படித்தோம் சொல்கின்றோம்: கனடா - ஶ்ரீரஞ்சனியின் மூன்று நூல்கள் மீதான வாசிப்பு அனுபவம் - முருகபூபதி


.
கனடா - ஶ்ரீரஞ்சனியின்  மூன்று நூல்கள் மீதான வாசிப்பு அனுபவம்  முல்லைக்குத்  துணையாகிய தேரும் பலமரங்களின் அழிவினால்தானே உருவானது…!?  வாழ்வின் தரிசனங்களை சமர்ப்பிக்கும் கதைகள்


ஒரு கிராமத்தில்  மரத்தடியில்  ஊர் மக்களை அழைத்து வைத்துக்கொண்டு,   “ கற்பில் சிறந்தவள் யார்..?  “ என்று அவர்  கேட்பார்.  அங்கிருந்த ஆண்கள் ஒவ்வொருவரும்  காவியப்பெண்ணின் பெயரைச்சொல்வார்கள்!
கண்ணகி,  மாதவி, சீதை, சாவித்திரி, தமயந்தி, சகுந்தலை, சந்திரமதி… என்பார்கள்.
உடனே அங்குநின்ற பெண்களைப்பார்த்து,  “ பாருங்கள் உங்கள் கணவர்மாருக்கு முன்பின் தெரியாத அந்தப்பெண்கள்தான் கற்பில் சிறந்தவர்களாகத் தெரிகிறார்கள்.  வாழ்நாள் பூராவும் அருகில் இருக்கும் நீங்கள் எவரும் கற்புக்கரசிகளாகத்   தெரியவில்லை  “ என்பார். உடனே அந்தப்பெண்கள் ருத்ர தாண்டவம் எடுத்து கணவர்மாரைப்பார்த்து,   “ யோவ்… நாங்களெல்லாம் உங்க கண்ணுக்கு கற்புக்கரசிகள் மாதிரி தெரியல்லையா..?  “ என்று ஏககுரலில் சத்தம்போடுவார்கள்.
இந்தக்காட்சியை பலவருடங்களுக்கு முன்னர் வெளியான விதி திரைப்படத்தில் நீங்கள் பார்த்து ரசித்திருப்பீர்கள். அவ்வாறு குறும்புத்தனமான கேள்வியை கேட்பவர் இயக்குநர்  பாக்கியராஜ்.
கனடாவில் வதியும் ஶ்ரீரஞ்சனியின் பின்தொடரும் குரல் நூலில், புலம்பெயர் வாழ்வில் கண்ணகியும் மாதவியும் என்ற கட்டுரையை  படித்துக்கொண்டிருந்தபோது, எனக்கு அந்த விதி திரைப்படக்காட்சிதான் மனதில் நிழலாடியது.
இந்த நூல் வௌிவரவிருந்த வேளையில் நானும் ஒரு குறிப்பினை அவருக்கு அனுப்பிவைத்தேன். அதனையும் இந்நூலின் பின்புற அட்டையில் பதிவுசெய்துள்ளார் நூலாசிரியர்.

ஆறாம் திணையில் வாழ்ந்தவாறு, ஆயிரம் பிரச்சினைகளை அலசும் ஶ்ரீரஞ்சனியை அவரது ஆறு வயதிலிருந்து பார்க்கின்றேன். வாழ்க்கை மீதான தேடலும் அவரது தேட்டம் என்பதையும் அறிவேன். எமது தமிழ்ச்சமூகம் தன் தாயகத்திலும் ஆறாம் திணையான புகலிடத்திலும் எதிர்கொள்ளும் சவால்கள், அனுபவங்கள், காயங்கள் உட்பட அனைத்திற்கும் உளவியல் ரீதியில் தனது தரப்பு சிந்தனையை முன்வைத்து ஶ்ரீரஞ்சனி எழுதியிருக்கும் கட்டுரைகள், சமூகத்திற்காக பேசுகின்றன. சமூகத்தையும் அவை பேசவைக்கும் என்பது திண்ணம்.
ஶ்ரீரஞ்சனி, இலங்கையிலிருந்த காலப்பகுதியில்  விஞ்ஞான ஆசிரியையாக பணியாற்றியவாறு,   சிறுகதை, கட்டுரை  இலக்கியத்துறையிலும்  ஈடுபட்டவர். அந்த அனுபவம் இன்றும் பேசுகிறது.
புலம்பெயர்ந்த பின்னரும் தனது உள்ளார்ந்த ஆற்றலை எழுத்தில் வெளிப்படுத்தியபோது, அவருக்கு மேலதிக தகைமைகளாக உளவள தன்னார்வத் தொண்டும் ஆசிரியப்பணியும் மொழிபெயர்ப்புத்துறை அனுபவமும் கிட்டியிருக்கிறது.
அதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் அவரது தொடர்பாடல் நெருக்கமும் வளர்ந்திருக்கிறது. 
அதன் பெறுபேறாகத்தான் அவர் முன்னர் பத்திரிகைகள், இதழ்களில் எழுதிய உளவியல்   சார்ந்த கட்டுரைகள் சிலவற்றை தொகுத்து பின்தொடரும் குரல் என்ற நூலை வரவாக்கியுள்ளார். தொழில்சார் அனுபவங்களே அவரை பின்தொடர்ந்து வரும் குரலாகியுள்ளது.
இதில் இடம்பெற்றுள்ள  பதினாறு சிறிய கட்டுரைகளிலும் சமூகத்தில் நிகழும் சில சம்பவங்கள் மற்றும் நடைமுறைகள் பற்றிய தனது பிரதிபலிப்புகளை நேர்த்தியாக பதிவுசெய்துள்ளார்.
ஶ்ரீரஞ்சனி மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றுவதனால், அவர் சந்திக்கும் விவகாரங்களை – மற்றவர்கள் அறியத்தவறிவிடும் பிரச்சினைகளை  வெறுமனே செய்திக்குறிப்பாக எழுதாமல், இலக்கிய நயத்துடன் சொல்கிறார். 
இந்த நூலுக்கு அணிந்துரை எழுதியிருக்கும் பிரான்ஸில் வதியும்  ‘ அகாலம்  ‘ புஷ்பராணி -  புகலிடத்திலும் கட்டமைக்கப்பட்டுள்ள ஆணாதிக்க அதிகாரங்கள், குழந்தை வளர்ப்பு, மானுட நேசம், வாழ்க்கை முன்னேற்றம் குறித்தெல்லாம் உளவியல் பார்வையில ஶ்ரீரஞ்சனி ஆராய்ந்திருப்பதாக விதந்து எழுதியுள்ளார்.
பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளை,  குழந்தையை பெற்று வளர்க்கும் தாயுள்ளங்களின் உணர்வுகளை பெண்கள் புரிந்துகொள்ளும் அளவுக்கு ஆண்கள் தெரிந்துகொள்வதில்லை என்ற ஆதங்கமும் இந்நூலில் இடம்பெறும் கட்டுரைகளில் துலக்கமாகியிருக்கிறது.
தாயைப்போல பிள்ளை, நூலைப்போல சீலை, ஆம்பிளை என்றால் கோபம் வரத்தான் வேண்டும், பொம்பிளை என்றால் எதற்கும் பொறுத்துத்தான் போகவேண்டும், முதலான காலம் காலமாக  பழகிப்போன வார்த்தைகளை வைத்தே பெண்கள் மீதும், அடியாத பிள்ளை படியாது என்று எழுதப்படாத வன்முறையை  பிள்ளைகள் மீதும்  பிரயோகிக்கும் ஆணாதிக்க சிந்தனைகளை மேற்கத்தைய வாழ்வில் எவ்வாறு எதிர்கொள்ளலாம்   என்பதை  இக்கட்டுரைகளில் சுட்டிக்காண்பிக்கின்றார்.
புகலிடத்தில் தலைமுறை இடைவெளி,   பிள்ளை வளர்ப்பு, குடும்ப வன்முறை, இரண்டக வாழ்வு, பெண்களின் மனநலம், சுயமதிப்பு உட்பட பல விவகாரங்களை  ஆழமாகத் தொட்டுச்செல்கிறார்.
வாழ்க்கை, பொருளாதாரம்,  அரசியல் அறம் பற்றியெல்லாம்  திருவள்ளுவர் இரண்டு வரிகளில் சொல்லியிருந்தாலும்,  புகலிடத்தில் பிறந்து வளரும்  தமிழ்க்குழந்தைகளுக்கு  தமிழ் அமைப்புகள் நடத்தும் ஊக்குவிப்பு பேச்சுப்போட்டிக்கு தயார்ப்படுத்தலுக்கான தேவையுடன் வரையறுக்கப்பட்டுவிடுகிறது.  அந்த அறிவின் எல்லை அவ்வளவுதான் !? அதற்கப்பால் திருக்குறளுடன் திருவள்ளுவரும் அந்நியமாகிவிடுவார்.  
புகலிடத்தில்,  என்ன -  தாயகத்திலும் அவருடைய இந்த செய்யுள் தற்காலத்தில்  சாத்தியமா..?

அடியவனுக்கு இனியவளே! அன்புடையவளே! என் சொல்படி நடக்கத் தவறாத பெண்ணே! என் பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே! பின் தூங்கி முன் எழுபவளே! பேதையே! 

புகலிட தமிழ்ச் சமுகப்பயன்பாடு கருதி ஶ்ரீரஞ்சனி எழுதியிருக்கும் இக்கட்டுரைகளிலிருந்து எம்மை நாம் அடையாளம் கண்டுகொள்ளவும் முடிகிறது.  நாம் எங்கே நிற்கின்றோம்..? எந்தத் திசையில் வாழ்வை நகர்த்துகின்றோம்…? முதலான கேள்விகளுக்கும் தனது தொழில்சார் தரிசனங்களுடன் பதில் தருகிறார்.
மனித உளவியல் தொடர்பாக மேலைத்தேய சமூக ஆர்வலர்கள், உளவியலாளர்கள் சொல்லியிருக்கும் கருத்துக்களையும் சில கட்டுரைகளில் மேற்கோள்களாக பதிசெய்துள்ளார்.
இந்நூலை வடலி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.  
இரண்டு சிறுகதைத் தொகுதிகள்
ஶ்ரீரஞ்சனியின் நான் நிழலானால்  கதைத் தொகுதி 2010 ஆம் ஆண்டில் தமிழ்நாடு சித்தன் கலைக்கூடத்தினாலும், உதிர்தலில்லை இனி  என்ற கதைத்தொகுதி 2018 ஆம் ஆண்டில் கிழக்கிலங்கை மகுடம் பதிப்பகத்தினாலும் வெளிவந்தவை.
இலங்கையில் தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும் பின்னர் கனடா – ஸ்காபரோவை வசிப்பிடமாகவும் கொண்டிருக்கும் ஶ்ரீரஞ்சனி,  இலங்கையில் பேராதனை பல்கலைக்கழகத்தின் விவசாய விஞ்ஞானப்பட்டதாரியாவர்.
கொழும்பில் விஞ்ஞான பாட ஆசிரியராகவும் பணியாற்றியவர்.
இலங்கை, தமிழக மற்றும் புகலிடதேசத்து இதழ்களிலும் சிறுகதைகளை எழுதிவருபவர்.
இலங்கையிலிருந்த  காலப்பகுதியில் யாழ்.ஈழநாடு உட்பட சில சிற்றிதழ்களில் எழுதியவர்.  கனடாவுக்கு புலம்பெயர்ந்தபின்னர் இலக்கியப்பிரதிகள்  எழுதுவதில் சற்று தேங்கியிருந்தாலும்,  2008 ஆம் ஆண்டின் பின்னர் மீண்டும் புத்துயிர்ப்பு பெற்று அயர்ச்சியின்றி தொடர்ந்து எழுதிவருபவர்.
ஶ்ரீரஞ்சனியின் கனடா வாழ்க்கை, முன்னர் யாழ்ப்பாணக் கிடுகுவேலிக் கலாசாரத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது. வடக்கில் துலாக்கிணறுகள் காணப்பட்டமையால், இரண்டாம் உலகமகா யுத்த காலத்தில் ஜப்பான்காரன் அங்கு விமான எதிர்ப்பு ஏவுகணை இருப்பதாக பயந்துதானாம் திருகோணமலையில் குண்டு போட்டான் என்று வேடிக்கையாகச் சொல்வார்கள்.
அதுபோல், வடக்கிற்கு இரட்டைத்தட்டு பஸ் வந்தபோது,  அதில் மேலிருந்து வரும்  ஆண் இளவட்டங்கள், வீட்டுக்கிணற்றில் குளிக்கும் பெண்களை பார்க்கிறார்கள் என்பதனால், கிடுகுவேலிகளை உயர்த்திக்கட்டினார்கள் என்றும் – முருங்கை மரங்களை வேலியோரம் நடுவதற்கும் தயங்கினார்கள் எனவும் மற்றும் ஒரு வேடிக்கையான கதையும் இருந்தது.
இந்தக்கதைகளையெல்லாம் கடந்து வந்துள்ள ஶ்ரீரஞ்சனியிடம் இயல்பாகவே கதை சொல்லும் ஆற்றலையும் வாசிப்பில் ஆர்வத்தையும் சிறுவயதிலேயே வளர்த்த ஆசிரியத்தம்பதிகளான பெற்றோர்களுக்கே  “ நான் நிழலானால்   “ கதைத் தொகுதியை சமர்ப்பணம் செய்துள்ளார்.
இலங்கையில் வாழ்ந்தபோது அதன் பின்னணியில் கதைகள் படைத்திருப்பவர், கனடாவில் புகலிடம் பெற்றபின்னர், புகலிட வாழ்வுக்கோலங்களை சித்திரிக்கத்தொடங்கியவர்.
“  உண்மையை அவனவன் கண்ட விதத்தில் வெளிப்படுத்தும்போது, அதில் ஒரு தனித்துவம் இருக்கும்  “ என்று தி. ஜானகிராமனும், “ உண்மை என்று நாம் உணர்வதற்கும் நமக்கும் உள்ள தொடர்புதான் இலக்கியம்  “ என்று அம்பையும் சொன்ன கருத்துக்களின் வழிநின்று  ஆக்க இலக்கியம் படைப்பவர்தான் ஶ்ரீரஞ்சனி.
இன்னும் இரத்தினச்சுருக்கமாகச் சொல்வதானால், வாழ்வின் தரிசனங்களே ஶ்ரீரஞ்சனி எழுதும் கதைகள் எனலாம்.  
புகலிடம் வந்துசேர்ந்த எம்மவர்களின் வாழ்க்கைக்கோலங்களை, அக – புறக்காரணிகளுடன் அவர்கள் அல்லாடும் இரண்டக வாழ்க்கையையும் யதார்த்தப்பண்புடன் சித்திரித்துவருபவர்.
நான் நிழலானால் தொகுப்பில் இடம்பெற்றுள்ள 16 கதைகளும் சொல்லவரும் செய்திகள் வாசகருக்கு படிப்பினையாகவும்,   தம்மை தாம் அவற்றினூடாக இனம்காண்பதற்கு ஏதுவாகவும் அமைந்துள்ளன. இந்நூல் வெளிவரவிருந்த வேளையில் நான் எழுதிய சிறிய குறிப்பினையும்  இந்நூலில்  பதிவுசெய்துள்ளார்.
2010 இல் இந்நூல் வெளியானபோது,  இவ்வாறு எழுதியிருந்தேன்:
 “ பெரும்பாலும் ஶ்ரீரஞ்சனியின் கதைகள் தன்னிலைசார்ந்தும், குடும்பங்கள் சார்ந்தும் சித்திரிக்கப்படுவதில் உளவியல் காரணங்கள் இருக்கக்கூடும். தன்னையும் தனது குடும்பத்தையும் சுற்றத்தையும் நம்பிக்கைக்குரிய நட்புகளையும் ஆழமாக நேசிக்கும் ஒருவரால்தான் இத்தகைய கதைகளை எழுதமுடியும். அவரது கதைகள் கூடுதலாக குழந்தைகள், பெண்கள் சார்ந்தவை. குறிப்பாக புகலிடத்தில் பெண்கள், தமிழ்க்குழந்தைகளின் மனஎழுச்சிகளை சித்திரிப்பவை. எங்களில் பல படைப்பாளிகள், ( நான் உட்பட ) 21 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்துகொண்டு 20 ஆம் நூற்றாண்டை நினைத்தவாறு கடந்துபோனவற்றை பதிசெய்துகொண்டிருக்கும் காலத்தில், 21 ஆம் நூற்றாண்டையே தனது படைப்புகளில் நிகழ்கால நினைவுகளாக பதிவுசெய்து வருகிறார். ஒவ்வொரு கதையிலும் ஏதோ ஒரு செய்தி இழையோடிக்கொண்டே  இருக்கிறது. அந்த இழைகளுக்கூடாக எம்மையும் நாம் தரிசிக்கமுடியும்.
ஶ்ரீரஞ்சனியின் சில கதைகள் ஆங்கிலத்திலோ அல்லது பிறமொழிகளிலோ மொழிபெயர்க்கத் தகுந்தவை. ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் பல நாடுகளில் இளம் தலைமுறையினர் ஆங்கிலத்தில் அல்லது ஐரோப்பிய மொழிகளில் பயின்றுகொண்டிருக்கிறார்கள். அவர்களிடமும் ஶ்ரீரஞ்சனியின் கதைகள் போய்ச்சேரவேண்டும்.
வீட்டுக்குள் முடங்கிப்போன கனேடிய  வாழ்க்கையை வெறுத்து மீண்டும் தாயகம் திரும்பினாலும்,  எஞ்சியிருக்கும் காலத்திலாவது புகலிடத்தில் வாழும் பேரக்குழந்தைகளுடன் பொழுதைக்கழித்திட மனம்மாறி வரும் பாட்டி முதல் - மனைவியை  ( தாயை ) விபத்தில் பறிகொடுத்துவிட்டு தனது குழந்தைகளின் எதிர்காலம் கருதி மறுமணம் செய்யும் கணவனது ( தந்தையின் ) செயலால் மனம்வெதும்பும் இளம் யுவதியின் ( மகளின் ) மனநிலை வரையில் பலதரப்பட்ட மனவுணர்ச்சிகளை பேசுகின்றன இச்சிறுகதைகள்.

உதிர்தலில்லை இனி

ஶ்ரீரஞ்சனி, தனது முதலாவது கதைத்தொகுப்பினை தனது தாய், தந்தைக்கு சமர்ப்பணம் செய்துவிட்டு,  உதிர்தலில்லை இனி என்ற இரண்டாவது தொகுப்பினை தனது அருமைச்செல்வங்கள் சிவகாமி, அபிராமி, சங்கரிக்கு சமர்ப்பணம் செய்துள்ளார்.
 “ இலக்கியம் என்பது வாழ்க்கை பற்றிய ஒரு மொழிவு  “   எனச்சொல்லியிருக்கும்  அறிஞர் டபிள்யூ .  எச்.  ஹட்சன்  அவர்களை  நினவூட்டும் ஶ்ரீரஞ்சனி, தன்னைப்பாதிக்கும் விடயங்களை சத்தமாகச்சொல்லவேண்டுமென்ற வேட்கையே தனது எழுத்தின் ஆதாரசுருதியாக அமைகின்றது என்கிறார்.
தனது கருத்தை, தார்மீகக்குரலை, வெளிப்படுத்தும்போது சத்தமாக சொல்லவேண்டும் என்ற அவரது நீடித்த வேட்கை பிரசாரத்தொனியில் அமைந்துவிடாமல் அழகியலாக படைப்பு மொழியில் வரவாகிறது.
இந்த அம்சத்தையே இத்தொகுதியில்  இடம்பெற்றுள்ள 16 கதைகளிலும் காணமுடிகிறது.
பேனை எடுத்து கடிதம் எழுதி,  உறையில் வைத்து  அஞ்சல் முத்திரை ஒட்டி தபாலில் அனுப்பி, அது கிடைத்து பதில்வரும் வரையில் காத்திருந்த கடந்துபோன அன்றைய காலத்திலிருந்து நவீன விஞ்ஞான தொழில் நுட்பத்தின் வீச்சினால் வரப்பிரசாதமான கணினியூடாக மின்னல்வேகத்தில் கடிதங்கள் பரிமாறப்படும் தற்காலம் வரையிலான வாழ்க்கைக் கோலங்களை சித்திரிக்கும் கதைகள் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன.
குடும்ப உறவுகளின் முடிச்சுகளை அவிழ்ப்பதற்கான தெளிவைத்தரும் கதைகளையும்  எதிர்பாராமல் வந்துதொலைக்கும் புதிய உறவுகளினால் ஏற்படும்  வலிகளையும் பேசும் கதைகளை இத்தொகுப்பில் காணமுடிகிறது.
                  “ பாலைவனத்திலுள்ள வெம்மை, அங்குள்ள செடி, கொடி, புல், பூண்டு யாவற்றையும் அழித்துவிட்டாலும் அங்குள்ள கழுகுக் குடும்பத்தை ஒன்றும் செய்யமுடிவதில்லையே . அதுபோல் கஷ்டமும் வறுமையும் அழகு, சுகம், செழுமை போன்றவற்றை அழித்துவிட்டாலும் உள்ளன்பை மட்டும் அழிக்கமுடிவதில்லை  “  என்று  அறிஞர்  டாக்டர் மு.வ. என்றோ சொன்னதை நினைத்துப்பார்த்து ஆறுதலடையும் பாத்திரத்தையும்  ஶ்ரீரஞ்சனி படைக்கிறார், இத்தொகுதியின் இறுதி மூன்று கதைகளிலும்  மற்றவர்களிடம் செலுத்தும்  ஆழமான அன்பும் எதிரியாகிவிடும் எனக் கருதும் பாத்திரங்களையும் சித்திரிக்கின்றார்.
அன்புக்குத்தான் எத்தனை பரிமாணங்கள்…?
கரு ஒன்று பார்வைகள் மூன்று என்ற மகுடத்தில் இந்நூலின் இறுதியில் வரும் பச்சை மிளகாய், நிகண்டு பிழைபடவே, சில்வண்டு ஆகிய மூன்று சிறுகதைகளும் அவரே சொல்வதுபோன்று ஒரே கருவில் பிறந்த மூன்று கதைகள்தான்.
ஒரு தாயின் கருவில் உற்பத்தியாகிய  மூன்று குழந்தைகளின் உருவத்திலும் உணர்வுகளிலும் எவ்வாறு ஒற்றுமை துலக்கமாகி,  இயல்புகள் மாறியிருக்குமோ, அவ்வாறே இந்த மூன்றுகதைகளும் ஒரே விடயத்தை  மாறுபட்டகோணங்களில் பேசுகின்றன.
ஒருகதையில் முல்லைக்குத் தேர்கொடுத்த பாரிமன்னனும் கேள்விக்குள்ளாகின்றான்.  அந்தக்  காவியம்பேசும் வரலாற்றுக்கதை இரத்தினச்சுருக்கமாக மறுவாசிப்புக்குட்பட்டு அதிர்வைத் தருகிறது.
அந்த வரிகளை பாருங்கள்:
 “ என்னுடைய வளர்ச்சியில் அவர் காட்டும் அக்கறை, பாரி மன்னனின் தேர் அன்று அந்த முல்லைச்செடிக்குக் கொடுத்த தெம்புக்கு ஒத்த தெம்பை எனக்குத் தருகின்றது. ஆனால், அந்தத் தேர் பல மரங்களின் அழிவில்தான் உருவாக்கப்பட்டது என அன்று எனக்கு நினைக்கத் தோன்றவில்லை.  “
கோடரிக்காம்பு என்ற சொற்பதத்திற்கு ஈடானது இந்த வார்த்தைகள்.
 “ மற்றவர்களின் அபிப்பிராயங்கள்தானா எனது வாழ்வுக்கான அங்கீகாரம்..?   “  என்றும் ஒரு கேள்வி ஒரு சிறுகதையில் முன்வைக்கப்படுகிறது.  இந்தக்கேள்வியும் ஒவ்வொருவருக்கும் மிகவும் நெருக்கமானது.
கனடா ஶ்ரீரஞ்சனிக்கு எமது வாழ்த்துக்கள்.
----0---








No comments: