பிறர்க்கின்னா முற்பகல் செய்யின்.. சிறுகதை - ஃபாத்திமா, ஷார்ஜா.

.


காலை ஆறு மணி. ஒரு கையில் டீ குடித்துக் கொண்டே மறுகையில் செய்தித்தாளைப்படித்து முடித்தார் சேதுராமன். காலியான டீ கிளாசை மனைவியிடம் கொடுத்துவிட்டு செல்போனைக் கையிலெடுத்து தோட்டத்து வாட்ச்மேனுக்கு போன் செய்தார். 

“சிங்காரம், தோட்டத்திலேயே இரு. எங்கேயும் போய்ராதே, பத்துமணிக்கு மரங்களையெல்லாம் வெட்றதுக்கு ஆளுங்க வராங்க. அதுக்கப்புறம் மர வியாபாரிங்க வந்து மரங்களையெல்லாம் எடுத்துட்டுப் போய்ருவாங்க. எல்லாம் முடிஞ்சவுடனே தோட்டத்த சுத்தம் பண்ணி வெச்சுடு” என்று சொல்லி முடித்தார். 

“எதுக்குங்கய்யா மரங்களை வெட்டி தோட்டத்த சுத்தப்படுத்தணும்? ஏன்யா இப்படி திடீர்னு ஒரு முடிவு?” என்று பவ்யமாகவும், பாவமாகவும் கேட்டார் சிங்காரம். 

“ஒன்னுமில்ல சிங்காரம், சீசன்லதான் காசு பாக்குறோம்,மத்த  நாள்கள்ல ஒரு புண்ணியமுமில்ல பாரு இந்த மரங்களால. நமக்குத்தான் பராமரிப்புச் செலவும்கூட. 
அதனாலதான் இந்த இடத்தில ஒரு காம்பளக்ஸ் இல்லைனா அபார்ட்மென்ட்ஸ் இந்த மாதிரி கட்டி விடுட்டோம்னா வருசம் முழுசும் காசு வந்துட்டே இருக்கும்.” என்று காரணம் சொல்லி முடித்தார் சேதுராமன். 

“ஐயாவுக்குத்தான் சூப்பர் மார்க்கெட், ஜவுளிக்கடை, ரைஸ்மில் அப்படினு இன்னும் நிறைய வருமானம் வரக்கூடிய தொழில் துறைனு இருக்குங்களே....  இந்த பச்சை மரங்களை ஏன்யா வெட்டி காசு பாக்கணும்னு ஆசைப்பட்றீங்க...  எல்லா மரத்திலேயும் பறவைங்களும், சின்னச்சின்ன குருவிகளும் கூடு கட்டி முட்டையிட்டு குஞ்சு பொரிச்சு வாழுதுங்க. மரங்கள வெட்டும்போது எல்லாமே சிதஞ்சு  போகுமுங்க....”


பேசிக் கொண்டே போன சிங்காரத்திடம்” இதப்பாரு, இப்படிலாம் ஈவு இரக்கம் பார்த்தோம்னா நாம எப்படி வாழறது? காசு மேல காசு சேந்தா நம்ம வம்சம் கஷ்டப்படாம இருக்கும் புரிஞ்சுதா? நான் என்ன கட்டினாலும் வாட்ச்மேன்  நீதான். சொல்ற வேலயச் செய்.” கட்டளையிட்டுவிட்டு போனைக் கட் பண்ணினார். 

குளித்துவிட்டு தோட்டத்திற்குப் போக தயாராகும்போது செல்போன் ஒலித்தது. சிங்காரமோ? சிந்தனையோடு எடுத்தவருக்கு, மகளின் எண்ணைக்கண்டதும் சந்தோஷத்தோடு ஆன் செய்து “என்னடாம்மா”என்றார். 

“அப்பா”... என்ற மகளின் அழுகுரல் கேட்கவே ஆடிப் போய்விட்டார் சேதுராமன். “என்னம்மா? என்னாச்சு? அழாம விசயத்த சொல்லுமா” என்றவரிடம், “அப்பா,உங்க மருமகன் பிசினசுக்காக வீட்டை அடமானம் வச்சு பேங்குல கடன் வாங்கியிருக்கார். பிசினஸ் இப்போ டவுனா இருக்கறதால பேங்கிற்கு பணம் கட்டலியாம். அவங்கள்லாம் வந்து வீட்டை சீல் வெச்சுட்டு எங்கள வெளில அனுப்பிட்டாங்கப்பா. இடையில உங்களுக்குக்கூட போன் பண்ண விடல.” ஒரு வழியாகத் தேம்பிக் கொண்டே சொல்லி முடித்தாள் மகள் அருணா. 

கூட்டையிழந்த பறவையின் அலறலை மகளின் அழுகையில் உணர்ந்தார் சேது. “போனை மாப்பிள்ளையிடம் கொடுமா” என்றார். “என்ன தம்பி நீங்க? எனக்கிட்ட ஒரு வார்த்த சொல்லியிருக்கக் கூடாதா? பிசினசுக்காகத்தானே வாங்கினீங்க? ஒன்னும் பிரச்சினையில்லை. பேங்க் டீடெய்ல்சை அனுப்புங்க. நான் பணம் அனுப்பிட்றேன். அவங்களே வந்து சாவி கொடுத்துருவாங்க. வீட்டில இருங்க. கிளம்பிட்டே இருக்கேன். கொஞ்ச நேரத்தில அங்கே வந்துருவேன்” என்று சொல்லிவிட்டு காரில் ஏறினார். 

ஏறியதும் சிங்காரத்தைத்  தொடர்பு கொண்டார்.” சிங்காரம், மரம் வெட்ட ஆள் யாரும் வரமாட்டாங்க. அவங்கள வர வேணாம்னு சொல்லி மெசேஜ் அனுப்பிட்டேன். 
அந்தப் பறவைகளுக்கு தானியமும், தண்ணியும் நம்ம தோட்டத்திலேயே கிடைக்கிற மாதிரி ஏற்பாடு பண்ணிரு. தேவப்பட்ற பணத்த கொடுத்துவிட்றேன் சரியா?” என்று முதலாளி சொல்லக் கேட்டதும், அந்த நேரத்தில் எழுந்த பறைகளின் ஒலி நன்றி உரைப்பது போல் தோன்றியது சிங்காரத்திற்கு. 

மகளின் வீட்டுக்குள் நுழைந்தவரிடம் மகளும், பேரக்குழந்தைகளும் ஓடி வருவதைப் பார்த்து இரண்டு  கைகளையும் நீட்டி அணைத்துக் கொண்டார், ஒரு பறவைத் தன் குஞ்சுகளை சிறகுகளால் அணைத்துக் கொள்வதைப்போல்!

No comments: