பறந்து சென்ற குயில் (சிறுகதை) - உஷா ஜவாகர் - அவுஸ்திரேலியா


அன்று 1991ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தின் இறுதிப்பகுதியில் ஓர் நாள். எனக்கு அப்போது தான் திருமணமாகி இரண்டு மாதங்கள் பூர்த்தி ஆகியிருந்தது. நானும் என் கணவரும்  சாம்பியா நாட்டிலுள்ள இண்டோலா (Ndola) என்ற சிறிய நகரில் குடியிருந்தோம் .
                                     எங்களுடன் என் மாமனார், மாமியார், மற்றும் என்  கணவரின் இரு தங்கைகளும் தங்கியிருந்தார்கள் . எங்கள் குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் போல விளங்கியது. எங்கள்  வீட்டில்  இரண்டு சாம்பிய பணிப்பெண்கள் வேலை  செய்து கொண்டிருந்தார்கள். என்ன காரணத்தாலோ அவர்கள் சட்டென வேலையிலிருந்து நின்று விட்டார்கள்.
                                     எனவே எங்கள் வீட்டு செக்யூரிட்டி கார்ட் (security guard) ஒரு புதிய பணிப்பெண்ணை கூட்டி வந்தான். சாம்பிய மக்கள் தங்கள் தாய் மொழியுடன் ஆங்கிலத்திலும் சரளமாக உரையாடுவார்கள்.
                                   புதிதாக வந்தவளுக்கு சுமார் முப்பது வயது மதிப்பிடலாம் போலிருந்தது . கன்னங் கறுப்பு நிறம் . சாந்தமான முகத் தோற்றத்தை கொண்டிருந்தாள். அவள் சிரிக்கும்போது அவளது பற்கள் காரிருளில் மின்னல் பளிச்சிடுவது போல பளிச்சிட்டன. அவள் பெயர் மாத்தா (Martha) என அறிந்து கொண்டோம்.


                                    அவளும் காரியத்தில் கெட்டிக்காரி தான். தான் எந்த மாதிரி வீட்டில் வேலை செய்ய போகிறோம், என்ன வேலை செய்ய போகிறோம், எங்கு தங்க போகிறோம், எவ்வளவு சம்பளம் என எல்லாவற்றையும் அறியத்தான் அன்று வந்திருந்தாள்.
                                சுருங்கக்கூறினால் நாங்கள் அவளை இன்டெர்வியு பண்ணினோம். பதிலுக்கு அவளும் எங்களை இன்டெர்வியு பண்ணினாள். அவள் எங்களை இன்டெர்வியு பண்ணும்போதே தனது ஒரேயொரு மகனான   முலேங்காவையும் (Mulenga) தன்னுடன் கூட்டி வந்து சேர்வன்ட் குவார்ட்டேர்ஸில் வைத்திருக்க அனுமதி  கேட்டாள். நாங்களும் அதற்கு சம்மதித்தோம்.                  
                                  முலேங்காவிற்கு 10 வயதாகிறது. ஆனால் இரண்டாம் வகுப்பில் தான் படித்துக் கொண்டிருந்தான். மார்த்தாவுக்கு வசதியில்லாதபடியால் பாடசாலையில் மூலேங்காவை உடனடியாக சேர்த்திருக்கவில்லை.

                                    அவள் கணவனை விட்டு பிரிந்து வாழ்கிறாள் எனக் கூறினாள்.எங்களுக்கு அது ஒரு விதத்தில் நிம்மதி அளித்தது என்றே கூறலாம். அங்கு ஒரு வீட்டின் முதலாளியை சாம்பிய வேலைக்காரன் வெட்டி கொன்ற செய்தியையும் கேள்விப்பட்டிருந்தோம்.
                                     எனவே மார்த்தாவும் மகனும் மட்டும் வந்து எங்கள் வீட்டின் பின்புறம் உள்ள சேர்வன்ட் குவார்டேர்ஸில்  தங்குவதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபணையும்  இருக்கவில்லை.
                                     மார்த்தாவும் வந்து இரண்டு மூன்று நாட்களுள் ஓரளவு வீட்டு வேலைகளைப் பழகிக் கொண்டாள். அன்று மாமா ஹாலில் உட்கார்ந்திருந்தார். மார்த்தா அவர் முன்னே மண்டியிட்டு ,"போனா (Boanna ) உங்களுக்கு பிளாக் டீ தரவா?" என விசாரித்தாள். மாமா ஒரு நாளைக்கு 6 பிளாக் டீ அருந்துவார்.
                                      என் மாமி உடனே "இவள் மார்த்தா ஒவ்வொருவரின் நாடி பிடித்து அவர்களது விருப்பத்துக்கேற்றபடி நடந்து கொள்கிறாள்," எனக் கூறினார். மாமி கூறியது சரியாகத்தான் இருந்தது. 
                                       மார்த்தா நல்ல சுறுசுறுப்பாக வேலை செய்வாள். காலையில் எல்லோரது உடைகளையும் அலம்புவாள். பின் மரக்கறிகளை வெட்டித் தருவாள். வீடு கூட்டுவாள். பின்னேரங்களில் அவ்வளவு உடைகளையும் அயர்ன் பண்ணித்தருவாள்.
                                               சாம்பியாவில் தோய்த்து வெளியே காயப்போட்ட உடைகள் அனைத்தையும் கட்டாயம் அயர்ன் பண்ண வேண்டும்.  அல்லது டூட்சி பூச்சியின் (Tootsy) முட்டைகள் உடைகளில் தங்கியிருந்து எங்கள் உடலினுள் போய் அந்த முட்டைகள் குஞ்சாக பொரித்து எங்கள் உடலில் கொப்பளங்களை ஏற்படுத்தும். அந்த கொப்பளங்கள் மிகுந்த வலியைத் தரும்.                                                                  
                                              நான் இன்டோலாவில் Coopers and Lybrand இல் அக்கவுண்டன்ஸி செக்சனில் வேலை செய்து கொண்டிருந்தேன். நானும் வேலைக்குப் போய்க்கொண்டிருந்தபடியால்   மாத்தாவின் உதவியில்லாமல் வீடு நடத்துவது என்பது சிரமமாகவே இருந்திருக்கும்.                                                                          
                                             திருமணத்துக்கு முன் கொழும்பில் இருந்தபோது எப்படி பிட்டு அவிப்பது  என்பதை பழகியிருந்தேன். இடியப்பம் அவிக்கப் பழகியிருக்கவில்லை. அன்று ஒரு நாள் இன்டோலாவில் வேலை முடித்து வந்து அவித்த வெள்ளை கோதுமை மா மூன்று சுண்டுகள் எடுத்து வைத்துக்கொண்டு என் மாமியை அழைத்தேன்.  "மாமி எனக்கொருக்கா இடியப்பம் கிண்ட காட்டித் தாறீங்களா?" என கெஞ்சினேன். என் மாமியும், "அதற்கென்ன உஷா நான் காட்டித்தாரன்" என்றபடி எனக்கு அருகே வந்தார். ஆனால் அங்கே நின்ற மாத்தா என்னைப்பார்த்து "மேடம் யு மூவ். வாண்ட்  டூ லேன்" (Madam you move. I want to learn) என்று கூறி என்னைத் தள்ளி விட்டு தான் இடியப்பம் அவிக்கப் பழகத் தொடங்கினாள்சும்மாவே சமையல் செய்வது என்றால் எனக்கு சோம்பல்.எனவே சந்தோஷமாக  " கே மாத்தா யு லேர்ன்" என்று கூறிவிட்டு சந்தோஷமாக அப்பால் நகர்ந்து விட்டேன்.
                                              சில நாட்களில் வேலையால் வந்து இரவுகளில் சாண்ட்விச் டோஸ்ட் (sandwich toast) செய்வோம். பாணுக்குள் டின் ஃபிஷ் (tin fish) வைத்து செய்வோம். அப்படி செய்யும் போது டோஸ்டருக்கு (toaster) வெளியே விழும் கரைத் துண்டுகளை சேர்த்து அவற்றை மாத்தா எடுத்துக்கொண்டு போவாள். அதைப் பார்த்து பரிதாபப்பட்ட நான் "மாத்தா சாண்ட்விச் டோஸ்ட் செய்து முடித்தவுடன் உனக்கும் இரண்டு சாண்ட்விச்சுகளை எடுத்துச் செல்" என கூறினேன். இதை ஏன் நான் குறிப்பிட்டேன் என்றால் பல ஸாம்பிய மக்கள் வறுமைக் கோட்டுக்கு மிகவும் கீழே வாழ்பவர்களாக இருந்தார்கள்.
                                   இதற்கிடையில் என் மாமி எங்கள் வீட்டு செக்யூரிட்டி கார்டிடம் (security guard) சொல்லி ஒரு ஆட்டை எடுத்து வந்து எங்கள் வீட்டுத்தோட்டத்தில் கட்டி வைத்திருந்தார். மாமி தன் மகனுக்கு அதாவது என் கணவருக்கு ஆட்டுப்பாலில் கோப்பி போட்டு கொடுப்பார். பூவுக்கு கிடைத்த பெருமை நாருக்கும் கிடைப்பது போல அவ்வப்போது எனக்கும் ஆட்டுப்பால் கோப்பி கிடைக்கும்சில வேளைகளில் நான் எங்கள் ஆட்டுக்குட்டிக்கு அருகே ஒரு கதிரையை போட்டுக்கொண்டு வாசித்து கொண்டிருப்பேன். அந்த ஆட்டுக்குட்டியும் அவ்வப்போது தன் தலையை ஆட்டி 'மே மே' என்று கொண்டிருக்கும். அதெல்லாம் இரம்மியமான நினைவுகள்!                                                          
                                        காலமகள் தன் சிறகுகளை விரித்துப் பறந்து கொண்டேயிருந்தாள். மே மாதம் உதித்தது. என் வயிற்றிலும் கரு ஒன்று உதித்தது. நான் மகத்தான தாய்மைப் பேற்றை அடைந்திருந்தேன். ஒரு நாள் அதிகாலை என் மாமியிடம் "நான் அம்மாவாகப் போகிறேன்" எனக் கூறியதும் அவர் சட்டென என்னைப் பார்த்து "கெட்டிக்காரி" எனக் கூறினார். நன்கு சமைக்கப் பழகியிருந்த மாத்தாவும் எனக்கு அவ்வப்போது நல்ல கறிகளைச் செய்து தருவாள்.
                                       ஒக்டொபர் மாதத்துடன் மாமா, மாமி மற்றும் என் கணவரின் கடைசித் தங்கை இலங்கைக்கும், மற்ற தங்கை அவுஸ்ரேலியாவுக்கும் சென்று விட்டார்கள்என் கணவரும் ஸாம்பிய நாட்டின் தலைநகரான லூசாகாவில் (Lusaka) ஒரு புது வேலையைத் தொடங்க தீர்மானித்து வைத்திருந்தார்.                                                                           
                                          மாத்தாவின் குணநலன்கள் எங்களுக்கும் பிடித்துப்போக "நீயும் மகனும் எங்களுடன் லூசாகா வர தயாரா?" எனக் கேட்டோம் அவளும் சந்தோஷத்துடன் தலையசைத்தாள். 1991 டிசம்பர் மாதம் முதல் கிழமை இரண்டு பெரிய லொறிகளில் எங்கள் சாமான்கள் ஏற்றப்பட்டன. மாத்தாவும் மகனும் லாரியில் திறந்த மேற்பகுதியில் சாமான்களுடன் அமர்ந்து கொண்டார்கள்நானும், கணவரும், என் மாமியும்   லாரிகளுக்குப் பின்னால் காரில் லூசாகா நோக்கிய எங்கள் பயணத்தை தொடங்கினோம். என் மாமி எனது பிரசவத்துக்காகமீண்டும் ஸாம்பியா வந்திருந்தார்
                                
                                              மூன்றரை மணித்தியாலங்கள் கடந்த பின் லூசாகா நகரை வந்தடைந்தோம்.என் கணவரின் கம்பெனி கொடுத்திருந்த வீட்டினுள் நுழைந்தோம். பாத்ரூம் பைப்பிலும், சமையலறை பைப்பிலிருந்தும் ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவில்லை. மாத்தா அருகிலிருந்த ஸாம்பியர்களிடம் விசாரித்துவிட்டு இரண்டு தெரு தள்ளிச் சென்று தண்ணீர் எடுத்து வந்தாள். தலையில் ஒரு பெரிய அகன்ற வாளியை தூக்கிச்சென்று அந்த வாளி நிறைய இரண்டு மூன்று தரம் தண்ணீர் எடுத்து வந்தாள். மாத்தா சிரமப்பட்டு வாளியினுள் தண்ணீர் எடுத்து வந்ததை கவனித்த என் மாமி என்னிடம் "உஷா மாத்தா இப்படி தன்னை வருத்தி உங்களுக்காக தண்ணீர் எடுத்து வந்ததை கடைசி வரைக்கும் நீங்கள் இருவரும் மறக்க கூடாது" என்றார்.
                                     
                                  மாத்தாவின் மகனை லூசாகாவில் நல்ல பாடசாலை ஒன்றில் சேர்த்து விட்டோம். லூசாகாவிலும் மாத்தா எங்கள் வீட்டுக்குப் பின்னாலிருந்த சர்வன்ட் குவாட்டஸில் மகனுடன் தங்கியிருந்தாள். என் கணவரும் தன் ஆபிஸில் சொல்லி ஒரு தண்ணீர் டாங்கை வீட்டின் கரையில் கட்டுவித்தார். அதில் தண்ணீரை நிரப்பியிருந்ததால் பின்னர் எங்களுக்கு தண்ணீர்  பிரச்சினை வரவில்லை.
                                                                                            
                                       இதற்கிடையில் டிசம்பர் மாதம் நான் மறுபடியும் இன்டோலா நகருக்குச் சென்று என் தம்பியின் வீட்டில் தங்கினேன். இன்டோலா நகருக்கு அருகே இருந்த லுவன்ஷயா நகரில் உள்ள மருத்துவமனையில் தான் என் குழந்தையை நான் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குழந்தை பிறந்த பிறகு வேலை ஒன்றை லூசாகாவில் தேடிக்கொள்ளலாம் என நினைத்து என் வேலையையும் விட்டாயிற்று. இப்படியே இரண்டு மாதங்கள் பறந்து சென்று விட்டன. என் மாமியும், மாத்தாவும் இண்டோலாவுக்கு வந்து என் தம்பி வீட்டில் தங்கியிருந்தார்கள்.
                                                                                              
                                         27 ஆம் திகதி பெப்ரவரி மாதம் 1992 அன்று என் பன்னீர் குடம் உடைந்து விட்டது. லுவன்ஷயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். பிரசவ அறைக்குச் செல்லும் வரை புத்தகம் வாசித்துக்கொண்டிருந்த ஒரே பெண் நானாக தான் இருந்திருக்க முடியும்.

                                           தாங்க முடியாத வலி வந்தும் நான் நர்ஸ் மாரை கெஞ்சிக் கேட்டும் அவர்கள் என்னை பிரசவ அறைக்கு அழைத்துச் செல்வதாயில்லை. அங்கு எல்லா தாதிமாருமே ஸாம்பிய பெண்கள் தான். என் கட்டில் அருகே வந்த தாதி ஒருவரிடம் "யு லுக் வெரி பியூட்டிபுல்" என்றேன். மிகவும் மகிழ்ச்சியடைந்த அவள் பத்தே நிமிடத்தில் என்னை பிரசவ அறைக்குள் அழைத்துச் சென்றாள்.
                                                                                            
                                            எனது மகப்பேறு வைத்தியரிடம்"டாக்டர் ப்ளீஸ் எனக்கு ஆபரேஷன் செய்து விடுங்கள்" என கெஞ்சினேன் அவரோஇந்த நாட்டில் சிசேரியன் செய்யப் போய் பிளட் உனக்கு ஏற்ற வேண்டி வந்தால் சிரமமாக போய் விடும். ஆனபடியால் சிசேரியன் எண்ணத்தை கைவிடு" என்றார். பிறகு ஒருமாதிரியாக வாக்கியூம் பேபியாக (vacuum baby) என் மகன் பிறந்தான்.

                                             டாக்டர் என்னிடம் "உனக்கு மிகவும் ஆரோக்கியமான மகன் ஒருவன் பிறந்திருக்கிறான்" என கூறினார். என் அருகிலிருந்த என் மாமிக்கு வாயெல்லாம் பல். முகமெல்லாம் பூரிப்பு. அவரின் கண்கள் இரண்டும் ஆனந்தத்தில் மின்னின. அவருக்கு என் மகன் முதல் பேரன் என்பதால் தான் அவருக்கு அத்தனை சந்தோஷம்!
                                                            
                                              நான் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது வைத்தியசாலைக்கு வெளியே இரவிரவாக என் கணவரும் அவரது நண்பரும் காருக்குள் காவல் இருந்தார்கள். இதை கேள்விப்பட்ட நர்ஸ் ஒருத்தி என்னிடம் "நீ பிள்ளை பெறுகிறாயா? அல்லது உனது கணவர் பிள்ளை பெறுகிறாரா?” என பகிடியாக கேட்டாள்.
                                                                                          
                                                  எனது தம்பி வீட்டில் ஒரு 40 நாட்கள் கழித்து விட்டு நாங்கள் லூசாகா திரும்பினோம். லுசாகாவுக்கு போகும் போது வழியில் மகன் சத்தியெடுத்தான். அவனுக்கு உடை மாற்ற நேர்ந்தது. அவனது மாற்று உடையெல்லாம் கார் டிக்கியினுள் இருந்தது. உடனே உடையை எடுத்து மாற்ற முடியவில்லை. என் மாமி உடனே என்னிடம், "இப்படித் தானம்மா சில வேளைகளில் எல்லாமே இருந்தாலும் எங்கள் பாவனைக்கு கைகளில் ஒன்றும் கிட்டாது, "என்றார். அவர் கூறியது ஒரு வாழ்க்கைத் தத்துவமாகவே எனக்குப் பட்டது.

                                                       இப்போது லுசாகாவில் வாழ்க்கை ஆரம்பித்தாயிற்று. மகனின் அழுக்குத்துணி நாப்கின்களை எல்லாம் மாத்தா நன்கு துவைத்து "வெள்ளை வெளேரென" ஆக்கி காயப் போடுவாள், எல்லோரது உடைகளையும் துவைத்து காயப்போட்டு அயன் பண்ணித் தருவாள், வீட்டை கூட்டித் துப்பரவு பண்ணுவாள், சமையலுக்கும் உதவுவாள்.
                                                                                       
                                                    ஒரு நாள் மின்சாரம் போய் விட்டது. மண்ணெண்ணெய் அடுப்பில் அவள் சமைத்தாள். ஆனாலும் "எலெக்ரிக் குக்கர் மாதிரி ஸ்விட்ச் போட்டால் மண்ணெண்ணெய் அடுப்பு எரியுமா?" என வெகுளித்தனமாக கேள்வி எழுப்பினாள். அவர்கள் கூடுதலாக நிலக்கரியை பாவித்து தான் சமைப்பார்கள்.
                                                                                        
                                                        நான் தோசைக்கு அரைத்து வைப்பேன். இரவில் மாத்தா வந்து சுடுவாள். அவள் சுடும் போது நான் குசினிக்குள் போனால் அவளது வாய் அசைந்து கொண்டிருக்கும். தோசையை சுட்டு சுட்டு சாப்பிட்டுக் கொண்டிருப்பாள். உடனே நான் அவளிடம், "மாத்தா நீ தோசைகளை சுட்டு முடித்த பிறகு உனக்கு இரண்டை எடுத்துச்செல். தோசையை சுடும் போது  சாப்பிடாதே!" என கண்டிப்புடன் கூறினேன். அவளும் அதற்கு தலையசைத்தாள்.
                                                              
                                                                என் கணவர் "ஜே ஜே லோ (J J Lowe) என்ற என்ஜினியரிங் கம்பெனியில் கணக்காளராகத் தான் ஆரம்பத்தில் சேர்ந்திருந்தார். பின்னர் J J Lowe கம்பெனி முதலாளியுடன் சேர்ந்து சில கடைகளை திறந்து வியாபாரம் பண்ணிக் கொண்டிருந்தார்.
                                                                                        
                                                                 எங்கள் வீட்டு மாத்தாவும் தன்னுடைய சம்பளத்தில் ஒரு பகுதியில் சோளம் வாங்கி சில பெண்களிடம் கொடுத்திருந்தாள். அவர்களும் எங்கள் வீட்டு வாசலுக்கு வெளியே மெயின் ரோட்டில் உட்கார்ந்தபடி சில நிலக்கரி அடுப்புக்களில் சோளங்களை சுட்டு விற்று வரும் காசை மாத்தாவிடம் கொடுத்தார்கள். மாத்தாவுக்கும் அதில் ஓரளவு இலாபம் வந்திருக்க வேண்டும், இதை அவதானித்த நான் என் கணவரிடம் "கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும் என்ற பழமொழி சரியாகத் தானிருக்கிறது! உங்களைப் போலவே இங்கே மாத்தாவும் வியாபாரம் பண்ணுகிறாள்," என்றேன். என் கணவரும் அதைக் கேட்டு சிரித்து விட்டு சென்று விட்டார்.
                                                                                          
                                                                  ஸாம்பியர்கள் பொதுவாக ஆண்கள், பெண்கள் எல்லோரும் சிபுக்கு (beer) என்ற குடிபானத்தை விரும்பிக் குடிப்பார்கள். எனது மகனுக்கு நான்கு மாதம் ஆகிவிட்டது. என் மாமியார் இலங்கைக்குச் சென்று விட்டார். ஒரு முறை என் கணவர் லூசாகாவிலிருந்து இண்டோலாவிற்கு மூன்று நாட்கள் வேலை அலுவலாக சென்றுவிட்டார். இரவில் எங்கள் வீட்டு ஹாலில் எனக்கு துணையாக படுத்திருக்கும்படி என்கணவர் மாத்தாவைக் கேட்டுக் கொண்டிருந்தார்.
                                                                                        
                                                                     அதற்கேற்ப அன்று இரவு 11 மணியளவில் மார்த்தா நன்கு குடித்து விட்டு வந்து   என்னிடம் "மேடம் கிவ் பேபி. வில் லுக் ஆஃப்டர் ஹிம்" என்று எனக்கு தொந்தரவு தந்தாள். நான் "நோ மாத்தா நோ" என்று அலறியபடியே மகனை அணைத்துக் கொண்டு அறைக் கதவை லாக் (lock) பண்ணிக் கொண்டு படுத்துவிட்டேன். அதன் பின் என் கணவர் வெளியூர் செல்வதானாலும் நான் தனியே இருக்கப் பழகிக் கொண்டேன்.
                                                                                       
                                                                        சில காலத்தின் பின் என் மகனுக்கு ஒன்றரை வயதிருக்கும் போது நானும் மகனும் இலண்டன் சென்றிருந்தோம். மாத்தா என் கணவரிடம் வீட்டுக்குத் தேவையான பொருட்களின் பட்டியலை ஒரு பேப்பரில் எழுதி நீட்டினாள். என் கணவர் எத்தனை சாமான்கள் என்று எண்ணிப் பார்த்தால் 10 சாமான்கள் லிஸ்ட்டில் இருந்தது. ஆனால் கடைசி இலக்கத்தைப் பார்த்தால் கடைசி இலக்கம் 9 ஆக இருந்தது. என் கணவரும் கணக்காளர் அல்லவா? மறுபடியும் லிஸ்ட்டை சரி பார்த்தால் மாத்தா 0 என்ற எண்ணில் முதலாவது சாமானை எழுதியிருந்தாள். 0-9 என இலக்கங்களை எழுதி 10 சாமான்களை எழுதியிருந்தாள்.
                                                                                          
                                                                      ஸாம்பிய மக்கள் சோளத்தை நன்கு காயவைத்து இடித்து மாவாக்குவார்கள். அதைமில்லி மீல்’ என்பார்கள். கடைகளில் 5 கிலோ, 10 கிலோ மில்லி மீல் பைகளை விற்பார்கள். மாத்தா சில வேளைகளில் ஸ்டைலாக 5 கிலோ மில்லி மீல் பையை தலையில் தூக்கியபடி வருவாள். மார்க்கெட்டுக்கு மரக்கறி வாங்கப் போனாலும் ஸ்டைலாக லிப்ஸ்டிக் பூசிக் கொண்டு போவாள். மில்லி மீல் சிறிதளவு எடுத்து சுடுதண்ணியில் போட்டு களி மாதிரி கிண்டுவார்கள். அதைசீமா’ (seema)என்றழைப்பர். அதை கீரையுடன் அல்லது சிக்கனுடன் சேர்த்து உண்பார்கள்.
                                                                                           
                                                                              சில வேளைகளில் எங்கள் வீட்டுத் தேவைக்கு சிக்கன் வெட்டினால் சிக்கன் தோல், கூரிய நகங்கள் கொண்ட சிக்கன் கால்கள் எல்லாவற்றையும் தான் சமைக்க எடுத்துச் செல்வாள். அதைப் பார்க்க மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கும். அவள் எப்போது கோழி வெட்டினாலும் அவளுக்கென சில கோழித் துண்டுகளை அவளுக்கு கொடுத்து விடுவேன்.
                                                                                         
                                                                             மார்த்தாவுக்கு ஒரு தங்கை இருந்தாள். அவளது பெயர் டோரதி. டோரதிக்கு 4 குழந்தைகள். நான்கு குழந்தைகளுக்கும் நான்கு அப்பாமார். டோரதியின் மூத்த மகனை ஒரு நாள் கண்டேன். அவனது பெயர் என்ன என வினவினேன். 'முலேங்கா' என பதில் வந்தது.
                                                                                           
                                                                                நான் மாத்தாவிடம் "உனது மகனின் பெயர் தானே முலேங்கா உனது தங்கையின் மகனின் பெயரும் முலேங்காவா?" என மறுபடியும் கேட்டேன். எனக்கோ சரியான பதில் வராவிட்டால் மண்டை வெடித்து விடும் போலிருந்தது. "எங்கள் வழக்கம் அது" என்றாள் மாத்தா. அதன் பிறகு மாத்தாவின் மகனை 'பெரிய முலேங்கா'எனவும் டோரத்தியின் மகனை 'சின்ன முலேங்கா' எனவும் அழைத்து வந்தோம்.
                                                                                        
                                                                              அதுவரை பாடசாலை பக்கமே தலை வைத்து படுக்காத சின்ன முலேங்காவுக்கு நான் வீட்டில் பாடம் சொல்லிக் கொடுத்தேன். பின் என் கணவரை நச்சரித்து சின்ன மூலேங்கவையும் ஒரு பாடசாலையில் சேர்த்து விட்டேன்.
                                                               என் மகனுக்கு மூன்று வயதிருக்கும் போது சரியாக பின்னேரம் ஆறு மணிக்கு என்னிடம் வந்து " வாண் டு பை மெய்ஸ்" என்பான். (I want to buy maize). பெரிய முலேங்காவுடன் பின்னேரம் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் என் மகன் எப்படி சரியாக ஆறு மணிக்கு என்னிடம் வந்து வெளியே வீதியில் சோளம் விற்பவர்களிடமிருந்து சோளம் வாங்க வேண்டும் என கேட்கிறான் என்ற கேள்வி என்னுள் எழுந்தது.
                                                                 
                                               ஒரு நாள் வெளியே விளையாடிக் கொண்டிருக்கும் பெரிய முலேங்காவையும் என் மகனையும் அவர்களுக்குத் தெரியாமல் கண்காணித்தேன். பார்த்தால் பெரிய முலேங்கா என் மகனின் காதில் "கோ அன்ட் டெல் யுவர் மம் வாண்ட் டு பை மெய்ஸ்" என ஓதிக் கொண்டிருந்தான். அந்த இடத்திலேயே பெரிய மூலேங்காவை அழைத்து "இனிமேல் என் மகனை அப்படி தூது அனுப்ப வேண்டாம்" எனக் கண்டித்தேன். அதன் பிறகு பெரிய முலேன்காவும் என் மகனை தூது அனுப்புவதை நிறுத்திக் கொண்டான்.
                                                                                        
                                                 இடையில் மாத்தா தான் திருமணம் செய்யப்போவதாக ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாள். திருமணத்துக்காக தான் இண்டோலா போய் தனது பிறப்புச் சான்றிதழைப் பெற்று வர வேண்டும். அதற்கு மூன்று நாள் லீவு கேட்டாள். நாங்களும் சம்மதித்தோம். பின் அவள் திருமணம் முடித்து கணவன் பீட்டருடனும் தன் மகன் முலேங்காவுடனும் எங்கள் வீட்டிலிருந்து சில மைல்களுக்கப்பால் தங்கிக் கொண்டாள்.
                                                                                      
                                                       அங்கிருந்து சில சமயம் பஸ்ஸில் எங்கள் வீட்டுக்கு வேலைக்கு வருவாள். சில சமயம் ஒன்றரை மணித்தியாலங்கள் நடந்தும் வருவாள். ஆபிரிக்க மக்கள் உணவாக உட்கொள்ளும் சோள மா தான் அவர்களுக்கு மிகுந்த உடல் வலிமையைக் கொடுக்கிறது எனக் கேள்விப் பட்டிருக்கிறேன். ஒரு நான்கு மாதங்கள் செல்ல மாத்தா தான் கருவுற்று இருப்பதாக கூறினாள். அந்த செய்தியை தயக்கத்துடன் ஏற்றுக் கொண்டேன். இனிமேல் அவளை வேலைக்கு வைத்து கொள்வதா, இல்லையா என்ற குழப்பம் என் மனதில் வந்தது உண்மை! அவள் தொடர்ந்து வேலைக்கு வந்தாள்.
                                                                                    
                                                            ஆனால் சில நாட்கள் வேலைக்கு வரவில்லை. அவள் தங்கையிடம் தனக்கு சுகமில்லை என்று செய்தி அனுப்பியிருந்தாள். சில நாட்களின் பின் மிகுந்த முக வாட்டத்துடன் வேலைக்கு வந்த மாத்தா தன் கரு கலைந்து விட்டதாக கூறினாள். எனக்கோ அந்த செய்தி மிகுந்த கவலையையும், மன அதிர்ச்சியையும் அளித்தது.
                                                                                 
                                                               ஒருநாள் எங்கள் குசினி நிலத்திலிருந்து ஏதோ மரக்கறி வெட்டிக் கொண்டிருந்தாள். அந்தப் பக்கம் சென்ற நான் அவள் கால்களைப் பார்த்தேன். அவள் கால்கள் தடித்து இருந்தன. "மாத்தா வாட் இஸ் திஸ்?" என அவள் கால்களைக் காட்டி கேட்டேன். அவளோ மிகுந்த வேதனையுடன் "மை லெக்ஸ் ஆர் பெயினிங்" என்றாள். தடித்த கால்களில் சிறிய புண் ஒன்றும் இருந்தது. உடனே அவளை டிரைவருடன் எங்கள் குடும்ப வைத்தியரிடம் அனுப்பினேன்.
                                                                                        
                                                                அந்த சமயத்தில் நானும் இரட்டைக் குழந்தைகளுக்கு தாயாகி அவற்றை என் வயிற்றில் சுமந்து கொண்டிருந்தேன். எனக்கு மகப்பேற்று காலத்தில் சிக்கல் ஏற்பட்டதால் நான் இலண்டனுக்குப் பயணமானேன்.
                                                                               
நான் காரினுள் ஏறும் முன் என்னை நோக்கி  ஓடி வந்த  மார்த்தா கலங்கிய கண்களுடன் என் கைகளைப் பற்றியபடி "மேடம் வென் யு கம் பாக் வித் யுவர் ட்வின்ஸ் வில் லுக் ஆஃபிடேர் தெம் வித் லொட்ஸ் ஒப் லவ் " என்றாள்.
                                                                   (Madam when you come back with your twins I will look after them with lots of love)
இவை தான் அவள் என்னுடன் பேசிய இறுதி வார்த்தைகள்!
                                                                                                         
                                                                           அவளது பிரியாவிடையுடன் அன்று இலண்டனுக்கு பயணமான நான் பின் 2000 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் என் கணவருடனும் பிள்ளைகளுடனும் அவுஸ்திரேலியாவுக்கு வந்து செட்டில் ஆகிவிட்டேன் . என் குழந்தைகள் பிறந்திருந்த சமயம் மார்த்தா HIV தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறாள் என செய்தி கிடைத்திருந்தது.
                                                                                                                                           
                                                                       நாங்கள் அவுஸ்ரேலியாவில் செட்டில் ஆனாலும் என் கணவர் தன் வியாபார அலுவலாக ஸாம்பியா சென்று வருவதுண்டு. அப்படி அவர் ஸாம்பியா செல்லும் போது மாத்தாவின் மகன் பெரிய முலேங்காவுக்கு ஒரு கடையில் ஸ்டோர் கீப்பராக வேலை எடுத்து கொடுத்து விட்டார்.                                                                               
இப்போது பல வருடங்கள் கழிந்து சென்றுவிட்டாலும் மார்த்தா என்னிடம் பேசிய அந்த வார்த்தைகள், "மேடம் வென் யு கம் பாக் வித் யுவர் ட்வின்ஸ் வில் லுக் ஆஃபிடேர் தெம் வித் லொட்ஸ் ஒப் லவ் " என்ற அந்த அன்பு கனிந்த வார்த்தைகள் இன்னமும் என் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றன. என் நெஞ்சில் சோக அலைகளை எழுப்பிக்கொண்டிருக்கின்றன.
                                                               


       
                          
                        

  





1 comment:

Karthiga Kanesar said...

good story

Usha Gvhar