இலங்கைச் செய்திகள்


09ஆம் திகதி முதல் அனைத்து மத வழிபாட்டுக்கும் அனுமதி

ஜீவனிடம் தலைமையை வழங்குவதே சரியான முடிவு

ஜீவனுக்கே அமைச்சு பதவி09ஆம் திகதி முதல் அனைத்து மத வழிபாட்டுக்கும் அனுமதிகூட்டுத் தொழுகை,ஜூம்ஆவுக்கு அனுமதியில்லை

மத அனுஷ்டானங்களில் ஈடுபட அடுத்த வாரம் முதல் சுகாதாரத் தரப்பு சகல மத ஸ்தலங்களுக்கும் அனுமதி வழங்கியுள்ளது. இதன் பிரகாரம் எதிர்வரும் 09 ஆம் திகதி முதல் மத வழிபாடுகளில் ஈடுபட கட்டுப்பாடுகளுடன் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம்களுக்கு பள்ளிவாசல்களில் தொழுகைகளில் ஈடுபட இதனூடாக அவகாசம் வழங்கப்பட்டுள்ளதோடு இது தொடர்பான விசேட சுற்றுநிருபம் இன்று (02) வெளியிடப்படுவதாக வக்பு சபை தலைவர் சப்ரி ஹலீம்தீன் தினகரனுக்குத் தெரிவித்தார்.
இதற்கமைய ஒரே தடவையில் 30 பேருக்கு தொழுகையில் ஈடுபட இடமளிக்கப்பட இருப்பதோடு ளுஹர் (நண்பகல் தொழுகை) தொழுகை முதல் இஷா தொழுகை வரை பள்ளிவாசல்கள் திறந்திருக்குமெனவும் அவர் குறிப்பிட்டார்.சுபஹ் (அதிகாலை தொழுகை)யின் போது ஒருமணி நேரம் பள்ளிவாசல்கள் திறக்கப்பட்டிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பான சுற்று நிருபம் சகல பள்ளிவாசல்களுக்கும் இன்று முதல் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுகாதார தரப்பினால் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள பிரதேசங்கள் தவிர்ந்த நாடு முழுவதுமுள்ள சகல  பள்ளிவாசல்களையும் திறக்க அனுமதி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றையடுத்து கடந்த  இரு மாதங்களுக்கு மேலாக கோயில்கள், பள்ளிவாசல்கள், ஆலயங்கள் மற்றும் விஹாரைகளில் எந்தவித மத வழிபாடுகளும் இடம்பெறவில்லை.
கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மீண்டும் மத அனுஷ்டானங்களில் ஈடுபட அனுமதிக்குமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.
இந்த நிலையிலே எதிர்வரும் 09 ஆம் திகதி முதல் கட்டுப்பாடுகளுடன் மத வழிபாடுகளை மேற்கொள்ள சுகாதார சேவைப்பணிப்பாளர் அனுமதி வழங்கியிருந்தார்.
கூட்டுத் தொழுகைக்கோ ஜூம்ஆ தொழுகைக்கோ அனுமதி இல்லை. தனித்தனியாக சமூக இடைவெளியை பேணித்  தொழவேண்டும் எனவும் வுளூ செய்யும் பிரதேசம் மூடப்பட வேண்டும் எனவும் கூறிய வக்பு சபை, வழிகாட்டல்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளது.
சுபஹ் தொழுகைக்கான அதான் (பாங்கு) ற்கு 15 நிமிடத்திற்கு முன்னர் பள்ளிவாசல்கள் திறக்கப்பட்டு 45 நிமிடங்களின் பின்னர் மூடப்படும். மீண்டும் ளுஹர் தொழுகைக்கு 15 நிமிடத்திற்கு முன்னர் திறக்கப்படும் பள்ளிவாசல்கள் இஷா (இரவு தொழுகை) வரை திறக்கப்பட்டு 45 நிமிடத்தின் பின்னர் மூடப்பட வேண்டும் எனவும் வக்பு சபை வெளியிட இருக்கும் சுற்று நிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.(பா)
ஷம்ஸ் பாஹிம்   நன்றி தினகரன்   


ஜீவனிடம் தலைமையை வழங்குவதே சரியான முடிவு

புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?
டி.வி. சென்னன் உறுதிபட தெரிவிப்பு 
புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? துணிச்சல், கம்பீரம், விவேகம், வீரம், சாணக்கியம் என்ற அடையாளங்களைக் கொண்ட அமரர் ஆறுமுகன் தொண்டமானின் வாரிசான ஜீவனுக்கு தகப்பனின் அடையாளங்கள் இயற்கையாகவே இருக்கச் செய்யும். அந்த அடையாளங்கள் குறித்து எவரும் அவருக்கு கற்பிக்கத் தேவையில்லை என முன்னாள் பதுளை மாவட்ட எம்.பி.யும்., இ.தொ.கா உப தலைவருமான டி.வி. சென்னன் தெரிவித்துள்ளார்.  
'நான் இருக்கின்றேன் அச்சம் வேண்டாம்' ஜீவன் தொண்டமான் தமது தந்தையின் இறுதி நிகழ்வில் ஆற்றிய உரை, ஏக்கத்துடனிருந்த மலையகப் பெருந்தோட்ட மக்களுக்கு புதிய தெம்பையும், நம்பிக்கையின் ஒளிக்கீற்றையும் ஏற்படுத்தியிருக்கின்றது.  
அவர் விடுத்துள்ள ஊடகச் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.  
இச் செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,.....  'எனது தந்தையார் மறைந்து விட்டாரென்று இருள் சூழ்ந்துவிட்டதென்று எவரும் ஏக்கத்துடனும், நம்பிக்கையீனத்துடனும் இருக்க வேண்டிய அவசியமில்லை. இருள் நீங்கிவிடும். சேவல் கூவும், உதய சூரியன் உதயமாகும். நான் இருக்கின்றேன் அச்சம் வேண்டாம். எனது தந்தையார் அவரது வாழ்க்கையை மலையக மக்களுக்காக அர்ப்பணித்தாரோ, அதைப் போன்று எனது வாழ்க்கையையும் எமது மக்களுக்காக அர்ப்பணிப்பேனென்று துயரத்தின் மத்தியிலும் ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்த எமது மக்களுக்கு நம்பிக்கையை வெளிப்படுத்தினார். 
அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் மறைவின் பின்னர் அவரது பேரனான ஆறுமுகன் தொண்டமான் எவ்வகையில் இ.தொ.கா. வை வழிநடாத்தினாரோ, அதைவிட பாரிய சேவைகளை ஜீவன் தொண்டமான் மேற்கொள்வாரென்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. 
மறைந்த ஆறுமுகன் தொண்டமானின் வேட்பு மனுவில் ஏற்பட்ட வெற்றிடத்த்திற்கு ஜீவன் தொண்டமானின் பெயர் உள்ளடக்கப்பட்டது போன்று, இ.தொ.காவின் தலைமைப் பீடத்தையும் அவரிடம் ஒப்படைப்பதே காலத்தின் தேவையாகும். இதனையே மலையகப் பெருந்தோட்ட மக்கள் எதிர்ப்பார்க்கின்றனர் என்றார்.   
பதுளை தினகரன் விசேட நிருபர்  நன்றி தினகரன் ஜீவனுக்கே அமைச்சு பதவிஇருவாரங்களில் தலைவர்?
நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்கு அமைச்சுப் பதவி கிடைத்தால் அது அமரர் ஆறுமுகன் தொண்டமானின் புதல்வர் ஜீவன் தொண்டமானுக்கே வழங்கப்படும் என கட்சியின் நிதிச் செயலாளர் மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்துள்ளார். கட்சியின் அடுத்த தலைவர் யார் என்பது இன்னும் இரண்டு வாரங்களில் தீர்மானிக்கப்படும்.
கட்சியின் தலைமைத்துவச் சபையினால் தலைமைப் பதவி குறித்து தீர்மானிக்கப்படும் என அவர் கூறினார்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்த அமரர் ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவினால் ஏற்பட்டுள்ள வேட்பாளர் வெற்றிடத்துக்கு ஜீவனின் பெயரை கட்சி பரிந்துரை செய்துள்ளது.   நன்றி தினகரன் 


No comments: