ஆண்டு காலம், தெல்லிப்பழைக்கும் அக்கிராம மக்களுக்கும் சேவை செய்கிறது என்ற தகவலை மாணவர் மனதில் பதித்தல் வேண்டும். அவர்கள் - அந்த ஸ்தாபகர்கள் எல்லோரையும்  வாழ்த்தி, வணங்கி, நன்றிக்கடன் செலுத்த வேண்டும்.
இப்படி  நான்  சிந்தித்தபோது மனத்திரையிலே பலப்பல நினைவுகள் அலை புரள்கின்றன.
எதிர்காலத்திலே  இது மாணவர்களினால் -  பழைய மாணவர்களினால்  பாடப்படப்போகும் பாடல்.  நல்ல இசை அதற்கு அவசியம் முக்கியம். ஆகவே, ஆனந்தபைரவி ராகத்திலே பாடக்கூடிய பாடலை எழுதுதற்கு உடன்பட்டோம்.
இனி மேலும்  அதுபற்றி எழுதுமுன், பாடல் அடிகளையும் மேற்கோள் காட்டுதல் மிக பொருத்தமாக அமையும். ஆகவே, பாடலை முழுமையாக பாருங்கள்.
கல்லூரிக்  கீதத்தை மிக அவதானமாக எழுதுதல் வேண்டும் என்பது என் எண்ணம். கல்லூரிக்  கீதம் ஒரு நாள் அல்ல ஓர் ஆண்டு அல்ல,  பல தசாப்தங்களாக இசைக்கப் படும் கீதம். காலத்தால் சாகாத கருத்தும் ஞாலத்துக்கு ஏற்ற இசையும் கொண்டிருத்தல் வேண்டும்.
எனினும் நான் இசை அறியேன். பாடும்திறன் சிறிதளவேனும் எனக்கு இல்லை. ஆயினும் இன்பத் தமிழின் விசை அறிவேன். ஆணித்தரமாக எண்ணங்களை விசையுடன், தீந்தமிழ்ச் சுவையுடன் வழங்கும் முறை அறிவேன். ஆகவே, அன்று யூனியன் கல்லூரி அதிபராக இருந்த திரு. கிருஷ்ணபிள்ளையிடம் எனது  நிலையை எடுத்துக் கூறினேன். புதிய கல்லூரிக் கீதத்தை எழுதுதற்கு இசை அறிவுள்ள சங்கீத ஆசிரியரான திரு. தொம்மைக்குட்டி அவர்களை என்னுடன் இணைத்து கீதத்தை எழுதுதற்குத் தயாரானேன்.
அவ்வாறு நீண்ட பிரயாசைக்குப்பின்னர் எழுதி முடித்த கல்லூரிக்கீதம் இதோ:  
இராகம்: ஆனந்தபைரவி - தாளம்: ஆதி
பல்லவி
வாழ்த்தி வணங்கி மகிழ்வோம் - உவந்துதலை
தாழ்த்திப் பணிந்து தொழுவோம் - யூனியன் தாயை - வாழ்
அனுபல்லவி
செல்வங்கொழிக்குங் கலைக் கோயிற் பணிபுரிந்து - வாழ்
சரணங்கள்
ஆதி பகவன் வழி அறிவுச்சுடர் விரித்தே
நீதிநெறியில் நெஞ்ச நிறைவுக் கருளளித்து
சாதி சமய இன சமரச ஞான மொளிர்
சோதிச் சுடர்லீசன் சுருதிப் பொருளுணர்ந்தே - வாழ்
வாழ்வுக் கிலக்கியமாய் வளர்ச்சிக் கிலக்கணமாய்
ஆழ்கட லுக்குயிரை அர்ப்பணித் திங்குயிர்த்தே
சூழிருள் கொய்தேயன்று சுடரொளி ஏற்ற வந்த
ஊழிய ருள்ளமென உயர்ந்தன்னை வாழ்கவென்றே - வாழ்
அன்பின் வழியறிந்தும் அறனின் திறமுணர்ந்தும்
பண்பின் பயனறிந்தும் பாலித் தளித்து நின்றே
இன்ப நினைவலைகள் இதயத் தொலிக்கவென்று
நண்புக் கினிய தாயை நாடிய யணைந்து நின்றே - வாழ்
வாழ்த்தி, வணங்கி, தலை தாழ்த்தி, பணிந்து தொழுவோம். யாரை… ? யூனியன் தாயை !  ஒரு கல்லூரியை தாயென்றும் Alma Mater (Alma mater – Wikipedia) என்றும் பாராட்டுவது மரபு. அது கீதத்தின் பல்லவியாக அமைகிறது.
அடுத்து, அக்கல்லூரி ஓர் கலைக்கோயிலின் பணியை புரிகிறது.
தெல்லி மணிநகர்க்கோர் திலகமெனத் திகழ்ந்தே
செல்வங்கொழிக்குங் கலைக் கோயிற் பணிபுரிந்து… இது அனுபல்லவியாக அமைகிறது.
பல்லவி, அனுபல்லவி ஆகியவற்றைத்  தொடர்வது முன்வசனங்கள். அதிலே முதலாவது சரணம்.
ஆதி பகவன் வழி……….

ஆமாம். இறைவன் வழியிலே, நீதி நெறியிலே, மனதை நிறைவுசெய்தும் சாதி, சமய, இன, சமரச ஞானம் மிளிரும் பொருள் சுரக்கும்.
இரண்டாவது சரணம் மிகமுக்கியமான ஒன்று. ஆழ்கடலுக்குள் உயிரை அர்ப்பணித்து  வந்து , இங்கு உயிர்த்தே என்னும் போது… தமது வாழ்வையே பணயம் வைத்து அன்று வந்தவர்கள்,  இற்றைக்கு 200 ஆண்டுகளுக்கு முன், அமெரிக்காவில் இருந்து வந்தவர்கள் யார்…?
இந்தப் புதிய கல்லூரிக் கீதத்தை எழுதுகின்ற வேளையிலே, கல்லூரியை நிறுவுதற்கு அத்திவாரமிட்ட ஆரம்ப கால மிஷன் ஊழியரை நான் மறக்கவில்லை. அன்று 200 ஆண்டுகளுக்கு முன்பு நிலைமை என்ன..?  என்பதை எவரும் அறிவர்.
            வாழ்வுக்கு இலக்கியமாய்
            வளர்ச்சிக்கு இலக்கணமாய்
            ஆழ்கடலுக்கு தமது உயிரை
            அர்ப்பணித்து இங்கு உயிர்ந்தே
என்று மனமுருகி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி, அதைப்பாடுகின்ற ஒவ்வொரு மாணவனும் அவர்களின் தியாகத்தை ஏற்றிப்போற்றி  பாட வைக்கின்றது கல்லூரி கீதம்.
உண்மை. அன்று அமெரிக்காவில் இருந்து வந்தவர்கள் திரை கடல் ஓடித் திரவியம் தேட வந்தவர்கள் அல்ல. மாறாக, இங்குள்ள மக்களின் மன இருளைப்போக்கி,  ஒளி ஏற்றும் கல்வி அறிவை - அந்த ஒளியை ஏற்றி வைப்பதற்கு வந்த ஊழியர் உள்ளம் போன்று உயர்வான பரந்த கொள்கையுடைய உள்ளம். ஆம், சுயநலம் அற்ற, பொதுநலன் விரும்பிகளின் உள்ளம் போன்ற உயர்வான உள்ளம் என்றே வாழ்க என்று வாழ்த்துகிறது.
சுயநலனின்றி பொதுநல எண்ணம் செறிந்த உள்ளத்து ஒளியுடன், அன்பின் வழியிலும் அறனின் திறம் உணர்ந்தும் கல்லூரி மாணவர் வாழவேண்டும் இன்ப நினைவுகளே மனதை ஆட்சிபுரிதல் வேண்டும்.
ஒரு கல்வி நிலையத்தை நாம் ஒரு தாய் என்று மதிக்கிறோம். ஒரு தாய் தனது பிள்ளைகளை பேணி வளர்ப்பதுபோல ஒரு கல்வி நிலையம், எங்கு உள்ளதோ அது, அந்த இடத்தின் திலகம் போன்றது. அதுபோல ஒளிதருகிறது. இருளை முற்றாக நீக்குகிறது.
அத்தகைய நிலையத்தை வாழ்த்தி வணங்கி, மாணவராகிய நாம் மகிழ்ச்சி அடைவோம் என்று யூனியன் தாயை, தெல்லி மணி நகரின் திலகமாகிய யூனியன் தாயை வாழ்த்துகிறது இந்த கல்லூரிக் கீதம்.
இக்கீதம், கனடாவில் தற்போது வதியும் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் அதிபரும் பிரபல எழுத்தாளருமான திரு. கதிர் பாலசுந்தரம் அவர்கள் சில வருடங்களுக்கு முன்னர் தொகுத்து வெளியிட்ட கல்லூரியின் இருநூறு ஆண்டுகால வரலாற்று நூலிலும் இடம்பெற்றுள்ளது.
இந்த ஆவணம் கல்லூரியின்  தோற்றத்தையும் வளர்ச்சியையும் அது எதிர்நோக்கிய சவால்கள் நெருக்கடிகள் மற்றும் பல வரலாற்றுத் தகவல்களையும் விரிவாக பதிவுசெய்துள்ளது.
யூனியன் கல்லூரியின் பழையமாணவர்கள் வாழும் தேசங்கள்தோறும் அந்த ஆவணத்தின் அறிமுக நிகழ்வுகள் நடந்துள்ளன.
( தொடரும் )


No comments: