மீள் வாசிப்பு அனுபவம் 2 - மாடும் கயிறுகள் அறுக்கும் - செ .பாஸ்கரன்

.


மாடும் கயிறுகள் அறுக்கும் கவிஞர் முருகையனின் கவிதை தொகுதி இந்த வாரம் வாசிப்புக்காக எனது கண்ணில் பட்டது. இந்தக் கவிதைத்தொகுதி 1990 ஆம் ஆண்டு தேசிய கலை இலக்கிய பேரவையினூடாக இந்த கவிதை நூல் வெளிவந்தது. பல பத்திரிகைகளில் தாமரை, தீபம், எழுத்து போன்றவைகளிலும் வீரகேசரி, தினகரன், மல்லிகை , தாயகம் , சிந்தாமணி போன்ற வற்றில் ஒரு கால் நூற்றாண்டு கால அறுவடையாக இந்த கவிதைகளை வைத்திருக்கிறார்கள்.

இந்த கவிதைகள் வேள்வி, கொதிப்பு, நடப்பு, பல்லக்கு , உலகியல், ஒன்றல் என ஆறு கூட்டங்களாக உள்ளது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விடயம் பற்றி பேசுகின்றது கலையாக்கம் பற்றி, மனக் கிளர்ச்சி பற்றி, தினசரி வாழ்க்கையில் நடக்கின்ற மனிதர்களின் கோலங்கள் , விசித்திரங்களை முரண்பாடுகளைகளையும் ஒவ்வொரு பகுதியாக பேசுகின்றது. புதுக்கவிதைகள் வெளிவரத் தொடங்கிய காலகட்டத்திழும் மரபுக்கவிதை ஊடாகவே இந்த கவிதைகள் அமைக்கப்படுகின்றது அதுமட்டுமல்ல கடுழியம் என்னும் நாடகமும் இந்த தொகுதியிலே காணப்படுகின்றது. விடுதலை கிடைத்த பிறகுதான் நிம்மதி என்பது கடுழியத்தின் உயிர் குரலாக இருக்கிறது. அந்த விடுதலையும் இன, மத, வர்க்க ஒடுக்கல்களில் இருந்து விடுதலையாக இருக்கலாம் என்ற ஆவல் அங்கே தெரிகிறது.

பல கவிதைகள் மனதை தொட்டு விடுகின்ற கவிதைகளாக அமைந்திருக்கின்றன. ஒரு கவிதை அரசியலை சாடடை கொண்டு சாடுவது.
உருக்கம் என்ற கவிதை
நத்தார் விருந்திலே
நாற்பது சிறுமியர்
தோள் வரை நறுக்கி கழுவி சுருட்டிய
எண்ணை படாத கூந்தல் பறந்திட
வூளிகள், சோளிகள் , ஜீப்பிகள் ஒளிவிட
சாயம் பூசிய செவ்விதழ் திறந்தனர்


பிரமுகர் பெருமையைப் புகழ்ந்து பாடினர்
 ஐம்பது வாத்தியம் பின்னணி இசைத்தன

பார்த்தார் பிரமுகர்
சிறுமியர் கைகளை
நாற்பது கையிலும் காப்புகள் மின்னின
கைக்கடிகாரமும் காணப்பட்டது

ஒன்பது பேரின் கைகளில் மாத்திரம்
கைக்கடிகாரம் இல்லை என்பதையும்
கண்டார் பிரமுகர்
கண்கள் கலங்கினார்
உருகினார்
பரிந்தார்
உள்ளம் கரைந்தார்
திருப்புகழ் பாடிய சிறுமியர்
பாவம்
கைக்கடிகாரம் இன்றி இருப்பதா
அவர்களின் பொருட்டாய்,அன்பு நிறைவுடன்
ஐயாயிரத்தை அருளினார் பிரமுகர்
ஆட்சி பீடத்தில் உயர இருப்பவர்
-பிரமுகர்
ஆதலால்
பிரியமாய் வழங்கினார்.
நத்தார் விருந்தில் திருப்புகழ் பாடினால்
கைக்கடிகாரமே இலவசமாய் வரும்
தட்டிகள் பிரிந்த குடில்களில் கிடந்து
குளிரிலே கொடுகி நடுங்கும்
சிறுமிகள் திருப்புகழ் பாடுவதில்லையே.

இது ஆயிரத்து 1981 எழுதிய ஒரு கவிதை.மனதை உருக்குவதாக இருந்தது.

மாடும் கயிறுகள் அறுக்கும் கவிதைத் தொகுதி அப்படி ஒரு கவிதை இருக்கவேண்டும் என்று கண்கள் தேடியபோது மாடு மாடு என்று பல ஏசி என்ற கவிதை தென்பட்டது. யாழ்ப்பாணத்தவர்களுடைய வாழ்க்கையிலே வேலைக்காரர்கள் என்பவர்களை பிரித்து வைக்க முடியாது. வேலை காரர்கள் வாழ்க்கை சோகம் நிறைந்த வாழ்க்கையாக இருந்தது. அந்த வேலைகாரர்களை பிழிந்து எடுப்பது எம்மவர்கள் வழக்கமாக இருந்தது. அதை மிக அழகாக கவிஞர் கொண்டுவருகின்றார். இறுதி வரிகளை அவர் கூறும்போது

மாடு மாடென ஏசுகின்றீர்கள்
மாடும் கயிறுகள் அறுக்கும்
ஆடவர் மகளிர் அது செய்யாரோ ?

என்ற ஒரு கேள்வியோடு அந்த கவிதையை முடிக்கிறார். ஆயிரத்தி தொள்ளாயிரத்தி எண்பத்தி நாளில் இக் கவிதை எழுதப் பட்டது.

இன்னுமொரு என் மனதை தொட்ட கவிதையாக இருக்கிறது சாக்கடையை சுத்தம் செய்ய சென்ற உழைப்பாளியை அண்ணா என்று அழைக்கின்றார் ஒரு டாக்டர். டாக்டர் எஞ்சினியர் செய்யும் வேலையோடு அவருடைய வாழ்க்கையும் இந்த சுத்தம் செய்யும் தொழிலாளர்களுடைய வாழ்க்கையையும் மிக அழகாக எடுத்துச் செல்கின்றார் இந்த கவிஞர். உழைப்பாளிக்கு கொடுக்கும் முக்கியத்துவம் தெரிகிறது.

அதன் பின்பு ஒரு நீண்டு வந்த நாடக கவிதை காணப்படுகின்றது. இந்த கவிதைத் தொகுதியை கையில் எடுத்தபோது முன் அட்டைகள் நொறுங்கி விழுந்தது, நீண்ட காலமாக இது புத்தக அலமாரியில் உறைந்து கிடக்கின்றது என்று தான் கூற வேண்டும். பொக்கிஷங்கள் தேடப்பட்டுக் கொண்டே இருக்கும். இந்த வாரம் எதை எடுப்பது எதை படிப்பது என்று நாவல்களையும் கவிதைகளையும் கட்டுரைகளையும் பழையவற்றை தேடியபோது கிடைத்த முத்துக்களில் ஒன்று தான் இது. இது இன்றைய வாரம் உங்களுடன் இருக்கட்டும்

No comments: