பொன்விழா ஆண்டில் இந்த படங்கள் 4 - காவியத்தலைவி - ச . சுந்தரதாஸ்

.


தமிழ் தெலுங்கு மொழி படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர் சவுகார் ஜானகி, இவருக்கு 1970 ஆம் ஆண்டு ஒரு விபரீத ஆசை ஏற்பட்டது. சொந்தத்தில் படம் தயாரித்து நடிக்க வேண்டும் என்பதுதான் அது . அன்றைய காலகட்டத்தில் கே பாலச்சந்தரின் எல்லா படங்களிலும் நடித்துக் கொண்டிருந்ததால் பாலச்சந்தரே தன படத்தை இயக்கித் தர கேட்டு அவரும் உடன்பட்டு அவ்வாறு தயாரான படம் தான் காவியத்தலைவி.

இந்தியில் அசோக்குமார், சுசித்ராசென் நடித்து வெற்றி பெற்ற மம்தா என்ற படத்தை பாலச்சந்தர் கதை வசனத்தில் தமிழ் ஆக்கினார். பாலச்சந்தர் படம் என்றால் அதில் நாகேஷ் கட்டாயம் நடிப்பார், ஆனால் இந்த படத்தில் அவருக்கு ஏற்ற வேடம் இல்லாததால் நாகேஷ் இல்லாத முதல் பாலச்சந்தர் படமாக இது வெளிவந்தது.

பிரபல நடிகையான சுசித்ராசென் ஏற்ற வேடத்தை சவுக்காரும் , அசோக்குமார் வே டத்தில் ஜெமினியும் நடித்தனர். பிள்ளைகளை பெற்ற கடனுக்காக தந்தை பாடுபடுவது வாடிக்கை , ஆனால் இப்படத்தில் தந்தை பெற்ற கடனுக்காக மகள் தன் காதலைத் துறந்து கடன் கொடுத்தவரை கரம்பிடிக்கிறார். ஆனால் அவனோ படு கேவலமாக அவளிடம் நடந்துகொள்கிறான். தன் குழந்தையை காப்பாற்ற நடனப் பெண்ணாகும் அவளுக்கு தன் பழைய காதலன் முன் நடனமாடும் இக்கட்டான நிலை ஏற்படுகின்றது.

தாய்மையின் மேன்மையை, துடிதுடிப்பு என்று எல்லாவற்றையும் வெளிப்படுத்தும் அருமையான இடம் சவுக்காருக்கு அதனை நிறைவேற்றி இருந்தார் அவர். பாலச்சந்தரின் இயக்கத்தில் மிகையில்லாத நடிப்பையும் அவர் வழங்கியிருந்தார். படத்தில் முக்கிய கதாபாத்திரமாக வருபவர் எம்ஆர் ஆர் வாசு . வாசு தன தந்தை ராதாவின் பாணியிலேயே தன் நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அவருக்கு பிறகு தான் ஜெமினியின் பாத்திரம் எடுபடாது எனலாம் . இவர்களுடன் ரவிசந்திரன் வரலட்சுமி ஆகியோர் இடம் பெற்றனர்.






வசனத்திலும் இயக்கத்திலும் பாலச்சந்தர் தன் முத்திரையைப் பதிக்கத் தவறவில்லை. சௌக்கார் பணத்தை விட்டெரியும் போது வாசு அதை நிலத்திலிருந்து பொருத்துவதன் மூலம் அவர் எப்பேற்பட்ட பொறுக்கி என்பதை காட்சி ஆக்கியிருந்தார் . அதேபோல் புடவை கடையில் துணிகளை தெரிவு செய்வதன் மூலம் தங்கள் நநிலையை ஜெமினியும் சவுக்காரும் பரிமாறுவதும் சூப்பர்.

கண்ணதாசனின் கையோடு கை சேர்க்கும் காலங்களே, பெண் பார்த்த மாப்பிள்ளைக்கு கண்ணீரும் தெரியவில்லை, ஆரம்பம் இன்றே ஆகட்டும் ஆகிய பாடல்கள் எம் எஸ் விஸ்வநாதன் இசையில் மிளிர்ந்தன.




படத்தில் தாயாகவும் மகளாகவும் இரட்டை வேடங்களில் சௌகார் ஜானகி நடித்தார். தாய் வேடத்தில் அவர் காட்டிய உருக்கம் பாத்திரத்தின் மேல் உள்ள பரிதாபம் எல்லாம் மகள் வேடத்தில் ரவிச்சந்திரனுடன் காதல் காட்சியில் நடித்தபோது சரிந்துவிட்டது. மகள் வேடத்தில் வேறு எவரையாவது நடிக்க வைத்திருக்கலாம் என்ற கருத்தும் படம் வெளிவந்த பின் சிலரால் கூறப்பட்டது. இதனால் சௌக்கார் , பாலச்சந்தரின் கூட்டு முயற்சி முழு வெற்றி பெறவில்லை.





No comments: