தப்பட்டை – தோற்கருவி
பறை, மத்தளம், தவில், உடுக்கை முதலிய தோற்கருவிகளுக்கு, தோலை அடுத்து மரப்பலகைகளே முக்கிய பங்களிப்பைத்தருகின்றன. பறை தொல்காப்பியத்தில் பதிவு பெற்றுள்ளது. மலை சார்ந்த குறிஞ்சி நிலத்தெய்வமான முருகனைத்தொழுது ஆடிப்பாட நம் முன்னோர் தொண்டகம், சிறுபறை, அரிப்பறை, துடிப்பறை முதலியவற்றைப் பயன்படுத்தியுள்ளனர். பொதுவாக தொல் தமிழ்த்தெய்வம் முருகனைப் பாடப் பயன்படுத்தியதால் "முருகியம்" என்ற சிறப்புப்பெயரைப் பெற்றுள்ளன என்று தமிழிசைக் கலைக் களஞ்சிய ஆசிரியர் வீ.பா.க.சுந்தரம் குறிப்பிடுகின்றார். குறிஞ்சி நில மக்களே தொல் மாந்தர்கள். அவர்களின் தொன்மைத்தெய்வம் முருகன். அவனைப்பாடும் பறை முருகியம். இவற்றால் இக்கருவிகள் எவ்வளவு பழமையானவை என்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றது. ஆதிமானிடன் வேட்டையாடிய விலங்குகளின் தோலும், அவனைச்சூழ்ந்து நின்ற மரங்களும் இக்கருவிகளின் படைப்பில் முக்கியப்பங்காற்றியுள்ளன. இந்த தொன்மையான தொண்டகப்பறையின் மருவிய வடிவங்கள் தான் மகுடமும் தப்பட்டையும்.
ஒரு காலத்தில் ஆடு மேய்த்தலை தலையாய தொழிலாக கொண்டவரகள் தமிழக/கருநாடக/ஆந்திர மாநிலங்களில் வாழும் குறும்பர் பழங்குடியினர். இந்த பழங்குடியினரின் முக்கிய கலை வடிவங்கள் குறும்பர் சேர்வையாட்டம் மற்றும் குறும்பர் சேவையாட்டம் ஆகும். சேர்வையாட்டமும் சேவையாட்டமும் மற்ற பழங்குடி சமூகங்களிடையே இருந்தாலும் அவை மாறுபாடுகளும் தனித்தன்மையும் உடையவை. ஆடி 18ஆம் பெருக்கு போன்ற இவர்களின் கோவில்களைச் சார்ந்த திருவிழாக்களின் பொழுது கோயில்களில் குறும்பர் சேர்வையாட்டம் மற்றும் குறும்பர் சேவையாட்டம் ஆடப்படுகிறது. இவ்வாட்டங்களுக்குரிய முக்கிய இசைக்கருவிகள் தப்பட்டையும் புல்லாங்குழலுமாகும். மகுடத்தை போன்றும் அதைவிட சற்று பெரியதுமான இசைக்கருவியை இம்மக்கள் தப்பட்டை என்று சொல்கிறார்கள். இது சில இடங்களில் மகுடம் என்று அழைக்கப்பட்டாலும், இது தென் தமிழ்நாட்டின் கணியான் மகுடத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது. அமைப்பிலும் ஒசையிலும் மாறுபாடுகளுடையது. மகுடத்தை போன்றே கைகளால் இசைக்கப்படுவது.
குறும்பர் இனத்தை சார்ந்த திரு சி.மீனாட்சிசுந்தரம் அவர்கள் கூறுகையில் - தப்பட்டை வட்ட வடிவில் உள்ள தோல்கருவி. இதை குறும்பர் பழங்குடிமக்களே தயாரிக்கின்றனர். தப்பட்டையின் சட்டத்தை மூன்று பால் மரங்களை இணைத்து வட்டவடிவில் தயார் செய்கின்றனர். இத்தப்பட்டையின் மேற்புறம் எருமைக் கன்று, ஆடு அல்லது மாட்டின் தோலால் கட்டப்பட்டிருக்கிறது. இந்தத் தப்பட்டையைச் செய்யும் தப்பட்டைக்காரர் விரதம் இருந்து தன் முன்னோர்களை வேண்டி இந்தத் தப்பட்டையைச் செய்வார். கோயில் பூசைகளிலும் விழாக்களிலும் மட்டுமே இத்தப்பட்டையை வாசிக்கின்ற காரணத்தால் இத்தப்பட்டை மிகப் புனிதமாகக் கருதப்படுகிறது. முதலில் தப்பட்டைக்குப் பூசை செய்து வழிபாடு செய்த பின்னரே அதனை எடுத்து வாசிக்கின்றனர். குறும்பர் பழங்குடி மக்களின் விழாக்களில் தப்பட்டைக்குப் பூசை செய்வது என்பது முக்கியமான சடங்காகும். தப்பட்டையை அடிப்பவர்கள் தப்பட்டைகாரர்கள் என்று குறும்பர் பழங்குடி மக்கள் அழைப்பார்கள்.
தப்பட்டைக்காரர்கள் தான் தப்பட்டை என்னும் இசைக்கருவியைத் தயாரிக்க வேண்டும். விரதம் இருந்து தயாரிக்க வேண்டும். தப்பட்டைக்குத் தேவையான மரம் வெட்டுவதிலும் சில விதிமுறைகள் உண்டு. தேவலேரி மரம் ,பூவரசு மரம், வேங்கை மரம் ஆகிய மூன்று மரங்களும் புற்றின் மேல் வளர்ந்து இருக்க வேண்டும். மூன்று பௌர்ணமி , மூன்று அமாவாசைகள் , மரத்திற்கு தப்பட்டைக்காரர்கள் பூசை செய்ய வேண்டும். பின்பு மரத்தை வெட்டிப் பதப்படுத்தி மூன்று துண்டுகளாகச் செய்து மூன்றையும் சேர்த்து தப்பட்டையின் சட்டத்தை செய்கிறார்கள். அலிக(கடவுளை வைத்து சுமக்கும் பலகை) திம்மை(சேவையாட்டம் ஆடும் பொழுது கையில் வைத்திருக்கும் நீண்ட குச்சி) போன்றவைகளும் செய்கின்றனர். பின்பு தப்பட்டையை நந்தியானுடையக்(மாட்டின்) கோமயத்தில் நனைத்து மஞ்சள் தடவி வீரபத்திரர் கோயிலில் வைத்துப் பூசை செய்து பின் எடுத்து அடிப்பார்கள். இதை அடிக்கும் பொழுது வெறும் கைகளால் தான் அடிக்க வேண்டும். அருள்மிகு வீரபத்திரருக்குப் பூசை செய்யும் பொழுது தப்பட்டைக்கும் தப்பட்டைக்காரர்களுக்கும் பூசை செய்ய வேண்டும். அருள்மிகு வீரபத்திரருக்கு சேவை செய்வதும், தொண்டு செய்வதும் இவர்களுடைய குலத்தொழில் ஆகும். ஆகவே கோயில்களில் பூசை செய்யும் பொழுது குறும்பர் சமுதாய மக்கள் தப்பட்டைக்காரர்களை முதன்மையாக வைத்து இன்றும் மரியாதை செய்யும் வழக்கம் செய்கின்றார்கள்.
வீரபத்திரர், சாமுண்டி, மாரியம்மன், மகாலட்சுமி(கெப்பியம்மன்) ஆகியோர் இவர்கள் வழிபடும் முக்கிய தெய்வங்கள். இத்தெய்வங்களின் விழாக்களில் தப்பட்டையை இசைத்து அடவுகளுடன் சேர்ந்த நடனத்தை ஆடுகிறார்கள். பலகையாட்டம் என்னும் ஆட்டமும் உண்டு. இது ஒரு பலகையில் தெய்வத்தை வைத்து தலையில் சுமந்து ஆடும் ஆட்ட வகையாகும். கோட்டை கொம்பு, வாங்காரோல்(வாங்கா) ஆகியவையும் இவர்களின் முக்கிய இசைக்கருவிகளாகும். தப்பட்டையை இசைத்து ஆடுவோர் நீண்ட பாவாடை அணிந்தும், கவரிமானின் நீண்ட முடியை தொங்கவிட்ட படியும், இடுப்பில் கம்பளி கயிறு, மணிகளும், சலங்கையும், கால்களில் சலங்கையும் அணிந்து ஆடுகிறார்கள். சேர்வையாட்டம் தவிர இவர்களின் அனைத்து வழிப்பாட்டு சடங்குகளிலும் தப்பட்டை முக்கிய அங்கமாக விளங்குகிறது. தற்காலத்தில் கவரிமான் முடியெல்லாம் கிடைப்பதில்லை என்கிறார் திருவண்ணாமலை மாவட்டம் அம்மையகரம் ஊரைச் சேர்ந்த சேர்வையாட்ட கலைஞர் திரு மணிமாறன் கவுண்டர் அவர்கள். கும்பகோண்த்தில் உள்ள ஒரு கடையில் இவர்களின் ஆட்டத்திற்கு தேவையான செயற்கை கவரிமான் முடிகளை வாங்கி வருவதாக சொல்கிறார். அதுவே சுமார் 15ஆயிரம் இந்திய ரூபாய் என்கிற அதிர்ச்சி தகவலையும் தருகிறார். வட தமிழகத்தில் குறும்பர் இன மக்கள் வாழ்ந்தாலும் அவர்கள் தங்களது தொன்மை மொழி நடை, பாடல், புல்லாங்குழல், கொம்பு போன்ற அடையாளங்களை இழந்து விட்டதாக வருந்துகிறார் இவர். விழாக்களில் பக்தர்கள் தலையில் முழுத் தேங்காயை உடைத்தல், சாட்டையால் அடித்தல் ஆகியவை குறும்பர்களின் தனிப்பட்ட பழக்க வழக்கங்களாகும்.
குறும்பர்களின் மற்றொரு ஆட்டக் கலை வடிவம் சேவையாட்டம். சேவையாட்டம் என்பது 6 பேர் / 8 பேர் / 10 பேர் கொண்ட குழுவாக இணைந்து ஆடும் ஆட்டமாகும். தப்பட்டை (மகுடம்), புல்லாங்குழல் முதலிய வாத்தியங்களினால் இசைக்கப்பட்டு ஆடப்படும் ஆட்டமாகும் . கால்நடை வளர்ப்புச் சமுதாயமாகக் காடுகளிலும் மலைகளிலும் வாழ்ந்து வந்த ஓர் இன மக்களால் வளர்த்தெடுக்கப்பட்ட கலை வடிவம். கைகளில் 2 அடி வாளுடன் ஆடப்படும் பாரம்பரியமான கலையாகும். வரலாற்றில் பல கலைகளுக்கு அரசர்களின் ஆதரவும் அவர்களுக்குப் பின்னர் செல்வந்தர்களின் ஆதரவும் இருந்து பல கலைகள் இன்று வரை செழித்திருக்கின்றன. ஆனால் எந்த வித பெரும் ஆதரவுமில்லாமல் பல பழங்குடியின மக்களின் கலை வடிவங்கள் காலங்காலமாகக் காப்பாற்றப்பட்டு இன்றும் அதைப் பாதுக்காத்து வருகின்றவர்கள் நமது பழங்குடியினர். அந்த வகையில் சாதாரணக் கால்நடைகளை வளர்க்கும் பழங்குடியின மக்களாகிய குறும்பர்கள் தங்களின் கலை பண்பாடு பழக்க வழக்கங்களைத் தங்களின் உயிரினும் மேலாகக் கருதிப் போற்றிப் பாதுகாத்து வந்திருக்கின்றனர். தங்களது தொல்பெரும் கலையைச் சிற்பங்கள் மூலம் கோயிலில், வடித்து வைத்து அதனை வணங்கி பாதுகாத்திருக்கின்றனர். இசைக்கருவிகள் முழங்க, சேவையாட்டம் ஆடுபவர்களின் சிற்பங்கள் தற்பொழுதும் காணக்கிடக்கின்றன. இச்சேவையாட்டம் என்பது திருவிழாக்காலங்களில் இறைவன் முன்பு ஆடப்படுவது. இவ்வாட்டத்திற்கான இசைக்கருவிகளும் திருவிழாக்களில் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன . மற்ற காலங்களில் அவை வாசிக்கப்படுவது இல்லை. எனவே சேவையாட்டமும் அதற்கான இசைக்கருவிகளும் தெய்வீகத் தன்மை வாய்ந்ததாகக் கருதப்படுகின்றன.
சேவையாட்டம் ஆடுபவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான உடை அணிவர். வெள்ளை வேட்டி அணிந்து கால்களில் சலங்கை கட்டி கையில் 3 அடி வாள் , கேடயம் , துண்டு ஆகியவற்றை வைத்துக் கொண்டு , தலையில் தலைப்பாகையைக் கட்டிக் கொண்டு தோற்றம் அளிப்பர் . சேவையாட்டம் ஓர் இரவு முழுவதும் ஆடும் ஆட்டமாகும். ஓர் இரவு முழுவதும் கண்விழித்து ஆண்கள் இவ்வாட்டத்தினை ஆட பெண்கள் இவ்வாட்டத்திற்கான பாடல்களை இரவு முழுவதும் பாடுவர். இவ்வாட்டத்தினைக் கற்றுக்கொள்ளத் தொடர்ந்து 60 நாட்கள் ஆகும் என்பர். தினமும் 3 முதல் 4 மணி நேரம் பயிற்சி செய்ய வேண்டும். பயிற்சி முறையாக முடிவடைந்த பிறகு அரங்கேற்றம் நடைபெறும். அதன்பின்னரே உற்சவ மூர்த்தியின் முன்பு ஆடமுடியும். இவ்விதிமுறைகள் இன்றும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் கடைபிடிக்கப்படுகின்றன.
சேவையாட்ட நடனத்தின்பொழுது நடனமாடுபவர்கள் கடவுளையும், தப்பட்டை அடிப்பவர்களையும் வணங்கிய பிறகு இசைக்கேற்ப ஆடுவர். இந்த நடனம் ஆடும்பொழுது ஆடுபவர்களின் கால்களும் முழுமையாக இயங்குவதால் உடலுக்கு நல்ல வலிமையும் , நரம்புகளுக்குச் சக்தியும் , கைகளுக்கு புத்துணர்ச்சியும் கிடைக்கின்றன என்கிறார் குறும்பர் பழங்குடியினரும் ஆய்வாளருமான திரு சி மீனாட்சி சுந்தரம் அவர்கள். இச்சேவையாட்டத்தில் 12 ஆதிகள் உள்ளன என்கிறார் . அவை பின்வருமாறு
1. பூஜைகத்தி
2. குனாகத்தி
3. கரக்கத்தி
4. நட்டுவகத்தி
5. சிந்தகத்தி
6. நிவலுகத்தி
7. சாதனகத்தி
8. மயிலுகத்தி
9. உலிவாசம்
10. தும்பராகத்தி
11. நடாகத்தி
12. பேட்டிகத்தி
மற்ற இடைநிலை சாதி இளைஞர்கள் போன்றே பல குறும்பர் இளைஞர்களும் ஆண்ட சாதி பெருமை பேசுதல், டிக் டாக் விடியோவில் மற்ற சாதிக்காரர்களை வம்பு இழுத்தல் என்று வெட்டி வேலைகளில் கவனம் செலுத்தியும், வட இந்திய பாணியில் பெரிய வினாயகர் சிலை வைத்து சதுர்த்தி கொண்டாட்டங்களில் ஈடுபடுதல் போன்ற இறக்குமதி கலாச்சாரத்தில் ஈடுபடுவதாலும் தங்களது தொன்மை முகங்களை இவ்வினகுழுக்கள் இழந்து வருகின்றன. உட்புற கிராமங்களில் மட்டுமே தற்காலத்தில் இம்மக்களின் கலாச்சாரம் ஒரளவு உயிர்ப்புடன் வாழ்ந்து வருகின்றது.
காணொளி
சேவையாட்டம்:
சேர்வையாட்டம்:
-சரவண பிரபு ராமமூர்த்தி
நன்றி:-
1. இசையும் பயிரியலும் - திரு நா.மம்மது
2. திரு சி மீனாட்சி சுந்தரம் அவர்கள் தர்மபுரி – சேவையாட்டம்
3. திரு மணிமாறன் கவுண்டர் அவர்கள் அம்மையகரம் திருவண்ணாமலை மாவட்டம் – சேர்வையாட்டம் மற்றும் அனைத்து புகைப்படங்கள்
No comments:
Post a Comment